Tuesday, June 21, 2011

கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் !

இந்திய வரலாறில் டிசம்பர், 6 தேதியில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. 1. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது 2. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த அம்பேத்கர் இயற்கை எய்தியது. இரண்டு நிகழ்வுகளுமே நம் நாட்டுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தின. அதிலும் அம்பேத்கரின் மரணம், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீட்புப் போரில் பெரும் பேரிழப்பாகும்.

19ஆம் நூற்றாண்டு. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம். சிப்பாய் புரட்சியில் உருவான சுதந்தர தீ அந்த நூற்றாண்டின் இறுதியில் தேசமெங்கும் பரவியிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்திருந்தன. அந்த கொந்தளிப்பான காலத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ல் ராம்ஜி சக்பால் - பீமாபாய் தம்பதியினருக்கு 14வது குழந்தையாக பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்தார். ராம்ஜி சக்பால் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவரது வருமானம் போதுமானதாக இல்லையென்றாலும் தனது மகன்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்றான மகர் சாதியில் பிறந்ததால் சிறுவயது முதலே சாதி இந்துக்களின் தீண்டாமை கொடுமையை அம்பேத்கர் அனுபவிக்க நேர்ந்தது.


தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்று ஆசிரியர்களும், மேல்சாதி மாணவர்களும் அம்பேத்கரை அவமதித்தனர். பல்வேறு அவமானங்களை சந்திக்க நேர்ந்தாலும், ஊக்கத்துடன் படித்த அம்பேத்கர் 1907ஆம் ஆண்டில் மெட்ரிக் தேர்வில் வெற்றிபெற்றார். அன்றைய பம்பாய் மாகாணத்தில் மெட்ரிக் தேறிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் மாணவர் என்ற பெருமையை அம்பேத்கர் பெற்றார். அதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிருஷ்ணாஜி அர்ஜூன் கேலுஸ்கர் என்னும் ஆசிரியர் ‘புத்தரின் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். அந்தப் புத்தகம் தான் அம்பேதகரின் பிற்கால சிந்தனை புரட்சிக்கு வித்திட்டது.


1908ல் ரமாபாய் அவர்களுடன் அம்பேத்கருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. பரோடா மன்னர் சாயாஜி ராவ் அம்பேத்கரின் மேல்படிப்புக்கு உதவ ஒப்புக்கொண்டதால், பம்பாயில் உள்ள எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பின்னர் பரோடா மன்னரிடம் ஒப்புக்கொண்டபடி அவரது அரசில் பணிக்கு சேர்ந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போனாரே தவிர அவரது அறிவு தாகம் குறையவில்லை. அடுத்த ஆண்டே மீண்டும் உதவித்தொகை பெற்றுக்கொண்டு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். 1915ல் பொருளாதாரத்தை முதன்மையான பாடமாகக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார். அங்கிருந்து 1916ல் லண்டன் சென்ற அவர் சட்டப்படிப்பையும், பொருளாதாரத்தில் டாக்டர் பட்ட ஆய்வையும் தொடர்ந்தார். பரோடா மன்னரின் அழைப்பால் டாகடர் பட்ட ஆய்வை தொடரமுடியாமல் 1917ல் இந்தியா திரும்பினார்.


ஆழ்ந்த புத்தக வாசிப்பு, வெளிநாட்டு அனுபவங்கள், கல்வி ஆகியவை அவரது சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் ராணுவ செயலாளராக சிறிது காலம் பணியாற்றினார். அக்கவுண்டண்ட் மற்றும் முதலீட்டு ஆலோசகராகவும் கொஞ்ச நாள் பணியாற்றினார். 1918ல் பம்பாயில் உள்ள சைதன்ஹாம் கல்லூரியில் பொருளியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். எதையும் அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. காரணம் சாதி பாகுபாடு. உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களை விட கல்வியிலும், தகுதியிலும், அறிவிலும் பல மடங்கு உயர்ந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதை, அவமானப்படுவதை கண்டு அம்பேதகர் மனம் வருந்தினார். எனவே இந்தியாவில் உள்ள, தன்னைப் போன்ற கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதே தன் வாழ்க்கையின் லட்சியமாக உறுதியெடுத்துக் கொண்டார்.

இந்திய அரசியலமைப்பை ஆய்வு செய்வதற்கு 1919 செளத்பரோ கமிட்டியை ஆங்கில அரசு நியமித்தது. அதில் கருத்து சொல்ல அம்பேத்கரும் அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி முறை தேவை என்று அப்போதே குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ‘மூக் நாயக்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பாதியில் விட்டிருந்த பொருளாதார ஆய்வை முடித்து 1922ல் டாக்டர் பட்டம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவு போராட்டம், பொது குளத்தில் நீர் எடுத்தல் போன்ற போராட்டங்களை தலைமைத் தாங்கி நடத்தினார். உட்சாதிகளாக பிளவுபட்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.


1930-31ல் லண்டனில் நடந்த இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் கல்ந்துகொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேலும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார். அங்கு அம்பேதகர் முன்வைத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமைக்கு ஈடாக காந்திஜியுடன் செய்துகொண்ட பூனா ஒப்பந்தப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதிகளைப் பெற்றுத் தந்தார். 1935ல் தன்னைத் தேடி வந்த பம்பாய் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். தொடர்ந்து சுதந்திர தொழிலாளர் கட்சி, அனைத்திந்திய கூட்டமைப்பு என அரசியல் அமைப்புகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்துப் போராட்டங்களைத் தொடர்ந்தார்.

இந்திய சமூகத்தையும் வரலாற்றையும் ஆழ்ந்து ஆய்வு செய்த அம்பேதகர், தனிச் சிறப்புமிக்க நூல்களை எழுதினார். இந்திய சிந்தனை மரபுகள், மேற்கத்திய சிந்தனை என அனைத்தையும் ஆராய்ச்சி செய்தார். முதிர்ந்த சிந்தனையில் உதித்த அவரது எழுத்துகள் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் தோற்றுவித்தது.


இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர், நம் நாட்டை வழிநடத்த புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி உலகின் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளித்தார். அச்சட்டம் நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடி இனத்தினர் ஆகியோருக்கு அரசு வேலையிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு பெற வழி செய்தார். இந்தப் பொறுப்போடு சுதந்தர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் அம்பேதகர் நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டார். 1951ல் அந்தப் பதவியிலிருந்து விலகினாலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அம்பேத்கர், சாதி ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் இந்து மதத்தில் இருக்கும் வரை அதிலுள்ள தம் மக்களுக்கு கெளரவமான, சம உரிமை கொண்ட வாழ்வு சாத்தியமில்லை என்று கண்டறிந்தார். எனவே தீவிர சிந்தனை, பரிசீலனைக்குப் பின்னர் 1956ல் மனிதத்தை போற்றும் நல்வழியாம் புத்த மதத்துக்கு மதம் மாறினார். அவருடன் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.


சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உடல்நலம், ஓய்வற்ற உழைப்பு, கசப்பான அரசியல் அனுபவங்கள் காரணமாக சீர்கெட்டது. நோய்வாய்பட்டிருந்த அம்பேத்கர் டிசம்பர் 6, 1956ல் இயற்கை எய்தினார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னா 1990ல் அம்பேத்கருக்கு அவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது. அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கே அளப்பறிய பங்காற்றி இருக்கிறது. அவரது காலத்தில் இருந்ததைவிட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அம்பேத்கரின் சிந்தனை இப்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது..


சட்ட மேதை, அரசியல் தலைவர், தத்துவாசிரியர், சிந்தனையாளர், மானுடவியலார், வரலாற்றாசிரியர், பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், பொருளியல் நிபுணர், பத்திரிகையாசிரியர், புரட்சியாளர், அரசியல்வாதி, புத்தர் சிந்தனைகளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என பல பரிமாணங்களுடன் இந்தியாவின் தன்னிகரற்ற மனிதராக வாழ்ந்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள், உரிமைகளைப் பெற காட்டியுள்ள வழி : கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் !

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு

அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அந்தக் காலங்களில் ஒரு நாட்டை ஆள்வதற்கு நிலையான சட்டங்கள் இருந்திருக்கவில்லை. அரசர்களின் விருப்பப்படியும், மத சம்பிரதாயங்களின் படியும், தலைமுறைகளாக பின்பற்றி வந்த நடைமுறைகளின் படியும் நாடுகள் ஆளப்பட்டு வந்தன. கடந்த முன்னூறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொடர்ச்சியான அரசியல், சமூகப் போராட்டங்களாலும், விழிப்புணர்வாலும் அரசர்களின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு, சட்டத்தின் அடிப்படையில் மக்களால் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி செய்வது உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

அரசு என்று சொன்னால் அது மக்கள் தொகை, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆள்வோர், ஆளப்படுவோர் என இரு முக்கிய பகுதிகளை கொண்டுள்ள அரசில், அந்த இரண்டு பக்திகளையும் இணக்கமாக இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுதான் அரசியலமைப்பு (constitution) எனப்படுகிறது.


அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்களையும், பணிகளையும், அதிகாரங்களையும் நன்கு வரையறுப்பதுடன், மக்களின் உரிமையையும் பாதுகாக்கிறது. சட்டம் எவ்வாறு இயற்றப்பட வேண்டும், சட்டத்தின் ஆட்சி எப்படி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு வரையறுக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம்

இந்தியாவுடன் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்து, இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியார் கி.பி.1600ல் வழங்கிய உரிமை ஆணைகள் தான் இந்தியாவின் நவீன சட்டத்தின் ஆரம்பம் எனலாம். வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் நிலப்பகுதிகளை படிப்படியாக வென்று ஆளவும் ஆரம்பித்தது. அப்போது கம்பெனியின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் முறைப்படுத்த 1773ல் ஒழுங்குமுறைச் சட்டம், 1784ல் பிட் இந்தியச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அவ்வப்போது தேவை ஏற்படும் போது கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை முறைப்படுத்த 1853 வரை பல பட்டயச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1857ல் சிப்பாய் புரட்சி என்னும் மக்கள் எழுச்சிக்கு பின்னர், இந்தியாவை ஆளும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசு எடுத்துக்கொண்டது. அதைப் பின்பற்றி 1858ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அரசு நிர்வாகத்தில் மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் பங்குபெற வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் சுதந்தர போராட்டத்தை பலவீனப்படுத்தவும் சிறு சலுகைகள் அளிக்கும் பல சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டன. எனினும் 1935ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓரளவு முழுமையான அரசியல் சட்டம் எனலாம். அதன் பின்னர் இந்தியா சுதந்தரம் பெறும் நேரத்தில் நமக்கென்று சொந்தமான அரசியல் சட்டம் வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டனின் கேபினட் தூது குழுவின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட 389 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946ல் தொடங்கப்பட்டது. இச்சபைக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினெட்டு நாள்கள் உழைத்து , பல நாட்டு அரசியல் அமைப்புகளையும், அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து விவாதித்து சுதந்தர இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது.


இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பை நுண்மையாக ஆராய்ந்து இறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக் குழு (draft committee) ஆகஸ்ட் 29, 1947 ல் அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக் குழு அளித்த அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதில் கையெழுத்திட்டார். அதில் அப்போது 22 பகுதிகளும் (parts), 315 உறுப்புகளும் (articles), 12 அட்டவணைகளும் (schedules) இருந்தன. அவ்வப்போது ஏற்பட்ட கால மாற்றம், தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு தற்போது 22 பகுதிகள், 395 உறுப்புகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசிலமைப்புச் சட்டம் விளங்குகிறது.

ஜனவரி 26, 1930ல் இந்திய மக்கள் சுதந்தர சபதம் எடுத்துக்கொண்டதை நினைவுகூரும் பொருட்டு, 1950ஆம் அண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா தனக்கென உருவாக்கிக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜெந்திர பிரசாத் பதவியேற்றார்.

இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்

மக்களின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் முகப்பில் இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது:

இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை மனம் விரும்பி ஒரு முழு இறைமை பெற்ற, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்று உறுதி கொண்டு அதன் குடிமக்கள் யாவருக்கும்

“சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியையும்;

“எண்ணம், பேச்சு, கருத்து, நம்பிக்கை, வழிபாடு தொடர்பான உரிமைகளையும், வாய்ப்புகள், அந்தஸ்து ஆகியவற்றில் சமத்துவத்தையும்;

நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளையாமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்கவும்;

“1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள், இவ்வரசியல் அமைப்பை உருவாக்கி, நிறைவேற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.”இவ்வாறு உலக நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. அடிப்படை உரிமைகள், நீதித்துறை ஆகியவை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்தும், பாராளுமன்ற ஆட்சி முறை பிரிட்டனிலிருந்தும், அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் அயர்லாந்திலிருந்தும், குடியரசு தலைவரின் அவசர நிலைக் கால அதிகாரங்கள் ஜெர்மனியிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமான சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.


ஒரு முழு இறைமை பெற்ற மக்களாட்சிக் குடியரசாகவும், சமய சார்பற்ற சமதர்ம குடியரசாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை குடிமக்களுக்கு அளித்து, அவர்களுக்கான கடமைகளையும் வரையறுத்து, ஒரு கூட்டாட்சி அரசாங்கமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பாராளுமன்ற ஆட்சி முறையும், சுதந்தரமான நீதித்துறையையும் கொண்டு இந்திய அரசமைப்பு இயங்குகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் முழு வாக்குரிமை அளித்து ஒரு முழுமையான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணம் இந்திய அரசியலமைப்பு தான்.

சென்ற நூற்றாண்டில் சுதந்தர நாடுகளான பல நாடுகளிலும் அரசியலமைப்புகள் சீர்குலைந்தும், சர்வாதிகாரமும் குழப்பமும் ஆட்சி செய்து கொண்டிருக்கையில், இந்திய நாடு மட்டும் தனித்துவமான பாதையில், மேலும் மேலும் செழுமைப் பெற்ற ஒரு மக்களாட்சி நாடாக விளங்குவதுடன், உலகின் முன்னணி நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய அமைதியுடன் கூடிய முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நமது அரசிலமைப்பு தான் என்றால் அது மிகையில்லை. இதை உணர்ந்து கொள்ளும் போதுதான் குடியரசு தினத்தை நாம் சிறப்புடன் கொண்டாடுவதன் முக்கியத்துவம் விளங்கும்.இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்:

1. சமத்துவ உரிமை
2. சுதந்தர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய சுதந்தர உரிமை
5. பண்பாடு, கல்வி உரிமை
6. அரசியலமைப்புக்கு உள்பட்டு பரிகாரங்களைப் பெறும் உரிமை


இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு விதித்துள்ள அடிப்படை கடமைகள்:

1. அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல்
2. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்த கொள்கைகளை போற்றுதல், பின்பற்றுதல்
3. இந்தியாவின் இறையான்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த்தல், பாதுகாத்தல்
4. நாட்டை பாதுகாக்கவும், தேசப் பணியாற்றவும் அழைக்கும்போது வந்து அவ்வாறு பணியாற்றுதல்
5. சமயம், மொழி, வட்டாரம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமையுடன் சகோதர நேயத்தையும், இணக்கத்தையும் பேணுதல்; பெண்களின் கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை விட்டுவிடுதல்
6. நமது கூட்டுக் கலாசாரத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தை மதித்தல், பாதுகாத்தல்
7. காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுழ்நிலைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், வாழும் உயிர்களிடம் இரக்கம் காட்டல்
8. அறிவியல் சிந்தனை, மனித நேயத்தை வளர்த்தல்
9. பொதுசொத்தை பாதுகாத்தல், வன்முறையை ஒழித்தல்
10. தேசத்தை முன்னேற்ற தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சித்தல், தொண்டாற்றுதல்
11. நிலவரத்துக்கேற்ப குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், அந்தக் குழந்தை ஆறு வயது முதல் பதினான்கு வயதுவரை கல்வி கற்க வசதி ஏற்படுத்தித் தருதல்

அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு

உலக வரலாறின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவர் காலத்தில் உலகிலேயே அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர். எந்தப் போரிலும் தோற்காதவர். தான் சென்றவிடங்களில் எல்லாம் கிரேக்க நாகரிகத்தை பரப்பியவர். இவ்வளவு பெருமைகளையும் தனது 33 வயதுக்குள்ளாகப் பெற்றவர். அவர் தான் மாவீரன் அலெக்சாண்டர்.

தனது தந்தை பிலிப்பின் மரணத்துக்குப்பின் கி.மு. 335-ல் இருபதாவது வயதில் மாசிடோனியாவின் மன்னரானார் அலெக்சாண்டர். அப்போதே அரசியல் மற்றும் ராணுவ நுட்பங்களை கற்றுத்தேறியிருந்தார். பிலிப் மன்னர் வலிமையான கட்டுப்பாடுமிக்க படையை ஏற்படுத்தியிருந்தார். ஏற்கனவே கிரேக்கம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருந்தது மாசிடோனிய அரசு. உலகம் முழுவதையும் வென்று தனது அதிகாரத்தை நிறுவ வேண்டும், கிரேக்க நாகரிகத்தின் பெருமையை பரப்ப வேண்டும் என்ற பேராவல் அலெசாண்டருக்கு ஏற்பட்டது.


