Wednesday, May 5, 2010

கடவுள் உண்டா? இல்லையா? - புத்தரின் பதில்





கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் விவாதம் இது. இந்திய தத்துவ விசாரணையின் முக்கிய கருப்பொருளாகவும் இது ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. மேற்கத்திய நாத்திக மரபைக் காட்டிலும் இந்திய நாத்திக, கடவுள் மறுப்பு மரபு பழமையானது, ஆழமானது. பிற்காலத்தில் ஏற்பட்ட பார்ப்பனிய எழுச்சி, கடவுள் மறுப்பு வாதங்களையும் தத்துவ விசாரணைகளையும் பெருமளவு அழித்தும் மறைத்தும் அல்லது மாற்றியும் விட்டது.


பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுளே. படைத்ததோடு அவற்றின் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருப்பவர் அவரே.....என்றெல்லாம் கடவுளைப் பற்றிய வரையறைகளை அவரவர் விருப்பத்துக்கு அள்ளித் தெளித்தனர். இன்றுவரை இந்த நிலை தொடரத்தான் செய்கிறது. 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய சமுதாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய செல்வாக்கை பார்ப்பனீயம் பெற்றிருந்தாலும் அதன் தத்துவத்தையும் செல்வாக்கையும் எதிர்க்கக்கூடிய தத்துவங்களும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அந்த வகையில் வேத மரபை, பார்ப்பனீயத்தை எதிர்த்த தத்துவத்தில் முதன்மையாக இடம்பெறத் தக்கது புத்தரின் பகுத்தறிவு கொள்கைகள்.


’கடவுளைப் பற்றிய கேள்விக்கு புத்தர் பதில் சொல்லவில்லை. ஆன்மா இல்லை என்றும் தெளிவாகச் சொல்லவில்லை’. எனவே புத்தர் கடவுளை எதிர்க்கவில்லை என்று அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று புத்தர் சொல்லியிருந்தால், புத்த மதத்தை சேர்ந்தவர்களே அவரை ஏன் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் கேட்கிறார்கள். அப்படியானால் புத்தர் கடவுளை மறுக்கவில்லையா?


விடை தெரிந்துகொள்ள தத்துவ நூல்களை புரட்டியதில் முதலில் கண்ணில் பட்டது அருணன் அவர்கள் எழுதி ’வசந்தம் வெளியீட்டகம்’ வெளியிட்டுள்ள ’தமிழரின் தத்துவ மரபு’ என்னும் நூல். இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த நூலில் ஆதி தத்துவ மரபில் தொடங்கி, வேத மரபு, வேதமறுப்பு மரபு, சாங்கியம், ஆசீவகம், சமணம், பவுத்தம், சைவ சித்தாந்தம், நாட்டார் மரபு.............தற்கால ’நவீன குருமார்கள்’ வரை அனைத்துத் தத்துவங்களும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஏராளமான இலக்கிய மேற்கோள்கள், விவாதங்கள், அலசல்களுடன் தமிழர் தத்துவத்தை அறிந்துகொள்ள சிறந்த அறிமுக நூலாக அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தரின் வாதத்தை இனி பார்க்கலாம்.


பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். கடவுளைப் பற்றி புத்தர் பேசியிருக்கிறார். ராதாகிருஷ்ணன் புத்தர் கூறியதாக உள்ள அந்தப் பகுதியைத் தனது நூலில் (”இந்தியத் தத்துவம்” ) அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். அது -

”அனாதபிந்திகாவுடனான உரையாடலில் புத்தர் இவ்வாறு இது பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது – உலகமானது ஈஸ்வரனால் படைக்கப்பட்டது என்றால் அங்கே மாற்றமோ அல்லது அழிவோ இருக்கக்கூடாது. அங்கே துன்பம் அல்லது பேரழிவு போன்ற விஷயங்களே நடக்கக் கூடாது. காரணம், நல்லது அல்லது கெட்டது மற்றும் சுத்தமானது அல்லது அசுத்தமானது எனச் சகலமும் அவனிடமிருந்தே வந்திருக்கவேண்டும். உணர்வுள்ள உயிர்களிடம் உள்ள துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பு என்பதெல்லாம் ஈஸ்வரனின் வேலை என்றால் அவனே அந்தத் துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பிற்கு ஆட்படுபவனாக இருக்க வேண்டும். அவனுக்கும் இதுவெல்லாம் உண்டு என்றால் அவன் எப்படி முழு நிறைப் பரம்பொருளாக இருக்க முடியும்?

