Tuesday, September 21, 2010

’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்


றிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.

இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.

மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.


பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்

அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம்

ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.

வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.

உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.

உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.

நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.

கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.

மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.

மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.

வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment