Saturday, September 29, 2012

150 வயதை எட்டிய சென்னை உயர்நீதிமன்றம்

பண பலம், ஆள் பலம், அதிகார பலம் கோலோச்சும் நாட்டில் சாதாரண மனிதனின் கடைசி மற்றும் ஒரே புகலிடமாக விளங்குபவை நீதிமன்றங்கள் தான். வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டுவதில் தனிச்சிறப்பு பெற்ற சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் சேவையில் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்று மாபெரும் நீதிமன்றமாக காட்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டதல்ல. அது 262 வருட பரிணாம மாற்றங்களுக்குப் பிறகே உயர்நீதிமன்றமாக உருவெடுத்தது. 1600ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தொடர்பான சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றமாக ஆங்கில அரசால் ஜார்ஜ் கோட்டையில் முதல் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் 1640ல் சவுல்ட்ரி கோர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதே சிவில், கிரிமனல் வகைக் குற்றங்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்தக் கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கண்ணப்பா (1644-1648) என்பவரை முதல் இந்திய நீதிபதி என்று கூறலாம்.

மேலும் சில மாற்றங்களுடன் சவுல்ட்ரி கோர்ட், 1688ல் மேயர் கோர்ட் ஆக மாற்றப்பட்டு சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1798ல் இது மெட்ராஸ் கோர்ட் ஆஃப் ரெக்கார்டர் என்று மாற்றப்பட்டு, அதன் முதல் ரெக்கார்டராக தாமஸ் ஸ்டிரேன்ஜ் நியமிக்கப்பட்டார். விரைவில் 1801ல் அது மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் ஆக மாறியது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில்தான் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு 1862ஆம் ஆண்டுவரை மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது.

1862ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஐகோர்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறுதான் சென்னை உயர்நீதிமன்றம் உருவாகியது. 1888ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் 1892ல் நிறைவுற்றது. தற்போதுள்ள கட்ட வளாகத்தில் 1892 முதல் உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென்பகுதி மக்கள் பயனடையும் வகையில் 2004 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தனது நெடிய வரலாறில் பல முக்கியமான வழக்குகளையும் விசித்திரமான வழக்குகளையும் சந்தித்துள்ளது. அபாரமான வாதத்திறமை கொண்ட பல வழக்கறிஞர்களையும், நீதியின் செங்கோல் வழுவாமல் தீர்ப்பளிக்கும் ஞானம் கொண்ட பல நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. நாட்டையே கதிகலங்க வைத்த, பரபரப்பூட்டிய பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளது.


நமது நீதிமன்றங்கள் தொடக்கத்தில் சிவில், கிரிமினல் வழக்குகளை மட்டுமே கவனித்து வந்தாலும், சுதந்தரத்துக்குப் பிறகு, நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அதைக் காக்கும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு வந்துவிட்டது. நாட்டின் முதல் இரண்டு அடிப்படைத் தூண்களான அரசும் நிர்வாகமும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுவரும் இக்காலத்தில், அவற்றைக் கண்டிக்கும் பொறுப்பையும், முறையாகச் செயல்பட வைக்கும் பொறுப்பையும் நீதிமன்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் ஆபத்து நேராமல் காப்பதில் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகக் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருப்பினும், அந்தக் கடமையை நமது நீதிமன்றங்கள் செம்மையாகவே செய்துவருகின்றன. கிரிமினல் வழக்குகளில் மட்டுமல்லாமல் சமூக நல வழக்குகளில் பல அற்புதமான தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொது மக்களின் பிரச்சினைகளை தாம் முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சரியான நடவடிக்கைகளை எடுப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவுக்கே உதாரணமாக திகழ்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். முதலாவது பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி பலியான சம்பவம். தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் இந்த சம்பவத்தைத் தானே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்களை முறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தல்) சிறப்பு விதிகள் 2012 என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதைக் கூறலாம். இத்தனை காலமும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு இச்சட்டம் கடிவாளம் போட்டுள்ளது. இரண்டாவதாக, கடந்த சில வாரங்களாக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நாய்கள், எலிகள் ஒழிப்பைக் கூறலாம். நாய்கள், எலிகள் போன்றவை அரசு மருத்துவமனைகளில் அங்குமிங்கும் உலவுவது நாம் சாதாரணமாகப் பார்க்கும் காட்சிதான். கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் ஒன்றின் உடலை எலிகள் கடித்துக் குதறியதைக் கேள்விப்பட்ட தலைமை நீதிபதி மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகவே, அரசு மருத்துவமனைகளில் உலவும் விலங்குகளை ஒழிக்கும் நடவடிக்கையை  அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.    

நீதிமன்றங்கள் தமது அதிகார வரம்புக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு மக்கள் சேவையாற்றினாலும், போதுமான நிர்வாக வசதிகள், கட்டமைப்புகள் இல்லாதது, போதுமான நீதிபதிகள் இல்லாதது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளாதது எனப் பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டு நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றன. வழக்குகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்பது முதலாவது. நீதிக்காக நீதிமன்றத்தை அணுகும் சாதாரண, ஆங்கில தெரியாத பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களின் வழக்குக் குறித்து என்ன பேசப்படுகிறது என்பது தெரியாமலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதிமன்ற நடைமுறைகள் மக்கள் பேசும் மொழியில் அமைந்தால்தான் அது உண்மையான ஜனநாயக உரிமையாக இருக்க முடியும். இரண்டாவது கோரிக்கை மெட்ராஸ் ஹைகோர்ட் என்ற பெயரை மாற்றுவது. மெட்ராஸ் என்பதே சென்னை என்று மாறிவிட்ட பின்னர் இன்னும் எதற்கு உயர்நீதிமன்றத்தின் பெயரில் ‘மெட்ராஸ்’?