அப்போது வல்லமை மிகுந்த பேரரசாக பாரசீகம் விளங்கியது. மத்திய தரைக்கடல் முதல் இந்தியா வரை பரவியிருந்த பாரசீக பேரரசை வென்று அதிகாரத்தை நிலைநாட்ட ஆவல்கொண்ட அலெக்சாண்டர் கி.மு.334-ல் பாரசீகத்தின் மீது படையெடுத்தார். நன்கு பயிற்சிபெற்ற, கட்டுப்பாடு மிகுந்த மாசிடோனிய படைகள் அலெக்சாண்டரின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தொடர்ந்து வெற்றியை ருசிக்க ஆரம்பித்தது. ஆசியா மைனர், சிரியா, லெபனான், பாலஸ்தீனம், எகிப்து, ஈரான் என பாரசிகத்தின் ஆளுக்கைக்கு உட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக வென்ற அலெக்சாண்டர், கி.மு.328-க்குள் பாரசீகப் பேரரசை முழுவதுமாக வென்று ஆட்சியை நிலைநாட்டினார். லட்சக்கணக்கான வீரர்கள் அடங்கிய பாரசீகப்படைகளை வெறும் 35,000 வீரர்களை கொண்டு வீழ்த்தினார்.

தொடர்ந்து கிழக்கு நோக்கிச் சென்று இந்தியாவை வெல்ல முடிவு செய்தார் அலெக்சாண்டர். அன்றைய இந்தியாவில் சிந்து நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்தவை அனைத்தும் சிற்றரசுகள். நந்தர்கள் ஆண்டுவந்த மகதம் மட்டுமே அப்போது பெரிய அரசாக இருந்தது. இந்திய அரசர்கள் தமக்குள் பகைமை கொண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர். அப்போதுதான் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான், பாக்டீரியா போன்ற அரசுகளை வென்று கி.மு.327-ல் இந்துக்குஷ் மலைத்தொடரை கடந்து இந்தியா நோக்கி அணிவகுத்தது அலெக்சாண்டரின் படை.


சிந்துவின் மேற்கு கரையிலிருந்த சிற்றரசர்களையும், தட்சசீலம் அரசையும் தனது ஆதிக்கத்துக்கு பணியுமாறு உத்தரவிட்டு அவர்களுக்கு தூதுவர்களை அனுப்பினார் அலெக்சாண்டர். தட்சசீல மன்னன் அம்பியும் சிசிகோட்டஸ் என்ற மன்னரும் அலெக்சாண்டருக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தனர். இதர சிற்றரசர்கள் அவரை எதிர்க்க தயாராயினர். முப்பதாயிரம் வீரர்கள் அடங்கிய படைகளுடன் பெஷாவரை நோக்கிச் சென்ற அலெக்சாண்டர் வழியில் அஸ்டெக்னோய், அஸ்பசியோய் போன்ற மலைவாழ் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. வீரத்துடன் போரிட்டும் அவர்கள் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்றனர். அதன் பின்னர் அசகினோய் என்ற சிற்றரசு அலெக்சாண்டரை எதிர்த்து நின்றது. கிளியோபெஸ் என்ற பெண்ணின் தலைமையில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் கடுமையாக போரிட்டனர். கடுமையான் சண்டைக்குப் பிறகே அலெக்சாண்டரால் அவர்களை வெல்ல முடிந்தது.

இதுவரை தான் வென்ற பகுதிகளை சத்ரப்புகளாக பிரித்து அவற்றின் நிர்வாகத்துக்கு ஏற்பாடு செய்த பின்னர் சிந்து நதியை கடந்து தட்சசீலத்தை அடைந்தார். ஏற்கனவே மன்னர் அம்பி பணிந்துவிட்டதால், அவரின் எதிரி மன்னரான போரஸின் மீது அலெக்சாண்டரின் கவனம் குவிந்தது. பணிந்து போகுமாறு போரஸுக்கு தூது அனுப்பினார் அலெக்சாண்டர். அஞ்சா நெஞ்சம் கொண்ட அரசரான போரஸ், எல்லையில் ஆயுதங்களுடன் சந்திக்கலாம் என்று பதிலனுப்பினார்.


கி.மு.326ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜீலம் நதிக்கரையில் ஹைடாஸ்பஸ் என்னுமிடத்தில் நதியின் மேற்கு கரையோரமாக முகாமிட்டது அலெசாண்டரின் படை. எதிர்கரையில் அலெக்சாண்டரின் படைகளை எதிர்கொள்ள போரஸ் தலைமையில் பெரும்படை காத்துக்கொண்டிருந்தது. நதியில் வெள்ளப்பெருக்கு இருந்ததால், சரியாகும்வரை காத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அலெக்சாண்டர் ஏற்படுத்தினார். பின்புறத்தில் வேவு பணிகளை முடுக்கிவிட்ட அலெக்சாண்டர், நதியை கடக்க ஆழம்குறைந்த பகுதி எங்கு உள்ளது என்பதை ஆராய்ந்தார். தான் முகாமிட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 17 மைல் தொலைவில் நதிக்கு நடுவில் தீவுடன் கூடிய ஆழம் குறைந்த பகுதியை அலெசாண்டரின் ஒற்றர்கள் கண்டுபிடித்தனர். நதியை கடக்க முயற்சிப்பதும், முடியாமல் பின்வாங்குவதுமான பொய்யான தோற்றத்தை ஐந்து வாரகாலமாக அலெக்சாண்டரின் படைகள் ஏற்படுத்தின. இந்திய படைகளுக்கு சலிப்பு ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.


ஒரு நாள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. தனது படையில் நான்கில் ஒரு பங்கை மட்டும் முகாமில் விட்டுவிட்டு மற்ற படைகளுடன் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த ஆழம் குறைந்த பகுதியில் இரவோடு இரவாக நதியைக் கடந்தது அலெக்சாண்டரின் படை. போரஸின் படைகள் மீது திடீர் தாக்குதல் தொடுப்பது அலெக்சாண்டரின் திட்டம். எனினும் போரஸுக்கு அலெக்சாண்டரின் படைநடமாட்டத்தின் மீது சந்தேகம் வந்துவிட்டது. எனவே தனது மகன் தலைமையில் 2000 குதிரை வீரர்கள், 120 தேர்படையினர் ஆகியோருடன் அலெக்சாண்டரின் படைகளை கண்காணிக்க அனுப்பினார். இந்த சிறிய படையை எதிர்கொண்ட அலெக்சாண்டரின் படைகள் அவர்களை முற்றிலும் தாக்கி அழித்தனர். இதில் போரஸின் மகன் வீர மரணமடைந்தார். தப்பியோடிய வீரர்கள் மூலம் நிலைமையை அறிந்த போரஸ் அலெசாண்டரை எதிர்கொள்ள தயாரானார்.

அலெக்சாண்டரின் படையில் 10,000 காலாட்படையினர், 5,000 குதிரைப்படையினர், விற்படையினர், எறி எந்திரப்படையினர் இருந்தனர். ஆனால் போரஸ் மன்னரின் படையில் 30,000 காலாட்படையினர், 3,600 குதிரைப்படையினர், 200 யானைப் படையினர், 180 தேர்ப்படையினர் இருந்தனர். இந்திய படைகள் தற்காப்பு போருக்கு தயாராக இருப்பதை உணர்ந்த அலெக்சாண்டர் திட்டமிட்ட அதிரடி தாக்குதல் உத்தியில் இறங்கினார்.

ஆரம்பத்தில் போரஸின் யானைப்படைகளை கண்டு பீதியடைந்த அலெசாண்டரின் காலாட்படையினர் பின்னர் சமாளித்துக்கொண்டு யானைப் பாகன்களை தாக்கிக் கொன்றனர். இதனால் மிரண்டு போன யானைகள் சொந்த படையினரையே மிதித்து துவம்சம் செய்தன. மிகச் சிறிய இடத்தில் அவ்வளவு பெரிய படைகளைக் கொண்டு போரிடுவது கடினமாக இருந்தது. மேலும் இரவு பெய்திருந்த மழையால் போர்க்களமும் சகதியாக மாறியிருந்தது. இதனால் தேர்ப்படைகள் முற்றிலும் செயலிழந்தன. இதையெல்லாம் முன்பே ஊகித்திருந்த அலெக்சாண்டரின் படைகள் போரஸின் படைகளை நிலைகுலையச் செய்தன. அலெக்சாண்டர் எதிர்கரையில் விட்டுவிட்டு வந்திருந்த கிரேட்டஸ் தலைமையிலான படைகள் பின்புறமாக வந்து தாக்கின. முடிவில் தோல்வியுற்ற போரஸ் மன்னர் கைது செய்யப்பட்டார்.


இந்தப் போரில் போரஸின் காலாட்படையினர் 20,000 பேரும், குதிரைப்படையினர் 3000 பேரும் மடிந்தனர். தேர், யானைப் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. எனினும் போரஸின் தளராத உறுதியையும் வீரத்தையும் மெச்சிய அலெக்சாண்டர் போரஸை மீண்டும் மன்னராக்கியதுடன் தான் வென்ற சில பகுதிகளை ஆளும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்தார்.

