Tuesday, September 21, 2010

நவீன ஜப்பானை உருவாக்கிய மெய்ஜி புரட்சிஜப்பான், உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு. ‘மேட் இன் ஜப்பான்என்பதே தரமான பொருளுக்கான சான்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலனிய ஆட்சியாலும் வறுமையாலும் சீர்கெட்டு பின்தங்கியிருந்தபோது, நூறு வருடங்களுக்கு முன்பே ஜப்பான் மட்டும் பொருளாதார வலிமைமிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த,  முன்னேற்றமடைந்த நாடாக மாறியது எப்போதும் வியப்புக்குரிய விஷயமாகவே பேசப்படுகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே இந்த சாதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது. அந்த மாற்றத்துக்கு வரலாறு இட்டப் பெயர் ‘மெய்ஜி புரட்சிஅல்லது ‘மெய்ஜி மீட்சிஎன்பதாகும். இந்த மெய்ஜி மீட்சி ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, உலக நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளிலும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

நான்கு பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளையும் கொண்ட ஜப்பான் நாடு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பண்டை காலம் முதலலே ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் டொகுகவா ஷோகன்கள் ஜப்பானில் செல்வாக்கு பெற்று அந்நாட்டின் பெரும்பகுதியை ஆளத்தொடங்கினர். (ஷோகன்என்றால் படைத்தலைவர் என்று பொருள்.). 1860களில் யோஷின்பு என்ற ஷோகன் ஜப்பானை ஆண்டுக் கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சியோ நவீனமயமோ இல்லாத அன்றைய ஜப்பான் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு இருந்தது. பெரும்பாலான நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. சமுராய்என்றழைக்கப்பட்ட வகுப்பினர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறப்பு சலுகைகளோடு வாழ்ந்தனர். சாதாரண மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.


1850களில் வியாபாரம் செய்வதற்காக ஜப்பானில் நுழைந்தனர் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும். இந்தியாவைப்போல ஜப்பானை தங்களது காலனி நாடாக மாற்ற அவர்களால் முடியாவிட்டாலும் அநீதியான வியாபார ஒப்பந்தங்களால் ஜப்பானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஷோகன் எதிர்த்தாலும் மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன ஆயுதங்களும் தொழில்நுட்பமும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. தம்து படைகளை பலப்படுத்த ஷோகனும் மற்ற பிரபுக்களும் நவீன ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். எனினும் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதில் ஷோகனின் இயலாமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது.

வளமான நாடு, வலிமையான ராணுவம்என்னும் கோஷத்துடம் இளம் சமுராய்கள் தலைமையில் ஷோகன் எதிர்ப்பாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு போராடினர். முடிவில், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த ஷோகன் யோஷின்பு ஜனவரி 3, 1868ல் ஆட்சியை மெய்ஜி மன்னர் மட்சுஹிடோவிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கியது தான் மெய்ஜி மீட்சி எனப்படும் சீர்த்திருத்த காலம். நன்கு கற்றறிந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற குழுவினரின் ஆலோசனைப்படி இடோவை (இன்றைய டோக்கியோ) தலைநகராகக் கொண்டு மெய்ஜி மன்னர் ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பல நூறு பகுதிகளாக நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், பல ஒன்று சேர்க்கப்பட்டு 75 பகுதிகளாக குறைக்கப்பட்டன். ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. சமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஷோகனின் படைகள் கலைக்கப்பட்டது. தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டு மேற்கத்திய பாணியில் நவீனப்படுத்தப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆறுவருட பள்ளிக்கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரிவிதிப்பு முறைகள், சட்ட-நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறை மேற்கத்திய முறையில் மாற்றப்பட்டன.


புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்ட்டு ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோமதம் அரசினால் முன்னிலைப்படுத்தப்பட்டது. மதம், ஆட்சி இரண்டுக்கும் மன்னரே தலைவராக இருந்தார். அவ்வப்போது தலைத்தூக்கிய ஷோகன் ஆதரவாளர்கள் முழுமையாக அடக்கப்பட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தனியாருடன் இணைந்து அரசு தொழிதுறையை வளர்க்க பெரும் முயற்சியில் இறங்கியது. நவீன மேற்கத்திய தொழிநுட்பம் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமெண்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.

அரசியல் சட்டப்படி 1889ஆம் ஆண்டில் டயட்எனப்படும் பாரளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதர ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறியது ஜப்பான். பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்தது ஜப்பான். அதன் ராணுவ வலிமையும் பலமடங்கு பெருகியது. தந்து பக்கத்து நாடான கொரியாவின் மீது உரிமை கொண்டாடுவதில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் 1894 போர் வெடித்தது. ஜப்பான் போரில் வென்று மேற்கத்திய நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் பிறகு ரஷியாவுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1905ல் நடைபெற்ற போரிலும் ரஷியாவை வென்று தான் ஒரு வல்லரசாக உருவாகி வருவதை உலகுக்கு காட்டியது. இந்த வெற்றிகள் ஜப்பானிய மக்களிடையே தேசிய உணர்வை அதிகரித்தன. பெருமிதம் கொள்ள வைத்தன.


1912ல் மெய்ஜி மன்னர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. மேற்கத்திய கல்விமுறையும், தொழிநுட்பமும் மக்களின் சிந்தனை போக்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. இதனால் மக்கள் அதிகப்ப்டையான அரசியல் சுதந்திரத்தை கோரினர். அரசியல் கட்சிகள் உருவாகி வலுப்பெற்றன. பழமையான கருத்துகள் மதிப்பிழந்தன. அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என கோரப்பட்டது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912-1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக இருந்தது ஜப்பானியரின் வாழ்க்கை.


1930களில் ஜப்பானில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாக பாதித்தது. அதனால் மூலப்பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையை நிறைவுசெய்ய மேற்கத்திய நாடுகளைப் போலவே காலணிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஜப்பான் இறங்கியது. இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவம் ஜப்பானிய ஆட்சியின் தலைமையை கைப்பற்றிக்கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஜப்பானின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளிலேயே ஜப்பான் உலகின் முன்னேற்றமடைந்த நாடாக மீண்டு உருப்பெற்றது. இந்த அதிசயத்துக்கு காரணம் மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிருவாகம் மற்றும் கல்வி சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும் தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

.     

No comments:

Post a Comment