நாட்டில் அங்கிங்கெனாதபடி லஞ்ச-ஊழல் நிறைந்திருக்க, அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்ட நிலையில், மக்களின் ஒரே நம்பிக்கையாக விளங்குவது நீதிமன்றங்கள் தாம். அந்தப் பொறுப்பை உணர்ந்து இதுவரை நன்றாகச் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பலாம்.


கியூபா: உலக குத்துச்சண்டையின் சூப்பர் பவரானது எப்படி?
ஒரு மூன்றாம் உலக நாடு. ஒரு கோடி மக்கள் தொகையே கொண்ட ஒரு சிறிய தீவு, நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளாக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஒரு ஏழை நாடான கியூபா, உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் வல்லரசு நாடுகளையும் விஞ்சி தங்கப் பதக்கங்களை தட்டிச் செல்வது விளையாட்டு உலகின் ஆச்சரியங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதோ சிறிய பட்டியல்: 2001ல் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில், அனைத்து எடைப் பிரிவுகளிலும் மற்ற நாடுகள் வாங்கிய மொத்தத் தங்கப்பதக்கங்களைவிட கியூபா வென்ற தங்கப்பதக்கங்கள் அதிகம். 1972 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கியூபா வென்றுள்ள தங்கப்பதக்கங்கள் மட்டும் 27. அதைத் தவிர உலகமெங்கும் அவ்வப்போது நடைபெற்றுவரும் அமெச்சூர் சாம்பியன் போட்டிகள், நல்லெண்ணப் போட்டிகள் போன்றவற்றில் கியூபா வென்றுள்ள பதக்கங்கள் தனி. கியூபா ஒன்றும் பணக்கார நாடல்ல, விளையாட்டுக்கு பணத்தை வாரியிறைக்க. உலக சாம்பியன் போட்டிகளில் வெல்லும் வீரர்கள்கூட பயிற்சிக்கு சைக்கிளில் தான் செல்கிறார்கள். அவர்கள் அணியும் டிராக் சூட்டுகள்கூட பழையவை அல்லது நைந்துபோகும் நிலையில் இருப்பவையாக இருக்கலாம். அப்படி இருந்தும் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

1959ல் கியூபாவில் ஃபிடல் தலைமையிலான புரட்சி படைகள் ஆட்சியைப் பிடிக்கும் வரையில் அங்கு தொழில்முறை விளையாட்டுகள் சிறிய அளவில் நடைபெற்று வந்தாலும், குறிப்பிடத்தக்க சாதனைகள் ஏதும் கியூபா செய்திருக்கவில்லை. அப்போது கியூபாவின் விளையாட்டுத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தான் இருந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் தானே ஆதிக்கம் செலுத்த முடியும்! புரட்சிக்கு பிறகு தொழிமுறையிலான விளையாட்டுப் போட்டிகளை கியூபா 1961ல் தடை செய்தது. அவற்றில் கலந்துகொள்ள விளையாட்டு வீரர்களும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெற்று வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து விளையாட்டுப் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, குறிப்பாக கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு விளையாட்டுத் திறனை வளர்க்கும் பயிற்சி கூடங்களும், பயிற்சி முறைகளும் உருவாக்கப்பட்டு அரசின் கண்காணிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டன.ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் போதே மாணவர்களின் விளையாட்டுத் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டியது அங்கு கட்டாயம். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர்களுக்கு எந்த விளையாட்டில் நல்ல திறமை இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விளையாட்டுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், உதாரணத்துக்கு குத்துச்சண்டை என்று வைத்துக்கொள்வோம், 12 வயது முதல் குறிப்பிட்ட விளையாட்டுக்கென்றே இருக்கும் சிறப்பு பள்ளிகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி ஆரம்பமாகிறது. அங்கு அவர்களின் திறமைகள் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அதன் பின்னர் போட்டித்திறனை அதிகரிக்கும் இளைஞர் விளையாட்டு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் தொடர்கின்றன. அங்கு நாட்டின் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் நேரடி பயிற்சிகள் அளிக்கப்படும். குத்துச்சண்டையைப் பொறுத்தவரையில், கியூபாவின் தலைமைப் பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. சிறந்த திறமைசாலிகள் கண்டறியப்பட்டு கியூபாவில் குத்துச்சண்டை பயிற்றுவிப்பதில் உயர்நிலை அகாடமியாக விளங்கும் வாஜாய் பயிற்சி நிலையத்துக்கு வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். அங்கு சர்வதேசப் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு பயிற்சியும், கடுமையான உடற்பயிற்சிகளும் அளிக்கப்படும். உலகத்தரமான குத்துச்சண்ட வீரர் அங்கே உருவாகிறார்.

