Tuesday, June 21, 2011

ஃபோர்ட் மாடல்-T

தனிநபர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கேற்ற வாகனங்கள் தயாரிப்பு பிரான்ஸ் நாட்டில் 1890ல் தொடங்கிவிட்டது. அவை விலை அதிகமாகவும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆடம்பர வாகனமாகவும் விளங்கின. இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்கக்கல்வி மட்டுமே கற்ற அனுபவமிக்க மெக்கானிக் ஒருவர், பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, வசதியான, சொகுசான, பாதுகாப்பான, விலைக் குறைவான வாகனத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தான் ஹென்றி ஃபோர்ட். பலவிதமான வாகன வடிவமைப்புகளை இவருக்கு முன்பே பலரும் உருவாக்கியிருந்தாலும் அவை விலைமிக்கவையாகவும், உற்பத்தி செய்வதற்கு அதிக நேரம் பிடிப்பவையாகவும் இருந்தன. சொந்தமாக கார் கம்பெனியை உருவாக்கிய ஃபோர்ட் 1903ல் முதல் கார் தயாரிப்பைத் தொடங்கினார்.


உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஃபோர்ட் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய வடிவமைப்பு கொண்ட கார்களை அறிமுகப்படுத்தினார். 1903 முதலே 1908 வரை மாடல்-A முதல் மாடல்-S வரை வரிசையாக 19 வித்தியாசமான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுள் சில சோதனை மாதிரிகள் வெளிவரவே இல்லை. இதில் பிரபலமானது என்றால் மாடல்-N தான். நான்கு சிலிண்டர் இஞ்சின் கொண்ட இது 500 டாலருக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் வாகன உலகில் புரட்சியை உண்டாக்கிய மாடல்-T அக்டோபர் 1, 1908ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒரே பிளாக்கில் வடிவமைக்கப்பட்ட 4 சிலிண்டர் கொண்ட இஞ்சின், இரண்டு செமி எலிப்டிக் ஸ்பிரிங்குகள், ஓட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் எளிமை, வசதியான இடப்பக்க ஸ்டியரிங் வீல் என பல புதுமையான அம்சங்களுடன் மார்க்கெட்டில் நுழைந்தது மாடல்-T. குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்க உற்பத்தி முறையில் பெரிய மாற்றங்களை ஃபோர்ட் கொண்டுவந்தார்.

முழுமையாகப் பரிமாற்றம் செய்யக்கூடிய பாகங்களை (interchangeable) பயன்படுத்துதல், இயன்ற அளவு வேலையை பகிர்ந்தளித்தல், பாகங்களை ஒன்றிணைக்கும் அசெம்பிளி பிரிவுகளை உருவாக்குதல் எனப் புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இவருக்கு முன்பே இந்த நுட்பங்களை சிலர் பயன்படுத்தி வந்தாலும் அவை பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் ஃபோர்ட் நடைமுறைப்படுத்திய உற்பத்தி செயல்முறைகள் பேரளவு உற்பத்திக்கு வழிவகுத்தன. பிற்காலத்தில் தொழில்துறை அனைத்துக்கும் வழிகாட்டியாக ஃபோர்டின் உற்பத்தி முறை விளங்கியது.

தொழிலாளிக்கு, அவர் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அனைத்தும் அவரின் பணியிடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் எடுத்துப் பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் வைக்கப்பட்டன. இதற்காக கன்வேயர் பெல்ட்டுகள், ஸ்லைடர்கள், ஓவர்ஹெட் டிராலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 1913 க்குள் பேரளவு உற்பத்திமுறை நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரி பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருளாக உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஒரு பணியாளர் தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்வதால் உற்பத்தி வேகம் அதிகரித்தது. இதனால் விலையும் குறைந்தது. ஃபோர்ட் தன்னுடைய உத்திகளை ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியப்படுத்தியதால் இந்த உற்பத்தி முறை உலகெங்கும் செயல்படுத்தப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கு, உற்பத்தியை அதிகரிக்க இது உதவியது.



முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்- T கார்களின் எண்ணிக்கை 10,660. இது படிப்படியாக அதிகரித்து 1918ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் மாடல்-T இன் பங்களிப்பு பாதிக்கும் அதிகம். இந்த உற்பத்தி வளர்ச்சி 1927 வரைத் தொடர்ந்தது. அதுவரை உற்பத்தியான மாடல்-T கார்களின் மொத்த எண்ணிக்கை 1,50,07,034. ஆகும். 45 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த இச்சாதனை 19 ஆண்டுகள் உழைப்பில் நிகழ்த்தப்பட்டது. 1921க்குள் உலக வாகன உற்பத்தியில் ஃபோர்டின் மாடல்-T இன் பங்கு 56.6 % ஆகியது. ஆரம்பத்தில் அந்த காரின் விலை 850 டாலர். பேரளவு உற்பத்தி முறையின் பயனாகவும் வடிவமைப்பு மேம்பாட்டினாலும் இதன் விலை கடைசியில் 260 டாலராகக் குறைந்தது.

ஃபோர்ட் மாடல்-T கார் அமெரிக்க சமூகத்திலும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. விலை குறைந்ததால் பெரும்பாலான அமெரிக்க நடுத்தர மக்களால் கார் வாங்க முடிந்தது. தமக்கென்று சொந்தமாக வாகனம் இருந்ததால் மக்கள் தாம் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்தில் பயணம் செய்தனர். மக்கள், வணிக நிறுவனங்கள், தொழில்கள், கல்லூரிகள், நகரங்கள், ஏன் பிற நாடுகளுக்கு இடையிலான தொடர்பு இதனால வலுப்பட்டது எனலாம்.

ரயில் பாதைக்கு அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே குடியிருக்க வேண்டிய அவசியம் மறைந்துவிட்டது. நாளொன்றுக்கு சராசரி பயண எல்லை 10 மைல் முதல் 15 மைல் என்ற எல்லையை தகர்த்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. வணிகப் போக்குவரத்து அதிகரித்தது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடைவெளி குறைந்தது.

தமக்கென்று வாகனம் இருந்ததால் புறநகர்களில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். தாம் இருக்கும் ஊரில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைமாறி எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றுதல் சாத்தியமாகியது. மோட்டார் வாகனப் பெருக்கத்தினால் அரசாங்கத்தால் எரிபொருள் மீது வரிவிதித்தது. அதைக்கொண்டு தரமான சாலைகள் போட முடிந்தது. சாலையோரக் கடைகள், கன்வீனியண்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், வாகன பழுதுபார்ப்பு, வாகன விற்பனை என பல தொழில்கள் தோன்றின. இதனால வேலைவாய்ப்பு அதிகரித்தது. காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் உதவிகரமாக இருந்தது.


ஃபோர்ட் தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 5 டாலர் அளித்தார். இது சராசரி அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் பெற்ற வாரச் சம்பளத்தைவிட அதிகமாகும். போட்டியின் காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் ஃபோர்ட் காரைத் தயாரித்தார். இதனால் தாம் உற்பத்தி செய்த காரை வாங்கும் அளவுக்கு தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்தது.

நடுத்தர வர்க்கங்களின் எண்ணிக்கை உயர்வு, உற்பத்தி உயர்வு, அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகிய காரணங்களுக்காக இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருதை ஹென்றி ஃபோர்டுக்கு அளித்து கௌரவப்படுத்தியது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது ஃபோர்ட் மாடல்-T தான்.

No comments:

Post a Comment