Tuesday, June 21, 2011

நாளந்தா பல்கலைக்கழகம்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டின் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது என்று தலைவர்கள் பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். அந்தக் காலத்தில் அவர்கள் செய்திருந்த சாதனைகளே அவர்களின் கல்வித்திறனை, அறிவைப் பறைச்சாற்றுவதாக உள்ளன. ஆனால், பல வரலாற்றுக் காரணங்களால் நாம் அந்தப் பெருமையை பிற்காலத்தில் இழந்துவிட்டோம்.

தற்போது உலகின் தலைச்சிறந்த இருநூறு கல்வி நிலையங்களின் பட்டியல் எடுத்தீர்கள் என்றால் அதில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெற்றிருக்காது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. இன்று பல்கலைக்கழகம் என்று நாம் வரையறுத்துள்ள முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம், ஆசிரியர்கள், வகுப்பறை, நூலகங்கள், ஆய்வு வசதிகள், பல்வேறு கல்வித் துறைகள் ஆகியவை கொண்ட கல்வி நிலையம் முதன் முதலில் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது. ஆம், நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.


நாளந்தா பல்கலைக்கழகம் இன்றைய பிகாரின் தலைநகரமான பாட்னா நகரத்திலிருந்து 55 மைல் தொலைவில் உள்ள நாளந்தா என்னுமிடத்தில் அமைந்திருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வந்தது. புத்தர் தமது கடைசி பயணத்தின் போதும் நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையை செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர் தான். இவ்வாறு நாளந்தா மிகப் பழங்காலத்திலிருந்தே ஒரு முக்கிய கல்வி நகரமாக இருந்து வந்துள்ளது.

கி.பி.427 ஆம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர் தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிப்பவர்’ என்று பொருளாம். பதிவு செய்யப்பட்ட உலக வரலாறில் முதல் பல்கலைக்கழகமான நாளந்தா, 14 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்திருந்தது. கட்டடங்கள் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. இது அன்றைய உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுடன் கல்வியளித்த உலகின் முதல் பல்கலைக்கழகமும் நாளந்தா பல்கலைக்கழகம் தான்.


இங்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டதாக சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இங்கு உயர்கல்வி மற்றுமே வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன.

விவாதங்கள் மூலம் கல்விப் போதனை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக மகாயான கருத்துகள் முக்கியமாகப் பயிற்றுவிக்கப்பட்டன. புத்தமதத் தத்துவங்களுடன் இதர இந்திய தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக்கலை, வானியல், வரலாறு, சட்டம், மொழியியல், யோக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.



எட்டு தனித்தனி வளாகங்களில், ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இருந்தன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு படிப்பதற்கேற்ற சூழல் பாதுகாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்குள் பிரும்மாண்டமான நூலகமும் இருந்தது. ஒன்பது மாடி உயரம் கொண்ட மூன்று கட்டடங்களில் லட்சக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் புத்தமதத் தத்துவ நூல்களுடன் பிற துறைகள் பற்றிய நூல்களும் ஏராளமாக இருந்தன.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும் மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர். எழு நூறு ஆண்டுகால புத்த மடாலய வரலாறில் இந்த ஒழுக்கத்தை யாரும் மீறியதில்லை என்று தமது குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் மற்றொரு சீனப் பயணியான் யி ஜிங்.

முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து பேணி வந்தனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைக்கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான் சுவாங், யி ஜிங் ஆகியோர் நாளந்தாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.


தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி, பிரபமித்திரர், ஜீன மித்திரர் போன்ற புகழ்பெற்ற தத்துவஞானிகளும், மேதைகளும் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றினர். குப்தர்கள் காலத்தில் சுதந்திர சிந்தனைகளின் சங்கமமாக இருந்த பல்கலைக்கழகத்தில், பிற்காலத்தில் தத்துவ மோதல்கள் உருவாக ஆரம்பித்தன. புத்த மதத்தை எதிர்த்த பிராமணர்களின் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது. பிராமணர்களுடன் , சமணர்களும் இணைந்து புத்தத் துறவிகளை எதிர்த்தனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானிருந்து வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதி, நாளந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடி, அதை முற்றிலும் தீக்கரையாக்கினார். நூலகத்தில் இருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான புத்தமதத் துறவிகள் தலைத் துண்டிக்கப்பட்டனர், உயிரோடு கொளுத்தப்பட்டனர். நூற்றாண்டுகளாக அறிவூட்டி வந்த பல்கலைக்கழகம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது. எனினும் முற்றாக அழிந்துவிடவில்லை. பொலிவிழந்த அந்தக் கல்விக்கூடம் ஒரு சில ஆசிரியர்களுடனும் சில நூறு மாணவர்களுடன் தொடர்ந்தது.

கடைசியாக கி.பி.1400 ஆம் ஆண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவுடன் ஆதரிப்போர் யாருமின்றி பல்கலைக்கழகம் செயலிழந்தது. உலகப்புகழ் பெற்று விளங்கி வந்திருதாலும், மதிப்புமிக்க நூல்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டதால் நமக்குக் கிடைத்திருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இங்கு வந்துப் படித்த வெளிநாட்டு மாணவர்களாலும், வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது.


நாளந்தாவுக்கு முன்பே இந்தியாவில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய பல கல்விக்கூடங்கள் இருந்தன. பேரரசை உருவாக்கிய சாணக்கியர், சந்திரகுப்தர், மருத்துவ மேதை சரகர் போன்றோரை உருவாக்கிய தட்சசீலம், ஜென் புத்தமதத் தத்துவப் பிரிவை தோற்றுவித்தவரும் சீனாவில் ஷாவோலின் மடாலயத்தில் குங் ஃபூ தற்காப்புக்கலையை செழுமைப்படுத்திய அறிஞருமான போதிதருமரை (கி.பி. 520) உருவாக்கிய தமிழகத்தின் காஞ்சி போன்ற பல கல்வி மையங்கள் இருந்தன.

பல நூற்றாண்டுகளாக உலகின் தலைச்சிறந்தப் பல்கலைக்கழகங்களாக விளங்கி வரும் பொலக்மா (கி.பி.1088), பாரீஸ் பல்கலைக்கழகம் (கி.பி.1091), ஆக்ஸ்ஃபோர்ட் (கி.பி.1167) மற்றும் கேப்ரிட்ஜ் (கி.பி.1209) பல்கலைக்கழகங்கள், கெய்ரோவிலுள்ள அல்-அஸார் பல்கலைக்கழகம் (கி.பி.970) என அனைத்துமே நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு காலத்தால் பல நூற்றாண்டுகள் பிந்தியவை என்பதை கவனித்தால் நாளந்தாவின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


இதை உணர்ந்ததால் தான் இந்தியா, சீனா, ஜப்பான், ஆகிய நாடுகள் சிங்கப்பூர் நாட்டின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு உலகத்தரத்திலான பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவு செய்து ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இழந்தப் புகழை நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் பெறும் என்று நம்புவோம் !

ஃபோர்ட் மாடல்-T

தனிநபர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கேற்ற வாகனங்கள் தயாரிப்பு பிரான்ஸ் நாட்டில் 1890ல் தொடங்கிவிட்டது. அவை விலை அதிகமாகவும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆடம்பர வாகனமாகவும் விளங்கின. இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்கக்கல்வி மட்டுமே கற்ற அனுபவமிக்க மெக்கானிக் ஒருவர், பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, வசதியான, சொகுசான, பாதுகாப்பான, விலைக் குறைவான வாகனத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தான் ஹென்றி ஃபோர்ட். பலவிதமான வாகன வடிவமைப்புகளை இவருக்கு முன்பே பலரும் உருவாக்கியிருந்தாலும் அவை விலைமிக்கவையாகவும், உற்பத்தி செய்வதற்கு அதிக நேரம் பிடிப்பவையாகவும் இருந்தன. சொந்தமாக கார் கம்பெனியை உருவாக்கிய ஃபோர்ட் 1903ல் முதல் கார் தயாரிப்பைத் தொடங்கினார்.


உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஃபோர்ட் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய வடிவமைப்பு கொண்ட கார்களை அறிமுகப்படுத்தினார். 1903 முதலே 1908 வரை மாடல்-A முதல் மாடல்-S வரை வரிசையாக 19 வித்தியாசமான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுள் சில சோதனை மாதிரிகள் வெளிவரவே இல்லை. இதில் பிரபலமானது என்றால் மாடல்-N தான். நான்கு சிலிண்டர் இஞ்சின் கொண்ட இது 500 டாலருக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் வாகன உலகில் புரட்சியை உண்டாக்கிய மாடல்-T அக்டோபர் 1, 1908ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒரே பிளாக்கில் வடிவமைக்கப்பட்ட 4 சிலிண்டர் கொண்ட இஞ்சின், இரண்டு செமி எலிப்டிக் ஸ்பிரிங்குகள், ஓட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் எளிமை, வசதியான இடப்பக்க ஸ்டியரிங் வீல் என பல புதுமையான அம்சங்களுடன் மார்க்கெட்டில் நுழைந்தது மாடல்-T. குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்க உற்பத்தி முறையில் பெரிய மாற்றங்களை ஃபோர்ட் கொண்டுவந்தார்.

முழுமையாகப் பரிமாற்றம் செய்யக்கூடிய பாகங்களை (interchangeable) பயன்படுத்துதல், இயன்ற அளவு வேலையை பகிர்ந்தளித்தல், பாகங்களை ஒன்றிணைக்கும் அசெம்பிளி பிரிவுகளை உருவாக்குதல் எனப் புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இவருக்கு முன்பே இந்த நுட்பங்களை சிலர் பயன்படுத்தி வந்தாலும் அவை பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் ஃபோர்ட் நடைமுறைப்படுத்திய உற்பத்தி செயல்முறைகள் பேரளவு உற்பத்திக்கு வழிவகுத்தன. பிற்காலத்தில் தொழில்துறை அனைத்துக்கும் வழிகாட்டியாக ஃபோர்டின் உற்பத்தி முறை விளங்கியது.

தொழிலாளிக்கு, அவர் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அனைத்தும் அவரின் பணியிடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் எடுத்துப் பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் வைக்கப்பட்டன. இதற்காக கன்வேயர் பெல்ட்டுகள், ஸ்லைடர்கள், ஓவர்ஹெட் டிராலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 1913 க்குள் பேரளவு உற்பத்திமுறை நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரி பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருளாக உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஒரு பணியாளர் தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்வதால் உற்பத்தி வேகம் அதிகரித்தது. இதனால் விலையும் குறைந்தது. ஃபோர்ட் தன்னுடைய உத்திகளை ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியப்படுத்தியதால் இந்த உற்பத்தி முறை உலகெங்கும் செயல்படுத்தப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கு, உற்பத்தியை அதிகரிக்க இது உதவியது.



முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்- T கார்களின் எண்ணிக்கை 10,660. இது படிப்படியாக அதிகரித்து 1918ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் மாடல்-T இன் பங்களிப்பு பாதிக்கும் அதிகம். இந்த உற்பத்தி வளர்ச்சி 1927 வரைத் தொடர்ந்தது. அதுவரை உற்பத்தியான மாடல்-T கார்களின் மொத்த எண்ணிக்கை 1,50,07,034. ஆகும். 45 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த இச்சாதனை 19 ஆண்டுகள் உழைப்பில் நிகழ்த்தப்பட்டது. 1921க்குள் உலக வாகன உற்பத்தியில் ஃபோர்டின் மாடல்-T இன் பங்கு 56.6 % ஆகியது. ஆரம்பத்தில் அந்த காரின் விலை 850 டாலர். பேரளவு உற்பத்தி முறையின் பயனாகவும் வடிவமைப்பு மேம்பாட்டினாலும் இதன் விலை கடைசியில் 260 டாலராகக் குறைந்தது.

ஃபோர்ட் மாடல்-T கார் அமெரிக்க சமூகத்திலும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. விலை குறைந்ததால் பெரும்பாலான அமெரிக்க நடுத்தர மக்களால் கார் வாங்க முடிந்தது. தமக்கென்று சொந்தமாக வாகனம் இருந்ததால் மக்கள் தாம் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்தில் பயணம் செய்தனர். மக்கள், வணிக நிறுவனங்கள், தொழில்கள், கல்லூரிகள், நகரங்கள், ஏன் பிற நாடுகளுக்கு இடையிலான தொடர்பு இதனால வலுப்பட்டது எனலாம்.

ரயில் பாதைக்கு அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே குடியிருக்க வேண்டிய அவசியம் மறைந்துவிட்டது. நாளொன்றுக்கு சராசரி பயண எல்லை 10 மைல் முதல் 15 மைல் என்ற எல்லையை தகர்த்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. வணிகப் போக்குவரத்து அதிகரித்தது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடைவெளி குறைந்தது.

தமக்கென்று வாகனம் இருந்ததால் புறநகர்களில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். தாம் இருக்கும் ஊரில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைமாறி எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றுதல் சாத்தியமாகியது. மோட்டார் வாகனப் பெருக்கத்தினால் அரசாங்கத்தால் எரிபொருள் மீது வரிவிதித்தது. அதைக்கொண்டு தரமான சாலைகள் போட முடிந்தது. சாலையோரக் கடைகள், கன்வீனியண்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், வாகன பழுதுபார்ப்பு, வாகன விற்பனை என பல தொழில்கள் தோன்றின. இதனால வேலைவாய்ப்பு அதிகரித்தது. காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் உதவிகரமாக இருந்தது.


ஃபோர்ட் தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 5 டாலர் அளித்தார். இது சராசரி அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் பெற்ற வாரச் சம்பளத்தைவிட அதிகமாகும். போட்டியின் காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் ஃபோர்ட் காரைத் தயாரித்தார். இதனால் தாம் உற்பத்தி செய்த காரை வாங்கும் அளவுக்கு தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்தது.

நடுத்தர வர்க்கங்களின் எண்ணிக்கை உயர்வு, உற்பத்தி உயர்வு, அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகிய காரணங்களுக்காக இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருதை ஹென்றி ஃபோர்டுக்கு அளித்து கௌரவப்படுத்தியது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது ஃபோர்ட் மாடல்-T தான்.

செர்னோபில் அணு உலை விபத்து

இயற்கையின் அற்புதங்களில் தலைச்சிறந்ததாக விளங்குவது மனித இனம். உலகில் கோடிக்கணக்கான வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவையனைத்தும் இயற்கையின் போக்கில், இயற்கைச் சூழலை அனுசரித்து, அதற்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் சிந்திக்கும் மனிதன் அல்லவா? மனிதன், தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் தேவைக்கேற்ப இயற்கையின் ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் ரகசியங்களை, அதன் விதிகளை அறிந்துகொள்ள மனிதனுக்கு உதவுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் இயற்கையின் செயல்பாட்டைத் தனக்கு நன்மையளிக்கும் விதமாக மனிதன் மாற்றிக்கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். அத்தகைய முயற்சியின் விளைவாக மனிதன் கண்டறிந்த அற்புதமான ஆற்றல் மூலம் தான் “அணு ஆற்றல்’.



அணு ஆற்றலை அழிக்கும் கருவியான அணு குண்டைத் தயாரிக்க மட்டுமல்ல, அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிந்ததும், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்ய பல நாடுகளில் அணு உலைகள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்டச் சூழ்நிலையில் அணு ஆற்றல் உற்பத்திச் செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிலும் தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா போன்ற இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட அணு உலைகள் ஆக்க வேலைக்கு பயன்பட்டாலும், இவை எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. இயற்கைப் பேரிடர் நிகழ்வோ, அல்லது மனிதனின் சிறு தவறும் கூட பெரும் ஆபத்தை உருவாக்கிடக்கூடும். இதற்கு உதாரணமாகத் திகழ்வது தான் “செர்னோபில் அணு விபத்து’.


முன்னால் சோவியத் யூனியனின் ஓர் அங்கமான உக்ரைன் நாட்டில், இன்றைய ரஷிய, பெலாரஸ் நாடுகளின் எல்லையோரத்தில் செர்னோபில் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அணு ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு 1970களில் இருந்தே செயல்பட்டு வந்தன. அணு உலைகளுக்கு மிகுந்த கண்காணிப்பும், பராமரிப்பும் தேவை. அதற்காக அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 25, 1986 அன்று அத்தகைய சோதனை ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். முக்கிய மின் உற்பத்தி நின்றுவிட்டப் பின்னர் அணு உலை வேலை செய்வதை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு, எவ்வளவு நேரம் டர்பைன் சுழன்று மின்னுற்பத்திச் செய்யும் என்பதைச் சோதிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக அணு உலையின் செயல்பாடு திடீரென அதிகரித்தது. நீராவிக் குழாய்களில் மிகு அழுத்தம் ஏற்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. இது நடந்தது மறுநாளான ஏப்ரல் 26 ஆம் நாள் அதிகாலையில். விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சற்றும் பலனளிக்கவில்லை. விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம் என்றும், அணு உலையின் வடிவமைப்புக் கோளாறு தான் காரணம் என்றும் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்துகள் இன்றுவரைத் தொடர்கின்றன.


அணு உலை வெடித்ததால் சிதறிய கதிரியக்கப் பொருள்கள் சுற்றுப்புறமெங்கும் பரவின. காற்று வீசும் திசையில் கதர்வீச்சு வேகமாகப் பரவியது. நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாயின. மண்ணிலும் கதிர்வீச்சு ஊடுருவியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் அளவானது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணு குண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது. பூமியின் வடகோளத்தின் கோடியில் உள்ள நாடுகளில் கூட கதிர்வீச்சு உணரப்பட்டது.

விபத்து நடந்தவுடன் ஏற்பட்ட உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.


கதிர்வீச்சுக் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்புத் தொடரும் என்கிறார்கள். இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.


வெடித்தப் பின்னர் அணு உலையின் கதிர்வீச்சு வெளியாகாமல் தடுக்க அதைச் சுற்றிலும் ஒரு கான்க்ரீட் கூடு கட்டப்பட்டது. தற்போது அதுவும் வலுவிழந்துவிட்டதால் இன்னும் வலுவான கூடு கட்டப்படவுள்ளது. எனினும் விபத்து நிகழ்ந்த அணு உலையின் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த மற்ற மூன்று அணு உலைகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டு 2000 வது ஆண்டில் செர்னோபில் அணு உலைக்கூடம் மூடப்பட்டது.

இந்த விபத்து உலக மக்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், இயற்கையின் சமநிலையைக் குலைக்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே மக்களுக்கு உண்மையான பயனையும், பாதுகாப்பையும் அளித்து நீடித்த வளர்ச்சியை அளிக்கும்.

இயற்கை ஆற்றல்களான காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றைப் திறமையாகப் பயன்படுத்தி நமது எரிபொருள், மின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதே நாம் வாழும் உலகைக் காப்பதற்கு வழி. அதை மனிதன் மறக்கத் தொடங்கினால், மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டச் சுனாமியால் வெடித்து சிதறிய ஃபுகுயோமா அணு உலை விபத்துகள் போன்றவை நிகழ்வதைத் தவிர்க்க வழியில்லை. முன்னேறிய நாடான ஜப்பானுக்கே இந்த கதி நேர்ந்துள்ளதென்றால், கடலோரமாக அணு உலைகளை தொடர்ந்து உருவாக்கி வரும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த வளரும் நாடுகளின் கதி என்னாகும்? நாம் சிந்திப்பதற்கான அனுபவத்தை செர்னோபில் விபத்து அளித்துள்ளது !

Tuesday, September 21, 2010

இனவெறியை வென்ற நட்பு

 லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும்




20ஆம் நூற்றண்டில் உலக நாடுகளுக்கெல்லாம் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் யாரென கேட்டால், ஹிட்லர் என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். ஹிட்லரின் நாடு பிடிக்கும் கொள்கைமுதல் யூதர்கள் படுகொலைவரை அனைத்துக்கும் அடிப்படியானது ஹிட்லர் உயர்த்திப்பிடித்த இனவெறிக் கொள்கையான ‘ஆரிய மேன்மைகொள்கையே. மனித இனத்தில் ஆரிய இனம் தான் உயர்ந்தது, அந்த ஆரிய இனத்திலேயே தூய்மையானவர்கள் ஜெர்மானியர்கள்தான். ஆகவே, அவர்களே இந்த உலகை ஆளத்தகுந்தவர்கள் என்பது ஹிட்லரின் இனவாதக் கொள்கையாகும்.

ஆரிய மேன்மை தாங்கிய ஜெர்மானியர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அது 1936ஆம் ஆண்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டிகளை தனது கொள்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஹிட்லர் முடிவு செய்தார். ஹிட்லரின் கண்காணிப்பில் ஜெர்மானிய வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். முக்கிய வீரர்கள் போட்டி நடைபெறும் நாள் வரை அவர்களது திறமையை யாரும் காணாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டனர்.    

ஜெஸ்ஸி ஓவன்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின தடகள வீரரான இவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக பெர்லினுக்கு வந்திருந்தார். தான் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இனவெறி மிக்க ஹிட்லரின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று தீர்மானத்தோடு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார்.

அன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனைப் படைத்திருந்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ். எனவே தகுதிச் சுற்றை கடந்து எளிதாக இறுதிச் சுற்றை அடைந்துவிடலாம் என்று நினைத்து களமிறங்கினார் ஓவன்ஸ். போட்டிகள் ஆரம்பமாயின.

அப்போது ஓவன்ஸை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் அந்த உயரமான ஜெர்மானிய இளைஞர். அவர் பெயர் லஸ் லாங். தனது முதல் முயற்சியிலேயே 7.90 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் லஸ் லாங். அவரை ஹிட்லர் தன் கண்கானிப்பிலேயே ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை ஓவன்ஸ் அப்போதுதான் கேள்வியுற்றார்.

இப்போது ஓவன்ஸின் முறை வந்தது. லஸ் லாங் மட்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டால், ஹிட்லரின் நம்பிக்கை உண்மையாகிவிடுமே. என்னைப் போன்ற நீக்ரோவால் வெற்றிபெற முடியாது என்ற ஹிட்லரின் ‘ஆரிய மேன்மைநம்பிக்கைக்கு வலுச் சேர்ந்துவிடுமேஎன்ற எண்ணம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓவன்ஸின் முதல் முயற்சி, அவர் ஃபவுல் செய்ததால் வீணானது. தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் எல்லைக்கோட்டைத் தாண்டி கால் வைத்ததால், அதுவும் வீணானது. வெறுப்படைந்த ஓவன்ஸ் கோபத்துடன் தரையை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ‘இதற்காகவா அமெரிக்காவிலிருந்து கடல்கடந்து வந்தேன்?என்று மனதுக்குள் குமுறினார்.

அப்போது தனது தோளின் மீது ஒரு கை ஆறுதலாக தொடுவதை ஓவன்ஸ் உணர்ந்தார். அது வேறு யாருமல்ல. யாரிடம் தோற்றுவிடக்கூடாது என்று ஓவன்ஸ் நினைத்தாரோ அதே லஸ் லாங் தான்.

‘என்னுடைய பெயர் லஸ் லாங்என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லஸ் லாங், ‘ஏதோ ஒரு விஷயம் உங்களுடைய மன அமைதியை கெடுக்கிறது. உங்களுடைய திறமைக்கு கண்ணை மூடிக்கொண்டு தாண்டியிருந்தாலே தகுதி பெற்றிருப்பீர்கள்என்று ஓவன்ஸுக்கு தன்னம்பிக்கையூட்டினான். நாஜி இளைஞர் பாசறையில் பயிற்சி பெற்றிருந்தும் ‘ஆரிய இன மேன்மைபாராட்டாத லஸ் லாங்கைப் பார்த்து ஓவன்ஸ் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிய பின்னர் ஒவன்ஸிடம், ‘இது ஒன்றும் இறுதி போட்டியில்லையே. தேவையான தூரத்துக்கு தாண்டி தகுதி பெற்றாலே போதுமே. இறுதிப் போட்டியில் உங்களுடைய முழுத்திறமையை காட்டலாம். அதனால் எல்லைக்கோட்டுக்கு அரை அடி முன்பே நீங்கள் ஒரு கோடு கிழித்துக்கொண்டு அங்கிருந்து தாண்டுங்கள். கண்டிப்பாக தகுதிப் பெறுவீர்கள்என்று ஓவன்ஸை தட்டிக்கொடுத்தார் லஸ் லாங்.

மனம் தெளிவடைந்த ஓவன்ஸ் லஸ் லாங் சொன்னபடியே செய்தார். தேவைப்பட்டதைவிட ஓர் அடி அதிகமாகவே தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஓவன்ஸ்.

மனம் நெகிழ்ந்த ஓவன்ஸ் லஸ் லாங்குக்கு நன்றி சொல்வதற்காக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். லஸ் லாங்கின் ஆறுதல் மட்டும் இல்லையென்றால் மறுநாள் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் தங்களது இன வேறுபாடுகளை மறந்து மனம் விட்டுப் பேசினர். தங்களைப் பற்றி, விளையாட்டைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றி என பல விஷயங்களைப் பேசினர். முடிவில், அந்த அறையை விட்டு வெளியேறும் போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தார்கள்.

இறுதிப் போட்டி தொடங்கியது. லஸ் லாங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது ஜெஸ்ஸி ஓவன்ஸை மேலும் சாதிக்கத் தூண்டியது. லஸ் லாங் அளித்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ஜெஸ்ஸி ஓவன்ஸ் 8.06 மீட்டர் நீளம் தாண்டி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை முதலில் பாராட்டியது லஸ் லாங் தான். அதுவும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஹிட்லர் பார்த்துக்கொண்டிருக்க முழு மனத்துடன் ஓவன்ஸின் கைகளைப் பற்றி குலுக்கினார். அவர்கள் இருவரின் நட்பானது சர்வாதிகாரியின் இனவெறியை வென்றது.
தங்கப்பதக்கத்துடன் ஓவன்ஸ். அருகில் வெள்ளி வென்ற லஸ் லாங்

அந்த வெற்றியோடு ஓட்டப் பந்தையங்களில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஓவன்ஸ். நீளம் தாண்டுதலில் ஓவன்ஸ் அன்று படைத்த ஒலிம்பிக் சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. 

நான் வென்றுள்ள அத்தனை பதக்கங்களையும் கோப்பைகளையும் ஒன்று சேர்த்து உருக்கினாலும், அவை லஸ் லாங்கின் 24 காரட் தூய்மையான நட்புக்கு ஈடாகாது என்று லஸ் லாங்கின் நட்பு பற்றிக் கூறினார் ஓவன்ஸ். அன்று லஸ் லாங்கின் நட்பை உணர்ந்த போது, நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்த பியரி டி கூபெர்டின் அவர்களின் வார்த்தைகள் தான் தனது நினைவுக்கு வந்ததாக ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு கூர்கிறார். அது இதுதான்:

‘ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நோக்கம் வெற்றிபெறுவதல்ல, பங்கு பெறுவதுதான். வாழ்க்கையின் அடிப்படையான அம்சம் வெற்றிகொள்வதல்ல, நன்றாகப் போராடுவதே

’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்


றிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.

இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.

மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.


பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்

அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம்

ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.

வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.

உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.

உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.

நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.

கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.

மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.

மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.

வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

நவீன ஜப்பானை உருவாக்கிய மெய்ஜி புரட்சி



ஜப்பான், உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு. ‘மேட் இன் ஜப்பான்என்பதே தரமான பொருளுக்கான சான்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலனிய ஆட்சியாலும் வறுமையாலும் சீர்கெட்டு பின்தங்கியிருந்தபோது, நூறு வருடங்களுக்கு முன்பே ஜப்பான் மட்டும் பொருளாதார வலிமைமிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த,  முன்னேற்றமடைந்த நாடாக மாறியது எப்போதும் வியப்புக்குரிய விஷயமாகவே பேசப்படுகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே இந்த சாதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது. அந்த மாற்றத்துக்கு வரலாறு இட்டப் பெயர் ‘மெய்ஜி புரட்சிஅல்லது ‘மெய்ஜி மீட்சிஎன்பதாகும். இந்த மெய்ஜி மீட்சி ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, உலக நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளிலும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

நான்கு பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளையும் கொண்ட ஜப்பான் நாடு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பண்டை காலம் முதலலே ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் டொகுகவா ஷோகன்கள் ஜப்பானில் செல்வாக்கு பெற்று அந்நாட்டின் பெரும்பகுதியை ஆளத்தொடங்கினர். (ஷோகன்என்றால் படைத்தலைவர் என்று பொருள்.). 1860களில் யோஷின்பு என்ற ஷோகன் ஜப்பானை ஆண்டுக் கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சியோ நவீனமயமோ இல்லாத அன்றைய ஜப்பான் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு இருந்தது. பெரும்பாலான நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. சமுராய்என்றழைக்கப்பட்ட வகுப்பினர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறப்பு சலுகைகளோடு வாழ்ந்தனர். சாதாரண மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.


1850களில் வியாபாரம் செய்வதற்காக ஜப்பானில் நுழைந்தனர் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும். இந்தியாவைப்போல ஜப்பானை தங்களது காலனி நாடாக மாற்ற அவர்களால் முடியாவிட்டாலும் அநீதியான வியாபார ஒப்பந்தங்களால் ஜப்பானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஷோகன் எதிர்த்தாலும் மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன ஆயுதங்களும் தொழில்நுட்பமும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. தம்து படைகளை பலப்படுத்த ஷோகனும் மற்ற பிரபுக்களும் நவீன ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். எனினும் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதில் ஷோகனின் இயலாமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது.

வளமான நாடு, வலிமையான ராணுவம்என்னும் கோஷத்துடம் இளம் சமுராய்கள் தலைமையில் ஷோகன் எதிர்ப்பாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு போராடினர். முடிவில், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த ஷோகன் யோஷின்பு ஜனவரி 3, 1868ல் ஆட்சியை மெய்ஜி மன்னர் மட்சுஹிடோவிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கியது தான் மெய்ஜி மீட்சி எனப்படும் சீர்த்திருத்த காலம். நன்கு கற்றறிந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற குழுவினரின் ஆலோசனைப்படி இடோவை (இன்றைய டோக்கியோ) தலைநகராகக் கொண்டு மெய்ஜி மன்னர் ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பல நூறு பகுதிகளாக நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், பல ஒன்று சேர்க்கப்பட்டு 75 பகுதிகளாக குறைக்கப்பட்டன். ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. சமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஷோகனின் படைகள் கலைக்கப்பட்டது. தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டு மேற்கத்திய பாணியில் நவீனப்படுத்தப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆறுவருட பள்ளிக்கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரிவிதிப்பு முறைகள், சட்ட-நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறை மேற்கத்திய முறையில் மாற்றப்பட்டன.


புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்ட்டு ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோமதம் அரசினால் முன்னிலைப்படுத்தப்பட்டது. மதம், ஆட்சி இரண்டுக்கும் மன்னரே தலைவராக இருந்தார். அவ்வப்போது தலைத்தூக்கிய ஷோகன் ஆதரவாளர்கள் முழுமையாக அடக்கப்பட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தனியாருடன் இணைந்து அரசு தொழிதுறையை வளர்க்க பெரும் முயற்சியில் இறங்கியது. நவீன மேற்கத்திய தொழிநுட்பம் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமெண்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.

அரசியல் சட்டப்படி 1889ஆம் ஆண்டில் டயட்எனப்படும் பாரளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதர ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறியது ஜப்பான். பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்தது ஜப்பான். அதன் ராணுவ வலிமையும் பலமடங்கு பெருகியது. தந்து பக்கத்து நாடான கொரியாவின் மீது உரிமை கொண்டாடுவதில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் 1894 போர் வெடித்தது. ஜப்பான் போரில் வென்று மேற்கத்திய நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் பிறகு ரஷியாவுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1905ல் நடைபெற்ற போரிலும் ரஷியாவை வென்று தான் ஒரு வல்லரசாக உருவாகி வருவதை உலகுக்கு காட்டியது. இந்த வெற்றிகள் ஜப்பானிய மக்களிடையே தேசிய உணர்வை அதிகரித்தன. பெருமிதம் கொள்ள வைத்தன.


1912ல் மெய்ஜி மன்னர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. மேற்கத்திய கல்விமுறையும், தொழிநுட்பமும் மக்களின் சிந்தனை போக்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. இதனால் மக்கள் அதிகப்ப்டையான அரசியல் சுதந்திரத்தை கோரினர். அரசியல் கட்சிகள் உருவாகி வலுப்பெற்றன. பழமையான கருத்துகள் மதிப்பிழந்தன. அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என கோரப்பட்டது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912-1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக இருந்தது ஜப்பானியரின் வாழ்க்கை.


1930களில் ஜப்பானில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாக பாதித்தது. அதனால் மூலப்பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையை நிறைவுசெய்ய மேற்கத்திய நாடுகளைப் போலவே காலணிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஜப்பான் இறங்கியது. இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவம் ஜப்பானிய ஆட்சியின் தலைமையை கைப்பற்றிக்கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஜப்பானின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளிலேயே ஜப்பான் உலகின் முன்னேற்றமடைந்த நாடாக மீண்டு உருப்பெற்றது. இந்த அதிசயத்துக்கு காரணம் மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிருவாகம் மற்றும் கல்வி சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும் தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

.     

Saturday, July 17, 2010

எளிய தமிழில் பொதுவுடமை தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள்

உலகில் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இன்னும் பிற பொதுவுடமை சிந்தனையாளர்களின் தத்துவங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டது. உலக மக்களின் துயரங்களுக்கு ஒரே மாமருந்து முதலாளித்துவம் தான். பொதுவுடமை கொள்கையை கடைபிடிக்கும் நாடுகளில் பொதுவுடமை வலுவிழந்து வருகிறது. ஆகவே கம்யூனிச தத்துவம் அழிந்துவிட்டது. இப்படியாக ’அறிவு ஜீவிகள்’ என்றும் ‘மெத்தப் படித்தவர்கள்’ என்றும் காட்டிக்கொள்ளும் பலரும் ‘பிரசாரத்தில்’ ஈடுபட்டு வருவதைப் பார்க்கிறோம்.

பொதுவுடமைத் தத்துவத்தை ஆதரிப்பவர்களோ, ”உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவும் காலம்வரையில் பொதுவுடமை தத்துவத்தின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அது மனிதனின் வாழ்நிலையோடு, சமூக இயக்கத்தோடு இணைந்தது, அறிவியல் பூர்வமானது. பொதுவுடமையை பின்பற்றும் நாடுகளின் பின்னடைவுக்கு பல அக, புறச் சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. வரலாற்றுப் போக்கில் இவை இயல்பானதே. ‘சோவியத்’ மாதிரி குலைந்துவிட்டதால் பொதுவுடமை தத்துவம் அழிந்துவிடாது. தனது தவறுகளை, குறைகளை ஆய்ந்து புதிய ஆற்றலுடன் மீண்டும் மக்களை வழிநடத்தும். உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள், கொந்தளிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவை இதைத்தான் உணர்த்துகின்றன” என்று மார்க்சிய அழிவின்மை தத்துவத்தைக் கூறுகின்றனர்.

இந்த இரண்டு பிரிவுகளைச் சேராத மக்களுக்கோ இது ஒரு ‘தேவையில்லாத’ பேச்சு. ’நாம் பேசி என்ன ஆகப் போகுது?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு காரணம் சாதாரண மக்களிடம் பொதுவுடமை தத்துவம் பற்றிய அறிவு அல்லது தகவல் போதுமான அளவுக்குப் போய்ச் சேராததே ஆகும். ‘விஞ்ஞான சோஷலிசம்’ ‘வர்க்கப் போராட்டம்’ ‘அந்நியமாதல்’ ‘பூர்ஷ்வா கலாசாரம்’ ‘அகவய யதார்த்தம்- புறவய உண்மைகள்’ ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்’ போன்ற வார்த்தைகள் அறிவுஜீவிகளுக்கானது, நமக்கெல்லாம் புரியாது என்று மக்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.

மார்க்சிய-பொதுவுடமை தத்துவங்கள், அரசியல், அறிவியல், இலக்கியம் என பல துறைகளிலும் உள்ள சிந்தனைகள் சாதாரண மக்களை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் ’சோவியத் யூனியன்’ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆர்வமுள்ளவர்களின் தேவையை இந்த நூல்கள் பூர்த்தி செய்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவற்றைப் படிப்பதற்கே கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. தமிழும் கடினமாக இருந்தது. மேலும், ஓரளவு அடிப்படை விஷயங்களை தெரிந்தவர்களுக்கே இந்தத் தத்துவங்கள் புரியும்படி இருந்தன.

பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு புரியும்படி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. தமிழில் வெளியான அடிப்படை நூல்களில் பெருமளவு மொழிபெயர்ப்பே. அவற்றில் இருந்த மொழியியல் சிக்கல்களும் அந்நியத்தன்மையும் எளிமைக்குத் தடையாகவே இருக்கின்றன. எளிய மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படைகள் மிக மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு எழுதும் கடிதங்களில் ‘உயிரினத்தின் தோற்றம்’ ‘சமுதாயத்தின் தோற்றம்’ வர்க்கம் என்றால் என்ன?’ ‘பணம் எப்படி வந்தது’ ‘அடிமைகளின் தோற்றம்’ ‘இயந்திர உற்பத்தியின் வளர்ச்சி’ ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ ‘கம்யூனிச சமுதாயம் என்றால் என்ன?’ என மொத்தம் இருபத்தி ஐந்து தலைப்புகளைப் பற்றி அழகு தமிழில் எழுதியுள்ளார். பொதுவுடமை தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் ஆரம்ப நூலாக இதைப் படிக்கலாம்.

பாரம்பரியமான கம்யூனிச கொள்கையின் அடிப்படையிலேயே இந்நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறிவரும் உலக அரசியல், பொருளியல், சமூகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ’பாட்டாளிகள்’ ‘உற்பத்தி உறவுகள்’ போன்ற பல அம்சங்கள் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கின்றன என்றாலும் ஆரம்ப நூலாக இதை பயிலலாம். மக்களுக்கான தத்துவம் என்றால் அது மக்களை கவர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். நாங்கள் மட்டுமே உண்மையான் கம்யூனிஸ்டுகள் என்று தமக்குத்தாமே ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துக் கொள்ளும் பொதுவுடமைவாதிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவார்களேயானால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.



‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களை இங்கு காணலாம். (நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை & திரு செ. கணேசலிங்கன்)