விளையாட்டுகளுக்கு அரசு மிகுந்த ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்பதால் தான் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கியூபாவின் கம்யூனிச ஆட்சியின் வெற்றியைப் பறைச்சாற்றும் விதமாகவும் குத்துச்சண்டை விளையாட்டுப் பார்க்கப்படுகிறது. ஆனால், கியூபாவின் வெற்றி குத்துச்சண்டையுடன் முடிந்துவிடவில்லை. பெண்கள் கைப்பந்து விளையாட்டில் உலகின் தலைசிறந்த அணியாகத் திகழும் கியூப அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. அந்நாட்டின் பேஸ்பால் அணியோ உலக சாம்பியன் போட்டிகளில் வெல்ல முடியாத அணியாக விளங்கிவருகிறது. ஸ்கேட்டிங், தடகளம், பெண்கள் கைப்பந்து, மல்யுத்தம், ஜூடோ, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, பேஸ்பால், கூடைப்பந்து என பல விளையாட்டுகளிலும் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்கும் கியூபா ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ள மொத்த பதக்கங்கள் 194 (67 தங்கம், 64 வெள்ளி, 63 வெண்கலம்). 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வென்றுள்ள ஒலிம்பிக் பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை 20 (இதில் ஹாக்கியில் வென்ற பதக்கங்கள் 11). கியூபாவின் மக்கள் தொகையில் 25% மேற்பட்டோர் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.


இவ்வளவு பதக்கங்களையும் சாம்பியன் பட்டங்களையும் வென்று நாட்டுக்கு பெருமைச் சேர்க்கும் கியூப வீரர்கள் பெறும் பரிசு என்ன தெரியுமா? நாட்டுக்கு பெருமை சேர்த்ததற்கான கெளரவம் தான் அவர்கள் பெரும் பெரிய விருது. அரசிடமிருந்து அவர்கள் பெரும் கூடுதல் சலுகை என்பது வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புகள், ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்கும் பழைய கார் ஒன்றும் தான். ஆம், தங்களுடைய குத்துச்சண்டை திறமைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்கும், வேறு எதற்காகவும் அல்ல, பெரும்பாலான வீரர்கள், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், வி்ளையாட்டுத்துறை நிர்வாகிகளாகவோ அல்லது பயிற்சியாளர்களாகவோ தங்கள் அறிவையும் அனுபவத்தையும் அடுத்தத் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக அளிக்கிறார்கள். தொடரும் கியூபாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே இவர்கள் தான்.


உலகத்தைப் பொருத்தவரையில் குத்துச்சண்டை என்பது குத்துச்சண்டை வளையத்தில் இரண்டு தனி நபர்களுக்கு இடையே நடைபெறும் போட்டி. ஆனால், கியூபாவிலோ அது ஒரு அணி விளையாட்டு. அங்கு குத்துச்சண்டை வீரர்கள் ஒன்றாகவே வளர்கிறார்கள், ஒன்றாகவே பயிற்சி பெறுகிறார்கள், ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகிறார்கள். கியூப வீரர்களைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கியூபாவின் தேசிய, பிராந்திய சாம்பியன் பட்டங்களை வெல்வது தான் கடினமாம். ஏனெனில் போட்டி அவ்வளவு கடினமாக இருக்கிறது.

குத்துச்சண்டையில் கியூபாவின் வெற்றிக்கு உதாரணமாக இருவரைக் கூறலாம். முதலாமவர் டியொஃபிலோ ஸ்டீவன்சன். ஹெவிவெயிட் பிரிவில் மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம், மூன்று உலக சாம்பியன் பட்டங்கள் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக குத்துச்சண்டை களத்தை அதிர வைத்தவர் இவர். அடுத்தவர், குருவை மிஞ்சிய ஃபெலிக்ஸ் செவோன். மூன்று ஒலிம்பிக் தங்கத்துடன் உலக சாம்பியன் பட்டத்தை ஆறு முறை வென்று சாதனைப் படைத்திருப்பவர். 1986ல் ஜூனியர் உலக சாம்பியன் பட்டத்தை வென்று ஆரம்பித்த செவோனின் வெற்றி 2000ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது வரையில் தொடர்ந்தது. இவர்களைத் தவிர ஏஞ்செல் ஹெராரா, ஹெக்டார் வினெண்ட், சமீபத்தில் ஏரியல் ஹெர்னாண்டஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்றவர்களாவர்.


தற்போது கியூபா முழுவதும் 494 முதல்தர பயிற்சியாளர்களும், 185 பயிற்சி நிலையங்களும் இருக்கின்றன. கியூபாவின் 99,000 விளையாட்டு வீரர்களில் 19,000 பேர் குத்துச்சண்டை வீரர்கள். அவர்களில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றவர்கள் 81 பேர். ஆனாலும் கியூப குத்துச்சண்டை அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் 12 பேர் மட்டுமே. இதுவரை ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் 27 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் வென்றுள்ள கியூபாவின் சாதனை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக 2008ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கியூப வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை தற்காலிகமாக இழந்தனர். நான்கு பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும் நால்வரும் வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. கியூபாவின் ஆதிக்கம் தகர்ந்துவிட்டது, பிற நாடுகள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சகர்களின் வார்த்தைகள் கியூப வீரர்களின் காதுகளில் விழவில்லை. ஏனெனில், பெய்ஜிங்கில் இழந்த பெருமையை லண்டனில் மீட்டெடுக்க அவர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்கத்துக்காக குத்துவிட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கியூபா விளையாட்டில் சிறந்து விளங்கக் காரணம் என்ன என்று கியூபாவுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய எஸ்.எல்.பிரைஸ் கூறுகிறார், “விளையாட்டின் மீதுள்ள காதலால் தவிர, வேறு எதற்காகவும் விளையாடாத வீரர்கள் இருக்கும் கடைசி இடம் கியூபா தான். பொதிந்துள்ள திறமைகளை அர்ப்பணிப்புடன் கண்டறிந்து, வளர்த்து, சிறந்த திறமைசாலிகளைக் கொண்டாடும் இடம் உலகில் வேறு எங்கும் இல்லை. நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, கியூபாவின் ஆழ்கடலில் மறைந்திருக்கும் பத்து வயது சிறுவனாக இருந்தாலும் சரி, உங்கள் திறமை கண்டுபிடிக்கப்படும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், விரைவிலேயே தேசிய நாயகனாக மக்களால் கொண்டாடப்படுவீர்கள்.” இதுதான் கியூபாவின் யதார்த்தம்.


பழைய ஹவானா நகரில் உள்ள ரஃபேல் ட்ரெஜோ திடலில் போட்டியிட வந்த ருலன் கார்போனெல் என்ற 13 வயது சிறுவன் கூறுகிறான், “ஃபெலிக்ஸ் செவோன் போல ஆவதே எனது கனவு”. அவனுடைய பயிற்சியாளர் யார் தெரியுமா? இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற வெல்டர்வெயிட் சாம்பியன் ஹெக்டார் வினெண்ட். கியூபாவில் விளையாட்டு வீரர்கள் ‘பெரிய நட்சத்திரங்களாக’ மதிக்கப்படுகிறார்கள். மக்கள் அவர்களை அவ்வளவு நேசிக்கிறார்கள், ஏன் வழிபடுகிறார்கள். ரெஸ்டாரண்டுகள், தியேட்டர்களில் அவர்களுக்கு சிறந்த இருக்கைகளை மக்கள் அளிக்கிறார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் ஆட்டோகிராஃப் வாங்க மக்கள் மொய்க்கிறார்கள். அரசு மிக மிகக் குறைவான சலுகைகளையே அளித்தாலும், மக்களின் அங்கீகாரமே பெரிது என வீரர்கள் கருதுகிறார்கள்.
தேசிய பெருமிதமும், சொந்த லட்சியமும் இணைந்தே கியூபாவின் வெற்றி சாத்தியமாகிறது என்றால் புரிந்துகொள்ள சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், கியூபாவில் அதுதான் யதார்த்தம். மனிதர்களின் புனிதமான விழுமியங்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டவை. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று இருக்கும் உலகில் வாழும் உங்களால் இதைப் புரிந்துகொள்ள இயலாது என்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ. விருதுகள், பதவிகள், கோடிகள், வீட்டுமனைகள் என செல்வத்தில் புரளும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு ஃபிடல் சொல்லும் வாழ்க்கை புரியாமல் போவதில் ஆச்சரியமில்லை.

டியோஃபிலோ ஸ்டீவன்சன்: இவரை வாங்குமளவுக்கு உலகில் பணம் இல்லை!
உலக குத்துச்சண்டை களத்தில் கியூபா நாட்டுக்குத் தனி இடம் உண்டு. இவ்விளையாட்டில் 1970களில் தொடங்கிய கியூபாவின் ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. கியூபாவின் இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தவரும், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீரராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் டியொஃபிலோ ஸ்டீவன்சன், ஜூன் 11, 2012 அன்று ஹவானா நகரில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. அமெச்சூர்(பணத்துக்காக போட்டியிடாத) குத்துச்சண்டைக் களத்தில் ஹெவிவெயிட் பிரிவில் 15 ஆண்டுகள் தன்னிகரற்றவராக கோலோச்சியவர் ஸ்டீவன்சன். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் ஸ்டீவன்சன் தான்.  பணத்துக்காக ஒரு போதும் திறமையை விற்க சம்மதிக்காதக் காரணத்தால் விளையாட்டு வீரர்களில் தனிச்சிறப்பான முன்மாதிரியாகத் திகழ்ந்த ஸ்டீவன்சன், கியூபாவின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும்கூட.


இதயத் தமனியில் ரத்தம் உறைந்ததால் கடந்த ஜனவரி மாதத்தில் 15 நாள்கள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த ஸ்டீவன்சனின் உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஸ்டீவன்சனின் உயிரைப் பறித்துவிட்டது. கியூபாவுக்கு மட்டுமல்ல, குத்துச்சண்டை விளையாட்டுக்கும் ஸ்டீவன்சனின் இழப்பு பேரிழப்புதான். நான்கு முறை திருமணமான ஸ்டீவன்சனுக்கு இரண்டு வாரிசுகள்.

கியூப மக்களால் ‘பிர்லோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் டியொஃபிலோ ஸ்டீவன்சன், மார்ச் 29, 1952ல் கியூபாவில் உள்ள பியூர்டோ பட்ரே என்னுமிடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 4 பேர். அவரது தந்தை கரீபியன் தீவுகளில் உள்ள வின்சென்ட் தீவிலிருந்து வந்து கியூபாவில் குடியேறியவர். தாயார் கியூபா நாட்டினர். ஸ்டீவன்சனின் தந்தை கப்பலில் சர்க்கரை மூட்டைகள் ஏற்றும் வேலையைச் செய்துவந்தார். பொழுதுபோக்காக உள்ளூரில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் குத்துச் சண்டைப் பயிற்சியையும் செய்துவந்தார். தந்தையைப் பார்த்து ஸ்டீவன்சனும் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 14 வயதில் முறையாகப் பயிற்சியைத் தொடங்கிய ஸ்டீவன்சன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனது முதல் சர்வதேச பட்டத்தை – மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் சாம்பியன் பட்டங்களை வென்றார்.