ஈஸ்வரனே படைத்தவன் என்றால், அனைத்து உயிர்களும் மௌனமாக படைத்தவனின் சக்திக்கு அடங்கிப் போக வேண்டும் என்றால் அறங்களைப் பின்பற்றுவதால் என்ன பயன் விளைய முடியும்? நல்லது அல்லது கெட்டதைச் செய்வதும் இப்படியே ஆகும். காரணம், அனைத்துச் செயல்களும் அவனுடையவையே. இவை அனைத்தும் அவற்றை உண்டாக்கியவனிடமும் இருக்கும். கவலைக்கும் துன்பத்திற்கும் வேறு ஒன்றே காரணம் என்றால், ஈஸ்வரனால் படைக்கப்படாத ஒன்று இருந்ததாக ஆகிவிடும். அப்படியென்றால், இருக்கிற அனைத்திற்குமே அவன் காரணம் அல்லவென்று ஏன் கூறக்கூடாது?

மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் அவன் ஏதோ நோக்கத்தோடோ அல்லது நோக்கமில்லாமலோ படைத்திருக்க வேண்டும். நோக்கத்தோடு படைத்தான் என்றால் அவன் முழுநிறைப் பரம்பொருளாக இருக்க முடியாது. காரணம், நோக்கம் என்றாலே விருப்பத்தை முடித்த திருப்தி என்பது உள்ளுறையாக அமைந்து விடுகிறது. எந்த நோக்கமுமின்றி படைத்தான் என்றால் அவன் பைத்தியக்காரனைப் போல அல்லது பால் குடிக்கும் பாலகனைப் போல இருக்க வேண்டும்.

மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் மக்கள் ஏன் அவனுக்கு பயந்து பணிய வேண்டும்? தங்களின் தேவையைக் கருதி ஏன் அவனுக்கு காணிக்கை செலுத்தவேண்டும்? ஏன் மக்கள் பல கடவுள்களை வணங்க வேண்டும்? ஆக, பகுத்தறிவின் படி பார்த்தால் ஈஸ்வரன் என்கிற கருது கோள் பொய்யானது என்று நிரூபணமாகிறது. (ஈஸ்வரன் பற்றிக் கூறப்படுகிற) ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.” (”அஷ்வகோஷாவின் புத்த சரிதா”)


புத்தர் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கிறார். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார் -


”மனிதனால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடவுள் பெரியவர் என்று ஆத்திகவாதிகள் சொல்வார்களேயானால், அவரின் குணங்களும் நம்மால் அறிய முடியாதவை என்று ஆகும். அப்படியென்றால் அவரே படைத்தவர் என்பதை நம்மால் அறியவும் முடியாது, அவருக்கு அந்த குணத்தை நம்மால் கொடுக்கவும் முடியாது.” (போதி கார்யாவதாரா”)


இன்றளவுக்கும் முன்வைக்கப்படுகிற வாதம் இது. தர்க்கவியலுக்குள் கடவுளின் இருப்பு சிக்கித்தவிக்கும் போது அதை மீட்டுக் கொள்ள மனிதனை அறியாதவன் என்று மனிதனே கூறிவிடுவான். அப்படியே வைத்துக் கொண்டாலும் அறிய முடியாத கடவுளை, படைத்தவன் என்று அறிவது மட்டும் எப்படி என்று மடக்குகிறார் புத்தர்.


