Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, June 21, 2011

அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட ‘பீகிள்’ கப்பல் பயணம்

பயணம் செய்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உண்டு. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதன் நீண்டப் பயணங்களை மேற்கொண்டு வருகிறான். அவற்றுள் சில பயணங்கள் வரலாறில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்து, அவனது சிந்தனையையே மாற்றியமைத்தது ஒரு கடல் பயணம். 1831ஆம் ஆண்டு முதல் 1836 வரை அந்த புகழ்மிக்கப் பயணத்தை மேற்கொண்ட கப்பலின் பெயர் ‘பீகிள்(Beagle)’. அந்தப் பயணத்தின் நாயகர் சார்லஸ் டார்வின்.



18,19ஆம் நூற்றாண்டுகளில், புதிய நாடுகளை கண்டுபிடிக்கவும் நாடுகளின் மீது படையெடுத்து காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிப் பயணம் இன்றியமையாததாக இருந்தது. அப்போது கடலில் போட்டி நாடுகளின் சவாலை எதிர்கொள்ளவும் வணிகத்தை பெருக்குவதற்கும் கடல் வழிகள், கடல் நீரோட்டங்கள், கடலோர நிலப்பகுதிகள் பற்றி நிறைய விவரங்களை ஆராய வேண்டியத் தேவை ஏற்பட்டது. இந்த நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல் பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை 1826ஆம் ஆண்டு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. அது தனது ஆய்வை முடித்துவிட்டு 1830ல் நாடு திரும்பியது.


இருப்பினும் மீண்டுமொரு விரிவான ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு ’எச்.எம்.எஸ்.பீகிள்’ செப்பனிடப்பட்டு மீண்டும் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பலின் கேப்டனாக ஃபிட்ஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமும் ஆய்வு கண்ணோட்டமும் நிரம்பிய ஃபிட்ஸ்ராய் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானி’, அதுவும் புவி அமைப்பியல் அறிவுடைய ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அந்த வேலைக்கு விண்ணப்பித்தார் சார்லஸ் டார்வின் என்ற 22 வயது இளைஞர். இவர் இயற்கை வரலாறில் கொண்டிருந்த ஆர்வத்தால் தனது மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர். பின்னர் மதகுருக்கான பட்டப் படிப்பையும் முடித்திருந்தார். ஆடம் செட்ஜ்விக் என்ற புவி அமைப்பியல் விஞ்ஞானியிடம் சிறிது காலம் உதவியாளராக பணியாற்றியதால் நிலம் மற்றும் நில அமைப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தார்.

டார்வினின் நண்பரும் பேராசிரியருமான ஹென்ஸ்லோ சிபாரிசு செய்ததால் டார்வினை பணியமர்த்திக் கொள்ள ஃபிட்ஸ்ராய் சம்மதித்தார். ஆனால் டார்வினின் தந்தை டார்வினுக்கு அனுமதி தரவில்லை. டார்வினின் அப்பாவிடம், அவரது மாமா எப்படியோ பேசி சம்மதிக்க வைத்துவிட்டார். பசிபிக், இந்திய, அட்லாண்டிக் ஆகிய மூன்று பெருங்கடல்களிலும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட காலம் 2 ஆண்டுகள். ஆனால் இது 5 ஆண்டுகளுக்கு நீளும் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.



டிசம்பர் 27, 1831ல் ஃப்ளைமவுத் துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை பீகிள் தொடங்கியது. அட்லாண்டிக் கடலில் பயணித்து தென்னமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையோரமாக தெற்கு திசையை நோக்கிச் சென்றது. பிரேசில், அர்ஜெண்டினா சென்ற பின் தெனமெரிக்காவின் மேற்கு கரையோரமாக பயணத்தைத் தொடர்ந்தது பீகிள். ஃபிட்ஸ்ராய் கடல் ஆய்வுகளை மேற்கொள்ள, டார்வின் நிலப்பகுதிகளில் இறங்கி தனது ஆய்வுகளை மேற்கொண்டார். நான்காண்டுகளுக்குப் பின்னர் 1835-ல் தன்னந்தனித் தீவான கலப்பகாஸ் தீவை அடைகின்றனர். இந்த நீண்டப் பயணத்தில் டார்வின் பல்வேறு இயற்கை அதிசயங்களை கண்டார்.

