உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் உயிரினம் எது என்று கேட்டால்,
குழந்தைகள் என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த உலகம்
குழந்தைகள் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் தினசரி கேள்விப்படும்
செய்திகள் அதைத்தான் உறுதிபடுத்துகின்றன. டி.வி. பார்த்துக்கொண்டிருக்கையில் அழுது
‘தொந்தரவு’ கொடுத்த குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக்கொன்ற தாயைப் பற்றிய
செய்திகளை ஒரு காலத்தில் வெளிநாட்டு விநோதங்களாக நாம் பத்திரிகைகளில்
படித்திருப்போம். அத்தகைய நிகழ்வுகள் இன்று நம் நாட்டிலும் சகஜமாக நடக்கத்
தொடங்கிவிட்டது.
கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்பவர்களின் செய்திகளைப் பாருங்கள்.
ஒன்றுமறியா பிஞ்சுகளை சாகடித்துவிட்டே தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத் தகராறில்
முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். உறவினர்களைப் பழிவாங்க குழந்தைகளைக்
கடத்திக் கொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன்
சண்டையா, அவர்களைப் பழிவாங்க முதல் இலக்கு அவர்களின் குழந்தைகள்தான்.
கணவன்/மனைவிக்கு இடையே மோதலா, கோபத்தைத் தீர்த்துக்கொள்ள தாக்கப்படுவது குழந்தைகள்
தான். கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் குழந்தைகள் கொல்லப்படுவது நாம் தினசரி
படிக்கும் செய்திகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மனைவியின் நடைத்தை மீது கணவர்களுக்கு
சந்தேகம் வந்தாலும் முதலில் இலக்காவது குழந்தைகள் தான். இனக்கலவரமோ, மதக்கலவரமோ
பெண்களுக்கு அடுத்த இலக்கு குழந்தைகள் தான்.
குறுக்கு வழியில் விரைவாக பணம் சேர்க்க ஆசைப்படுபவர்கள் கையாளும் எளிய வழி
வசதியான வீட்டுக் குழந்தைகளைக் கடத்துவது. 18 வயது வாலிபனாக இருந்தாலும் சரி, 80
வயது வயோதிகனாக இருந்தாலும் சரி, காமவெறி தலைக்கேறிவிட்டால் அவர்களின் முதல்
இலக்கு ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகள் தான். இப்படியாக தங்கள் கோபத்தைத்
தீர்த்துக்கொள்ள, வேண்டாதவர்களைப் பழிவாங்க, மிரட்டி பணம் பறிக்க, காம வெறியைத்
தீர்த்துக்கொள்ள என்று பல வழிகளில் குழந்தைகள் சந்தித்துவரும் அச்சுறுத்தல்களில்
தற்போது புதிதாக இணைந்திருப்பவை லாபவெறியில் குழந்தைகளின் உயிரைப் பற்றிக்
கவலைப்படாத தனியார் பள்ளிகள்.