Wednesday, February 27, 2013

ஆசிட் அரக்கர்கள்


டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் இழைக்கப்படும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. ஒருதலை காதல், காதல் ஏற்றுக்கொள்ளப்படாதது போன்ற காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் ஊற்றப்பட்டத்தில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இச்சம்பவங்கள் நாம் நாகரிகமான உலகத்தில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் 23 வயது விநோதினி. விநோதினி சென்னையிலுள்ள ஒரு தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி விடுமுறைக்கு குடும்பத்தினரைச் சந்திக்க சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகையில், அவரது முகத்தின் மீது ஆசிட் உற்றப்பட்டது. முதலில் புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் ஆதித்யா மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகம் முழுவதும் வெந்துவிட்டதுடன் அவரது கை, கால் உள்பட உடலில் பல்வேறு பகுதிகள் ஆசிட் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. விநோதினி கண்பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டார். மூன்று மாதக் கடும் போராட்டத்துக்கு பின்னர் பிப்ரவரி 12ஆம் தேதி விநோதினி உயிரிழந்தார். விநோதினிக்கு எமனாக வந்த சுரேஷ்குமார் என்பவர் விநோதினியின் தந்தையின் நண்பர் என்று கூறப்படுகிறது. சுரேஷ்குமாரின் காதலை விநோதினி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், அவன் இக்கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறான். 

விநோதினி இறந்த சோகம் மறைவதற்குள் ஆசிட் வீச்சால் மற்றொரு இளம்பெண் மரணத்தைத் தழுவியிருக்கிறார். சென்னைக்கு அருகிலுள்ள ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் 21 வயது மகளான வித்யா தான் அந்த பரிதாபத்துக்குரிய பெண். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட வித்யா ஒரு பிரவுசிங் செண்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பிரவுசிங் செண்டருக்கு அடிக்கடி வந்துபோன 32 வயது விஜயபாஸ்கர் என்பவன் வித்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளான். தனது தாயிடம் வந்து பேசும்படி வித்யா பதில் கூறியதாகத் தெரிகிறது. இருவரின் பெற்றோரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், உடனே திருமணம் செய்துகொள்ளுமாறு விஜயபாஸ்கர் வித்யாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு வித்யா மறுத்துவிட்ட நிலையில் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் பிரவுசிங் செண்டரில் வேலை செய்துகொண்டிருந்த வித்யா மீது ஆசிட் வீசியிருக்கிறார். கைகளால் முகத்தை மறைத்துக்கொண்ட வித்யாவால் முகத்தை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. உடலெங்கும் ஆசிட் பாதிப்பால் காயம். 25 நாள்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வித்யா 23ஆம் தேதி மரணமடைந்தார். தனது உயிர் பிரியும் நிலையிலும் தனது கண்களைத் தானம் அளித்துவிட்டுத்தான் வித்யா மறைந்தார்.

இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்றாலும் அடிப்படைக் காரணமும் நோக்கமும் ஒன்றுதான். காதல் என்பது இரு உள்ளங்கள் இணைவதால் மட்டுமே சாத்தியமாகும். தான் யாரைக் காதலிக்க வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. வற்புறுத்துவதாலோ, துன்புறுத்துவதாலோ, ஒருவர் மீது காதல் வந்துவிடப் போவதில்லை. ஆனால், இத்தகைய ஆண்கள் தங்கள் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனால், அந்தப் பெண்களை வேறு யாரும் காதலித்துவிடக் கூடாது, அப்பெண்கள் வாழ்க்கை முழுவது தங்களை நிராகரித்துவிட்டதற்காக கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு வகையான பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இப்படியான குரூரமான செயலைச் செய்கின்றனர். இச்செயலால் அப்பெண்கள் எத்தகைய இன்னல்களுக்கு உள்ளாவார்கள், இக்குற்றத்தைச் செய்வதால் தாங்கள் தண்டிக்கப்படுவோம் என்பதனை அறிந்தே இத்தகைய கொடூரமான செயல்களை இவர்கள் செய்கின்றனர்.

ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசப்படுவதால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பானது, ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரத்தைவிடவும் அதிகமான பாதிப்பை அவளது வாழ்க்கையில் ஏற்படுத்தும். அவளது உருவம் சிதைக்கப்படுவதால் அவளுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படலாம், வேலை பாதிக்கப்படலாம், உடலுறுப்புகள் செயலிழக்கலாம், சில சமயம் விநோதினி, வித்யா போல அவளது உயிரே போகலாம், எல்லாவற்றுக்கும் மேலே அவள் தன்னம்பிக்கையிழந்து, வாழ்க்கையில் பிடிப்பின்றி நடைபிணமாக வாழ நேரலாம். ஆனால், இக்கொடூரத்தை நிகழ்த்தும் ஆணோ சில ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு, அது கொலைக் குற்றமாக பதிவு செய்யப்பட்டாலும்கூட, மீண்டும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக நடத்தமுடியும்.

இத்தகைய மோசமான செயலைத் தடுக்க என்னதான் செய்வது? தண்டனைக் கடுமையாக இருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். பெண்கள் மீது ஆசிட் வீசுவது கொலைக்குற்றமாக கருதப்பட வேண்டுமென்கின்றனர் சிலர். ஆசிட் வீசியவனே அப்பெண்ணின் சிகிச்சை செலவிலிருந்து மறுவாழ்வுக்குத் தேவையான செலவுகள் வரைப் பொறுப்பேற்க வேண்டுமென்கின்றனர் ஒரு தரப்பினர். சாதாரண பெட்டிக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆசிட் எளிதாகக் கிடைக்கிறது. அதனால் தான் இவர்களால் பெண்கள் மீது ஆசிட் வீச முடிகிறது. எனவே, வெடிபொருள்களுக்கு இருப்பதுபோல கட்டுப்பாடுகளும், லைசன்ஸ் முறையும் ஆசிட் மூலப்பொருள்களுக்குக் கொண்டுவந்தால் இக்குற்றச் செயலைத் தடுக்கலாம் என்கின்றனர் மற்றொரு தரப்பினர். இந்த யோசனைகளைத் தவிர வர்மா கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும், ஆசிட் வீசப்படும் குற்றச்செயல்களுக்கு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது மட்டுமல்ல. அதிகச் சட்டங்கள் குற்றங்களைக் குறைக்கும் என்பதெல்லாம் நடைமுறையில் உண்மையாக இருப்பதில்லை. புதியச் சட்டங்களுடன், ஏற்கனவே இருக்கும் சட்டங்களும் ஒழுங்கான முறையில் அமல்படுத்தப்படவேண்டும். இந்த நடைமுறைகள் விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெறவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களைப் பற்றி ஆண்கள் கொண்டுள்ள மனோபாவம் மாறவேண்டும். குற்றத்துக்கான மூலவித்து அங்குதான் உள்ளது. தங்கள் விருப்பத்தைப் பெண்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம், அவர்கள் மறுக்கும் நிலையில் கொலைவெறியாக மாறுகிறது. பெண்ணை உடலாகவும், தான் நுகர்வதற்குரிய பொருளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணின் மனம், எப்போது பெண்ணை ஒரு சக மனிதப் பிறவியாக பார்த்து, மதிக்கத் தொடங்குகிறதோ, தன்னைப் போலவே ஒரு பெண்ணுக்கும் முடிவெடுக்கும் உரிமை இருக்கிறது என்று எப்போது மதிக்கத் தொடங்குகிறதோ, அப்போதுதான் இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதுவரை விநோதினிகள், வித்யாகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே!     

எல்லைத் தாண்டும் பாகிஸ்தான் – தீ ர்வு என்ன?


எப்போதெல்லாம் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறதோ, எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றனவோ, அப்போதெல்லாம் அந்தச் சூழ்நிலையைச் சீரழிக்க பாகிஸ்தான் ராணுவம் முயல்வது வழக்கம். இந்தமுறை அவர்கள் செய்த காரியம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கோபப்பட வைத்திருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் (எல்.ஓ.சி.) காவல் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய வீரர்களை, எல்லைத் தாண்டி வந்து கொன்ற பாகிஸ்தானிய ராணுவத்தினர், ஒருவருடைய  தலையைத் துண்டித்து எடுத்துசென்றுள்ளனர்.
சம்பவம் நடந்தது 8 ஜனவரி 2013 அதிகாலைக்கு முன்பாக. ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியான மெந்தர் செக்டார் பகுதியில் எல்லையோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை ஒட்டி இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ராஜ்புதனா ரைஃபிள்ஸ் ரெஜிமெண்டின் 13வது பட்டாலியனில் லான்ஸ் நாயக் ஆகப் பணியாற்றிய வீரர்களான ஹேம்ராஜ், சுதாகர் சிங் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட அணியினர். இரண்டிரண்டு பேர்களாகப் பிரிந்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோசமான தட்பவெப்பநிலை காரணமாக எதிரில் இருப்பவர் யாரென அடையாளம் காண முடியாத அளவுக்குப் பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம். ஹேம்ராஜும் சுதாகர் சிங்கும் அந்த இடத்திலேயே பலியானார்கள். என்ன நடக்கிறது என்று அறிய முடியாத நிலையில் சக வீரர்கள் துப்பாக்கிச் சத்தம் வந்த திசைநோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். காலையில் பனிமூட்டம் விலகும்வரையில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. அப்போது, பாகிஸ்தான் சிறப்பு அதிரடிப்படையின் கருப்பு சீருடையணிந்த நபர்களின் நடமாட்டத்தை ரோந்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பார்த்தனர்.
முற்பகல் 11.30 மணிக்கு பனியில் உறைந்துகிடந்த ஹேம்ராஜ், சுதாகர் சிங் இருவரின் உடல்களையும் கண்ட சக வீரர்கள் அதிர்ந்து போனார்கள். சுதாகர்  சிங்கின் கழுத்துப் பகுதியில் ஆழமான காயங்கள் தென்பட்டன. ஹேம்ராஜின் தலை துண்டிக்கப்பட்டு, தலையற்ற உடல் மட்டும் அங்கே கிடந்தது. தலையை அவர்கள் வெற்றிக்கோப்பையைப் போல எடுத்துச் சென்றிருந்தார்கள்.
இது தீவிரவாதிகளின் செயலல்ல!
இரண்டு வீரர்களை பலிகொண்ட தோட்டாக்கள் வந்த திசையையும், பதிலடியில் ஈடுபட்ட இந்திய படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தானியரின் சாவடி இருந்த உயரமான பகுதியையும் ஒப்புநோக்கினால் ஓர் உண்மை புரியும். பிற இந்திய வீரர்களைத் திசைத் திருப்பவும், இந்திய வீரர்களைக் கொலைசெய்ய வந்தவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும் பாகிஸ்தான் ராணுவத்தில் பலூச் ரெஜிமெண்டைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் சுட்டிருக்கின்றனர். ஆனால், தலைத் துண்டிப்புச் செயலைச் செய்தவர்கள், பாகிஸ்தானின் சிறப்பு அதிரடிச் சேவை குழு கமாண்டோக்கள் (எஸெஸ்ஜி). அவர்களின் நோக்கம் இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதும், அமைதி முயற்சிகளைத் தடுப்பதும்தான் என்பது தெளிவு.
இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாமலில்லை. ஜன 5, 6 தேதிகளில் யூரி பகுதியில் இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி வந்து தாக்கியதில் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவர் பலியானதாக ஒரு  பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் எழுப்பியது. அதற்காக ஜனவரி 7ம் தேதி ராணுவ செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எம்.ஓ.) மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தது. அழைப்பு விடுத்த அதே நாளில் இந்தியத் துணை தூதர் கோபால் பக்லேவிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தக்குற்றச்சாட்டை அப்போதே இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் மறுத்தார்
அவர்களின் குற்றச்சாட்டு உண்மையானால் அதை டி.ஜி.எம்.ஓ.  மட்டத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டிருப்பார்கள். பாகிஸ்தான் முன்வைத்த இந்தப் பொய்ப்பிரசாரத்தையும் செயல்பாட்டையும் காணும்போது 8ம் தேதி தாக்குதலைத் திட்டமிட்டுவிட்டு, அதை நியாயப்படுத்தக் காரணங்கள் தேடித்தான் இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தலையைத் துண்டிக்கும் கொடுஞ்செயல் நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு மூன்று முறை இந்தக் காட்டுமிராண்டித்தனம் நடத்தப்பட்டு 4 வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மந்தமான பதில் நடவடிக்கைகள்
சம்பவம் நடந்ததும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் வரவழைக்கப்பட்டு, அவரிடம் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு நடந்த சம்பவத்தை அடியோடு மறுத்தது. மேலும், இந்திய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி ஐ.நா.வின் ராணுவக் கண்காணிப்பு குழுவினர் மூலம் விசாரணை நடத்தலாம் என்று யோசனை கூறியது. காஷ்மிர் விஷயத்தில் சர்வதேசத் தலையீட்டை லாகவமாகப் புகுத்தப் பார்த்த பாகிஸ்தானின் யோசனையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
‘நடந்த சம்பவத்தை இந்தியா மிக வன்மையாகக் கண்டிக்கிறது… என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்யப்படும்’ என்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி. பாகிஸ்தான் தனது பங்குக்கு ஆக்கிரமிப்பு காஷ்மிருக்கு இந்திய காஷ்மிர் பகுதியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 25 லாரிகளைத் தடுத்து நிறுத்தியது. மேலும், சரக்குகளைக் கொண்டு  செல்லத் தயாராக இருந்த 65 லாரிகள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன. இரண்டு காஷ்மிர் பகுதிகளுக்கும் இடையே நடந்துவந்த பேருந்துப் போக்குவரத்தையும் பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. நிலைமையின் தீவிரம் இப்படி இருக்கையில் 10ம் தேதி மாலை அதே இடத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கியது பாகிஸ்தான். இந்திய தரப்பில் அதற்குப் பதிலடியும் தரப்பட்டது.
இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் நடக்கும் மோதல்களுக்குத் தீர்வுகாண இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையே கொடி சந்திப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. எதிர்த்தரப்பில் இருந்து சுமூகமான பதில் வரவில்லை. தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்களும் எச்சரிக்கைகளும் எழத்தொடங்கின. ‘பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்தால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ‘மாற்று வழி’களை நாடவேண்டிய நிலை ஏற்படும்’ என்று எச்சரித்தார் இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரவுன். ‘இந்திய வீரர்களின் உடல்  சிதைக்கப்பட்டு தலைத் துண்டிக்கப்பட்ட செயலானது மிகவும் துயரமானது, துரதிருஷ்டவசமானது, மனிதத்தன்மையற்றது… இந்தச் சிக்கலைத் தீர்க்க  நீங்கள் விரும்பினாலும், நடந்த உண்மையை வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர்தான் அது சாத்தியமாகும்’ என்று தனது முந்தைய நிலைப்பாட்டை  சற்று கடினமாக்கிக் கொண்டார் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான குர்ஷித்.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலும் உடல்  சிதைக்கப்பட்டதிலும் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும், அத்தகைய தாக்குதலே நடக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவந்ததாலும் இரண்டு வீரர்கள் பலியான தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமான விளக்க அறிக்கையை வெளியிட்டது. 14ம் தேதி இருநாட்டு பிரிகேடியர் மட்டத்திலான கொடி சந்திப்பின் முடிவு மகிழ்ச்சிகரமாக இல்லையென்றாலும் முயற்சிகள் தொடர்ந்தன. இதற்கிடையே இந்தியா தன்னால் ‘முடிந்த’ சில ராஜதந்திர நடவடிக்கைகளை  மேற்கொண்டது. மூத்த பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியா வந்து சேர்ந்த பிறகு விசா பெறும் திட்டத்தை அரசு ஒத்தி வைத்தது. இந்திய ஹாக்கி லீகில் விளையாடவந்த பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மக்களின் கோபத்தைத் தணிக்கும் விதமாகவும், ராணுவ வீரர்களின் மனஉறுதியை வலுவாக்கும் விதமாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங் பாகிஸ்தானுக்கு ஜன. 14ம் தேதி கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்: ‘போர் நிறுத்த உடன்படிக்கை கடைபிடிக்கப்படுகிறவரை நாம் அதை உறுதியாகப் பின்பற்றுவோம். நாம் உரிய நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நமது நிலைகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூடுகளுக்குக் கொடுத்த பதிலடி அளவானது, சரியானது… பிரிகேடியர் மட்டத்திலான கொடி சந்திப்புக்குப் பிறகும்கூட அந்நாடு போர்நிறுத்த ஒப்பந்தத்தை 3 முறை மீறியிருக்கிறது… பாகிஸ்தான் ராணும் மற்றும் தீவிரவாதிகளின் எந்தச் சவாலையைம் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.’
சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்களைத் தண்டிக்காவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும். அந்தச்சம்பவத்தை அப்பட்டமாக மறுத்துக்கொண்டிருப்பதையோ, உரிய முறையில் பதில் அளிக்காமல் இருப்பதையோ இந்தியா கண்டுகொள்ளாது என்றோ, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்றோ வழக்கம் போல உறவுகள் தொடரும் என்றோ பாகிஸ்தான் கருதக்கூடாது என்று இந்தியா அதிகாரபூர்வமாக எச்சரித்தது.
இறுதியாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானை நாகரிகமான வார்த்தைகளில் எச்சரித்தார்: ‘இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் சுமூக உறவு என்பது சாத்தியமில்லை. இதற்குக் காரணமானவர்கள் நீதிக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் இதைப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.’
இந்திய பிரதமர், அரசியல் தலைவர்கள், ராணுவம் ஆகியவற்றின் கடுமையான நிலைப்பாட்டையும் எச்சரிக்கையையும் கண்ட பாகிஸ்தான் ராணுவம் இறுதியாக இறங்கிவந்தது. எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக உறுதியளித்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று தனது சிப்பாய்களுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுகோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய இந்தியாவின் அனைத்துக் கவலைகளையும் பகிர்ந்துகொள்ள, இந்திய வீரர்களின் தலைத் துண்டிப்பு தொடர்பான விசாரணை உள்பட, அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அதன் ஹைகமிஷனர் சல்மான் பஷீர் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர்களின் மட்டத்திலான பேச்சுவார்த்தைப் பாகிஸ்தான் விடுத்த அழைப்பை ‘தற்போதைக்கு அவசியமில்லை’ என்று இந்தியா மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலின் பின்னணி
பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்களுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2003ம் ஆண்டில் வாஜ்பாய் – முஷாரஃப் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு ஓரளவுக்கு மிகவும் அமைதியாகவே காணப்பட்ட இருநாட்டு உறவுகள்? 26/11 மும்பைத் தாக்குதல் மூலம் பெரும் பாதிப்புக்குள்ளானது. உள்நாட்டில் மத அடைப்படைவாதத் தீவிரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தான், இந்தியா குறித்த தனது நிலையை மெல்ல மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. வர்த்தக, கலாசார உறவுகளில் ஆர்வம் காட்டப்பட்டது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப், ‘தீவிரவாத அச்சுறுத்தலுக்கு’ எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார். பாகிஸ்தானின் ராணுவ  சித்தாந்தத்தை மறுவரையறை செய்வது குறித்துப் பேசினார்.
பாகிஸ்தானில் இருந்து சமாதானப் புறா பறக்க முயல்வதைக் கண்ட இந்திய அரசும் வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமல்லாத உறுப்பினராகப் பாகிஸ்தானைத் தேர்வுசெய்ய உதவியது; விசா நடைமுறைகளைத் தளர்த்தியது.
காஷ்மிர் மாநிலத்திலும் முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. ஊடுருவல்களும் 45% அளவுக்குக் குறைந்திருந்தன. மாநிலத்தின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. இயல்பு வாழ்க்கையும் ஓரளவுக்கு அமைதியாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது.
இத்தகைய நட்புறவான அமைதி நிலை ஏற்படுவதை போர்க்கொள்கையை நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்நாட்டு ராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கும் மத அடிப்படைவாத எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தியாவை நட்பு நாடாக ஏற்றுக்கொள்வது உவப்பானதாக இல்லை. இந்தியாவை இஸ்லாமியர்களுக்கு எதிரான சக்தியாகக் காட்டுவதும், காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைகளை அதிகரிப்பதும் இவர்களுடைய கொள்கைகள்.
பாகிஸ்தான் ராணுவத்தின் மற்றொரு பிரிவினரின் கவலை வேறுவிதமானது. தாலிபன் மற்றும் பிற மத அடிப்படைவாதத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் பாகிஸ்தானை ஏறக்குறைய செயலிழக்கச் செய்துவருகின்றன. இந்திய எல்லையில் பதற்றம் குறைந்திருக்கிறது. இந்த இரு சூழ்நிலைகளும் பாகிஸ்தானின் ஆயுதத் தேவையை மாற்றியமைத்திருக்கின்றன. பெரிய ஆயுதங்களுக்கான தேவை குறைந்து தீவிரவாதிகளுடன் சண்டையிடத் தேவையான சிறு ஆயுதக் கொள்முதல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்தப்பிரிவினரின் கமிஷனைப் பாதிக்கும் என்பதால் அவர்களும் இந்தியாவுடனான நட்புறவை எதிர்க்கின்றனர்.
இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. ஆஃப்கானிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கப்படைகள் வெளியேறவுள்ளனர். அதன்பிறகு தாலிபன்களின் கொட்டம் அதிகரித்துவிடும். பாகிஸ்தானிலும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை மேலும் விரிவுப்படுத்துவார்கள். இதுவரை அவர்களை அமெரிக்கப்படை கவனித்துக்கொண்டது. அவர்கள் சென்ற பின்னர் ஏற்கெனவே உள்ள உள்நாட்டு அச்சுறுத்தல்களுடன் இதுவும் சேர்ந்துகொள்ளும். ஆகவே பயங்கரவாதச் சக்திகள் அனைத்தையும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, காஷ்மிர் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நோக்கித் திருப்பிவிட்டுவிட்டால் தங்கள் தலைவலி குறையும் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை திட்டமிடுகிறது. இதன்மூலம் தங்களுக்கே ஆபத்தாக மாறிவிட்ட, தங்களால் அடக்கமுடியாத பயங்கரவாதிகளை இந்தியாவை நோக்கித் திருப்பி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க  பாகிஸ்தான் ராணுவம் முயல்கிறது.
பதிலுக்குப் பதில் தீர்வாகுமா?

யுத்த தர்மத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ்த்தரமான செய்கை மக்களை உணர்ச்சி வசப்படச் செய்துள்ளது. விளையாட்டிலேயே அந்நாட்டை எதிரியாகப் பார்க்கும் நம் மக்கள் உணர்ச்சி வசப்படுவதில் வியப்பில்லை. ஆனால், மக்களுக்கு உண்மையையும், நடைமுறைகளையும் எடுத்துச்சொல்ல கடமைப்பட்ட ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிகளை மேலும் தூண்டுவதிலேயே ஈடுபட்டுள்ளன. நமது வீரர்களின் மன உறுதி குலைந்துவிடாமல் இருப்பதற்காகப் பழிக்குப் பழிப் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பலர் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுடச்சுடத் தகவல்கள் அளிக்க வேண்டுமென்ற வேகத்தில் தலைத்துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பெயரையும் மாற்றியெழுதிய இந்தியாவின் முன்னணி இதழ்கூட போருக்கு அழைப்புவிடத் தவறவில்லை.
பாகிஸ்தான் அடிக்கடி செய்வதைப் போல கமாண்டோ வகைத் தாக்குதல்கள் நடத்திவிட்டு நாம் செய்யவே இல்லை என்று மறுத்துப் பேசலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர்களோ போர்ப் பிரகடனமே செய்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஹேம்ராஜ் தலையை பாகிஸ்தான் திருப்பி அனுப்பாவிட்டால்,அதற்குப் பதிலாக பத்து பாகிஸ்தானிய தலைகளைக் கொண்டுவர வேண்டுமென்றார். உணர்ச்சிகரமான முடிவுகள் எத்தகைய அழிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பற்றி இவர்கள் சற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள், ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுத்துவந்தது போர்நிறுத்த உடன்படிக்கை தான் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க யாரும் விரும்பவில்லை. அதற்காக பாகிஸ்தானியர்களின் இந்தக்கொடுஞ்செயலை மன்னித்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டாக வேண்டும். இருதரப்பு உறவைக் கெடுக்க முயலும் எந்தச் சூழலையும் அனுமதிக்கக் கூடாது.
சுமூகமான அயலுறவும்,  நம்பிக்கைத்தரக்கூடிய செயல்பாடுகளும்தான் நமது இப்போதைய தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படாமல் முடக்கும் வல்லமை பெற்ற ராணுவம், பாகிஸ்தானின் சாபக்கேடு. எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆதாயம் தேட பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் முயலுகையில், பாகிஸ்தானின் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டியதுதான் நமது கடமை, நமது தேவையும்கூட.
கட்டுப்பாட்டுக்கோடு :
சில தகவல்கள்
1947ல் காஷ்மிர் தொடர்பாக நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. அப்போது, இருதரப்பு படைகள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையைத் தொடர்வதென முடிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஜம்மு காஷ்மிர் மாநிலமாகவும், பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் இருந்த பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு பகுதிகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதி, கட்டுப் பாட்டுக்கோடு (எல்ஓசி) என்று அழைக்கப் படுகிறது. 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்ட போது இக்கட்டுப்பாட்டுக்கோடு சில மாற்றங்களுடன் இறுதி யாக வரையறுக்கப்பட்டது. அந்நிலையே இன்றுவரை தொடர்கிறது. எல்ஓசி என்பது சர்வதேச எல்லை அல்ல.
எல்ஓசியின் நீளம் ஏறத்தாழ 778 கி.மீ. இந்திய ராணுவத்தின் 6 டிவிஷன்களைச் சேர்ந்த 72,000 வீரர்கள் அந்த எல்லைக் கோட்டை காவல் செய்கின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் முள்வேலி அமைக்கப் பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு எது என்று துல்லியமாக யாராலும் கூற முடியாது. கட்டுப்பாட்டுக் கோட்டின் மீது வேலி அமைப்பதற்கு பாகிஸ்தாஸ் ஆட்சேபம் தெரிவித்ததால், இந்திய பகுதிக்குள்ளேயே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மோசமான நில அமைப்பு காரணமாக சில இடங்களில் இந்திய பகுதிக்குள் எல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில்கூட வேலி அமைக்கப்பட்டுள்ளது.  12 அடி உயரம், 4 அல்லது 9 அடி அகலம்  அளவுக்கு வேலி உள்ளது. வேலிக்கு அப்பால் இருதரப்புப் பகுதிகளிலும் ஆங்காங்கே கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டுக்கோட்டில் வேலி அமைக்கப்படுவதற்கு முன்பு, எல்லைத்தாண்டிய தீவிரவாத ஊடுருவல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 ஆக இருந்தது. தற்போது அது ஆண்டுக்கு 150 ஆகக் குறைந்துவிட்டது. எல்லைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு கி.மீ இடைவெளிக்கும் 4 முதல் 7 காவல் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 5 முதல் 8 வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இரவு நேர ரோந்துப் பணியின்போது பேசக்கூடாது, டார்ச்லைட், செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது, இருமல் தவிர்க்கப்பட வேண்டும். சிறு சலசலப்புச் சத்தம்கூட துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாகிவிடும் என்பதால் இப்படிப் பல கட்டுப்பாடுகள்.

Thursday, February 14, 2013

பாலஸ்தீனம்: தொடரும் துயரம்




எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையைச் சந்தித்துவரும் பாலஸ்தீன மக்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நான்கு ஆண்டுகளாக முழுமையான முற்றுகைக்குள் வைத்திருக்கும் காஸா சுயாட்சி பிரதேசத்தின் மீது நவம்பர் 14 அன்று தனது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். 150க்கு மேற்பட்டவர்களை பலிவாங்கி, பாலஸ்தீனர்களின் கட்டுமானங்கள், சொத்துகளை நாசப்படுத்திய பின் சர்வதேச அழுத்தங்களினால் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டிருக்கிறது இஸ்ரேல்.

தாக்குதலுக்கு முன்பு காஸா

1995ல் ஏற்பட்ட ஓஸ்லோ உடன்படிக்கையின்படி வரையறுக்கப்பட்ட பாலஸ்தீன சுயாட்சி பிரதேசங்களாக மேற்கு கரை, காஸா பகுதி, இன்னும் சில சிறுபகுதிகள் இருக்கின்றன. இவற்றில் மத்தியத்தரைக்கடல் ஓரமாக இருக்கும் காஸா பகுதியைத் தவிர்த்து மற்ற பாலஸ்தீன பகுதிகள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளதுடன் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளது இஸ்ரேல். ஏறத்தாழ 400 ச.கி.மீ. பரப்பே உள்ள காஸாவில் 15. முதல் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். உலகில் மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள பகுதியாகக் கருதப்படும் இப்பகுதி, 2008-08ல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது முதல் திறந்தவெளிச் சிறைப்போல இஸ்ரேலால் முற்றுகை இடப்பட்டு வருகிறது\. பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் இருந்தாலும், காஸாவின் ஆட்சி அதிகாரத்தை ஹமாஸ் இயக்கத்தினர் தேர்தல் மூலம் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த பத்து ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு, பொருளாதாரத்தடை, ராணுவ முற்றுகை, கூட்டுத் தண்டனை, சொத்துகளைப் பறித்தல், நாசம் செய்தல், இழச் சுத்திகரிப்பு, இன ஒதுக்கள் என பாலஸ்தீன மக்கள் சந்தித்து வருவதைப் போன்ற கொடுமையை நவீன உலகில் வேறெங்கும் காணமுடியாது.

ஹமாஸ் மீதான தாக்குதல் அல்ல, பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்.

நவம்பர் 14 அன்று இஸ்ரேல் நடத்தத் தொடங்கிய கொடூரத் தாக்குதலுக்கு, இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள்தான் காரணம் என்று ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பார்க்கையில் உண்மை அதுவல்ல என்பதை அறியலாம். நவம்பர் 7 அன்று அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அன்றே தாக்குதலுக்குத் தயாராக இஸ்ரேல் இருந்தது. தாக்குதலுக்கு காரணத்தை உருவாக்க நவம்பர் 5 அன்றே அஸ்திவாரமிடப்பட்டுவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் 5ஆம் தேதி சுட்டுக் கொன்றனர். அந்த நிகழ்வே பதட்டத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. அடுத்து 8ஆம் தேதியன்று டாங்கிகள் ஹெலிகாப்டர்களுடன் காஸாவுக்குள் எட்டிப்பார்த்தது இஸ்ரேல் அடுத்து, கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். கோபமடைந்த பாலஸ்தீனியர்கள் பதிலடியாக சில ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் ஏவினர். இதில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. எல்லையோரமாக நடந்த சிறு துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து நம்வம்பர் 10ஆம் தேதி கால்பந்து மைதானத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் இறுதி ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் இறந்தார். இவையெல்லாமே பாலஸ்தீனர்களை வெறுப்பேற்றி சண்டைக்கு இழுக்க வேண்டுமென்றே இஸ்ரேல் செய்த தந்திரங்கள். இதற்கிடையே போர் தீவிரமாகாமல் தடுக்கும் நோக்கில் எகிப்து ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டது. ஹமாஸும் அதற்கு உடன்படவே 12ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் தயாரானது.

போர் நிறுத்தத்துக்கு உடன்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியான அஹ்மது ஜாபரியின் கைக்கு அந்த ஒப்பந்த முன்வடிவம் கிடைத்த போது நவம்பர் 14 அன்று இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றது. சமாதானம் ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்பதை இது உறுதிப்படுத்தியது. ஹமாஸின் தாக்குதல் திறனை குலைக்க வேண்டுமென்றே முக்கிய தளபதியான ஜாபரி கொல்லப்பட்டார். தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் ஆரம்பித்தது. காத்திருந்த இஸ்ரேல் உடனடியாகத் தனது மூர்க்கத் தாக்குதல்களை ஆரம்பித்தது. அத்தாக்குதல்கலுக்கு ‘மேகத்தூண்” என்று பெயரிட்டது.

மொத்தத்தில் 162 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிவிலியன்கள். அவர்களில் 37 பேர் சிறுவர்கள், 11 பேர் பெண்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 1400 ராக்கெட்டுகள் பாலஸ்தீன தரப்பிலிருந்து இஸ்ரேல் மீது செலுத்தப்பட்டன. ஆனால், அதைவிட 1000 மடங்கு வெடிமருந்துகளை இஸ்ரேல் காஸாவைத் தாக்கப் பயன்படுத்தியது.  பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. ஹ்மாஸ் இயக்கத்தின் இருப்பிடங்கள் தாக்கப்பட்டதைச் சொல்லத்தேவையில்லை. காஸா பகுதியின் மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதியளவினர் சிறுவர்கள் தான். தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான். ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைவாலும், தொடர்ச்சியான போர்ச்சூழல் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை இது மேலும் பாதிக்கும்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உலகம் தழுவிய எதிர்ப்பும்
இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் அதற்கு ஆசிகூறி வாழ்த்தியவர் அமைதித் தூதரான அமெரிக்க அதிபர் ஒபாமாதான். ”இஸ்ரேலுக்கு தன்னை ‘தற்காத்து’ கொள்வதற்கான உரிமை உண்டு. ஆகவே பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்று கூறினார். பிற மேற்கத்திய நாடுகளும் பல்வேறு சுருதியில் பேசினாலும், பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றன. முக்கிய மேற்கத்திய ஊடகங்கள் அனைத்துமே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதிலும் இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்பு என்று காண்பிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டன.

ஆனால், இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எகிப்து உடனடியாகத் தனது தூதரை திரும்ப அழைத்தது. முன்பிருந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியாக இருந்தால் உடனே இஸ்ரேலுக்கு வால் பிடித்திருக்கும். சவுதி அரேபியா, கத்தார் போன்ற அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு நாடுகள் அமைதி காத்தன. பொதுவாக உலகம் முழுவதும் மக்களின் ஆதரவு பாலஸ்தீனர்களுக்கு கிடைத்தது. உலகின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், டெல்லி உள்பட, இஸ்ரேலின் மனிதத் தன்மையற்றச் செயலைக் கண்டித்தும் போர் நிறுத்தம் கோரியும் போராட்டங்கள் நடந்தன. எகிப்து பிரதமர் தாக்குதல் தொடங்கிய இரண்டாவது நாளே காஸாவுக்கு சென்று பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார். முன்பு இஸ்ரேலின் ஆதரவு நாடாக இருந்த துருக்கியும், 2010ல் துருக்கிக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து எதிரி நாடாக மாறிவிட்டது, கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
இஸ்ரேலின் எதிர்கட்சிகளின் ஒன்றான இடதுசாரி ஹடாஷ் கட்சியின் எம்.பி. டவ் கெனின் கூறியது இங்குக் குறிப்பிடத்தக்கது: தலைவர்களைப் படுகொலை செய்வது எப்போதுமே தீர்வாகாது. ஒரு தலைவரை கொன்றால் நிச்சயம் மற்றொருவர் அந்த இடத்துக்கு வருவார். நாம் மீண்டும் இதே துப்பாக்கியும் ரத்தமுமாக மற்றொரு சுழற்சிக்கு வரவேண்டியதுதான்:.
இஸ்ரேலின் தாக்குதல் நோக்கமும் பின்னணியும்
இஸ்ரேலின் இத்தாக்குதலுக்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் உண்மையில் தாக்க நினைப்பது இரான் நாட்டைத் தான். அதற்கு முன்னோடியாகத்தான் அது இரானின் நட்பு சக்தியான ஹமாஸை சீண்டியிருக்கிறது. இரான் மீது போர் தொடுக்கும் போது ஹமாஸ் தலையிடாமல் முன்கூட்டியே அதை அழிப்பது திட்டமாக இருக்கலாம். அடுத்து ஜனவரியில் நடக்கப்போகும் பிரதமர் பதவிக்கான தேர்தல். சமூக நலப் பிரச்னைகள், பொருளாதாரப் பிரச்னைகள் என தேர்தலுக்கு முன் தான் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைத் திருப்ப இத்தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எகிப்தின் புதிய அரசாங்கத்தை மதிப்பிடுவதற்கும் இருக்கலாம். அல்லது இரானுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவும் இது இருக்கலாம். அல்லது தான் புதிதாக உருவாக்கியிருக்கும் இரும்பு கூம்பு என்ற ஏவுகணைத் தடுப்பு கவசத்தைச் சோதிப்பதற்காகவும் இஸ்ரேல் இச்சண்டையை தொடங்கியிருக்கலாம்.
இஸ்ரேல் மீது நம்பிக்கையற்ற பாலஸ்தீன ஆணையம் ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதாக இருந்தது. பாலஸ்தீனத்தின் சுதந்தர நாட்டுக் கோரிக்கையை அங்கீகரிப்பதில் இது ஒரு முன்னேற்றமாக இருக்கலாம். அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம். சமீப காலமாக ஒபாமாவின் அரசு மத்திய கிழக்கு அரசியலில் இஸ்ரேலுக்கு அப்பாற்பட்டு சுதந்தரமான கொள்கையை வகுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே, அமெரிக்காவின் மத்திய கிழக்கு அரசியலில் தாங்கள் வகித்துவந்த முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இத்தாக்குதல் நடந்திருக்கலாம். மேலும், இரான் விவகாரத்தி,ல் ராணுவத் தலையீட்டைவிட ராஜதந்திர ரீதியில், சில சலுகைகள் காட்டி இரானை பணியவைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. அதைத் தடுக்கவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கலாம். மொத்தத்தில் காஸாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது தான் திட்டமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 75,000 வீரர்களையும், விமானப்படை மற்றும் கப்பல் படை அனைத்தையும் தயார்நிலையில் இருக்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

போர் நிறுத்தம் : புதிய எகிப்து அரசின் முதல் வெற்றி

போரை நிறுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே முயன்று அதைச் சாதித்துக் காட்டியது எகிப்தின் புதிய அரசு. ஆரம்பத்தில் மொராக்கோ அரசு இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தது. அதை அமெரிக்கா தடுத்துவிட்டது. முதலில் எகிப்தும் கத்தார் நாடும் இணைந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டன. பிறகு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் எகிப்துக்கு நேரடியாக வந்துவிட்டார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் வந்து சேர்ந்துகொள்ள எகிப்து அதிபர் முகமது மோர்சியின் சமாதான முயற்சிக்கு பலன் கிடைத்தது. போரை நிறுத்திக்கொள்ள ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்புக்கொண்ட நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தாக்குதலை நிறுத்திக்கொள்ள சம்மதித்தர். உலக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், மனித உரிமை ஆர்வலர்களின் முயற்சிகளும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
யாருக்கு வெற்றி
இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு தருப்புகளுமே தாங்கள் வெற்றியடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்கின்றன. தங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஒருவேளை அப்பாவி பாலஸ்தீனியர்களைக் கொன்றது, இரும்பு கூம்பு ஏவுகணைக் கவசத்தைச் சோதித்தது, கனரக ஆயுதங்களைச் சோதித்துப் பார்த்தது போன்றவை இஸ்ரேலின் நோக்கங்களாக இருந்தால் அவர்கள் கூறுவது சரிதான். மேலும் போர்நிறுத்தத்தின் மூலம், தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு எவ்வித இழப்பீடும், தண்டனையும் இல்லாமல் இஸ்ரேல் தப்பித்துக்கொண்டது.
சர்வதேச அரங்கைப் பொறுத்தவரையில் இஸ்ரேலுக்கு ஆதரவு குறைந்துகொண்டுதான் வருகிறது. அமெரிக்காவின் வீட்டொ அதிகாரம் தான் ஐ.நா. நடவடிக்கையிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்றி வருகிறது. “மக்களின் விருப்பம் ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டம் தான் என்ற பாடத்தை தற்போது நடந்துள்ள சம்பவம் அளித்துள்ளது” என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மிஷால். எகிப்தில் ஆட்சி மாற்றம் நடந்து இன்னும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்தாலும், பாலஸ்தீனத்துக்கான தங்கள் ஏகோபித்த ஆதரவை எகிப்தியர்கள் வீதிகளில் இறங்கித் தெரிவித்தனர். சில காலமாக மத்திய கிழக்கு அரசியலில் முக்கியத்துவத்தை இழந்திருந்த எகிப்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதன் மூலம் பிராந்தியத்தின் முக்கிய சக்தியாகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

என்று முடியும் இத்துயரம்

அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதாலும், தங்கள் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதன் காரணமாகவும்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதலை மட்டும் தற்காப்பு என்று நியாயப்படுத்துவதுடன் நம்மை நம்பவும் சொல்கின்றன. பாலஸ்தீனத்தில் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய அமைப்புதான் ஹமாஸ். அதை அங்கீகரிக்க மறுக்கிறது இஸ்ரேல். ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால், இஸ்ரேலின் பாதுகாப்பு உண்மையில் இஸ்ரேலின் கைகளில் தான் இருக்கிறது. பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதை நிறுத்தாதவரையில் இஸ்ரேலில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. இது இஸ்ரேலே ஏற்படுத்திக்கொண்ட நிலைமை. நாகரிகமும் பழமையான கலாசாரமும் கொண்ட மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை அறுபதாண்டுகளுக்கும் மேலாக இரண்டாம் தர மனிதர்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனர்களை சுதந்தரமாக வாழவிடாத வரையில் தனது எதிர்காலத் தலைமுறையினருக்கு அமைதியான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை இஸ்ரேல் நிச்சயம் வழங்க முடியாது. புராணக் கதைகளின் பெயராலும், வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியாலும் பாலஸ்தீனர்கள் அனுபவித்துவரும் துயரங்களுக்கு முடிவுதான் எப்போது?


----------------------------------------------------------------------------------------

பாலஸ்தீனம் மீதான முந்தைய தாக்குதல் (2008-09)
2008 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று மிகபெரிய அளவில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்பாவி பொதுமக்களின் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்பட, அனைத்து வகையான நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவில் 1400 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் 80 சதவிதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள். அவர்களில் 300 பேர் குழந்தைகள். 5000க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களின் 1600க்கு மேற்பட்டவர்கள் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பொருளாதார மையங்கள், ஐ.நா. அலுவலகம், அரசு அலுவலகங்கள் என எதையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை. விளை நிலங்கள் நாசப்படுத்தப்பட்டதுடன், நீர்பாசன அமைப்புகள், மின்சாரம் தயாரிக்குமிடங்கள், அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. ஐ.நா.வும் சரி, உலக நாடுகளும் சரி இஸ்ரேல் நடத்திய நாச வேலைகளை கைக்கட்டி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தன. இத்தாக்குதல் 22 நாள்கள் தொடர்ந்தது. இத்தனை போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட பின்னரும்கூட இதற்காக எந்த இஸ்ரேலிய அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ விசாரிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.
--------------------------------------------------------------------

ஆப்பரேஷன் “மேகத்தூண்”

இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தின்மீது தற்போது நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு வைத்திருக்கும் பெயர் தான் ”மேகத்தூண்” யூதர்களின் வேதத்தில் எகிப்தியர்களை எதிர்த்துப் போரிடப்போகும் யூதர்களுக்கு அவர்களின் கடவுள் துணையாக வருவதாக ஒரு நிகழ்வு கூறப்படுகிறது:
“அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலிலே அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட நெருப்புத்தூணிலும் அவர்களுக்கு முன் சென்றார்”  - யாத்திராகமம் 13:21
தாங்கள் நடத்தப்போகும் பச்சைப் படுகொலைகளையும், அநியாய ஆக்கிரமிப்புகளையும் கேள்வி கேட்காமல் இஸ்ரேலியர்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய இந்த ஆக்கிரமிப்புக்கு கடவுள் துணைக்கு வருகிறார் என்ற அர்த்தத்தில் இவ்வாறு பெயரிட்டுள்ளனர். இஸ்ரேலியர்களிடம் தான் இந்தப் பெயர். பைபிள் கதையை அறியாத பிற சமூக மக்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதால் சர்வதேச ஊடகங்களுக்கு ‘தற்காப்புத் தூண்” என்ற பெயரை இஸ்ரேல் சிபாரிசு செய்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தலைநகரம்




கடந்த ஒரு வார காலமாக நாட்டில் ஏதோ கலவரம் ஏற்பட்டிருப்பதைப் போன்று தோன்றுகிறது.தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் என எதைப் பார்த்தாலும் கலவரக் காட்சிகள், போலிஸ் தடியடி, கண்ணீர்புகைக்குண்டு வீச்சு, எதிர்கட்சித் தலைவர்களின் ஆவேசப் பேட்டிகள், ஆளுங்கட்சியினரின் பதிலடி அறிக்கைகள், அமைதி காக்கும்படி பிரதமரின் வேண்டுகோள், ஹசாரே-வி.கே. சிங் உண்ணாவிரதம். தலைநகரமே ஆடிப்போயிருக்கிறது. அப்படியானால் இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய பிரச்னையாகத்தான் இருக்க வேண்டும்.

அப்படி என்ன தான் நடந்துவிட்டது? எதற்காக இவ்வளவு பெரிய போராட்டங்கள்? தலைநகராம் டெல்லியில், தனது ஆண் நண்பருடன் பஸ்ஸில் பயணம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவியை பஸ்ஸில் இருந்த ஆறுபேர் கொண்ட கும்பல் வல்லுறவு கொண்டதுடன் அல்லாமல், அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி பஸ்ஸில் இருந்து தூக்கி வீசிவிட்டனர். அவரது ஆண் நண்பரும் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். குற்றுயிராக வீசப்பட்ட அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிகிறது. தலைநகரில் இரவு பத்து மணி அளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தான் மேலே கூறிய கலவரக் காட்சிகளுக்குக் காரணம்.


டெல்லி மாநகரம் இந்தியாவின் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, பாலியல் வல்லுறவுக்கும் தலைநகரமாக விளங்கிவருவது நாம் அறிந்ததே. பட்டப்பகலில், ஓட்டலில், ஓடும் வாகனத்தில் என அனைத்து வகையான வழிகளிலும் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது டெல்லியில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேசத்தின் தலைநகரம், ஒரு காஸ்மோபாலிட்டன் நகரம், மத்திய பாதுகாப்புப் படைகள், மாநில போலிஸ், இன்னும் ஏகப்பட்ட படைகளின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில்தான் டெல்லியில் அத்தனைக் கொடுமைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நகரமாக இது மாறிவருகிறது. பெண்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலை டெல்லியில் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதிலும்தான்.

தினசரி செய்தித்தாள்களில் ஏராளமான குற்ற்ச்செயல்கள் பற்றி நாம் படிக்கிறோம். பாலியல் கொடுமைகள், வல்லுறவுகள், சித்திரவதைகள் நாடெங்கும், தினம்தினம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியானால் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் அல்லவா ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லையே. எந்தக் பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்தும் அக்கறைக் காட்டாத ஊடகங்கள், இச்சம்பவம் பற்றி தீவிரமாக எழுதுவதற்கும், செய்திகள் வெளியிடுவதற்கும் என்ன காரணம்? நாட்டில் வேறு முக்கிய விஷயங்களே இல்லையா? அல்லது பிரச்னைகள் தான் இல்லையா? தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் நாட்டில், இந்தப் பெண்ணுக்காக மட்டும் நீதிக்கேட்டு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்?


மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை காணும்முன் பாலியல் வல்லுறவு நடைபெறுவதற்கான காரணங்களைச் சற்றுப் பார்க்கலாம். பெண்கள் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது நாடு, இனம், மொழி, கலாசாரம், சாதி, வர்க்க வித்தியாசம் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் உலகம் முழுவதும் நடைபெறும் கொடுமையாக உள்ளது. இதன் முதல் அடிப்படைக் காரணமே பெண் ஆணைவிட தாழ்ந்தவள், ஆணால் நுகரப்பட வேண்டியவள் என்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான். அடுத்து, பெண்ணை தனக்கு சமமான மனிதப் பிறவியாகவே ஆண்கள் நினைப்பதில்லை. வெளியில் என்னதான் சமத்துவம் பேசினாலும் ஆண்களின் மனத்தில் உட்கிடையாக இருப்பது இதுவே. பெண்ணுடல் அவளுக்குச் சொந்தமல்ல என்பதே சமுதாயத்தின் அடிமனத்தில் ஊறிப்போயுள்ள எண்ணமாக இருக்கிறது. இல்லையெனில், இன்னொரு நபரின் உடல்மீது பலாத்காரம் மேற்கொள்ளும் எண்ணமும் துணிச்சலும் ஆண்களுக்கு எப்படி வரும். 

பாலியல் வல்லுறவு கொள்ள முற்படும் உந்துதலுக்கான மூலம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. அடுத்து, கூட்டமாகச் சேர்ந்து எதைச் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம். குற்றம் இழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களைத் தப்பிக்க வைக்க சட்டத்தில் இருக்கும் வழிமுறைகள், மெதுவான நீதி வழங்கும் முறை, கடுமையற்றத் தண்டனை, சிபாரிசு அல்லது பணத்துக்காக குற்றவாளிகளைத் தப்பவிடும் அதிகாரவர்க்கம் ஆகியவை இத்தகைய குற்றங்களைச் செய்யும் துணிச்சலை குற்றவாளிகளுக்குத் தருகிறது. நமது கலாசாரம், சமூக பிரக்ஞை, இலக்கியம், சினிமா என அனைத்தும் பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே சித்திரித்து வருகின்றன. இத்தகைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும். ஒழுக்க மதிப்பீடுகள் நாளுக்கு நாள் குறைந்துவருவதும், நுகர்வு கலாசாரம் அதிகரித்துவருவதும் பெண்களை இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே இத்தகைய குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அதற்கான காரணங்களை களைவதே முதன்மையானதாகும். அதுவே அதற்கான தீர்வாக அமையமுடியும். அதை விடுத்து தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், கொலை செய்யவேண்டும் என்று கூக்குரலிடுவதெல்லாம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோஷமாகத் தான் இருக்குமே ஒழிய அது நிச்சயம் தீர்வாகாது. கடும் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் நம் நாட்டில், கடுமையான் குற்றங்கள் நடைபெறுவதில்லையா?