அழிந்து போன விலங்குகளின் ஏராளமான புதைபடிவங்களை சேகரித்தார். வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட பல்வேறு பழங்குடி மக்களை கண்டார். நில அமைப்புகளை, எரிமலைப் பிரதேசங்களை, காடுகளை, நதிகளை, ஆராய்ந்தார். நீர், நிலம் ஆகியவற்றில் வாழும் பல்வேறு உயிரினங்களை ஒப்பிட்டு, வகைப்படுத்தி ஆராய்ந்தார். தான் கண்டறிந்ததை முழுமையாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார். இந்தக் குறிப்புகள் தான் இவரது கோட்பாடுகளுக்கு பினாள்களில் வலிமையான ஆதாரமாக இருந்தன.

பீகிளின் பயணம் மேற்கு நோக்கித் தொடர்ந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றைத் தொட்டுவிட்டு மொரிஷியஸ் தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் பிரேசிலுக்கு வந்துவிட்டு தாய்நாட்டை நோக்கி இறுதிப் பயணத்தை மேற்கொண்டது. அக்டோபர் 2, 1836ல் இங்கிலாந்தை அடைந்தது. இந்த 5 ஆண்டுகள் கடல் பயணத்தில் 3 ஆண்டுகள் 3 மாதங்களை நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக டார்வின் செலவழித்திருந்தார்.


நாடு திரும்பியதும் தனது குறிப்புகளையும் சேகரித்த ஆதாரங்களையும் ஆராய்ந்த டார்வின், காலங்காலமாக நம்பப்பட்டு வருவது போல் தாவரங்களும் விலங்குகளும் என்றென்றும் ஒரே மாதிரியாக இருப்பவை அல்ல. அவை தமது சூழ்நிலை(வாழ்நிலை) மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக்கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதை 1837ஆம் ஆண்டிலேயே கண்டறிந்தார். கடவுளின் படைப்பு கொள்கையை நிராகரிக்கும் இந்த கண்டுப்பிடிப்பை வெளியிட இன்னும் ஆதாரங்களை சேர்க்கவேண்டும் என்று டார்வின் முடிவு செய்தார்.

இருபது ஆண்டுகள் மேலும் ஆராய்ந்து தனது கோட்பாட்டு உறுதியான ஆதாரங்களை நிறுவினார். இதற்கிடையில் வாலஸ் என்ற விஞ்ஞானியின் ஆய்வுகளும் டார்வினுக்கு உதவியாக இருந்தது. அறிவு ஜீவிகள், சாதாரண பொதுமக்கள் என அனைவரின் சிந்தனையிலும் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய ’இயற்கைத் தேர்வு மூலமாக இனங்களின் தோற்றம்(Origin of Species through Natural Selection) என்னும் நூலை 1859ல் வெளியிட்டார். பலத்த விவாதங்கள் நடத்தப்பட்டன். எங்கு பார்த்தாலும் சமயவாதிகளின் எதிர்ப்புகள். சில ஆண்டுகள் கடந்தபின் 1871ல் மீண்டும் ஒரு புயல் கிளம்பியது. ’மனிதனுடைய பாரம்பரியமும் பாலினம் சார்ந்த தேர்வும்(The Descent of Man and Selection in relation to Sex) என்ற நூலை வெளியிட்டார்.


வாலில்லா குரங்கு போன்ற ஒரு சிறப்பினத்திலிருந்து தான் மனித இனம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்று உடலமைப்பியல், புவியியல், சூழல் ஆதாரங்களுடன் இந்நூலில் நிறுவியிருந்தார். அறிவுலகிலேயே இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நோய்வாய் பட்டிருந்த சார்லஸ் டார்வின் 1882ல் மறைந்துவிட்டார். ஆனாலும் அவருக்குப்பின் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புகள் அவரின் கோட்பாட்டை உண்மை என நிரூபித்தன. உலகில் தோன்றிய தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக சாலஸ் டார்வின் கொண்டாடப்படுகிறார். இதற்கு காரணம் ‘பீகிள்’ பயணம் தானே!