1968ல் ஹாஃப்-மிடில்வெயிட் பிரிவில் கியூபா தேசிய ஜூனியர் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து சில வெற்றிகளைப் பெற்றுவந்த ஸ்டீவன்சன், 1970ல் நடைபெற்ற ஒரு போட்டியில், 1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கியூபாவின் சார்பாகப் பங்கேற்ற நான்சியோ கரில்லோவை  வீழ்த்தினார். புதிய சாம்பியனின் வரவை இவ்வெற்றிப் பறைச்சாற்றியது. இந்த வெற்றியானது கியூபாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டைப் பயிற்சியாளரான அல்சிடஸ் சகர்ரா மற்றும் சோவியத் யூனியனிலிருந்து கியூப அணிக்குப் பயிற்சியளிக்க அனுப்பப்பட்ட குத்துச்சண்டை வீரர் ஆண்ட்ரி செர்வோனெங்கோ ஆகியோர் ஸ்டீவன்சனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து வரப்போகும் ஒலிம்பிக் போட்டிக்காக அவர்கள் ஸ்டீவன்சனுக்கு தீவிரப் பயிற்சியளிக்கத் தொடங்கினர்.


1972ல் மியூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஸ்டீவன்சன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏற்கனவே உலகப் புகழ் பெற்றிருந்த வீரர்களுடன் அங்கு ஸ்டீவன்சன் மோத வேண்டியிருந்தது. கால் இறுதியில் அமெரிக்க வீரர் டுவான் பாபிக் உடன் ஸ்டீவன்சன் மோதினார். அதற்கு முன்பு பான் அமெரிக்கன் போட்டியில் ஸ்டீவன்சனை ஏற்கனவே வென்றிருந்தபடியால் இந்தப் போட்டியில் ஸ்டீவன்சனை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று பாபிக் எண்ணியிருக்க, அவரை மூன்றாவது ரவுண்டிலேயே வீழ்த்தினார் ஸ்டீவன்சன். தீவிரப் பயிற்சியின் மூலமும் புதிதாகக் கற்றுக்கொண்ட நுட்பங்களாலும் ஸ்டீவன்சனின் திறன் பன்மடங்கு வளர்ந்திருந்தது.


அரையிறுதியில் மோதியது ஜெர்மனியின் பீட்டர் ஹஸ்ஸிங் உடன். இரண்டாவது சுற்றிலேயே ஸ்டீவன்சனின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்த ஹஸ்ஸிங், அதற்கு முன் அந்த அளவுக்கு கடினமாக குத்து வாங்கியதில்லை என்று பின்னர் கூறினார். இறுதிப் போட்டியில் ஸ்டீவன்சனுடன் மோத இருந்த ருமேனியாவின் இயான் அலெக்ஸ்க்கு கை உடையவே அவர் போட்டியில் இருந்து விலகினார். குத்துச்சண்டையில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை ஸ்டீவன்சன் வென்றார். அன்று தொடங்கிய அவரது வெற்றிப் பயணம் அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

1976ல் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே ஸ்டீவன்சனின் புகழ் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஸ்டீவன்சனின் தாக்குதலுக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாததால், இந்த முறையும் ஒலிம்பிக் பதக்கம் ஸ்டீவன்சன் வசமானது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்ததை எதிர்த்து 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் புறக்கணித்தன. ஸ்டீவன்சனுக்கு கடுமையான போட்டியளிக்கக்கூடிய அமெரிக்க வீரர்கள் இல்லாத நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்டீவன்சன், சோவியத் யூனியனின் இஸ்ட்வான் லெவாயை வென்று மூன்றாவது முறையாகத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
ஒலிம்பிக் போட்டி வெற்றிகள் ஒருபுறமிருக்க, உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தையும் ஸ்டீவன்சன் விட்டு வைக்கவில்லை. 1974, 1978 மற்றும் 1986 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். 1970 முதல் 11 ஆண்டுகள் தோல்வியே கண்டறியாத ஸ்டீவன்சன் 1982 ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டப் போட்டியில் இத்தாலியின் ஃபிரான்செஸ்கோ தாமியானியிடம் தோல்வியடைந்தார். தாமியானி பின்னர் தொழில்முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கலந்து கொண்ட உலக சாம்பியன் பட்ட போட்டிகளில் ஸ்டீவன்சன் சந்தித்த முதல் மற்றும் ஒரே தோல்வி இதுதான்.

1984ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அரசியல் காரணங்களுக்காக சோவியத் யூனியனும் கியூபாவும் புறக்கணித்தன. எனவே, அந்தப் போட்டியில் ஸ்டீவன்சனால் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. அவர் அப்போதிருந்த ஃபார்முக்கு, அந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார் என்று விளையாட்டு நோக்கர்கள் கருதுகிறார்கள். அதைத் தொடர்ந்து 1988ல் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற போட்டியையும் கியூபா புறக்கணித்தது. அப்போதும் ஸ்டீவன்சனால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. 1986ல் அமெரிக்காவின் நெவாடாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியை ஸ்டீவன்சன் அபாரமாக வென்றதைக் காணும் போது, நிச்சயம் அவர் லாஸ் ஏஞ்செலஸிலும் சியோலிலும் தங்கம் வென்றிருப்பார் என்பதை அறியலாம். 1988க்கு பின்னர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற ஸ்டீவன்சன் முடிவெடுத்தார். அவர் தனது குத்துச்சண்டைப் பயணத்தில் கலந்துகொண்ட 321 போட்டிகளில் 301 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். வால் பார்கர் கோப்பை(1972) மற்றும் சோவியத் யூனியனின் மெரிடட் மாஸ்டர் ஆஃப் ஸ்போர்ட் (1972) விருதையும் பெற்றார். சமீப காலமாக கியூப குத்துச் சண்டை அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.6 அடி 3 அங்குல உயரம் 214 பவுண்டு எடை, வலிமையான தோள்கள், அகன்ற மார்பு, நீண்ட முறுக்கேறிய கைகள் என பார்ப்பவர் எவரையும் பீதியடையச் செய்யும் உருவமாக அவர் குத்துச்சண்டை வளையத்தில் நிற்பார். அவரைப் பார்க்கும் போதே எதிரி கலக்கமடைவது நிச்சயம். ஸ்டீவன்சனின் பெரிய பலம் அபார வலிமைக் கொண்ட அவரது வலது கை. இடது கை மெளனமாக எதிரியைத் திசைத் திருப்புகையில், வலது கை செயல்படும் வேகம் எதிராளியை எளிதில் வீழ்த்திவிடும். சண்டையிடும்போது அவரது கால்களின் அசைவுகள் மிகவும் நுணுக்கமாக இருக்கும். குத்து சண்டை வளையத்தை சண்டையில் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவர் உதாரணமாக இருந்தார்.

பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாக, போட்டியாளர்களுக்கு பீதி அளிப்பவராக இருந்தாலும், அவர் மிகவும் மென்மையான குணம் படைத்தவர். குத்துச்சண்டை களத்திலும் சரி, வெளியிலும் சரி, எப்போதும் அமைதியாகக் காணப்படுவார். வீரர்களுடன் நட்புடன் பழகுபவர். தன் வாழ்நாளின் இறுதிவரை தன் நாட்டுக்கும் அதிபருக்கும் உண்மையானவராகவே நடந்துகொண்டார்.


இவ்வளவு திறமையான ஒருவரைக் கண்ட பின்னர் விளையாட்டுச் சூதாடிகள் சும்மா இருப்பார்களா? 1972ல் ஒலிம்பிக்கில் தங்கமும், 1974ல் உலக சாம்பியன் பட்டமும் வென்றவுடன் தொழில்முறை குத்துச்சண்டை போட்டி நடத்துபவர்களின் கழுகுப் பார்வை ஸ்டீவன்சன் மீது திரும்பியது. அவரை எப்படியாவது முகமது அலியுடன் மோத விடவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். ’20ஆம் நூற்றாண்டின் இணையற்றப் போட்டி’ ஆக அது இருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அவருக்கு வந்த பல ஆஃபர்களில் முக்கியமானது பிரபல குத்துச்சண்டை அமைப்பாளரான டான் கிங்கிடம் இருந்த வந்த அழைப்பு தான். முகமது அலியுடன் மோதுவதற்கு அன்றே 5 மில்லியன் டாலர் தருவதாகக் கூறினார். அப்போது புகழின் உச்சியில் இருந்தாலும் பணத்துக்காக போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் ஸ்டீவன்சன் பிடிவாதமாக இருந்தார். யாராலும் அவரை சாய்க்க முடியவில்லை. அப்போது மட்டும் அவர் பணத்துக்காக போட்டியிட்டிருந்தால் அவருடைய புகழ் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்போது கூறிய வார்த்தைகள் தான் வரலாற்றில் அவரது பெயரை நிலைக்கச் செய்துவிட்டது: “தொழில்முறை குத்துச்சண்டையில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது நம்பிக்கை முழுவதும் புரட்சியின் மீதுதான். பணத்துக்காக என் நாட்டின் அமைதியை, கொள்கையை விலைபேச மாட்டேன். எட்டு மில்லியன் கியூபர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்புக்கு முன் நீங்கள் கொடுக்கும் மில்லியன் டாலர்கள் ஒன்றுமேயில்லை” என்றார். கியூப மக்கள் அவரை வாரி அணைத்துக்கொண்டனர். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்  பத்திரிகை இப்படி எழுதியது: “He’d Rather Be Red Than Rich.

2003ல் அளித்த ஒரு பத்திரிகை பேட்டியில், “எனக்கு பணம் தேவைப்படவில்லை. நான் பணத்தை நாடியிருந்தால், நிச்சயம் என் வாழ்க்கை குழப்பமாகியிருக்கும். தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களுக்கு பணம் என்பது அவர்களே சென்று மாட்டிக்கொள்ளும் பொறி. முதலில் நீங்கள் ஏராளமாகப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வீர்கள். ஆனால், எத்தனை குத்துச்சண்டை வீரர்கள் சாகும்போதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்? பணம் எப்போதும் மற்றவர்களின் கைகளுக்குத்தான் செல்கிறது.”

ஸ்டீவன்சனுக்கு உலக மக்கள் அளித்த ஆதரவானது அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவரைக் காண்கின்றனர். அதனால்தான் பி.பி.சி. கூட,”கியூபாவின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரரான இவர், ஒரு காலத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த உலகப் பிரபலமாகத் திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியது.

இறுதியாக ஸ்டீவன்சனைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரான ஃபிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளைக் குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும்: ஸ்டீவன்சன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். விளையாட்டு உலகில் எந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீரரும் இவரைப்போல் ஜொலித்ததில்லை. புரட்சியின் மீது சர்வதேசிய கோட்பாடுகள் விதித்த சில கடமைகள் மட்டும் குறுக்கிடாதிருந்தால், நிச்சயமாக மேலும் இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை அவர் வென்றிருப்பார். ஸ்டீவன்சனை விலைக்கு வாங்குமளவுக்கு பணம் இந்த உலகில் இருந்திருக்காது.”

ஆம், ஸ்டீவன்சனை வாங்குமளவுக்கு இந்த உலகில் போதுமான டாலர்கள் இல்லை!