இந்தியாவில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படாத இடமோ, நாளோ கிடையாது. சாதிப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் ஆதிக்கச் சாதிகளின் முதல் இலக்காவது பெண்களின் உடல் தான். எத்தனையோ பெண்கள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டு வீதியிலும், வயலிலும் வீசப்படுவதை தினசரி செய்தியாகப் பார்க்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் போராடாத அரசியல் கட்சிகள், இதையெல்லாம் தலைப்புச் செய்தியாக்காத ஊடகங்கள், இதற்கெல்லாம் வீதியில் இறங்காத மிடில்கிளாஸ் கனவான்கள், பெண்கள் அமைப்புகள் டெல்லியில் நடந்த சம்பவத்துக்காக நாட்டையே உலுக்கியெடுக்க என்ன காரணம்? மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லாத நாட்டில், மக்கள் நலம் பற்றிச் சிந்திக்காத எதிர்கட்சிகளுக்கு அரசை குறைகூறவும், இதைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டிக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு. பத்திரிகைகளுக்கும் மற்றவர்களுக்கும் தலைநகரிலேயே இத்தகைய சம்பவம் நடந்தால் நம் நாட்டைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை. மொத்தத்தில் இச்சம்பவத்தில் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல தீனியாக அமைந்துவிட்டனர்.

அப்படியானால், இது பெரிய கொடுமையில்லையா? நிச்சயம் இது கண்டிக்கவேண்டிய, கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டிய குற்றம் தான். மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்தான். ஆனால், இதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில் எந்தப் பயனுமில்லை. இது ஒரு சமூக, உளவியல் சார்ந்த பிரச்னை, ஆண்களின் மனக்கோளாறு. இதற்கான காரணங்களைச் சரியாக ஆராய்ந்து, அதைக் களைய முயற்சிப்பதே இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும். கடுமையான சட்டங்களால் மட்டுமே குற்றங்களைத் தடுக்கமுடியும் என்பது வீண் கற்பனை. ஒரு ஆண், ஒரு பெண்ணை, அவளது விருப்பத்துக்கு மாறாக பலாத்காரமாக வல்லுறவுக்கு உட்படுத்தும் நிகழ்வை ‘கற்பழிப்பு’ என்றுதானே சொல்கிறோம். அக்குற்றத்தைச் செய்தவன் கற்பிழக்க மாட்டான். பாதிக்கப்பட்டவள்தான் ‘கற்பு’ இழக்கிறாள். பாதிக்கப்பட்டதுடன் ’கற்பழிக்கப்பட்ட’ அவமானத்தையும் அவள் சுமக்கவேண்டும். ஆகவே, மாற்றம் தொடங்கப்படவேண்டியது சமூகத்திலிருந்துதான், குற்றவாளிகளிடமிருந்து அல்ல.
  

காதலர் தினச் சிந்தனைகள்




பிப்ரவரி வந்துவிட்டாலே இளசுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆகஸ்டு 15 என்பது எந்த நாள் என்று தெரிகிறதோ இல்லையோ பிப்ரவரி 14 என்பது ‘காதலர் தினம்’ என்பதை பொதுஜனம் நன்றாகவே அறிந்துள்ளது. காதலை ஆதரிப்பவர்களால் மட்டுமல்ல, காதலர் தினத்தை எதிர்ப்பவர்களாலும் காதலர் தினம் பிரபலமடைந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், காதலர்களுக்கு சற்று வித்தியாசமான ஆண்டாக இது இருக்கக்கூடும். காதலர் தினத்துக்கு இதுவரை இருந்துவந்த எதிர்ப்பு அது மேற்கத்திய காலாச்சாரக் கூறு என்பதுதான். மேற்கத்திய கலாசார வழக்கங்களை பின்பற்றுவது இந்திய கலாசாரத்தை அழித்துவிடும் அல்லது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இந்த எதிர்ப்பு இருந்தது. ஆனால், காதல்-கலப்புத் திருமணங்களை எதிர்த்து பிரசாரங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்ள சில சக்திகள் முயற்சிக்கத் தொடங்கியிருப்பது காதலர்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

காதல்-கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் சாதி மீறி காதலித்து திருமணம் செய்துகொள்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான். ஆனால் அவர்கள் இதை வெளிப்படையாகக் கூறுவது இல்லை. மாறாக, காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தோல்வியடைகின்றனர் என்றும், பெரும்பாலான காதல் திருமணங்கள் விரைவிலேயே முறிந்துவிடுவதாகவும், ‘அவசரப்பட்டு’ காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் விரைவில் கைவிடப்படுவதாகவும் காரணங்களை அடுக்குகின்றனர். திருமண உறவுகள் வெற்றி பெறுவதற்கோ, முறிந்துவிடுவதற்கோ பல காரணங்கள் இருக்கலாம். ஒரு திருமணத்தின் வெற்றி, தோல்வியை அது காதல் திருமணமா இல்லையா என்ற அம்சம் மட்டுமே தீர்மானிக்கும் என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம்.


காதல் ஏன் எதிர்க்கப்படுகிறது? இதற்கு ஒற்றை வரியில் பதில்சொல்வதானால், “காதல் புரட்சிகரமானது”. அதனால் எதிர்க்கப்படுகிறது. புரட்சிகரமான எதுவும் பிற்போக்குவாதிகளால் எதிர்க்கப்படுவது வழக்கம் தானே. காதல் மதத்தை மறக்கிறது; காதல் வர்க்கத்தைத் தொலைக்கிறது; காதல் சாதியை ஒழிக்கப் பார்க்கிறது. ஆகவே காதல் புரட்சிகரமானது. மத நல்லிணக்கம் குறித்து செய்யப்படும் ஆயிரமாயிரம் பிராசாரங்களைவிட, வர்க்கத்தை ஒழிக்கத் தூண்டும் புரட்சிகர முழக்கங்களைவிட, சாதியை ஒழிக்க வழிசொல்லும் பகுத்தறிவு வாதங்களைவிட வலிமையானது காதல். சமூக ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் அருமருந்தாக இருப்பது சாதி, மதம், நிறம், இனம் பார்க்காத காதல்தான். சாதி, மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சினை, ஆடம்பரச் செலவுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அனைத்தையும் நிராகரிக்கிறது காதல். காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுவதற்கான அடிப்படை இதில்தான் இருக்கிறது.

மேற்கண்ட காரணங்களால் காதலை நிராகரிக்கும் சமூகம், காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் படும் கஷ்டங்களையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும், காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் பிணக்குகளையும் காதலின் தோல்வியாக பட்டியலிடுகிறது. பொதுவாக சாதி. மதம் ஆகியவற்றை மீறிக் காதலித்து திருமணம் செய்துகொள்பவர்களை, அவர்கள் சார்ந்துள்ள சமூகம் முதலில் ஒதுக்கிவைக்கப் பார்க்கிறது. தாம் விரும்பி காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் பெற்றோர் முதல் உறவினர்கள், அக்கப்பக்கத்தினர் வரை அவர்களிடம் பேச மறுக்கிறார்கள், சமூக ஒதுக்கம் செய்கிறார்கள். உறவுகளின் ஆதரவோ, பொருளாதார பலமோ இல்லாத நிலையில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் காதலர்கள் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்திப்பது இயல்புதானே. உற்றார் உறவினர் ஆதரவற்ற நிலையில் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்கும் போது காதலர்கள் பிரச்னைகளைச் சந்திக்க நேர்வதும், எந்த ஒரு குடும்பத்திலும் இருப்பதைப் போல இவர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் தோன்றுவதும் இயல்புதானே.

வெகு சில குடும்பங்களில் தங்கள் பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசத்தால் சாதி, மதம் மீறிய திருமணங்களை விரைவிலேயே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். சில குடும்பங்கள் சில காலத்துக்கு பிறகு காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்கின்றன. பெரும்பாலான குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏற்றுக்கொள்கின்றனர். தங்கள் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பைவிட சாதியாபிமானமும் மதாபிமானமும் அதிகம் கொண்டவர்கள் சிலர் மட்டுமே காதல் திருமணம் செய்தவர்களைக் கடைசிவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர்.

தமது குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட பெற்றோர் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கூட, அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் அவர்களின் சமூகம் அதற்கு ஒப்புதல் அளிக்காது என்பதும், அதனால் தங்கள் கெளரவத்துக்கு பங்கம் நேரும் என்று கருதுவதும்தான். குடும்பத்தினரின் புறக்கணிப்பு, சமூகத்தின் எதிர்ப்பு அல்லது ஒத்துழைப்பின்மை, பொருளாதார உதவியின்மை, சாதி, மத கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிருக்கும் உடமைக்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என அனைத்தையும் மீறி காதலர்கள் தம் சொந்தக் காலில் நிற்க வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் சமூகத்தில் கெளரவமாகவும் வசதியாகவும் வாழ்வதில் இருக்கிறது என்பதால், அதற்காக அவர்கள் படும் பாட்டைக் காணும் காதல் எதிர்ப்பு மனம், காதல் திருமணம் செய்துகொண்டதால் அவர்கள் கஷ்டப்படுவதாக விமர்சனம் செய்கிறது.

காதலர்களும் மனிதர்கள் தானே. ஆண்-பெண் இருவருமே படித்தவர்களாக இருக்கும் இக்காலத்தில், தமது உரிமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்த அவர்களுக்கு சொந்த விருப்பு வெறுப்புகளும், தனிப்பட்ட அபிப்பிராயங்களும், விருப்பு வெறுப்புகளும் இருக்கத்தானே செய்யும். மற்றவர்களிடையே தோன்றுவது போல காதலர்களுக்கிடையிலும் பிணக்குகளும், மனஸ்தாபங்களும் ஏற்படுவது இயல்பு தானே. தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், அபிப்பிராயங்கள் ஆகியவற்றிலிருந்து, அவற்றைக் கடந்து அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, இணக்கமாக வாழ்கின்றனர் என்பதில் தான் காதலின் வெற்றி ஒளிந்திருக்கிறது.