ஃபோர்ட் மாடல்-T

தனிநபர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கேற்ற வாகனங்கள் தயாரிப்பு பிரான்ஸ் நாட்டில் 1890ல் தொடங்கிவிட்டது. அவை விலை அதிகமாகவும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆடம்பர வாகனமாகவும் விளங்கின. இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்கக்கல்வி மட்டுமே கற்ற அனுபவமிக்க மெக்கானிக் ஒருவர், பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, வசதியான, சொகுசான, பாதுகாப்பான, விலைக் குறைவான வாகனத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தான் ஹென்றி ஃபோர்ட். பலவிதமான வாகன வடிவமைப்புகளை இவருக்கு முன்பே பலரும் உருவாக்கியிருந்தாலும் அவை விலைமிக்கவையாகவும், உற்பத்தி செய்வதற்கு அதிக நேரம் பிடிப்பவையாகவும் இருந்தன. சொந்தமாக கார் கம்பெனியை உருவாக்கிய ஃபோர்ட் 1903ல் முதல் கார் தயாரிப்பைத் தொடங்கினார்.


உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஃபோர்ட் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய வடிவமைப்பு கொண்ட கார்களை அறிமுகப்படுத்தினார். 1903 முதலே 1908 வரை மாடல்-A முதல் மாடல்-S வரை வரிசையாக 19 வித்தியாசமான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுள் சில சோதனை மாதிரிகள் வெளிவரவே இல்லை. இதில் பிரபலமானது என்றால் மாடல்-N தான். நான்கு சிலிண்டர் இஞ்சின் கொண்ட இது 500 டாலருக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் வாகன உலகில் புரட்சியை உண்டாக்கிய மாடல்-T அக்டோபர் 1, 1908ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒரே பிளாக்கில் வடிவமைக்கப்பட்ட 4 சிலிண்டர் கொண்ட இஞ்சின், இரண்டு செமி எலிப்டிக் ஸ்பிரிங்குகள், ஓட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் எளிமை, வசதியான இடப்பக்க ஸ்டியரிங் வீல் என பல புதுமையான அம்சங்களுடன் மார்க்கெட்டில் நுழைந்தது மாடல்-T. குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்க உற்பத்தி முறையில் பெரிய மாற்றங்களை ஃபோர்ட் கொண்டுவந்தார்.

முழுமையாகப் பரிமாற்றம் செய்யக்கூடிய பாகங்களை (interchangeable) பயன்படுத்துதல், இயன்ற அளவு வேலையை பகிர்ந்தளித்தல், பாகங்களை ஒன்றிணைக்கும் அசெம்பிளி பிரிவுகளை உருவாக்குதல் எனப் புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இவருக்கு முன்பே இந்த நுட்பங்களை சிலர் பயன்படுத்தி வந்தாலும் அவை பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் ஃபோர்ட் நடைமுறைப்படுத்திய உற்பத்தி செயல்முறைகள் பேரளவு உற்பத்திக்கு வழிவகுத்தன. பிற்காலத்தில் தொழில்துறை அனைத்துக்கும் வழிகாட்டியாக ஃபோர்டின் உற்பத்தி முறை விளங்கியது.

தொழிலாளிக்கு, அவர் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அனைத்தும் அவரின் பணியிடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் எடுத்துப் பயன்படுத்துவதற்கேற்ற நிலையில் வைக்கப்பட்டன. இதற்காக கன்வேயர் பெல்ட்டுகள், ஸ்லைடர்கள், ஓவர்ஹெட் டிராலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 1913 க்குள் பேரளவு உற்பத்திமுறை நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. மாற்றிக்கொள்ளக்கூடிய உதிரி பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருளாக உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஒரு பணியாளர் தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்வதால் உற்பத்தி வேகம் அதிகரித்தது. இதனால் விலையும் குறைந்தது. ஃபோர்ட் தன்னுடைய உத்திகளை ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியப்படுத்தியதால் இந்த உற்பத்தி முறை உலகெங்கும் செயல்படுத்தப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கு, உற்பத்தியை அதிகரிக்க இது உதவியது.



முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்- T கார்களின் எண்ணிக்கை 10,660. இது படிப்படியாக அதிகரித்து 1918ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் மாடல்-T இன் பங்களிப்பு பாதிக்கும் அதிகம். இந்த உற்பத்தி வளர்ச்சி 1927 வரைத் தொடர்ந்தது. அதுவரை உற்பத்தியான மாடல்-T கார்களின் மொத்த எண்ணிக்கை 1,50,07,034. ஆகும். 45 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த இச்சாதனை 19 ஆண்டுகள் உழைப்பில் நிகழ்த்தப்பட்டது. 1921க்குள் உலக வாகன உற்பத்தியில் ஃபோர்டின் மாடல்-T இன் பங்கு 56.6 % ஆகியது. ஆரம்பத்தில் அந்த காரின் விலை 850 டாலர். பேரளவு உற்பத்தி முறையின் பயனாகவும் வடிவமைப்பு மேம்பாட்டினாலும் இதன் விலை கடைசியில் 260 டாலராகக் குறைந்தது.

ஃபோர்ட் மாடல்-T கார் அமெரிக்க சமூகத்திலும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. விலை குறைந்ததால் பெரும்பாலான அமெரிக்க நடுத்தர மக்களால் கார் வாங்க முடிந்தது. தமக்கென்று சொந்தமாக வாகனம் இருந்ததால் மக்கள் தாம் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்தில் பயணம் செய்தனர். மக்கள், வணிக நிறுவனங்கள், தொழில்கள், கல்லூரிகள், நகரங்கள், ஏன் பிற நாடுகளுக்கு இடையிலான தொடர்பு இதனால வலுப்பட்டது எனலாம்.

ரயில் பாதைக்கு அல்லது ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே குடியிருக்க வேண்டிய அவசியம் மறைந்துவிட்டது. நாளொன்றுக்கு சராசரி பயண எல்லை 10 மைல் முதல் 15 மைல் என்ற எல்லையை தகர்த்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. வணிகப் போக்குவரத்து அதிகரித்தது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடைவெளி குறைந்தது.

தமக்கென்று வாகனம் இருந்ததால் புறநகர்களில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். தாம் இருக்கும் ஊரில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைமாறி எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றுதல் சாத்தியமாகியது. மோட்டார் வாகனப் பெருக்கத்தினால் அரசாங்கத்தால் எரிபொருள் மீது வரிவிதித்தது. அதைக்கொண்டு தரமான சாலைகள் போட முடிந்தது. சாலையோரக் கடைகள், கன்வீனியண்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், வாகன பழுதுபார்ப்பு, வாகன விற்பனை என பல தொழில்கள் தோன்றின. இதனால வேலைவாய்ப்பு அதிகரித்தது. காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் உதவிகரமாக இருந்தது.


ஃபோர்ட் தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 5 டாலர் அளித்தார். இது சராசரி அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் பெற்ற வாரச் சம்பளத்தைவிட அதிகமாகும். போட்டியின் காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் ஃபோர்ட் காரைத் தயாரித்தார். இதனால் தாம் உற்பத்தி செய்த காரை வாங்கும் அளவுக்கு தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்தது.

நடுத்தர வர்க்கங்களின் எண்ணிக்கை உயர்வு, உற்பத்தி உயர்வு, அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகிய காரணங்களுக்காக இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருதை ஹென்றி ஃபோர்டுக்கு அளித்து கௌரவப்படுத்தியது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது ஃபோர்ட் மாடல்-T தான்.

செர்னோபில் அணு உலை விபத்து

இயற்கையின் அற்புதங்களில் தலைச்சிறந்ததாக விளங்குவது மனித இனம். உலகில் கோடிக்கணக்கான வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவையனைத்தும் இயற்கையின் போக்கில், இயற்கைச் சூழலை அனுசரித்து, அதற்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் சிந்திக்கும் மனிதன் அல்லவா? மனிதன், தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் தேவைக்கேற்ப இயற்கையின் ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் ரகசியங்களை, அதன் விதிகளை அறிந்துகொள்ள மனிதனுக்கு உதவுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் இயற்கையின் செயல்பாட்டைத் தனக்கு நன்மையளிக்கும் விதமாக மனிதன் மாற்றிக்கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். அத்தகைய முயற்சியின் விளைவாக மனிதன் கண்டறிந்த அற்புதமான ஆற்றல் மூலம் தான் “அணு ஆற்றல்’.