கடவுள் துகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
40 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த அடிப்படை நுண்துகளான ஹிக்ஸ் போசான் ஒருவழியாக விஞ்ஞானிகளின் சோதனைச் சாலையில் சிக்கிவிட்டது. ஹிக்ஸ் போசான் மூலத்துகளின் கண்டுபிடிப்பு கடந்த நூறாண்டுகளின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பயணத்தில் இது மிகப்பெரிய மைல் கல் என அறிவியல் உலகம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா அந்த ஹிக்ஸ் போசான் என்று கேள்வி எழுகிறதா? அதை விளக்கமாக பார்ப்பதற்கு முன்பு, போரடித்தாலும் சில அடிப்படை அறிவியல் தகவல்களை நாம் அறிந்துகொள்வது அவசியம்.


நாம் வாழும் இந்த பூமி, சூரியன், அதைச் சுற்றும் கோள்கள், நட்சத்திரங்கள் என அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஆதியாரம்பத்தில் ஒரு பெரிய வெடிப்பிலிருந்து தோன்றியதாக நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றிய அந்த பெருவெடிப்பில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றி நட்சத்திரங்களாக, கோள்களாக, விண்பொருள்களாக உருவாகியதாகவும் அது தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும் ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் அணுக்கள். உயிரினங்கள், மண், மலை, கடல், சந்திரன், சூரியன் என இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை. ஒரு கட்டடத்துக்கு செங்கற்கள் எப்படி அடிப்படைக் கட்டுமானமாக இருக்கின்றனவோ, அதுமாதிரி அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படையாக இருப்பவை அணுக்கள் தான். இந்த அணுக்களும் சில அடிப்படைத் துகள்களால் கட்டமைக்கப்பட்டவை தான். இந்த அணுக்கருத் துகள்களும் சிலவகை மூலத் துகள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மூலத்துகள்கள் தான் பொருள்களின் இருப்புக்கு அடிப்படையாக விளங்குபவை. இப்பவே கண்ணைக் கட்டுகிறதா? இன்னும் கொஞ்சம் தான், பொறுத்துக்கொள்ளுங்கள்

சத்யேந்திரநாத் போஸ்

நம்முடைய பிரபஞ்சம் எவற்றால் ஆனது, எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நியம மாதிரி (ஸ்டாண்டர் மாடல்) கோட்பாடு என்னும் இயற்பியல் கோட்பாட்டின்படி விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமக் கோட்பாட்டின்படி, அடிப்படைத் துகள்கள் ஃபெர்மியான்கள் போசான்கள் என இரண்டு வகைப்படும். (குவாண்டம் இயற்பியல் எனப்படும் நவீன இயற்பியல் துறைக்கு தனது அற்புதமான கண்டுபிடிப்பால் வலுச் சேர்த்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ்(1894-1974). அவரது நினைவாகவே அறிவியல் உலகம் இத்துகளுக்கு போசான் என பெயரிட்டு பெருமைப்படுத்தியுள்ளது). இரண்டு வகையில் சேர்த்து மொத்தம் 17 வகையான துகள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். இவற்றை அதற்கு மேல் உடைக்கவோ பகுக்கவோ முடியாது. அப்படிப்பட்ட துகள்களில் முதலாவது கண்டுபிடிக்கப்பட்டது எலக்ட்ரான் எனப்படும் எதிர்மின் துகள் (1897ல்). 2000ம் ஆண்டுக்குள் மொத்தம் 16 வகையான துகள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றின் இருப்பையும் உறுதிசெய்துவிட்டனர். இத்துகள்களில் போட்டான், குளூவான் ஆகிய துகள்களைத்தவிர மற்ற அனைத்துக்கும் நிறை (பொது வழக்கில் எடை என்று கூறலாம்) உண்டு. இந்த நிறையை அவை எப்படி பெற்றன என்பதே விஞ்ஞானிகளின் நெடுநாளைய குழப்பமாக இருந்து வந்த நிலையில் 1964ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஹிக்ஸ் இயங்கமைவு என்ற போட்பாட்டை முன்வைத்தார்.

ஹிக்ஸ்

அவரது கோட்பாட்டின்படி பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு புலம்(புரிந்துகொள்ள வசதியாக ஆற்றல் அல்லது சக்தி என்று வைத்துக்கொள்ளலாம்) வியாபித்துள்ளது. அதற்கு ஹிக்ஸ் புலம் என்றே அறிவியல் உலகம் பெயர் சூட்டிவிட்டது. ஹிக்ஸ் புலமானது ஹிக்ஸ் போசான் என்ற நிறையுள்ள துகள்களால் நிறைந்தது. அதன் வழியே பயணிக்கும் போது அடிப்படைத் துகள்களுக்கு நிறை ஏற்படுகிறது. அதாவது, ஹிக்ஸ் புலத்தில் அடிப்படைத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக அவை நிறையைப் பெறுகின்றன என்று ஹிக்ஸ் ஒழுங்கமைவு கோட்பாடு விளக்கியது. கணித வடிவில், சித்தாந்த அளவில் இந்தக் கொள்கை பொருத்தமாக இருந்தாலும் ஹிக்ஸ் போசான் துகளை யாரும் பார்க்கவில்லை. சரி ஏட்டளவில் சரியாக இருந்தால் மட்டும் போதுமா? பரிசோதனை மூலம் நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற எதையுமே அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே அத்துகளைக் கண்டறியும் முயற்சிகள் உலகம் முழுவதும் அப்போதே தொடங்கிவிட்டன.

