Tuesday, June 21, 2011

செர்னோபில் அணு உலை விபத்து

இயற்கையின் அற்புதங்களில் தலைச்சிறந்ததாக விளங்குவது மனித இனம். உலகில் கோடிக்கணக்கான வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவையனைத்தும் இயற்கையின் போக்கில், இயற்கைச் சூழலை அனுசரித்து, அதற்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் சிந்திக்கும் மனிதன் அல்லவா? மனிதன், தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் தேவைக்கேற்ப இயற்கையின் ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் ரகசியங்களை, அதன் விதிகளை அறிந்துகொள்ள மனிதனுக்கு உதவுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் இயற்கையின் செயல்பாட்டைத் தனக்கு நன்மையளிக்கும் விதமாக மனிதன் மாற்றிக்கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். அத்தகைய முயற்சியின் விளைவாக மனிதன் கண்டறிந்த அற்புதமான ஆற்றல் மூலம் தான் “அணு ஆற்றல்’.அணு ஆற்றலை அழிக்கும் கருவியான அணு குண்டைத் தயாரிக்க மட்டுமல்ல, அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிந்ததும், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்ய பல நாடுகளில் அணு உலைகள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்டச் சூழ்நிலையில் அணு ஆற்றல் உற்பத்திச் செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிலும் தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா போன்ற இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட அணு உலைகள் ஆக்க வேலைக்கு பயன்பட்டாலும், இவை எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. இயற்கைப் பேரிடர் நிகழ்வோ, அல்லது மனிதனின் சிறு தவறும் கூட பெரும் ஆபத்தை உருவாக்கிடக்கூடும். இதற்கு உதாரணமாகத் திகழ்வது தான் “செர்னோபில் அணு விபத்து’.


முன்னால் சோவியத் யூனியனின் ஓர் அங்கமான உக்ரைன் நாட்டில், இன்றைய ரஷிய, பெலாரஸ் நாடுகளின் எல்லையோரத்தில் செர்னோபில் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அணு ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு 1970களில் இருந்தே செயல்பட்டு வந்தன. அணு உலைகளுக்கு மிகுந்த கண்காணிப்பும், பராமரிப்பும் தேவை. அதற்காக அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 25, 1986 அன்று அத்தகைய சோதனை ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். முக்கிய மின் உற்பத்தி நின்றுவிட்டப் பின்னர் அணு உலை வேலை செய்வதை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு, எவ்வளவு நேரம் டர்பைன் சுழன்று மின்னுற்பத்திச் செய்யும் என்பதைச் சோதிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக அணு உலையின் செயல்பாடு திடீரென அதிகரித்தது. நீராவிக் குழாய்களில் மிகு அழுத்தம் ஏற்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. இது நடந்தது மறுநாளான ஏப்ரல் 26 ஆம் நாள் அதிகாலையில். விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சற்றும் பலனளிக்கவில்லை. விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம் என்றும், அணு உலையின் வடிவமைப்புக் கோளாறு தான் காரணம் என்றும் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்துகள் இன்றுவரைத் தொடர்கின்றன.


அணு உலை வெடித்ததால் சிதறிய கதிரியக்கப் பொருள்கள் சுற்றுப்புறமெங்கும் பரவின. காற்று வீசும் திசையில் கதர்வீச்சு வேகமாகப் பரவியது. நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாயின. மண்ணிலும் கதிர்வீச்சு ஊடுருவியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் அளவானது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணு குண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது. பூமியின் வடகோளத்தின் கோடியில் உள்ள நாடுகளில் கூட கதிர்வீச்சு உணரப்பட்டது.

விபத்து நடந்தவுடன் ஏற்பட்ட உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.


கதிர்வீச்சுக் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்புத் தொடரும் என்கிறார்கள். இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.


வெடித்தப் பின்னர் அணு உலையின் கதிர்வீச்சு வெளியாகாமல் தடுக்க அதைச் சுற்றிலும் ஒரு கான்க்ரீட் கூடு கட்டப்பட்டது. தற்போது அதுவும் வலுவிழந்துவிட்டதால் இன்னும் வலுவான கூடு கட்டப்படவுள்ளது. எனினும் விபத்து நிகழ்ந்த அணு உலையின் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த மற்ற மூன்று அணு உலைகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டு 2000 வது ஆண்டில் செர்னோபில் அணு உலைக்கூடம் மூடப்பட்டது.

இந்த விபத்து உலக மக்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், இயற்கையின் சமநிலையைக் குலைக்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே மக்களுக்கு உண்மையான பயனையும், பாதுகாப்பையும் அளித்து நீடித்த வளர்ச்சியை அளிக்கும்.

இயற்கை ஆற்றல்களான காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றைப் திறமையாகப் பயன்படுத்தி நமது எரிபொருள், மின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதே நாம் வாழும் உலகைக் காப்பதற்கு வழி. அதை மனிதன் மறக்கத் தொடங்கினால், மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டச் சுனாமியால் வெடித்து சிதறிய ஃபுகுயோமா அணு உலை விபத்துகள் போன்றவை நிகழ்வதைத் தவிர்க்க வழியில்லை. முன்னேறிய நாடான ஜப்பானுக்கே இந்த கதி நேர்ந்துள்ளதென்றால், கடலோரமாக அணு உலைகளை தொடர்ந்து உருவாக்கி வரும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த வளரும் நாடுகளின் கதி என்னாகும்? நாம் சிந்திப்பதற்கான அனுபவத்தை செர்னோபில் விபத்து அளித்துள்ளது !

2 comments:

HajasreeN said...

naanum ukraine la lughans la irunthen anga ponathukapuram than intha visayam enaku therinjuthu

immanuel said...

உக்ரேன் நாட்டுக்கு சென்றிருந்தீர்களா? புதிய அனுபவங்கள் கிடைச்சிருக்கும். மகிழ்ச்சி.

Post a Comment