Showing posts with label புரட்சியாளர்கள். Show all posts
Showing posts with label புரட்சியாளர்கள். Show all posts

Thursday, February 25, 2010

’நாடாளுமன்ற நாயகன்’ ஆலிவர் கிராம்வெல்



’நாடாளுமன்ற நாயகன்’ ஆலிவர் கிராம்வெல்

இன்றைய உலகில் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறை நடைபெறுவதைப் பார்க்கிறோம். முடியரசு அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நாடுகளில் மக்கள், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்காக போராடி வருவதையும் அறிகிறோம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த நிலையே வேறு. அரசரின் ஆணையே சட்டமாக மதிக்கப்பட்டது. உலகெங்கும் வரம்பற்ற முடியாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டம் முழுவதும் அரசுரிமைக்கான போட்டிகளும் சமயப் பூசல்களும் நிறைந்திருந்தன. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அப்போது நாடாளுமன்றம் இருந்தது. ஆம்! இங்கிலாந்தில் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் இருந்தது. அதில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர்.

புது வரிகளை மக்கள் மீது சுமத்துவதாக இருந்தாலும், புதிய சட்டங்களை போடுவதாக இருந்தாலும், அல்லது வேறு நாட்டோடு போரில் ஈடுபடுவதாக இருந்தாலும் இங்கிலாந்தின் அரசர் நாடாளுமன்றத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டியிருந்தது. இதை ஏற்றுக்கொள்ளாமல் தமது மேலாதிக்கத்தை நிறுவ பல அரசர்களும் அவ்வப்போது முயற்சித்து வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றமே உயர்ந்தது; அரசர் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்தான் என்பதை ஆணித்தரமாக நிறுவி வரலாற்றில் நீங்காப் புகழைப் பெற்றவர்தான் ஆலிவர் கிராம்வெல்(1599 - 1658).

ஆலிவர் கிராம்வெல், ஹண்டிங்டன் என்னும் ஊரில் கிராமப்புற குடியானவக் குடும்பத்தில் பிறந்தார். தமது கடும் உழைப்பால் உயர்ந்த கிராம்வெல் 1628ல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே மன்னர் முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். 12 ஆண்டுகள் மன்றம் கூட்டப்படவேயில்லை. ஸ்காட்லாந்தின் மீது படையெடுக்க எண்ணம் கொண்ட அரசர் போருக்குத் தேவைப்பட்ட பணத்தையும் படையையும் திரட்ட 1640ல் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டினார். அரசரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டுமானால் பல்வேறு வாக்குறுதிகளையும் உரிமைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பதிலுக்கு கோரியது நாடாளுமன்றம். மன்னர் மறுத்துவிட்டார். அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏற்பட்ட மோதல் 1642ல் உள்நாட்டுப் போராக வெடித்தது. ஊருக்கு திரும்பிய கிராம்வெல் ஒரு வலிமையான குதிரைப் படையை உருவாக்கினார். நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கி போரிட்டார். நான்கு ஆண்டுகள் நடைபெற்ற போர் 1646ல் முடிவுக்கு வந்தது. கிராம்வெல்லின் படையிடம் மன்னரின் படை தோற்றோடியது. மன்னர் சிறை பிடிக்கப்பட்டார்.

சீக்கிரத்திலேயே மன்னர் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டார். கிராம்வெல்லை ஆட்சி மன்றத் தலைவராகக் கொண்டு மக்கள் பொதுவுரிமை அரசு (காமன் வெல்த்) அமைக்கப்பட்டது. மீண்டும் 1649ல் படையெடுத்து வந்த மன்னர் தோற்கடிக்கப்பட்டார், மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. அரசருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தி வந்த மிதவாதிகள் அனைவரும் ஒழிக்கப்பட்டனர்.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சார்லஸின் மகனான இரண்டாம் சார்லஸ் 1652ல் நடைபெற்ற போரில் முற்றிலும் தோற்கடிக்கபட்டார். அரசருக்கு ஆதரவானவர்கள் மற்றும் சமயவாதிகளின் சூழ்ச்சிகளால், கிராம்வெல் கொண்டுவந்த அரசமைப்பு சீர்த்திருத்தங்களை நடைமுறைப் படுத்தத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. 1650-1658 காலகட்டத்தில் மூன்று நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டன. எவ்வித அரசமைப்பும் வெற்றிகரமாக செயல்பட முடியாமல் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி கிராம்வெல் இராணுவ சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

‘ஆட்சிக் காவலர் பெருமகனார்'(லார்ட் ப்ரொடெக்டர்) என்ற பெயருடன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளை 1653 முதல் 1658 ஆண்டு வரை நல்லாட்சி புரிந்தார் கிராம்வெல். கடுமையான சட்டங்களை நிறைவேற்றினார். சீரான முறையில் நிர்வாகத்தை நடத்தினார். மக்கள் கல்வி கற்பதை ஆதரித்தார். மன்னரால் விரட்டப்பட்ட யூதர்களை திரும்ப அனுமதித்தார். சமயப் பொறையுடன் நடந்து கொண்டார். சமய சார்பற்றக் கொள்கை அரசின் கொள்கையானது. மிகச் சிறந்த முறையில் அயல் நாட்டுக் கொள்கையை கையாண்டார். ஆட்சிக்காலம் முழுவதும் சிறந்த நாடாளுமன்றத்தை உருவாக்க முயற்சித்தார். அமைதியை நிலைநாட்டிய கிராம்வெல் 1658ல் மலேரியா காய்ச்சலால் இறந்தார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் ரிச்சர்டு கிராம்வெல் பதவியேற்றார். ஆனால் விரைவிலேயே, 1660ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாம் சார்லஸ் மன்னர், பழிவாங்கும் விதமாக ஆலிவர் கிராம்வெல்லின் சடலத்தை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து தூக்கிலிட்டு தலையைத் துண்டித்தார்.

ஆனாலும் மக்களாட்சிக்கு கிராம்வெல் போட்டிருந்த அடித்தளத்தை மன்னரால் அசைக்கக்கூட முடியவில்லை. நாடாளுமன்றத்தின் மேலான்மை உரிமையை அரசர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் 1688ஆம் ஆண்டு மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை நிலைநாட்ட முயன்ற இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் இரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு 'வரம்புடை முடியரசு', அதாவது நாடாளுமன்றத்துக்கு கீழ்பட்டவர் அரசர் என்பது நிலைநாட்டப்பட்டது.

பிற்காலத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்தரப் போர், பிரெஞ்சு புரட்சி போன்ற இதர புரட்சிகளுக்கெல்லாம் தத்துவ அரசியல் அடித்தளம் அமைத்து தந்தது ஆலிவர் கிராம்வெல் தலைமையில் நடைபெற்ற அரசியல் போராட்டமே. முடியாட்சியை மண்டியிடச்செய்து மக்களாட்சிக்கு வித்திட்டவர் என்ற முறையில் ஆலிவர் கிராம்வெல் வரலாறில் நிலைத்தப் புகழுடன் விளங்குகிறார்.

Saturday, December 19, 2009

ஹைபேஷா - தத்துவ வானில் மின்னும் தாரகை




வரலாறு நெடுகிலும் வீராங்கனைகளாக, கவிஞர்களாக, கலை வித்தகர்களாக, சேவை செய்பவர்களாக, அழகிகளாக வாழ்ந்த பல பெண்களை நம்மால் காணமுடியும். ஆனால், பல்துறை அறிவோடு தத்துவம் என்னும் அறிவாயுதத்தோடு வாழ்ந்து வரலாற்றில் என்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் தாரகைகள் வெகு சிலரே. அப்படியிருக்கையில், ’தான் வாழ்ந்த காலத்தில் தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தனது சமகால அறிஞர்கள் அனைவரையும்விட தலைசிறந்தவராக இருந்தார் ’ ஹைபேஷா ’ என்ற ’பெண்” என்று 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் சாக்ரடீஸ் ஸ்கோலாஸ்டிகஸ் குறிப்பிடுவதைக் காணும்போது வியப்படையாமல் இருக்க முடியாது.


பண்டைய எகிப்து நாட்டின் புகழ்பெற்ற நகரமான அலெக்ஸாண்ட்ரியாவின் கிரேக்க தத்துவப் பள்ளியின் தலைவர்; தான் வாழ்ந்த காலத்தின் தலைசிறந்த கணித அறிஞர்; கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தின் கடைசி வாரிசு; வானியல் அறிஞர்; பாய்ம பொருள்களின் (fluids) ஒப்பீட்டு அடர்த்தியை கண்டறியும் ’ஹைட்ரோமீட்டர்’ மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அறிய உதவும் ‘ஆஸ்ட்ரோலாப்’ ஆகிய கருவிகளை கண்டுபிடித்த விஞ்ஞானி; யூக்ளிட், டாலமி, டையோஃபாந்தஸ், அப்போலோனியஸ் ஆகிய கணித மேதைகளின் நூல்களை ஆராய்ந்து, சீர்த்திருத்தி விளக்க உரைகள் எழுதி உலகறிய செய்தவர்; பல தத்துவ, அறிவியல், கணித நூல்களை எழுதி தானே ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என பல சிறப்புகளுக்குரியவரான ஹைபேஷாக்கு இணையான பெண்கள் வரலாறில் எவருமிலர்.

21ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் சம உரிமை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும்போது, மேலே சொல்லப்பட்ட அவ்வளவு சிறப்புகளுடன் 4ஆம் நூற்றண்டில் ஒரு பெண் வாழ்ந்தால் ஆணாதிக்க சமூகம் அவளை விட்டுவைத்திருக்குமா அல்லது மதபீடங்கள் தான் சும்மா இருந்திருக்குமா?

‘ ஹைபேஷா (Hypatia)’ பிறந்த ஆண்டு துல்லியமாக தெரியவில்லை என்றாலும் கி.பி.350க்கும் கி.பி.370க்கும் இடையில் என்பது உறுதி. தத்துவ அறிஞரான தனது தந்தை தியோனால் கல்வியூட்டப்பட்டு, பின்னர் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கல்விகற்று அலெக்ஸாண்டிரியா திரும்பினார் ஹைபேஷா. ‘மியூஸியம்’ என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் நூலகம் இணைந்த கல்விச்சாலையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் தத்துவத்தைக் கற்பித்தும் கணிதவியல் ஆராய்ச்சிகளை செய்தும் வந்தார் ஹைபேஷா. அவரது அறிவாற்றலைக் கேள்வியுற்று, அவரிடம் பயில்வதற்காக உலகெங்கிலிருந்தும் போட்டிப்போடுக்கொண்டு வந்தனர் மாணவர்கள்.

புதுமைப் பெண்ணான ஹைபேஷா, அன்றைய பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையை அணிபவரல்ல. மாறாக அன்றைய அறிஞர்கள், ஆசிரியர்கள் அணியும் ஆடைகளையே அணிந்தார். ஆண் தேரோட்டித் துணையின்றி தன்னுடையத் தேரை தனியாக ஓட்டிக்கொண்டு நகரெங்கும் வலம் வருவார். மேலும் அன்øறைய அலெக்ஸாண்டிரியா நகரின் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக மக்களால் மதிக்கப்பட்டார்.