சுவிஸ்-ஃபிரான்ஸ் எல்லையில் தரைக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம்

தற்சுழற்சி, மின்னூட்டம், நிறம் போன்ற பண்புகளற்ற மிக நுண்ணிய எளிமையான துகளான ஹிக்ஸ் போசானை கண்டறிவது அவ்வளவு எளிமையான காரியமாக இருக்கவில்லை. அதற்கு பெரும் உழைப்பும் அதைவிடப் பெரிய முதலீடும் தேவைப்பட்டது. அதிகச் செலவு பிடித்தக் காரணத்தால் அமெரிக்கா போன்ற நாடுகள்கூட அந்த ஆராய்சியை கைவிட்ட நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவரும் 20 நாடுகள் இணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ன் (CERN ) இதில் தீவிரமாக இறங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயர் ஆராய்ச்சி மையத்தில் உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Large Hadron Collider - LHC) அமைக்கப்பட்டது. இந்தத் துகள் முடுக்கி பூமிக்கு அடியில், பிரான்ஸ் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில் 27 கி.மீ. நீளச் சுரங்கப்பாதையில் புதைக்கப்பட்டுள்ளது. இங்கு சிலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் இரண்டு பரிசோதனைகளில் தாம் ஹிக்ஸ் போஸான் மூலத்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன‌.

துகள் முடுக்கி

இந்தத் துகள் முடுக்கியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கோடிக்கணக்கான அணுக்கருத்துகள்கள்(புரோட்டான் துகள்கள்) மோதவிடப்படுகின்றன. இந்த மோதல்களின் விளைவுகள் குறித்துகொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை ஆராயும் விஞ்ஞானிகள் அவற்றில் போசான் துகள் இருக்கின்றனவா என்று தீர்மானிப்பார்கள். உலகம் முழுவதிலும் இத்தகவல்களை ஆராயும் பணியில் சுமார் 10,000 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய ஆய்வை செர்ன் விஞ்ஞானிகள் 1.1 குவாட்ரில்லியன் முறைகள் செய்து அவற்றின் தாக்கங்களை பகுப்பாய்வு செய்தார்கள். தற்போது செர்ன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிதுள்ள முடிவுகள் ஹிக்ஸ் போசான் இருப்பை மிகத் துல்லியமாக உறுதி செய்துள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள துகளின் எடையானது கோட்பாட்டு ரீதியாக வருணிக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகளின் எடையுடன் மிக மிக நெருக்கமாக ஒத்திருக்கிறது. ஆகவே இதுதான் ஹிக்ஸ் போசானாக இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துவிட்டனர். அவர்களின் கண்டுபிடிப்பின் துல்லியம் ஐந்து சிக்மா, அதாவது 99.99998 சதவிகிதமாகும். இந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 50,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்


இந்தப் பரிசோதனை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே இந்தக் கண்டுபிடிப்பு நிகழும் என்று விஞ்ஞானிகள்ஏன் பீட்டர் ஹிக்ஸ் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு விஞ்ஞானி முன்வைக்கும் கருத்தாக்கமானது அவரது வாழ்நாளிலேயே சரி என்று ஆய்வுகளால் நிரூபிக்கப்படுவதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும். கண்களில் நீர் பணிக்க 83 வயதாகும் ஹிக்ஸ் கூறுகிறார், “என்னுடைய வாழ்நாளிலேயே என்னுடைய கண்டுபிடிப்பு மெய்ப்பிக்கப்படும் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை.”

இந்த ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கும் இல்லாமலில்லை. டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம் உள்பட இந்தியாவின் ஆய்வு நிறுவனங்களிலிருந்தும் பல விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போசான் என்ற பெயரே நமது விஞ்ஞானியின் பெயராக இருக்கையில் நமக்கும் அந்த வெற்றியில் பெரும் பங்குண்டு என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இந்த கண்டுபிடிப்பு, 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது முதல் பிரபஞ்சத்தின் இன்றைய நிலைவரை தெளிவாக அறிந்துகொள்ளும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. அறிவியல் என்றும் ஓய்வு எடுத்துக்கொள்வதில்லை. பிரபஞ்சத்தின் மர்மமங்களை கண்டறிவதற்கான பயணம் தொடர்ந்து நடைபெறும். புதிதாக கண்டறியப்பட்டுள்ள துகளின் மீது நடைபெறப்போகும் ஆய்வுகள் அதன் பண்புகளைப் பற்றி புதிய விளக்கங்கள் அளிக்கக்கூடும். பிரபஞ்சவியல் துறையில் இது ஒரு புதிய சகாப்தத்தையே தொடங்கிவைக்கக்கூடும். ஏனெனில் நாம் நாம் இப்போது ஓரளவு துல்லியத்துடன் அறிந்திருப்பது நம் கண்களுக்கு புலப்படும் பிரபஞ்சத்தின் 4 சதவிகித ஆற்றலைப் பற்றித்தான். போக வேண்டிய தூரம் மிக நீண்டது.


அதெல்லாம் சரி. கடவுள் துகளைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நிறையில்லாத எந்தப் பொருளும் இருப்பது சாத்தியமில்லை. பொருள்களுக்கு நிறை உண்டானதற்கு காரணம்ஹிக்ஸ் போசான்துகள்கள் தான். ஆகவே நாம் காணும் உலகின் இருப்புக்கே அடிப்படையா இருக்கும் இத்துகளை ஒரு விஞ்ஞானிகடவுள் துகள்என்று பெயர் சூட்ட, பின்னர் அப்பெயரே அதற்கு பட்டப்பெயராக பிரபலமாகிவிட்டது. மற்றபடி கடவுளுக்கும் இத்துகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அறிவியலில் கடவுளின்தேவைஇல்லை.