தொடர்ந்து கிழக்கு நோக்கிச் சென்று இந்தியா முழுவதையும் வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினாலும் அவரது படையினர் ஒத்துழைக்கவில்லை. நீண்ட பயணத்தாலும், தொடர்ச்சியான போர்களாலும் ஏற்கனவே களைப்படைந்திருந்த அவர்கள் கிழக்கில் நந்தர்கள் ஆட்சி செய்துவந்த மகதப் பேரரசின் படைவலிமையைக் கேள்வியுற்று மேலும் கலக்கமடைந்தனர். எனவே வேறு வழியின்றி அலெக்சாண்டர் நாடு திரும்ப முடிவு செய்தார். நாடு திரும்பும் வழியில் கி.மு.323-ல் பாரசீகத்தில் காலமானார்.

அலெக்சாண்டரின் படையெடுப்பு குறுகிய காலத்தில் முடிந்துவிட்டாலும், இந்திய வரலாற்றில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல சிற்றரசுகளை வென்று ஒன்றாக இணைத்ததால் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. பிற்காலத்தில் சந்திரகுபத மெளரியர் ஒரு பேரரசை நிறுவ இது தூண்டுகோலாக இருந்தது. மேற்கு நாடுகளுடனான வாணிபம் செழிப்புற்றது. இந்திய கலையுடன் இணைந்த கிரேக்கக்கலை காந்தாரக்கலையை உருவாக்கியது. சீரற்று இருந்த இந்திய நாணயங்கள் சீர்படுத்தப்பட்டன. தேர்ப்படை வழக்கொழிந்து குதிரைப்படையும் யானைப்படையும் ராணுவத்தில் முக்கியத்துவம் பெற்றன. கிரேக்கத்தின் அறிவியலும் இந்தியாவின் தத்துவஞானமும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொன்மையான இரு நாகரிகங்களும் சந்திக்கும் வாய்ப்பு இந்தப் படையெடுப்பால் ஏற்பட்டது.

மார்க்ஸ் என்னும் ’மனிதர்’
”மனித குலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தீர்மானித்துக் கொண்டால் எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப்போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது, கஞ்சத்தனமில்லாதது, அகங்காரமற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்.”

’எதிர்காலப் பணியை தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில், பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின் போது ஒரு மாணவன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை. இந்த வரிகளைப் படித்த ஆசிரியர்கள் நினைத்திருக்க மாட்டார்கள், இந்த இளைஞன் தான் சொன்னதைச் செய்து காட்டுவானென்று. அன்று முதல் இன்றுவரை புரட்சிகர மக்கள்நலச் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அந்த மாமனிதரின் பெயர் காரல் மார்க்ஸ் என்பதாகும்.பிரெஞ்சு புரட்சித் தீயின் வெம்மை ஐரோப்பாவில் சற்று அடங்கியிருந்த காலம் அது. 1818ஆம் ஆண்டு. அன்று பிரஷ்யா என்றழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் மோசெல் நதிக்கரையில் அமைந்திருந்த சிறு நகரம் டிரியர். 1818, மே 5ஆம் நாள் ஹென்ரிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்தார் காரல் மார்க்ஸ். பள்ளிப் பருவத்திலேயே உலக அறிவை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காட்டினார். ட்ரியரில் பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர் சட்டம் பயில்வதற்கு பான் நகரப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயல்பிலேயே துறுதுறுப்பும், கேள்விக் கேட்கும் குணமும் கொண்ட மார்க்ஸுக்கு பான் பல்கலைக்கழகச் சூழ்நிலை ஒத்துவரவில்லை. அதனால் அவரை 1836ல் பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு படிக்க அனுப்பினார் அவரது தந்தை.

பல தத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்களின் உறைவிடமாக இருந்த பெர்லின் பல்கலைக்கழகம் மார்க்ஸின் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்ததில் வியப்பில்லை. சிந்தனையாளர்களுக்கு தத்துவம் தானே கருவி. மார்க்ஸ் தத்துவத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பண்டைய கிரேக்கத் தத்துவம் முதல் அன்றைய நவீன தத்துவமான காண்ட் மற்றும் ஹெகேலின் தத்துவம் வரை ஆழ்ந்து பயின்றார். அந்த கால ஜெர்மனியின் புரட்சிகரச் சிந்தனையின் ஆதரவாளர்களாக இருந்த இளம் ஹெகேலியர்கள் குழுவில் மார்க்ஸும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அறிவு வேட்கையில் தீவிர தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றபோது மார்க்ஸின் வயது 23. இது நடந்தது 1841ல். ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாம என்று முடிவு செய்த மார்க்ஸுக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பது நன்மைக்கு தான் என்பதை காலம் உணர்த்தியது. இல்லையெனில் புரட்சியாளர் மார்க்ஸ் நமக்குக் கிடைத்திருக்கமாட்டார். 1842ல் கொலோன் நகரத்தில் ’ ரைனிஷ் ஷெய்டுங்’ என்னும் பத்திரிகையில் எழுதத்தொடங்கி அதன் ஆசிரியரும் ஆனார். ஆனால் அவரது தீவிர அரசியல் சமூக விழிப்புணர்வுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிரஷ்ய அரசாங்கத்தின் கெடுபிடியால் அடுத்த ஆண்டே அந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

இதற்கிடையே 1843, ஜூனில், தான் காதலித்துவந்த ஜென்னியை திருமணம் செய்தார் மார்க்ஸ். சில மாதங்களிலேயே ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. ஜெர்மனியில் இருந்தபோதே உழைப்பாளர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அரசும் சமூகமும் இழைத்துவரும் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்தார். தனது பத்திரிகையிலும் எழுதியிருந்தார். அதனால் அரசாங்கத்தின் கோபத்தையும் சம்பாதித்திருந்தார். இப்போது பாரீசில் ஜெர்மன் தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பார்த்த அவருக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமானது. மேலும் பிரெஞ்சு சோசலிஷ சிந்தனைக் கொண்டவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பும் அவரது சிந்தையை மேலும் கிளறின. இந்தக் காலக்கட்டத்தில் தான் எங்கெல்ஸ் அவர்களைச் சந்திக்கிறார். என்றும் பேசப்படப் போகும் நட்புக்கான விதை அன்று ஊன்றப்பட்டது.


1844ல் மார்க்ஸ் தம்பதியினருக்கு முதல் பெண்குழந்தைப் பிறந்தது. மார்க்ஸ் மிகப் பெரும் தத்துவஞானியாக உருவானப் போதிலும் நிரந்தர வேலையின்றி வறுமையில் வீழ்ந்ததால், சரியான மருத்துவம் செய்ய வசதியின்றி நான்கு குழந்தைகளை இழந்தனர் மார்க்ஸ் தம்பதியினர். ஏழில் மூன்று குழந்தைகளையே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.

தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதிலும் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல்கொடுப்பதிலும் தீவிரமாக இருந்ததால் பிரெஷ்ய அரசாங்கம் காரல் மார்க்ஸுக்கு நாட்டினுள் நுழைய தடைவிதித்தது. மேலும் அவரது தீவிர அரசியல் சமூக கருத்துகளால் கலவரமடைந்த பிரெஞ்சு அரசும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. பெல்ஜியத்துக்கு குடிபெயர்ந்தார் மார்க்ஸ். அவர் எங்கு சென்றாலும், அவரது தீவிர கருத்துகளையும் செயல்பாடுகளையும் கண்ட அரசாங்கங்கள் அவரை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருந்தன. இதற்கிடையில் எங்கெல்ஸ் உடனான நட்பு வளர்ந்து இருவரும் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலானார்கள். அப்போது இங்கிலாந்தில் வசித்துவந்தாலும், மார்க்ஸுடன் இணைந்து அரசியல் செய்லபாடுகளோடு தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார் எங்கெல்ஸ்.

முதலாளிகள் எவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி மேலும் மேலும் செல்வம் சேர்க்கிறார்கள், அதைத் தட்டிக்கேட்கும் மக்களை எப்படி அரசுகள் ஒடுக்குகின்றன என்பதையெல்லாம் தமது எழுத்துகளாலும் போராட்டங்களாலும் மக்களுக்கு உணர்த்தினர். அரசின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள வேறு காரணமும் வேண்டுமா?சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு 1846ல் கம்யூனிஸ்ட் கடிதக் குழுவை உருவாக்கினர். இது கம்யூனிஸ் கழகமாக மாறியது. இங்கிலாந்து நாட்டிலிருந்த முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 1847ல் இரண்டாவது கம்யூனிஸ்ட் கழக மாநாடு நடைபெற்றது. 1848ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ் இயக்கத்தின் செயல்திட்டத்தை விளக்கும் வகையில் ஒரு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டனர். அதுதான் இன்றும் போற்றப்படும் புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் அறிக்கை (Communist Manifesto) ஆகும். மனிதச் சமுதாயத்தின் பரிணாமம், வர்க்கங்களின் தோற்றம் மற்றும் வரலாறு, அரசு அதிகாரம், சுரண்டல், தொழிலாளர்களின் உரிமைகள் என அனைத்தையும் விவாதிக்கும் அந்த அறிக்கை, ” இழப்பதற்கு அவர்களின் தளைகளைத் தவிர ஏதுமில்லை பாட்டாளிகளுக்கு. பெறுவதற்கோ ஒரு உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!” என்ற அறைகூவலுடன் நிறைவுபெறுகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் உழைப்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பது இந்த அறைகூவல் தான்.

