ஒவ்வொரு புத்தாண்டிலும் புதிய உறுதிமொழிகள் எடுத்துக்கொள்வது, அதைப்
பின்பற்றுகிறார்களோ இல்லையோ, பலரது பழக்கம். சிலவற்றை நம்மால் எளிதாகக் கடைபிடிக்க
முடியும், சிலவற்றைப் பின்பற்றுவது பல காரணங்களால் இயலாமல் போகும். ஆனால், நம்மால்
எளிதில் பின்பற்றக்கூடிய, செலவு குறைவான, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்,
தலைமுறைகளுக்கும் பயந்தரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த ஆண்டு பின்பற்ற
வேண்டிய பழக்கமாக நாம் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்ளலாமே!
ஒரு
புத்தகம் என்பது பாக்கெட்டில் எடுத்துச்செல்லப்படும் பூந்தோட்டம் போன்றது என்கிறது
சீனப் பழமொழி. உண்மைதான் எண்ணங்கள் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மரங்கள் தானே
நல்ல புத்தகங்கள். பண்டைய தீப்ஸ் நகரின் நூலகத்தின் வாயிலில் “புத்தகம் –
ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டிருக்கும். மக்களுக்குத் தேவையானதை விடுத்து,
அவ்ர்களை பொழுத்துப்போக்கு, நுகர்வின் அடிமைகளாக மாற்றும் நவீன கசடுகளால்
நோயுற்றிருக்கும் நமது ஆன்மாவுக்கு புத்தகங்கள் மட்டுமே மருந்தாக இருக்க முடியும்
என்பது உண்மைதான். புத்தகம் படிப்பது அந்தப் புத்தகத்தைப் படிப்பதோடு
முடிவடைந்துவிடுவதில்லை. அது நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது. புத்தகத்தின்
சிறப்பை உணர்ந்த சமூகங்களே நாகரிகத்தில் முன்னேறியவையாக, மற்றவர்களுக்கு
வழிகாட்டிகளாகத் திகழ்ந்துள்ளன. ”புத்தகத்தை இரவலுக்குக் கொடுப்பவன் முட்டாள்.
அப்படிப் இரவல் பெற்ற புத்தகத்தை திருப்பிக் கொடுப்பவன் அவனைவிட முட்டாள்” என்ற
அரேபிய பழமொழி, வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதாக
நினைத்துவிடாதீர்கள். புத்தகத்தின் முக்கியத்துவதைத் தான் அப்பழமொழி
உணர்த்துகிறது.
”நான்
தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன; நான் படிக்காத
புத்தகங்களை எனக்காக எடுத்துவந்து தருகிறவனே எனது சிறந்த நண்பன்” என்று சிறந்த
நண்பனாக இருப்பதற்கே நீங்கள் நல்ல புத்தகங்களை கொண்டுவந்து தரவேண்டும் என்று
நிபந்தனை விதிக்கிறார் கறுப்பர்களின் அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்.
புத்தகங்களின் முக்கியத்துவத்தை பக்கம் பக்கமாக பலர் விளக்க, “புத்தகங்கள் இல்லாத
வீடு ஜன்னல் இல்லாத அறையைப் போன்றது” என்று ஒரே வரியில் ‘நச்’சென்று கூறுகிறார்
ஹென்ரிச் மான். நல்ல
புத்தககங்களைப் படிக்காத ஒருவன், அந்தப் புத்தகங்களைப் படிக்கத் தெரியாதவனைவிட
எந்த விதத்திலும் மேம்பட்டவன் அல்ல என்கிறார் மார்க் ட்வைன்
புத்தகங்கள் என்பவை அறிவுக் கருவூலங்கள் என்பது சரி. எல்லாப் புத்தகங்களுமே
அப்படிப்பட்டவைதானா? ஒரு புத்தகத்தின் மதிப்பு, நீங்கள் அதிலிருந்து எதை எடுத்துக்கொள்கிறீர்கள்
என்பதைக் கொண்டு அளக்கப்பட வேண்டும் எனது ஜெம்ஸ் பிரைஸ் என்பாரின் கருத்து. படிப்பதைப்
பற்றிச் சிந்திக்காதது, செரிக்காமல் சாப்பிடுவதைப் போன்றது என்று அறிஞர் எட்மண்ட்
பர்க் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஒரு நல்லப் புத்தகம் என்பது வெறும்
பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல, அல்லது வேறொருவரின் கருத்துகளை நமது மண்டையில்
திணித்துக்கொள்வதும் அல்ல. அது ஒரு உரையாடல் போன்றது. நாம் ஒரு புத்தகத்தைப்
படிக்கும்போது நமது கருத்துகளையும், அனுபவங்களையும் நாம் புத்தகத்தின்
கருத்துகளுடன் ஒப்பிட்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள்
எப்படிப்பட்டவை, அவற்றை எப்படி படிக்க வேண்டும் என்பதை ஃபிரான்ஸிஸ் பேக்கன் இப்படி
கூறுகிறார்: சில புத்தகங்களை ருசிக்கலாம், சிலவற்றை விழுங்கிவிடலாம், வெகு
சிலவற்றை நன்றாக மென்று, தின்று செரிக்க வேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம். புத்தாண்டு தொடங்கினாலே சென்னைவாசிகளான நமக்கு
இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கள்
திருநாள். அடுத்தது ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் கண்காட்சி. இந்த ஆண்டு புத்தக
கண்காட்சி வழக்கத்தைவிட தாமதமாகத் தொடங்குகிறது. ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும்
கண்காட்சி ஜனவரி 23 அன்று முடிவடைகிறது. கண்காட்சி நடைபெறும் இடமும் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ்
பள்ளியில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காரணமாக
இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தகப்
பிரியர்களின் ஆர்வத்தை இந்த இடமாற்றம் பாதிக்காது என்பது நிச்சயம்.
இன்று புத்தகங்கள் என்பவை காகிதத்தில் அச்சிடப்பட்டவை மட்டுமல்ல.
தற்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களுடன் குறுந்தகடு, இ-புத்தகம் என புத்தகங்கள்
பல வடிவங்களில் கிடைக்கின்றன. இ-புத்தகங்களின் வரவு புத்தக பராமரிப்பு செலவையும்,
அதற்கான உழைப்பு மற்றும் இடத்தையும் மிகவும் குறைத்துவிட்டது. இன்று லட்சக்கணக்கான
புத்தகங்களை நம் கணினியிலேயே சேமித்து வைக்கமுடியும்.
புத்தகம் படிப்பதை தனிநபரின் பழக்கமாகக் கருதாமல் குடும்பத்தின் பழக்கமாக
மாற்றுவோம். புத்தகம் படிப்பது நமக்கு அறிவையும், ஆனந்தத்தையும் தருவதுடன்,
தன்னபிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உறுதியையும் தருகிறது. கல்வியின்
சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல நாம். ஆகவே, புத்தகத்
திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்போம், படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் விதைப்போம்!