அணு ஆற்றலை அழிக்கும் கருவியான அணு குண்டைத் தயாரிக்க மட்டுமல்ல, அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிந்ததும், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்ய பல நாடுகளில் அணு உலைகள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்டச் சூழ்நிலையில் அணு ஆற்றல் உற்பத்திச் செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிலும் தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா போன்ற இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட அணு உலைகள் ஆக்க வேலைக்கு பயன்பட்டாலும், இவை எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. இயற்கைப் பேரிடர் நிகழ்வோ, அல்லது மனிதனின் சிறு தவறும் கூட பெரும் ஆபத்தை உருவாக்கிடக்கூடும். இதற்கு உதாரணமாகத் திகழ்வது தான் “செர்னோபில் அணு விபத்து’.


முன்னால் சோவியத் யூனியனின் ஓர் அங்கமான உக்ரைன் நாட்டில், இன்றைய ரஷிய, பெலாரஸ் நாடுகளின் எல்லையோரத்தில் செர்னோபில் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அணு ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு 1970களில் இருந்தே செயல்பட்டு வந்தன. அணு உலைகளுக்கு மிகுந்த கண்காணிப்பும், பராமரிப்பும் தேவை. அதற்காக அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 25, 1986 அன்று அத்தகைய சோதனை ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். முக்கிய மின் உற்பத்தி நின்றுவிட்டப் பின்னர் அணு உலை வேலை செய்வதை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு, எவ்வளவு நேரம் டர்பைன் சுழன்று மின்னுற்பத்திச் செய்யும் என்பதைச் சோதிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக அணு உலையின் செயல்பாடு திடீரென அதிகரித்தது. நீராவிக் குழாய்களில் மிகு அழுத்தம் ஏற்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. இது நடந்தது மறுநாளான ஏப்ரல் 26 ஆம் நாள் அதிகாலையில். விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சற்றும் பலனளிக்கவில்லை. விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம் என்றும், அணு உலையின் வடிவமைப்புக் கோளாறு தான் காரணம் என்றும் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்துகள் இன்றுவரைத் தொடர்கின்றன.


அணு உலை வெடித்ததால் சிதறிய கதிரியக்கப் பொருள்கள் சுற்றுப்புறமெங்கும் பரவின. காற்று வீசும் திசையில் கதர்வீச்சு வேகமாகப் பரவியது. நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாயின. மண்ணிலும் கதிர்வீச்சு ஊடுருவியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் அளவானது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணு குண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது. பூமியின் வடகோளத்தின் கோடியில் உள்ள நாடுகளில் கூட கதிர்வீச்சு உணரப்பட்டது.

விபத்து நடந்தவுடன் ஏற்பட்ட உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.


கதிர்வீச்சுக் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்புத் தொடரும் என்கிறார்கள். இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.


வெடித்தப் பின்னர் அணு உலையின் கதிர்வீச்சு வெளியாகாமல் தடுக்க அதைச் சுற்றிலும் ஒரு கான்க்ரீட் கூடு கட்டப்பட்டது. தற்போது அதுவும் வலுவிழந்துவிட்டதால் இன்னும் வலுவான கூடு கட்டப்படவுள்ளது. எனினும் விபத்து நிகழ்ந்த அணு உலையின் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த மற்ற மூன்று அணு உலைகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டு 2000 வது ஆண்டில் செர்னோபில் அணு உலைக்கூடம் மூடப்பட்டது.

இந்த விபத்து உலக மக்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், இயற்கையின் சமநிலையைக் குலைக்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே மக்களுக்கு உண்மையான பயனையும், பாதுகாப்பையும் அளித்து நீடித்த வளர்ச்சியை அளிக்கும்.