தொழிலாளர், சோசலிஷ இயக்கங்களுக்கு மார்க்ஸின் பங்களிப்பைக் கண்டு அஞ்சிய அரசாங்கங்கள் அவரைத் தொடர்ந்து நாடுகடத்தின. பெலிஜியத்திலிருந்து, பிரஷ்யா, பிரஷ்யாவிலிருந்து ஃபிரான்ஸ். ஃபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து என்று தொடர்ந்து மார்க்ஸின் குடும்பம், அரசுகளால் அலைக்கழிக்கப்பட்டது. இருப்பினும் தமது பத்திரிகை மற்றும் புரட்சிப் பணிகளை தீவிரமாகச் செய்தனர் இரட்டையர்களான மார்க்ஸும் எங்கெல்சும். இறுதியாக அந்தக் காலத்தில் ஓரளவுக்கு ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு 1849ல் குடிபெயர்ந்தார் மார்க்ஸ். லண்டன் அவரது நிரந்தர வசிப்பிடமாகியது.

இயக்க வேலைகள் காரணமாக முழுமையாக ஈடுபடமுடியாமல் இருந்த தத்துவ ஆராய்ச்சியை லண்டனில் தொடர்ந்தார் மார்க்ஸ். நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் போன்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதினாலும் மார்க்ஸின் குடும்ப வறுமையைப் போக்க அந்த வருமானம் போதுமானதாக இல்லை. மார்க்ஸின் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே தனது தந்தை பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் குமாஸ்தா வேலைக்குச் சென்றார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இறந்த பின்னரும் கூட அவரது குடும்பத்துக்கு புரல்வலராக இருந்தார் எங்கெல்ஸ்.


உடல் உபாதைகள் அதிகம் இருந்தாலும் தமது ஆய்வுகளை மிகத் தீவிரமாகத் தொடர்ந்தார் மார்க்ஸ். லண்டன் மியூசியம் நூலகமே அவரது வசிப்பிடமாயிற்று. சமுதாயத்தின் இன்றைய நிலைக்கு என்ன காரணம், பெரும் செல்வந்தர்களாக ஒரு சிலர் இருக்க பெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் உழலக் காரணம் என்ன, முதலாளிகள் எப்படி உருவாகிறார்கள், முதலாளித்துவம் எப்படிச் செயல்படுகிறது, முதலாளித்துவ அமைப்பு மக்களைச் சுரண்டிக் கொழுப்பதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தார் மார்க்ஸ். முதல், வட்டி, கூலி லாபம் என்பதற்கெல்லாம் இதுகாறும் அறிஞர்கள் வழங்கிவந்த விளக்கங்கள் எல்லாம் மார்க்ஸின் அறிவு ஒளியில் காலாவதியாயின. இந்த உழைப்பின் விளைவாக, அவரது நூல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 1867ல் மூலதனம் என்னும் இணையற்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் வெளியிட்டார். மார்க்ஸ் எழுதிய இந்த நூலின் 2 மற்றும் 3வது பாகங்களை அவரது மறைவிற்குப்பின் எங்கெல்ஸ் தொகுத்து வெளியிட்டு அவரது பணியை நிறைவுசெய்தார்.கடும் உழைப்பும் நோயும் சேர்ந்து மார்க்ஸின் உடல்நலத்தைச் சூறையாடின. எனினும் மார்க்ஸ் தனது இயக்க பணிகளையோ ஆராய்ச்சிகளையோ சிறிதளவும் தளர்த்திக்கொள்ளவில்லை. வாழ்விலும் தாழ்விலும் அவருக்குத் தோள்கொடுத்து அவரைத் தாங்கிவந்த அவரது மனைவி ஜென்னி 1881ல் காலமானார். நோயைவிட ஜென்னியின் பிரிவு மார்க்ஸைப் பெரிதும் பாதித்தது. உலக மக்களின் நன்மைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் சொந்தச் சோகங்களிலேயே மூழ்கிவிட முடியாது அல்லவா? மார்க்ஸ் தமது பணியைத் தொடர்ந்தார். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கவேண்டுமென்றால், வர்க்கங்கள் ஒழிய வேண்டும். தனிச் சொத்துடமை ஒழியவேண்டும். இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடுகள் அகல வேண்டும். எல்லாரும் எல்லாமும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடிய மார்க்ஸ் 1883ல, மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஆம்! மீளாத் துயிலில் ஆழ்ந்தார்.


அரசர்கள், ஆண்டைகள், வீரர்கள் தான் வரலாறை உருவாக்குகிறார்கள் என்ற கருத்தை உடைத்து, ’வரலாறை உருவாக்குபவர்கள் மக்கள் தான்- ஆனால் அவர்கள் விரும்பிய படியல்ல’ என்பதை நிறுவினார் மார்க்ஸ். மனிதனின் உணர்வுநிலை அவனது வாழ்வுநிலையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக மனிதனின் வாழ்நிலையே மனிதனின் உணர்வு நிலையைத் தீர்மானிக்கிறது. உற்பத்திச் சார்ந்த பொருளாதார உறவுகளே சமூக உறவுகளை உருவாக்குகின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார் அவர். நவீன அரசியல், பொருளாதார, தத்துவ, சமூக, வரலாற்றுத் துறைகளில் மார்க்ஸின் சிந்தனைகளின் செல்வாக்கு அளப்பறியது. தவிர்க்க இயலாதது. கடந்த கால தத்துவஞானிகளைப் போல் கனவு காணாமல், தனது தத்துவத்தை நடைமுறையில் செயல்படித்திக் காட்டியவர் அவர்.உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் மக்கள் தம் உரிமைகளைப் பெற வழிகாட்டுவது மார்க்ஸின் சிந்தனைகள் தான். மார்க்ஸ் இறந்தபிறகு உலகெங்கும் அவரது சிந்தனைகளின் தாக்கம் வேகமாக பரவியது. 20ஆம் நூற்றாண்டு பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. காரணம் மார்க்ஸின் கருத்துகள். மார்க்ஸின் கருத்துகளின் தாக்கமானது, அவரது கருத்துகளை எதிர்க்கும் அரசுகள் கூட மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள காரணமானது. பி.பி.சி. நிறுவனம் நடத்திய ’கடந்த ஆயிரம் ஆண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?’ என்ற கருத்துக்கணிப்பில் காரல் மார்க்ஸைத் தேர்ந்தெடுத்தனர் மக்கள். ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், காண்ட் ஆகிய தலைசிறந்த சிந்தனையாளர்களுக்கும் மேலாக காரல் மார்க்ஸ் விளங்குகிறார் என்பதே அவரது புகழுக்குச் சான்றாகும்.

அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட ‘பீகிள்’ கப்பல் பயணம்

பயணம் செய்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உண்டு. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதன் நீண்டப் பயணங்களை மேற்கொண்டு வருகிறான். அவற்றுள் சில பயணங்கள் வரலாறில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்து, அவனது சிந்தனையையே மாற்றியமைத்தது ஒரு கடல் பயணம். 1831ஆம் ஆண்டு முதல் 1836 வரை அந்த புகழ்மிக்கப் பயணத்தை மேற்கொண்ட கப்பலின் பெயர் ‘பீகிள்(Beagle)’. அந்தப் பயணத்தின் நாயகர் சார்லஸ் டார்வின்.18,19ஆம் நூற்றாண்டுகளில், புதிய நாடுகளை கண்டுபிடிக்கவும் நாடுகளின் மீது படையெடுத்து காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிப் பயணம் இன்றியமையாததாக இருந்தது. அப்போது கடலில் போட்டி நாடுகளின் சவாலை எதிர்கொள்ளவும் வணிகத்தை பெருக்குவதற்கும் கடல் வழிகள், கடல் நீரோட்டங்கள், கடலோர நிலப்பகுதிகள் பற்றி நிறைய விவரங்களை ஆராய வேண்டியத் தேவை ஏற்பட்டது. இந்த நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல் பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை 1826ஆம் ஆண்டு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. அது தனது ஆய்வை முடித்துவிட்டு 1830ல் நாடு திரும்பியது.