தத்துவ ஆய்வோடு கணிதவியலில் அவர் ஆற்றியப் பங்கு அளவிடற்கரியது. புரியாத வகையில் இருந்த யூக்ளிட் எழுதிய ‘எலிமெண்ட்ஸ்’, டாலமியின் ’அல்மாஜெஸ்ட்’ போன்ற பண்டைய கணித நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, எளிமைப்படுத்தி விரிவுரைகள் எழுதினார். ஐரோப்பிய வரலாறின் இருண்ட காலத்தில் மறைந்த ஹைபேஷாவின் கணித நூல்கள் 8ஆம் நூற்றாண்டில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஹைபேஷா இறந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப்பின் லத்தீன் மொழியில் வெளியானது. இந்த நூல்களே பிற்காலத்தில் நியூட்டன், லீப்னிட்ஸ், டெக்கார்டே போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படியாக இருந்தன. ஹைபேஷா உலகைவிட்டு மறைந்து 15 நூற்றாண்டுகள் ஆனபின்னும் நவீன அறிவியலுக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் சம உரிமை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும்போது, மேலே சொல்லப்பட்ட அவ்வளவு சிறப்புகளுடன் 4ஆம் நூற்றண்டில் ஒரு பெண் வாழ்ந்தால் ஆணாதிக்க சமூகம் அவளை விட்டுவைத்திருக்குமா? அல்லது மதபீடங்கள் தான் சும்மா இருந்திருக்குமா?

வரலாறிலே கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பது கொந்தளிப்பு மிகுந்ததாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட ரோமானிய பேரரசில் மத குருக்களின் செல்வாக்கு அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்திருந்தது. பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டு மத நம்பிக்கையே எங்கும் பரப்பப்பட்டது, பெண்களின் நிலை தாழ்ந்தது. கிறிஸ்தவரல்லாத வேற்று மதத்தினரும் அறிஞர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர்,அவர்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. எதிர்ப்பவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

எனினும் அப்போது எகிப்தின் ஆளுநராக இருந்தவர் ஒரிஸ்டஸ் என்னும் கிறிஸ்தவரல்லாதவர், ஹைபேஷாவின் நண்பராக இருந்தார். கி.பி.412ல் பிஷப் ஸைரில் என்பவன் அலெக்ஸாண்டிரியாவின் தலைமை கிறிஸ்தவ மதகுருவாக நியமிக்கப்பட்டான். அறிவாராய்ச்சியும், தத்துவமும், மத சகிப்புத்தன்மையும் மிகுந்திருந்த அந்த நகரை மதவெறியில் மூழ்கடிக்க ஆரம்பித்தான் அவன். ஸைரிலின் சதியால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரிஸ்டஸ் கிறிஸ்தவ துறவிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அப்படியும் ஸைரில்லின் வெறி அடங்கவில்லை. ஹைபேஷா என்னும் பெண் அங்கு செல்வாக்கோடு வலம் வருவது மதவாதிகளுக்கு பிடிக்கவில்லை.

கி.பி.415ல் அலெக்ஸாண்டிரியா நகரில் தனது வழக்கமானப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஹைபேஷாவின் தேர் வழிமறிக்கப்பட்டது. பீட்டர் என்னும் மதகுருவின் தலைமையில் வந்த கிறிஸ்தவ மதவெறிக்கூட்டம் ஹைபேஷ்யாவை கீழே இழுத்துப்போட்டது. வீதிகளில் தரதரவென அவரை இழுத்துச்சென்றனர். சீசேரியம் என்னும் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் கொண்டுச்சென்று ஹைபேஷாவின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். ஹைபேஷா கதற கதற சிப்பிகளாலும் ஓடுகளாலும் அவரது உடலைக்கீறி சதையைப் பிய்த்தெறிந்தனர். குற்றுயிராக கிடந்த ஹைபேஷாவின் கைகால்கள் துண்டிக்கப்பட்டு சினாரன் என்னும் இடத்தில் வைத்து எரிக்கப்பட்டது. மதவெறியின் கொலைவெறிக்கு பலியானார் ஹைபேஷா. அப்போது வைக்கப்பட்ட தீ ஹைபேஷாவின் உடலுக்கு மட்டுமல்ல அறிவுக்கும்தான். ஆம், ஹைபேஷாவின் மறைவுக்குப்பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சூழ்ந்த இருள் விலகுவதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஈவு இரக்கமற்ற மதவெறியர்களால் ஹைபேஷாவின் உடலைத்தான் அழிக்க முடிந்தது. ஆனால், அவரின் புகழ் அறிவுலகம் உள்ளவரை வாழும்.