 ”நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்.” என்று வசனம் பேசிக்கொண்டிருப்பது திருமணத்துக்கு முன்பு சுகமாக இருக்கலாம். ”காதல் என்பது கற்பனை. திருமணம் என்பது நிஜம். கற்பனைக்கும் நிஜத்திற்குமான முரண்பாடு, தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.” என்பார் கோயத். காதலிக்கும் போது பரவச உணர்வை மட்டும் அனுபவிப்பவர்கள், திருமணம் செய்துகொண்டு எதார்த்த வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போதுதான் வாழ்க்கையின் முரண்பாடு, கற்பனைக்கும் உண்மையான வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாட்டை காதலர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நாள் வரை காதலர்கள் அத்தடைகளை வெற்றிகரமாக கடந்துவந்திருக்கிறார்கள். இனிமேலும் வெற்றி பெறுவார்கள். கலீல் ஜிப்ரான் கூறியதைப் போல, ”காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது.” ஆகவே ஒரு திருமண உறவின் நீடித்த வெற்றி என்பது அத்திருமணம் காதல்-கலப்புத் திருமணமா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா என்பதில் இல்லை, அது கணவன் – மனைவி இருவர் கொண்டுள்ள காதல், நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையில்தான் அடங்கியிருக்கிறது என்பது தெளிவு. 

காதலின் உண்மை நிலை இப்படியிருக்க, மக்களை எப்போதும் சுரண்டிக் கொழுக்கும் நுகர்வு பொருளாதாரம், தனது வியாபாரத்துக்காக காதலர் தினத்தை அதிக விளம்பரம் செய்து இளைஞர்களின் பாக்கெட்டுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறது. கண்கவரும் வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள், தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள், காதலர் தினத்தைக் கொண்டாட இணையத்தளத்தில் விசேஷ ஏற்பாடுகள், ஓட்டல்கள், உணவகங்கள், மால்கள் என எங்கும் காதலர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் பல வழிகள் இருக்கின்றன. பல்லாயிரங்கோடி புரளும் இந்த காதலர் தின வணிக வலைக்குள் விழுந்துவிடாமல், ஆண்டு முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும். அதற்கு ஆடம்பர விருந்துகளும், விலையுயர்ந்த பரிசு பொருள்களும் தேவையில்லை, காதலொன்றே போதும். காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது என்கிறது ஒரு கிரேக்க பழமொழி. ஆகவே, முதுமைவரை இளமையாக இருக்க காதலிப்போம்!

எப்படியும் விளையாடலாம், எப்படியும் சம்பாதிக்கலாம்



அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தைய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், தான் ஊக்க மருந்து பயன்படுத்தி வந்துள்ளதை சமீபத்தில் ஒப்புக்கொண்டார். டூர் டி ஃபிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் 7 முறை சாம்பியனான லான் ஆர்ம்ஸ்ட்ராங் வென்ற அனைத்துப் பட்டங்களும் பறிக்கப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகளில் இனி கலந்துகொள்ளவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் தனது அளப்பறிய தன்னம்பிக்கை மூலம் நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தவறை பகிரங்கமாக அவர் ஒப்புக்கொண்டாலும் இதுவரை அவர் பெற்றிருந்த புகழை ஒரே நாளில் களங்கப்படுத்திவிட்டது அவரது செயல். இவரை ரோல் மாடலாக நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், இளைஞர்கள் மற்றும் பிற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இவரது செயல் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் என்பது நமக்கு புதிதல்ல. சூதாட்டத்தை நடத்துபவர்கள் தங்களின் தேவைக்கேற்ப போட்டி முடிவுகளைப் பெற கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு முடிவுகளை மாற்றுவார்கள். ஒரே நாளில் பல்லாயிரங்கோடி பணம் புழங்கும் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ பற்றியெல்லாம் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். பணம் அதிகம் புழங்கும், கோடிக்கணக்கான பார்வையாளர்கள் கொண்ட விளையாட்டு போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவது பற்றி அடிக்கடி கூறப்ப்படுவதுண்டு. தற்போது இந்தப் பட்டியலில் கால்பந்து விளையாட்டும் சேர்ந்துள்ளது. இந்தத் தகவல் உண்மை என்று நிரூபிக்கப்படும் நிலையில் உலக விளையாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய சூதாட்ட முறைகேடாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், சாம்பியன் லீக்ஸ் ஆட்டங்கள் உள்பட கிட்டத்தட்ட 680 கால்பந்து போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ நடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் உள்பட 425 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு போட்டிக்கு ரூ 72 லட்சம் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றிய தீவிர விசாரணை முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஒரு நாளில் நடைபெறும் சூதாட்டத்தின் சராசரி மதிப்பு மட்டும் ரூ 15,900 கோடியாம். மலைப்பாக இருக்கிறதா?

வங்கிகள், நிதிநிறுவனங்கள் முறைகேடுகளில் இறங்குவதும் காலங்காலமாக நடப்பதுதான் என்றாலும் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் ஒன்று உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பன்னாட்டு வங்கியான ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து (ஆர்.பி.எஸ்.), தனது வணிகத்தைப் பெருக்குவதற்காக வரி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வங்கியின் முறைகேடான நடவடிக்கைக்காக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை மட்டுமே சுமார் ரூ 3240 கோடி என்றால் முறைகேட்டின் அளவை ஊகித்துக்கொள்ளுங்கள். ஜே.பி.மார்கன், டாயிட்ஸ் வங்கி, சிட்டி குரூப் போன்ற வங்கிகள், நிதிநிறுவனங்களும் இம்மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவை பற்றி விசாரணை நடந்துவருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு எச்.எஸ்.பி.சி. வங்கியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இங்குக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் ஆர்.பி.எஸ். வங்கி, பொருளாதார சரிவின் காரணமாக திவால் நிலையில் இருந்தபோது பிரிட்டன் அரசு அதில் 81% முதலீடு செய்து வங்கியை காப்பாற்றியது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே பொதுவான ஒரு அம்சம் இருக்கிறது: எந்த வழியிலாவது பணத்தையும் புகழையும் சம்பாதிக்க வேண்டும். புகழும், அதன்வழி கிடைக்கும் பணமும் தான் லான் ஆம்ஸ்ட்ராங்கை ஊக்க மருந்தை நாடச் செய்தது. இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் வாழவேண்டும் என்பதெல்லாம் கேலிக்குரிய பேச்சாகிவிட்டது. போகும் வழி முக்கியமல்ல, எப்படியாகிலும் அது குறுக்கு வழியாக இருந்தாலும், அதன் மூலம் விரைவில் பணம், புகழ் இரண்டையும் சம்பாதித்துவிட வேண்டும் என்பதே ஆம்ஸ்ட்ராங்கின் செயலுக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் வணிகமாகிவிட்ட நிலையில், அவற்றின் அங்கமான வீர்ர்களும் நடுவர்களும் அந்த வலையில் வீழாமல் தப்புவது மிகவும் கடினம். வணிக நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். அதற்காக எதையும் செய்ய அவை தயங்குவதில்லை. சமூகப் பொறுப்பு, நேர்மை, நாணயம், தார்மீகப் பொறுப்பு, நிலையான கொள்கை என எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. சட்டத்தை வளைப்பது, விதிகளை மீறுவது, தவறான தகவல்களை அளிப்பது, போலி உறுதிமொழிகள் என எந்த வழியிலாவது பணத்தை ஈட்டவேண்டும் என்பதுதான் நவீன காலத்து வணிக நெறிமுறையாக மாறிவிட்டது போலும். தற்போது உலகில் நிலவும் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது இத்தகைய தார்மிக, ஒழுக்க நெறிமுறையற்ற வணிகமும், பேராசைக் குணமும் தான். நமக்குத் தொடர்பில்லாத விஷயங்களாக இவைத் தெரிந்தாலும், உண்மையில் இவை நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. நுகர்வு கலாசாரத்தின் மீதான பற்று, ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளைவிட்டு விலகிய வாழ்க்கை முறை, சக மனிதர்கள், உறவுகளைவிட பணமே பிரதானம் என்று கருதும் வாழ்க்கை முறை போன்றவை நம்மை இந்த நிலைக்கு இட்டுச்செல்கின்றன. வருங்காலச் சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை அளிக்க விரும்பினால், மாற்றத்தை இப்போதே தொடங்குவோம், அதையும் நம்மிடமிருந்தே தொடங்குவோம்!

Monday, January 14, 2013

புத்தகம் படிக்கலாமா?








ஒவ்வொரு புத்தாண்டிலும் புதிய உறுதிமொழிகள் எடுத்துக்கொள்வது, அதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, பலரது பழக்கம். சிலவற்றை நம்மால் எளிதாகக் கடைபிடிக்க முடியும், சிலவற்றைப் பின்பற்றுவது பல காரணங்களால் இயலாமல் போகும். ஆனால், நம்மால் எளிதில் பின்பற்றக்கூடிய, செலவு குறைவான, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும், தலைமுறைகளுக்கும் பயந்தரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த ஆண்டு பின்பற்ற வேண்டிய பழக்கமாக நாம் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்ளலாமே!

ஒரு புத்தகம் என்பது பாக்கெட்டில் எடுத்துச்செல்லப்படும் பூந்தோட்டம் போன்றது என்கிறது சீனப் பழமொழி. உண்மைதான் எண்ணங்கள் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மரங்கள் தானே நல்ல புத்தகங்கள். பண்டைய தீப்ஸ் நகரின் நூலகத்தின் வாயிலில் “புத்தகம் – ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டிருக்கும். மக்களுக்குத் தேவையானதை விடுத்து, அவ்ர்களை பொழுத்துப்போக்கு, நுகர்வின் அடிமைகளாக மாற்றும் நவீன கசடுகளால் நோயுற்றிருக்கும் நமது ஆன்மாவுக்கு புத்தகங்கள் மட்டுமே மருந்தாக இருக்க முடியும் என்பது உண்மைதான். புத்தகம் படிப்பது அந்தப் புத்தகத்தைப் படிப்பதோடு முடிவடைந்துவிடுவதில்லை. அது நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது. புத்தகத்தின் சிறப்பை உணர்ந்த சமூகங்களே நாகரிகத்தில் முன்னேறியவையாக, மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்துள்ளன. ”புத்தகத்தை இரவலுக்குக் கொடுப்பவன் முட்டாள். அப்படிப் இரவல் பெற்ற புத்தகத்தை திருப்பிக் கொடுப்பவன் அவனைவிட முட்டாள்” என்ற அரேபிய பழமொழி, வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதாக நினைத்துவிடாதீர்கள். புத்தகத்தின் முக்கியத்துவதைத் தான் அப்பழமொழி உணர்த்துகிறது.

”நான் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன; நான் படிக்காத புத்தகங்களை எனக்காக எடுத்துவந்து தருகிறவனே எனது சிறந்த நண்பன்” என்று சிறந்த நண்பனாக இருப்பதற்கே நீங்கள் நல்ல புத்தகங்களை கொண்டுவந்து தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் கறுப்பர்களின் அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை பக்கம் பக்கமாக பலர் விளக்க, “புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறையைப் போன்றது” என்று ஒரே வரியில் ‘நச்’சென்று கூறுகிறார் ஹென்ரிச் மான். நல்ல புத்தககங்களைப் படிக்காத ஒருவன், அந்தப் புத்தகங்களைப் படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் மேம்பட்டவன் அல்ல என்கிறார் மார்க் ட்வைன்

புத்தகங்கள் என்பவை அறிவுக் கருவூலங்கள் என்பது சரி. எல்லாப் புத்தகங்களுமே அப்படிப்பட்டவைதானா? ஒரு புத்தகத்தின் மதிப்பு, நீங்கள் அதிலிருந்து எதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைக் கொண்டு அளக்கப்பட வேண்டும் எனது ஜெம்ஸ் பிரைஸ் என்பாரின் கருத்து. படிப்பதைப் பற்றிச் சிந்திக்காதது, செரிக்காமல் சாப்பிடுவதைப் போன்றது என்று அறிஞர் எட்மண்ட் பர்க் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஒரு நல்லப் புத்தகம் என்பது வெறும் பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல, அல்லது வேறொருவரின் கருத்துகளை நமது மண்டையில் திணித்துக்கொள்வதும் அல்ல. அது ஒரு உரையாடல் போன்றது. நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது நமது கருத்துகளையும், அனுபவங்களையும் நாம் புத்தகத்தின் கருத்துகளுடன் ஒப்பிட்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் எப்படிப்பட்டவை, அவற்றை எப்படி படிக்க வேண்டும் என்பதை ஃபிரான்ஸிஸ் பேக்கன் இப்படி கூறுகிறார்: சில புத்தகங்களை ருசிக்கலாம், சிலவற்றை விழுங்கிவிடலாம், வெகு சிலவற்றை நன்றாக மென்று, தின்று செரிக்க வேண்டும்.



சரி விஷயத்துக்கு வருவோம். புத்தாண்டு தொடங்கினாலே சென்னைவாசிகளான நமக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கள் திருநாள். அடுத்தது ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் கண்காட்சி. இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வழக்கத்தைவிட தாமதமாகத் தொடங்குகிறது. ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் கண்காட்சி ஜனவரி 23 அன்று முடிவடைகிறது. கண்காட்சி நடைபெறும் இடமும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காரணமாக இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தகப் பிரியர்களின் ஆர்வத்தை இந்த இடமாற்றம் பாதிக்காது என்பது நிச்சயம்.

இன்று புத்தகங்கள் என்பவை காகிதத்தில் அச்சிடப்பட்டவை மட்டுமல்ல. தற்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களுடன் குறுந்தகடு, இ-புத்தகம் என புத்தகங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. இ-புத்தகங்களின் வரவு புத்தக பராமரிப்பு செலவையும், அதற்கான உழைப்பு மற்றும் இடத்தையும் மிகவும் குறைத்துவிட்டது. இன்று லட்சக்கணக்கான புத்தகங்களை நம் கணினியிலேயே சேமித்து வைக்கமுடியும்.

புத்தகம் படிப்பதை தனிநபரின் பழக்கமாகக் கருதாமல் குடும்பத்தின் பழக்கமாக மாற்றுவோம். புத்தகம் படிப்பது நமக்கு அறிவையும், ஆனந்தத்தையும் தருவதுடன், தன்னபிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உறுதியையும் தருகிறது. கல்வியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல நாம். ஆகவே, புத்தகத் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்போம், படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் விதைப்போம்! 

பொங்கலோ பொங்கல்!




மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ள புத்தாண்டின் முதல் பண்டிகையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. நாடுகள்தோறும், உலகம் முழுவதும் எண்ணற்றப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், பொங்கல் விழா எல்லாவற்றிலும் தனிச் சிறப்பு பெற்றது. சாதி, மதச் சார்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடக்கூடிய ஒரு பெருநாள் பொங்கல். திருநாள், பெருநாள், நன்னாள், பண்டிகை, நோன்பு, புதுநாள் என இவ்வளவு சிறப்புகள் பெற்ற தமிழர்களின் ஒரே திருநாள் பொங்கல் தான்.

உழவுத் தொழிலையும், உழவர்களையும், உழைப்பாளர்களையும், உழவுக்கும் உழைப்புக்கு உறுதுணையாக இருந்த ஞாயிறு, மழை, மாடுகள் ஆகியவற்றைப் போற்றிக் கொண்டாடும் நாளான பொங்கல் தமிழர்களின் அறுவடைத் திருநாளும் ஆகும். உழவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இதுவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் தொடர்ந்து கொண்டாடிவரும் திருநாள் பொங்கல். மதச்சார்பின்மைக்கும், இயற்கையை போற்றுதலுக்கும் சான்றாக இருப்பது தை முதல் நாளான இந்தப் பொங்கல் திருநாள்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. ஒவ்வொரு பொங்கலும் அந்த நம்பிக்கையைத் தரத்தான் செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு தமிழர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாகவே தொடங்கியிருக்கிறது. உலகுக்கு சோறிடும் உழவர்கள் வாழ வழியின்றி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது. விதைத்துவிட்டு நீருக்காக காத்திருந்து, நம்பிக்கையற்றுப்போன காவிரி டெல்டா விவசாயிகளின் தற்கொலைகள் மனித குலத்தின் மாபெரும் அவமானமாகும்.

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்று உலகமனைத்துமே ஏர் தொழிலின் பின்னேதான் என்று உழவைப் போற்றிய தமிழகத்தில் தான் இந்நிலை. பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சேர்த்து உழவர்களே தாங்க வேண்டியிருப்பதால் ‘உழுவார் உலகத்தைத் தாங்கும் அச்சாணி’ என்றார் வள்ளுவர். அந்த அச்சாணிகளே முறிந்துவிட்டால் நம் சமூகம் எப்படி வாழும்? உலகுக்கு உணவிடும் உழவர்களின் வாழ்க்கை ஆண்டுக்காண்டு இந்த அவலநிலைக்கு உள்ளாவதை என்றுதான் நம் ஆட்சியாளர்கள் தடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. அரசுகளும், கட்சிகளும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியல் பிரச்னையாகக் கருதாமல், அதை மக்களின் வாழ்வாதார பிரச்னையாக கருதி, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தீர்க்க முயலவேண்டும்.

‘உழவர்களுக்கு உழவுத் தொழிலைச் செய்ய முடியாத நிலை எக்காரணங்களாவது ஏற்படுமேயானால், விரும்பப்படுகிற எல்லாப் பற்றுகளையும் துறந்துவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் துறவிகளுக்கும்கூட, நிலைத்த வாழ்வு இல்லாமற்போய்விடும்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் கூறியது நம் தலைவர்களுக்கு எப்போது புரியும் என்று தெரியவில்லை. காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 14 லட்சம் ஏக்கரில் வெறும் 25% பயிர்களை மட்டுமே காப்பாற்ற முடியுமாம். இப்படிப்பட்ட நிலையில் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளியான விவசாயி பண்டிகையை எப்படி கொண்டாட முடியும்?

நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையும் மக்களுக்கு நம்பிக்கைத் தருவதாக இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமல்ல பிச்சைக்காரர்களுக்கும் பாதுகாப்பற்றதாக நிலைமை மாறிவிட்டது. தொடரும் கொலைகள், கொள்ளைகள், முறைகேடுகள், பெருகிவரும் ரவுடி ராஜ்ஜியங்கள், தினசரி நிகழ்வாகிவிட்ட பாலியல் வன்கொடுமைகள் என பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலையை தைத்திருநாள் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கும், சமூக நீதிக்கும் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகத்தில் சாதியத்தீயை மீண்டும் பற்றவைக்க சிலர் முயல்கிறார்கள். அத்தகைய சமூக விரோதச் சக்திகளை மக்கள் எப்போதும் போல வென்று காட்டுவர் என்று நம்புவோம். அத்தகைய தீயச் சக்திகளுக்கு துணை போகமாட்டோம் என்று இந்த நன்னாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பது நமது பண்பாடு. இன்று உழவுமில்லை, தொழிலுமில்லை என்றாகிவிட்டது. காவிரி நீரின்றி தமிழக விவசாயி தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க, ஆண்டு முழுவதும் தொடரும் மின்வெட்டால் தமிழகத்தின் தொழில்துறையே நசிந்துவிடும் நிலை உண்டாகியிருக்கிறது. பின்னலாடை உற்பத்தியில் உலகின் மையமாகத் திகழ்ந்த திருப்பூர் இன்று 

மின்வெட்டு காரணமாக செயலற்ற நிலைமைக்கு வந்துவிட்டது. வேலையில்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள சிறு, குறு தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் இவற்றின் வருமானமும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதுடன், இத்தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டின் பாதிப்புக்கு பெருநிறுவனங்களும் தப்பவில்லை. தமிழகத்தைத் தேடிவரக்கூடிய முதலீடுகள்கூட மின்பற்றாக்குறையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடும்நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையை மாற்ற தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் நிலைமை அப்படியேதான் தொடருகிறது.

மூச்சு முட்டும் அளவுக்கு பிரச்னைகள் நமக்கு முன்பாகக் குவிந்து கிடந்தாலும், நம்பிக்கை ஒளி தென்படத்தான் செய்கிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவன், வாழ்க்கையில் உச்சத்தை அடைவது நிச்சயம் என்பர் பெரியோர்கள். இன்றும் நாம் நம்பிக்கையை இழக்கவில்லை. காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையுடன் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். புத்தாண்டு புது நன்மைகளை கொண்டுவரும். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். பொங்குக பொங்கல்!