இருப்பினும் மீண்டுமொரு விரிவான ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு ’எச்.எம்.எஸ்.பீகிள்’ செப்பனிடப்பட்டு மீண்டும் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பலின் கேப்டனாக ஃபிட்ஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமும் ஆய்வு கண்ணோட்டமும் நிரம்பிய ஃபிட்ஸ்ராய் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானி’, அதுவும் புவி அமைப்பியல் அறிவுடைய ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அந்த வேலைக்கு விண்ணப்பித்தார் சார்லஸ் டார்வின் என்ற 22 வயது இளைஞர். இவர் இயற்கை வரலாறில் கொண்டிருந்த ஆர்வத்தால் தனது மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர். பின்னர் மதகுருக்கான பட்டப் படிப்பையும் முடித்திருந்தார். ஆடம் செட்ஜ்விக் என்ற புவி அமைப்பியல் விஞ்ஞானியிடம் சிறிது காலம் உதவியாளராக பணியாற்றியதால் நிலம் மற்றும் நில அமைப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தார்.

டார்வினின் நண்பரும் பேராசிரியருமான ஹென்ஸ்லோ சிபாரிசு செய்ததால் டார்வினை பணியமர்த்திக் கொள்ள ஃபிட்ஸ்ராய் சம்மதித்தார். ஆனால் டார்வினின் தந்தை டார்வினுக்கு அனுமதி தரவில்லை. டார்வினின் அப்பாவிடம், அவரது மாமா எப்படியோ பேசி சம்மதிக்க வைத்துவிட்டார். பசிபிக், இந்திய, அட்லாண்டிக் ஆகிய மூன்று பெருங்கடல்களிலும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட காலம் 2 ஆண்டுகள். ஆனால் இது 5 ஆண்டுகளுக்கு நீளும் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.டிசம்பர் 27, 1831ல் ஃப்ளைமவுத் துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை பீகிள் தொடங்கியது. அட்லாண்டிக் கடலில் பயணித்து தென்னமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையோரமாக தெற்கு திசையை நோக்கிச் சென்றது. பிரேசில், அர்ஜெண்டினா சென்ற பின் தெனமெரிக்காவின் மேற்கு கரையோரமாக பயணத்தைத் தொடர்ந்தது பீகிள். ஃபிட்ஸ்ராய் கடல் ஆய்வுகளை மேற்கொள்ள, டார்வின் நிலப்பகுதிகளில் இறங்கி தனது ஆய்வுகளை மேற்கொண்டார். நான்காண்டுகளுக்குப் பின்னர் 1835-ல் தன்னந்தனித் தீவான கலப்பகாஸ் தீவை அடைகின்றனர். இந்த நீண்டப் பயணத்தில் டார்வின் பல்வேறு இயற்கை அதிசயங்களை கண்டார்.

அழிந்து போன விலங்குகளின் ஏராளமான புதைபடிவங்களை சேகரித்தார். வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட பல்வேறு பழங்குடி மக்களை கண்டார். நில அமைப்புகளை, எரிமலைப் பிரதேசங்களை, காடுகளை, நதிகளை, ஆராய்ந்தார். நீர், நிலம் ஆகியவற்றில் வாழும் பல்வேறு உயிரினங்களை ஒப்பிட்டு, வகைப்படுத்தி ஆராய்ந்தார். தான் கண்டறிந்ததை முழுமையாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார். இந்தக் குறிப்புகள் தான் இவரது கோட்பாடுகளுக்கு பினாள்களில் வலிமையான ஆதாரமாக இருந்தன.

பீகிளின் பயணம் மேற்கு நோக்கித் தொடர்ந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றைத் தொட்டுவிட்டு மொரிஷியஸ் தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் பிரேசிலுக்கு வந்துவிட்டு தாய்நாட்டை நோக்கி இறுதிப் பயணத்தை மேற்கொண்டது. அக்டோபர் 2, 1836ல் இங்கிலாந்தை அடைந்தது. இந்த 5 ஆண்டுகள் கடல் பயணத்தில் 3 ஆண்டுகள் 3 மாதங்களை நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக டார்வின் செலவழித்திருந்தார்.


நாடு திரும்பியதும் தனது குறிப்புகளையும் சேகரித்த ஆதாரங்களையும் ஆராய்ந்த டார்வின், காலங்காலமாக நம்பப்பட்டு வருவது போல் தாவரங்களும் விலங்குகளும் என்றென்றும் ஒரே மாதிரியாக இருப்பவை அல்ல. அவை தமது சூழ்நிலை(வாழ்நிலை) மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக்கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதை 1837ஆம் ஆண்டிலேயே கண்டறிந்தார். கடவுளின் படைப்பு கொள்கையை நிராகரிக்கும் இந்த கண்டுப்பிடிப்பை வெளியிட இன்னும் ஆதாரங்களை சேர்க்கவேண்டும் என்று டார்வின் முடிவு செய்தார்.

இருபது ஆண்டுகள் மேலும் ஆராய்ந்து தனது கோட்பாட்டு உறுதியான ஆதாரங்களை நிறுவினார். இதற்கிடையில் வாலஸ் என்ற விஞ்ஞானியின் ஆய்வுகளும் டார்வினுக்கு உதவியாக இருந்தது. அறிவு ஜீவிகள், சாதாரண பொதுமக்கள் என அனைவரின் சிந்தனையிலும் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய ’இயற்கைத் தேர்வு மூலமாக இனங்களின் தோற்றம்(Origin of Species through Natural Selection) என்னும் நூலை 1859ல் வெளியிட்டார். பலத்த விவாதங்கள் நடத்தப்பட்டன். எங்கு பார்த்தாலும் சமயவாதிகளின் எதிர்ப்புகள். சில ஆண்டுகள் கடந்தபின் 1871ல் மீண்டும் ஒரு புயல் கிளம்பியது. ’மனிதனுடைய பாரம்பரியமும் பாலினம் சார்ந்த தேர்வும்(The Descent of Man and Selection in relation to Sex) என்ற நூலை வெளியிட்டார்.


வாலில்லா குரங்கு போன்ற ஒரு சிறப்பினத்திலிருந்து தான் மனித இனம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்று உடலமைப்பியல், புவியியல், சூழல் ஆதாரங்களுடன் இந்நூலில் நிறுவியிருந்தார். அறிவுலகிலேயே இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நோய்வாய் பட்டிருந்த சார்லஸ் டார்வின் 1882ல் மறைந்துவிட்டார். ஆனாலும் அவருக்குப்பின் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புகள் அவரின் கோட்பாட்டை உண்மை என நிரூபித்தன. உலகில் தோன்றிய தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக சாலஸ் டார்வின் கொண்டாடப்படுகிறார். இதற்கு காரணம் ‘பீகிள்’ பயணம் தானே!

நாளந்தா பல்கலைக்கழகம்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டின் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது என்று தலைவர்கள் பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். அந்தக் காலத்தில் அவர்கள் செய்திருந்த சாதனைகளே அவர்களின் கல்வித்திறனை, அறிவைப் பறைச்சாற்றுவதாக உள்ளன. ஆனால், பல வரலாற்றுக் காரணங்களால் நாம் அந்தப் பெருமையை பிற்காலத்தில் இழந்துவிட்டோம்.

தற்போது உலகின் தலைச்சிறந்த இருநூறு கல்வி நிலையங்களின் பட்டியல் எடுத்தீர்கள் என்றால் அதில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெற்றிருக்காது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. இன்று பல்கலைக்கழகம் என்று நாம் வரையறுத்துள்ள முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம், ஆசிரியர்கள், வகுப்பறை, நூலகங்கள், ஆய்வு வசதிகள், பல்வேறு கல்வித் துறைகள் ஆகியவை கொண்ட கல்வி நிலையம் முதன் முதலில் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது. ஆம், நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.


நாளந்தா பல்கலைக்கழகம் இன்றைய பிகாரின் தலைநகரமான பாட்னா நகரத்திலிருந்து 55 மைல் தொலைவில் உள்ள நாளந்தா என்னுமிடத்தில் அமைந்திருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வந்தது. புத்தர் தமது கடைசி பயணத்தின் போதும் நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையை செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர் தான். இவ்வாறு நாளந்தா மிகப் பழங்காலத்திலிருந்தே ஒரு முக்கிய கல்வி நகரமாக இருந்து வந்துள்ளது.

கி.பி.427 ஆம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர் தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிப்பவர்’ என்று பொருளாம். பதிவு செய்யப்பட்ட உலக வரலாறில் முதல் பல்கலைக்கழகமான நாளந்தா, 14 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்திருந்தது. கட்டடங்கள் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. இது அன்றைய உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுடன் கல்வியளித்த உலகின் முதல் பல்கலைக்கழகமும் நாளந்தா பல்கலைக்கழகம் தான்.


இங்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டதாக சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இங்கு உயர்கல்வி மற்றுமே வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன.

விவாதங்கள் மூலம் கல்விப் போதனை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக மகாயான கருத்துகள் முக்கியமாகப் பயிற்றுவிக்கப்பட்டன. புத்தமதத் தத்துவங்களுடன் இதர இந்திய தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக்கலை, வானியல், வரலாறு, சட்டம், மொழியியல், யோக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.எட்டு தனித்தனி வளாகங்களில், ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இருந்தன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு படிப்பதற்கேற்ற சூழல் பாதுகாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்குள் பிரும்மாண்டமான நூலகமும் இருந்தது. ஒன்பது மாடி உயரம் கொண்ட மூன்று கட்டடங்களில் லட்சக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் புத்தமதத் தத்துவ நூல்களுடன் பிற துறைகள் பற்றிய நூல்களும் ஏராளமாக இருந்தன.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும் மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர். எழு நூறு ஆண்டுகால புத்த மடாலய வரலாறில் இந்த ஒழுக்கத்தை யாரும் மீறியதில்லை என்று தமது குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் மற்றொரு சீனப் பயணியான் யி ஜிங்.

முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து பேணி வந்தனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைக்கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான் சுவாங், யி ஜிங் ஆகியோர் நாளந்தாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.


தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி, பிரபமித்திரர், ஜீன மித்திரர் போன்ற புகழ்பெற்ற தத்துவஞானிகளும், மேதைகளும் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றினர். குப்தர்கள் காலத்தில் சுதந்திர சிந்தனைகளின் சங்கமமாக இருந்த பல்கலைக்கழகத்தில், பிற்காலத்தில் தத்துவ மோதல்கள் உருவாக ஆரம்பித்தன. புத்த மதத்தை எதிர்த்த பிராமணர்களின் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது. பிராமணர்களுடன் , சமணர்களும் இணைந்து புத்தத் துறவிகளை எதிர்த்தனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானிருந்து வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதி, நாளந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடி, அதை முற்றிலும் தீக்கரையாக்கினார். நூலகத்தில் இருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான புத்தமதத் துறவிகள் தலைத் துண்டிக்கப்பட்டனர், உயிரோடு கொளுத்தப்பட்டனர். நூற்றாண்டுகளாக அறிவூட்டி வந்த பல்கலைக்கழகம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது. எனினும் முற்றாக அழிந்துவிடவில்லை. பொலிவிழந்த அந்தக் கல்விக்கூடம் ஒரு சில ஆசிரியர்களுடனும் சில நூறு மாணவர்களுடன் தொடர்ந்தது.

கடைசியாக கி.பி.1400 ஆம் ஆண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவுடன் ஆதரிப்போர் யாருமின்றி பல்கலைக்கழகம் செயலிழந்தது. உலகப்புகழ் பெற்று விளங்கி வந்திருதாலும், மதிப்புமிக்க நூல்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டதால் நமக்குக் கிடைத்திருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இங்கு வந்துப் படித்த வெளிநாட்டு மாணவர்களாலும், வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது.


நாளந்தாவுக்கு முன்பே இந்தியாவில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய பல கல்விக்கூடங்கள் இருந்தன. பேரரசை உருவாக்கிய சாணக்கியர், சந்திரகுப்தர், மருத்துவ மேதை சரகர் போன்றோரை உருவாக்கிய தட்சசீலம், ஜென் புத்தமதத் தத்துவப் பிரிவை தோற்றுவித்தவரும் சீனாவில் ஷாவோலின் மடாலயத்தில் குங் ஃபூ தற்காப்புக்கலையை செழுமைப்படுத்திய அறிஞருமான போதிதருமரை (கி.பி. 520) உருவாக்கிய தமிழகத்தின் காஞ்சி போன்ற பல கல்வி மையங்கள் இருந்தன.

பல நூற்றாண்டுகளாக உலகின் தலைச்சிறந்தப் பல்கலைக்கழகங்களாக விளங்கி வரும் பொலக்மா (கி.பி.1088), பாரீஸ் பல்கலைக்கழகம் (கி.பி.1091), ஆக்ஸ்ஃபோர்ட் (கி.பி.1167) மற்றும் கேப்ரிட்ஜ் (கி.பி.1209) பல்கலைக்கழகங்கள், கெய்ரோவிலுள்ள அல்-அஸார் பல்கலைக்கழகம் (கி.பி.970) என அனைத்துமே நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு காலத்தால் பல நூற்றாண்டுகள் பிந்தியவை என்பதை கவனித்தால் நாளந்தாவின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


இதை உணர்ந்ததால் தான் இந்தியா, சீனா, ஜப்பான், ஆகிய நாடுகள் சிங்கப்பூர் நாட்டின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு உலகத்தரத்திலான பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவு செய்து ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இழந்தப் புகழை நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் பெறும் என்று நம்புவோம் !

ஃபோர்ட் மாடல்-T

தனிநபர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கேற்ற வாகனங்கள் தயாரிப்பு பிரான்ஸ் நாட்டில் 1890ல் தொடங்கிவிட்டது. அவை விலை அதிகமாகவும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆடம்பர வாகனமாகவும் விளங்கின. இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்கக்கல்வி மட்டுமே கற்ற அனுபவமிக்க மெக்கானிக் ஒருவர், பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, வசதியான, சொகுசான, பாதுகாப்பான, விலைக் குறைவான வாகனத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தான் ஹென்றி ஃபோர்ட். பலவிதமான வாகன வடிவமைப்புகளை இவருக்கு முன்பே பலரும் உருவாக்கியிருந்தாலும் அவை விலைமிக்கவையாகவும், உற்பத்தி செய்வதற்கு அதிக நேரம் பிடிப்பவையாகவும் இருந்தன. சொந்தமாக கார் கம்பெனியை உருவாக்கிய ஃபோர்ட் 1903ல் முதல் கார் தயாரிப்பைத் தொடங்கினார்.


உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஃபோர்ட் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய வடிவமைப்பு கொண்ட கார்களை அறிமுகப்படுத்தினார். 1903 முதலே 1908 வரை மாடல்-A முதல் மாடல்-S வரை வரிசையாக 19 வித்தியாசமான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுள் சில சோதனை மாதிரிகள் வெளிவரவே இல்லை. இதில் பிரபலமானது என்றால் மாடல்-N தான். நான்கு சிலிண்டர் இஞ்சின் கொண்ட இது 500 டாலருக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் வாகன உலகில் புரட்சியை உண்டாக்கிய மாடல்-T அக்டோபர் 1, 1908ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒரே பிளாக்கில் வடிவமைக்கப்பட்ட 4 சிலிண்டர் கொண்ட இஞ்சின், இரண்டு செமி எலிப்டிக் ஸ்பிரிங்குகள், ஓட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் எளிமை, வசதியான இடப்பக்க ஸ்டியரிங் வீல் என பல புதுமையான அம்சங்களுடன் மார்க்கெட்டில் நுழைந்தது மாடல்-T. குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்க உற்பத்தி முறையில் பெரிய மாற்றங்களை ஃபோர்ட் கொண்டுவந்தார்.

முழுமையாகப் பரிமாற்றம் செய்யக்கூடிய பாகங்களை (interchangeable) பயன்படுத்துதல், இயன்ற அளவு வேலையை பகிர்ந்தளித்தல், பாகங்களை ஒன்றிணைக்கும் அசெம்பிளி பிரிவுகளை உருவாக்குதல் எனப் புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இவருக்கு முன்பே இந்த நுட்பங்களை சிலர் பயன்படுத்தி வந்தாலும் அவை பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் ஃபோர்ட் நடைமுறைப்படுத்திய உற்பத்தி செயல்முறைகள் பேரளவு உற்பத்திக்கு வழிவகுத்தன. பிற்காலத்தில் தொழில்துறை அனைத்துக்கும் வழிகாட்டியாக ஃபோர்டின் உற்பத்தி முறை விளங்கியது.

தொழிலாளிக்கு, அவர் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அனைத்தும் அவரின் பணியிடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் எடுத்துப் பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் வைக்கப்பட்டன. இதற்காக கன்வேயர் பெல்ட்டுகள், ஸ்லைடர்கள், ஓவர்ஹெட் டிராலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 1913 க்குள் பேரளவு உற்பத்திமுறை நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரி பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருளாக உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஒரு பணியாளர் தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்வதால் உற்பத்தி வேகம் அதிகரித்தது. இதனால் விலையும் குறைந்தது. ஃபோர்ட் தன்னுடைய உத்திகளை ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியப்படுத்தியதால் இந்த உற்பத்தி முறை உலகெங்கும் செயல்படுத்தப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கு, உற்பத்தியை அதிகரிக்க இது உதவியது.முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்- T கார்களின் எண்ணிக்கை 10,660. இது படிப்படியாக அதிகரித்து 1918ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் மாடல்-T இன் பங்களிப்பு பாதிக்கும் அதிகம். இந்த உற்பத்தி வளர்ச்சி 1927 வரைத் தொடர்ந்தது. அதுவரை உற்பத்தியான மாடல்-T கார்களின் மொத்த எண்ணிக்கை 1,50,07,034. ஆகும். 45 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த இச்சாதனை 19 ஆண்டுகள் உழைப்பில் நிகழ்த்தப்பட்டது. 1921க்குள் உலக வாகன உற்பத்தியில் ஃபோர்டின் மாடல்-T இன் பங்கு 56.6 % ஆகியது. ஆரம்பத்தில் அந்த காரின் விலை 850 டாலர். பேரளவு உற்பத்தி முறையின் பயனாகவும் வடிவமைப்பு மேம்பாட்டினாலும் இதன் விலை கடைசியில் 260 டாலராகக் குறைந்தது.

ஃபோர்ட் மாடல்-T கார் அமெரிக்க சமூகத்திலும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. விலை குறைந்ததால் பெரும்பாலான அமெரிக்க நடுத்தர மக்களால் கார் வாங்க முடிந்தது. தமக்கென்று சொந்தமாக வாகனம் இருந்ததால் மக்கள் தாம் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்தில் பயணம் செய்தனர். மக்கள், வணிக நிறுவனங்கள், தொழில்கள், கல்லூரிகள், நகரங்கள், ஏன் பிற நாடுகளுக்கு இடையிலான தொடர்பு இதனால வலுப்பட்டது எனலாம்.

ரயில் பாதைக்கு அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே குடியிருக்க வேண்டிய அவசியம் மறைந்துவிட்டது. நாளொன்றுக்கு சராசரி பயண எல்லை 10 மைல் முதல் 15 மைல் என்ற எல்லையை தகர்த்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. வணிகப் போக்குவரத்து அதிகரித்தது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடைவெளி குறைந்தது.

தமக்கென்று வாகனம் இருந்ததால் புறநகர்களில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். தாம் இருக்கும் ஊரில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைமாறி எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றுதல் சாத்தியமாகியது. மோட்டார் வாகனப் பெருக்கத்தினால் அரசாங்கத்தால் எரிபொருள் மீது வரிவிதித்தது. அதைக்கொண்டு தரமான சாலைகள் போட முடிந்தது. சாலையோரக் கடைகள், கன்வீனியண்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், வாகன பழுதுபார்ப்பு, வாகன விற்பனை என பல தொழில்கள் தோன்றின. இதனால வேலைவாய்ப்பு அதிகரித்தது. காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் உதவிகரமாக இருந்தது.


ஃபோர்ட் தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 5 டாலர் அளித்தார். இது சராசரி அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் பெற்ற வாரச் சம்பளத்தைவிட அதிகமாகும். போட்டியின் காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் ஃபோர்ட் காரைத் தயாரித்தார். இதனால் தாம் உற்பத்தி செய்த காரை வாங்கும் அளவுக்கு தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்தது.

நடுத்தர வர்க்கங்களின் எண்ணிக்கை உயர்வு, உற்பத்தி உயர்வு, அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகிய காரணங்களுக்காக இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருதை ஹென்றி ஃபோர்டுக்கு அளித்து கௌரவப்படுத்தியது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது ஃபோர்ட் மாடல்-T தான்.

செர்னோபில் அணு உலை விபத்து

இயற்கையின் அற்புதங்களில் தலைச்சிறந்ததாக விளங்குவது மனித இனம். உலகில் கோடிக்கணக்கான வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவையனைத்தும் இயற்கையின் போக்கில், இயற்கைச் சூழலை அனுசரித்து, அதற்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் சிந்திக்கும் மனிதன் அல்லவா? மனிதன், தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் தேவைக்கேற்ப இயற்கையின் ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் ரகசியங்களை, அதன் விதிகளை அறிந்துகொள்ள மனிதனுக்கு உதவுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் இயற்கையின் செயல்பாட்டைத் தனக்கு நன்மையளிக்கும் விதமாக மனிதன் மாற்றிக்கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். அத்தகைய முயற்சியின் விளைவாக மனிதன் கண்டறிந்த அற்புதமான ஆற்றல் மூலம் தான் “அணு ஆற்றல்’.அணு ஆற்றலை அழிக்கும் கருவியான அணு குண்டைத் தயாரிக்க மட்டுமல்ல, அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிந்ததும், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்ய பல நாடுகளில் அணு உலைகள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்டச் சூழ்நிலையில் அணு ஆற்றல் உற்பத்திச் செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிலும் தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா போன்ற இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட அணு உலைகள் ஆக்க வேலைக்கு பயன்பட்டாலும், இவை எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. இயற்கைப் பேரிடர் நிகழ்வோ, அல்லது மனிதனின் சிறு தவறும் கூட பெரும் ஆபத்தை உருவாக்கிடக்கூடும். இதற்கு உதாரணமாகத் திகழ்வது தான் “செர்னோபில் அணு விபத்து’.


முன்னால் சோவியத் யூனியனின் ஓர் அங்கமான உக்ரைன் நாட்டில், இன்றைய ரஷிய, பெலாரஸ் நாடுகளின் எல்லையோரத்தில் செர்னோபில் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அணு ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு 1970களில் இருந்தே செயல்பட்டு வந்தன. அணு உலைகளுக்கு மிகுந்த கண்காணிப்பும், பராமரிப்பும் தேவை. அதற்காக அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 25, 1986 அன்று அத்தகைய சோதனை ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். முக்கிய மின் உற்பத்தி நின்றுவிட்டப் பின்னர் அணு உலை வேலை செய்வதை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு, எவ்வளவு நேரம் டர்பைன் சுழன்று மின்னுற்பத்திச் செய்யும் என்பதைச் சோதிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக அணு உலையின் செயல்பாடு திடீரென அதிகரித்தது. நீராவிக் குழாய்களில் மிகு அழுத்தம் ஏற்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. இது நடந்தது மறுநாளான ஏப்ரல் 26 ஆம் நாள் அதிகாலையில். விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சற்றும் பலனளிக்கவில்லை. விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம் என்றும், அணு உலையின் வடிவமைப்புக் கோளாறு தான் காரணம் என்றும் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்துகள் இன்றுவரைத் தொடர்கின்றன.


அணு உலை வெடித்ததால் சிதறிய கதிரியக்கப் பொருள்கள் சுற்றுப்புறமெங்கும் பரவின. காற்று வீசும் திசையில் கதர்வீச்சு வேகமாகப் பரவியது. நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாயின. மண்ணிலும் கதிர்வீச்சு ஊடுருவியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் அளவானது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணு குண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது. பூமியின் வடகோளத்தின் கோடியில் உள்ள நாடுகளில் கூட கதிர்வீச்சு உணரப்பட்டது.

விபத்து நடந்தவுடன் ஏற்பட்ட உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.


கதிர்வீச்சுக் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்புத் தொடரும் என்கிறார்கள். இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.


வெடித்தப் பின்னர் அணு உலையின் கதிர்வீச்சு வெளியாகாமல் தடுக்க அதைச் சுற்றிலும் ஒரு கான்க்ரீட் கூடு கட்டப்பட்டது. தற்போது அதுவும் வலுவிழந்துவிட்டதால் இன்னும் வலுவான கூடு கட்டப்படவுள்ளது. எனினும் விபத்து நிகழ்ந்த அணு உலையின் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த மற்ற மூன்று அணு உலைகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டு 2000 வது ஆண்டில் செர்னோபில் அணு உலைக்கூடம் மூடப்பட்டது.

இந்த விபத்து உலக மக்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், இயற்கையின் சமநிலையைக் குலைக்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே மக்களுக்கு உண்மையான பயனையும், பாதுகாப்பையும் அளித்து நீடித்த வளர்ச்சியை அளிக்கும்.

இயற்கை ஆற்றல்களான காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றைப் திறமையாகப் பயன்படுத்தி நமது எரிபொருள், மின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதே நாம் வாழும் உலகைக் காப்பதற்கு வழி. அதை மனிதன் மறக்கத் தொடங்கினால், மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டச் சுனாமியால் வெடித்து சிதறிய ஃபுகுயோமா அணு உலை விபத்துகள் போன்றவை நிகழ்வதைத் தவிர்க்க வழியில்லை. முன்னேறிய நாடான ஜப்பானுக்கே இந்த கதி நேர்ந்துள்ளதென்றால், கடலோரமாக அணு உலைகளை தொடர்ந்து உருவாக்கி வரும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த வளரும் நாடுகளின் கதி என்னாகும்? நாம் சிந்திப்பதற்கான அனுபவத்தை செர்னோபில் விபத்து அளித்துள்ளது !