”அறியப்பட்ட அனைத்தோடும் தொடர்பின்றி தனித்திருப்பவர் அந்த முழு நிறைப் பரம் பொருள் என்றால், அவனது இருப்பை பகுத்தறிவால் நிலை நிறுத்த முடியாது. இதர பொருட்களுக்குத் தொடர்பில்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்? நாம் அறிந்த வரை முழுப் பிரபஞ்சமும் தொடர்புகளின் முறைமைதான்: எந்த ஒன்றோடும் தொடர்பில்லாத அல்லது தொடர்புபடுத்த முடியாத ஒன்றே இல்லை. எதையும் ஆதாரமாகக் கொள்ளாத ஒன்று, எதோடும் தொடர்பில்லாத ஒன்று எப்படி ஒன்றோடு ஒன்றாய் தொடர்புடையவற்றை, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாய் இருக்கக் கூடியவற்றை படைத்திருக்க முடியும்?


மேலும் முழு நிறைப் பரம்பொருளானது ஒன்றா அல்லது பலவா? அது ஒன்றே என்றால் நமக்குத் தெரிந்து பலவகைக் காரணங்களிலிருந்து பிறக்கிற பலவகையானவற்றிற்கு எப்படி காரணமாக இருக்க முடியும்? எத்தனை வகைப் பொருட்கள் உண்டோ அத்தனை வகை முழு முதற் பரம் பொருள் உண்டு என்றால், ஒன்றுக்கு ஒன்று எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பரம்பொருள் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறது, அனைத்து வெளியிலும் நிறைந்திருக்கிறது என்றால் அது எதையும் படைத்திருக்க முடியாது. காரணம், படைக்க ஏதும் இருக்காது.


பரம்பொருள் நிர்குணவாதி என்றால் அவனிலிருந்து வந்த அனைத்திற்கும் குணங்கள் இருக்காது. ஆனால், உண்மையில் உலகில் உள்ள அனைத்தும் குணங்களால் நிரம்பியுள்ளன. எனவே, அந்தப் பரம் பொருள் அவற்றிற்கு காரணகர்த்தாவாக இருக்க முடியாது. குணங்களிலிருந்து தனித்து நிற்பவன் பரம் பொருள் என்றால் குணங்கள் உள்ள இத்தனைப் பொருட்களை எப்படி அவற்றில் தன்னை வெளிப்படுத்தி வருகிறான்?


பரம் பொருள் மாறாதது என்றால், அனைத்து பொருள்களும் கூட மாறாததாக இருக்க வேண்டும். காரணத்திலிருந்து பிறந்த காரியம் அதன் குணத்தில் மாறுபட முடியாது. ஆனால், உலகில் அனைத்துப் பொருள்களும் மாறுதலுக்கும் அழிவுக்கும் உட்படுகின்றன. அப்படியெனில் பரம் பொருள் மட்டும் எப்படி மாறாததாக இருக்க முடியும்? மேலும், அனைத்திற்குள்ளும் பரவி நிற்கிற பரம் பொருளே அனைத்திற்கும் காரணம் என்றால் முக்தியை நாம் ஏன் நாட வேண்டும்? நாம் தான் அந்தப் பரம் பொருளை நம்மிலேயே கொண்டுள்ளோமே! அந்தப் பரம் பொருள் உருவக்கியதே என்று ஒவ்வொரு துயரத்தையும் கவலையையும் பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான்! (”அஸ்வகோஷாவின் புத்த சரிதா”)


கடவுள் என்கிற கருதுகோளை எந்த வகையிலும் மெய் என்று நிருபிக்க முடியாது. நிரூபிக்க முயன்றால் அது சுயமுரணுக்குள் போயே முடியும். காரணம், அந்தக் கருதுகோள் முற்றிலும் கற்பிதமானது என்பதால் பகுத்தறிவுக்கு அடங்காது. பகுத்தறிவுக்கு அடங்காத ஒன்றை இருப்பதாக அந்தப் பகுத்தறிவைக் கொண்டே நிரூபிக்க முயலும் சகல முயற்சிகளும் தோற்றுப் போகும் என்பதை அற்புதமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் புத்தர். இதன் மூலம் தன்னையொரு மகத்தான பகுத்தறிவாளராக வெளிப்படுத்தியுள்ளார்.