இயற்கை ஆற்றல்களான காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றைப் திறமையாகப் பயன்படுத்தி நமது எரிபொருள், மின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதே நாம் வாழும் உலகைக் காப்பதற்கு வழி. அதை மனிதன் மறக்கத் தொடங்கினால், மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டச் சுனாமியால் வெடித்து சிதறிய ஃபுகுயோமா அணு உலை விபத்துகள் போன்றவை நிகழ்வதைத் தவிர்க்க வழியில்லை. முன்னேறிய நாடான ஜப்பானுக்கே இந்த கதி நேர்ந்துள்ளதென்றால், கடலோரமாக அணு உலைகளை தொடர்ந்து உருவாக்கி வரும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த வளரும் நாடுகளின் கதி என்னாகும்? நாம் சிந்திப்பதற்கான அனுபவத்தை செர்னோபில் விபத்து அளித்துள்ளது !

Tuesday, September 21, 2010

’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்


றிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.

இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.

மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.


பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்

அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம்

ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.

வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.

உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.

உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.

நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.

கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.

மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.

மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.

வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

Tuesday, April 20, 2010

மனிதனின் ஆயுளை உயர்த்திய லூயி பாஸ்டியர்




நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் இன்றைய மனிதனால் வாழமுடியாது என்னுமளவுக்கு அறிவியல், மனிதனின் வாழ்க்கையில் கலந்துவிட்டது. மனிதனின் செயல்பாடுகளை எளிமையாக்குதல், தேவைகளை நிறைவேற்றுதல், பிரபஞ்ச உண்மைகளை கண்டறிதல் ஆகியவற்றுக்கு நவீன கண்டுபிடிப்புகள் பேருதவி புரிந்தாலும் அவை யாவற்றிலும் தலையாயது மருத்துவத் துறையில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளே. இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளர்களில் முதன்மையானவர் லூயி பாஸ்டியர் ஆவார்.

புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் 1822ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள ஜூரான் பிராந்தியத்தில் தோலே என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் லூயி பாஸ்டியர். சிறு வயதிலே அவர் ஈடுபாட்டுடன் கல்வி கற்ற போதிலும் அவரது அறிவுக்கூர்மை வெளியே தெரியவில்லை. தமது 26வது வயதில் டாக்டர் பட்டத்துக்கு டார்டாரிக் அமிலத்தின் உருப் பளிங்கு படிவம் (mirror-image isomers) பற்றிய அவரது ஆய்வு அவருக்கு பெரும்புகழைத் தேடி தந்தது.

பாஸ்டியர் 1857ல் நொதித்தல் பற்றி முக்கிய ஆராய்ச்சியை நிகழ்த்தினார். சில வகை நுண்ணுயிர்கள் காரணமாகவே நொதித்தல் நடைபெறுகிறது. பானங்களில் விரும்பத்தகாத நச்சுப்பொருள்கள் நுண்ணுயிர்களாலயே உருவாகின்றன என்று கண்டார். மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் ஏற்படுவதற்கு நோய் நுண்மங்கள் எனப்படும் கிருமிகள் தான் காரணம் என்பதை பரிசோதனைகள், செயல்விளக்கங்களுடன் துல்லியமாக நிரூபித்தார். இது நோய் நுண்மக் கோட்பாடு(germ theory) எனப்படுகிறது.

நோய்நுண்மங்கள் உடலுக்குள் செல்வதனால் தான் நோய் ஏற்படுகிறது எனில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதன் மூலம் நோயை தவிர்க்க முடியும். இந்த அடிப்படையில் தான் , அறுவை சிகிச்சையின் போது பின்பற்றப்படும் ஆண்டிசெப்டிக் வழிமுறைகளை ஜோசப் லிஸ்டர் பின்னர் கண்டுபிடித்தார்.

உணவுப் பொருள்கள் மற்றும் பால், பீர், வைன் போன்ற பானங்கள் அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்களால் கெட்டுவிடுகின்றன. இவை நோய்களையும் உண்டுபண்ணுகின்றன. பால் போன்ற பானங்களை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதிலுள்ள பெரும்பாலான கிருமிகளை அழித்து அவற்றை கெட்டுப்போகாமல் காக்கும் ஒரு துப்புறவு முறையை 1864ல் பாஸ்டியர் கண்டறிந்தார். இன்றும் பயன்படுத்தப்படும் இந்த முறை பாஸ்சுரைசேஷன்(Pasteurisation) எனப்படுகிறது.

கால்நடைகளை அதிகம் தாக்கும் கொடிய நோய் கரணை நோய் எனப்படும் ஆந்த்ராக்ஸ் ஆகும். இந்த நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை கண்டறிந்த பாஸ்டிய அவற்றில் ஆற்றல் குன்றிய வகையினத்தை உற்பத்தி செய்யும் ஒரு முறையை கண்டறிந்தார். இந்த ஆற்றல் குன்றிய நோய் கிருமிகளை ஊசி மூலம் கால்நடைகளின் உடலில் செலுத்தினால் அந்த கால்நடைகளுக்கு கடுமையற்ற நோய் உண்டாகியது. பின்னர் அந்த கால்நடையின் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்க்கு எதிர்பாற்றல் உருவாகிவிடுகிறது. இதனால் அந்த நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை 1881ல் பாஸ்டியர் திட்டவட்டமாக நிரூபித்தார். இது மருத்துவ உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இவ்வகையான தடுப்பூசிகளுக்கு வாக்ஸீன் என்று பெயரிட்டார்.

அயராது செய்த ஆராய்ச்சியின் பயனாக 1885ல் பாஸ்டியர் வெறிநாய் கடி நோய்க்கும்(Rabies) தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை புரிந்தார். இவரது கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே ஜன்னி காய்ச்சல், இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. மேலும் சிக்கன் காலரா எனப்படும் கொடிய நோய்க்கும் பாஸ்டியர் தடுப்பூசி உருவாக்கினார்.

நுண்ணுயிர்கள் தாமாகவே உருவாகின்றன என்று அவரது காலம்வரை நம்பப்பட்டு வந்தது. தமது கூரிய ஆய்வால் வெளியில் இருந்து வராமல் பொருள்களில் தாமாகவே நுண்ணுயிர்கள் உருவாவதில்லை என்று நிரூபித்தார். மேலும் ஆக்ஸிஜனில்லாமலும் சில வகை நுண்ணுயிர்கள் வாழும் என்பதையும் பரிசோதனையில் மெய்ப்பித்தார். இவற்றோடு பட்டுப் புழுக்களில் ஏற்படும் இரண்டு நோய்களை பற்றி இரண்டாண்டுகள் கடுமையான ஆய்வை மேற்கொண்டார். அந்த நோய்களுக்கு காரணமான நுண்கிருமிகளை கண்டறிந்து அவற்றிடமிருந்து பட்டுபுழுக்களை காப்பாற்றும் வழிமுறைகளையும் உருவாக்கினார்.

கடும் உழைப்பாளியாகவும் அறிவுகூர்மை மிக்கவராகவும் மட்டுமில்லாமல் பாஸ்டியர் மிகவும் துணிச்சல் காரராகவும் விளங்கினார். பல பரிசோதனைகளை தன்மீதே மேற்கொண்டார். அளப்பரிய சேவை செய்த லூயி பாஸ்டியர் 1895ல் காலமானார்.

இவர் கல்வி கற்றது வேதியியல் துறை என்றாலும் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியியல் துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் தன்னிகரற்று விளங்குகின்றன. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதனின் சராசரி ஆயுளை விட இன்றை மனிதனின் சராசரி ஆயுள் இரண்டு மடங்காகியுள்ளது. இந்தச் சாதனைக்கு காரணம் லூயி பாஸ்டியர் தான் என்றால் மிகையில்லை. பாஸ்டியரின் தொண்டுக்கு உலக மக்கள் அனைவரும் கடமைபட்டிருக்கிறோம். அவரது நினைவை போற்றும் வகையில் பல மருத்துவ, ஆராய்ச்சி நிலையங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் அமைந்திருக்கும் மத்திய தடுப்பூசி உற்பத்தி மையத்துக்கும் பாஸ்டியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது நமக்கு பெருமையளிப்பதாகும்.