எழுபத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையைச் சந்தித்துவரும் பாலஸ்தீன மக்களுக்கு எப்போது
விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள்
முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நான்கு ஆண்டுகளாக முழுமையான
முற்றுகைக்குள் வைத்திருக்கும் காஸா சுயாட்சி பிரதேசத்தின் மீது நவம்பர் 14 அன்று
தனது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். 150க்கு
மேற்பட்டவர்களை பலிவாங்கி, பாலஸ்தீனர்களின் கட்டுமானங்கள், சொத்துகளை
நாசப்படுத்திய பின் சர்வதேச அழுத்தங்களினால் போர்நிறுத்தத்துக்கு
உடன்பட்டிருக்கிறது இஸ்ரேல்.
தாக்குதலுக்கு முன்பு காஸா
1995ல்
ஏற்பட்ட ஓஸ்லோ உடன்படிக்கையின்படி வரையறுக்கப்பட்ட பாலஸ்தீன சுயாட்சி பிரதேசங்களாக
மேற்கு கரை, காஸா பகுதி, இன்னும் சில சிறுபகுதிகள் இருக்கின்றன. இவற்றில்
மத்தியத்தரைக்கடல் ஓரமாக இருக்கும் காஸா பகுதியைத் தவிர்த்து மற்ற பாலஸ்தீன
பகுதிகள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளதுடன் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலும்
வைத்துள்ளது இஸ்ரேல். ஏறத்தாழ 400 ச.கி.மீ. பரப்பே உள்ள காஸாவில் 15. முதல் 1.7
மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். உலகில் மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள பகுதியாகக்
கருதப்படும் இப்பகுதி, 2008-08ல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது முதல் திறந்தவெளிச்
சிறைப்போல இஸ்ரேலால் முற்றுகை இடப்பட்டு வருகிறது\. பாலஸ்தீன அதிபராக முகமது
அப்பாஸ் இருந்தாலும், காஸாவின் ஆட்சி அதிகாரத்தை ஹமாஸ் இயக்கத்தினர் தேர்தல் மூலம்
முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த பத்து ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு,
பொருளாதாரத்தடை, ராணுவ முற்றுகை, கூட்டுத் தண்டனை, சொத்துகளைப் பறித்தல், நாசம்
செய்தல், இழச் சுத்திகரிப்பு, இன ஒதுக்கள் என பாலஸ்தீன மக்கள் சந்தித்து வருவதைப்
போன்ற கொடுமையை நவீன உலகில் வேறெங்கும் காணமுடியாது.
ஹமாஸ் மீதான தாக்குதல் அல்ல, பாலஸ்தீன
மக்கள் மீதான தாக்குதல்.
நவம்பர் 14 அன்று இஸ்ரேல் நடத்தத் தொடங்கிய கொடூரத்
தாக்குதலுக்கு, இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள்தான் காரணம் என்று ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. நிகழ்வுகளை
வரிசைப்படுத்திப் பார்க்கையில் உண்மை அதுவல்ல என்பதை அறியலாம். நவம்பர் 7 அன்று
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அன்றே தாக்குதலுக்குத் தயாராக
இஸ்ரேல் இருந்தது. தாக்குதலுக்கு காரணத்தை உருவாக்க நவம்பர் 5 அன்றே அஸ்திவாரமிடப்பட்டுவிட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் 5ஆம் தேதி
சுட்டுக் கொன்றனர். அந்த நிகழ்வே பதட்டத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.
அடுத்து 8ஆம் தேதியன்று டாங்கிகள் ஹெலிகாப்டர்களுடன் காஸாவுக்குள்
எட்டிப்பார்த்தது இஸ்ரேல் அடுத்து, கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 12 வயது
சிறுவன் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். கோபமடைந்த பாலஸ்தீனியர்கள்
பதிலடியாக சில ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் ஏவினர். இதில் எந்தச் சேதமும்
ஏற்படவில்லை. எல்லையோரமாக நடந்த சிறு துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து நம்வம்பர்
10ஆம் தேதி கால்பந்து மைதானத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் இறுதி ஊர்வலத்தின் மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் இறந்தார். இவையெல்லாமே பாலஸ்தீனர்களை
வெறுப்பேற்றி சண்டைக்கு இழுக்க வேண்டுமென்றே இஸ்ரேல் செய்த தந்திரங்கள்.
இதற்கிடையே போர் தீவிரமாகாமல் தடுக்கும் நோக்கில் எகிப்து ஒரு சமாதான முயற்சியை
மேற்கொண்டது. ஹமாஸும் அதற்கு உடன்படவே 12ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் தயாரானது.
போர் நிறுத்தத்துக்கு உடன்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியான அஹ்மது ஜாபரியின் கைக்கு அந்த ஒப்பந்த முன்வடிவம் கிடைத்த போது நவம்பர் 14 அன்று இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றது. சமாதானம் ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்பதை இது உறுதிப்படுத்தியது. ஹமாஸின் தாக்குதல் திறனை குலைக்க வேண்டுமென்றே முக்கிய தளபதியான ஜாபரி கொல்லப்பட்டார். தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் ஆரம்பித்தது. காத்திருந்த இஸ்ரேல் உடனடியாகத் தனது மூர்க்கத் தாக்குதல்களை ஆரம்பித்தது. அத்தாக்குதல்கலுக்கு
‘மேகத்தூண்” என்று பெயரிட்டது.
மொத்தத்தில் 162 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில்
பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிவிலியன்கள். அவர்களில் 37 பேர் சிறுவர்கள், 11 பேர்
பெண்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 1400 ராக்கெட்டுகள்
பாலஸ்தீன தரப்பிலிருந்து இஸ்ரேல் மீது செலுத்தப்பட்டன. ஆனால், அதைவிட 1000 மடங்கு
வெடிமருந்துகளை இஸ்ரேல் காஸாவைத் தாக்கப் பயன்படுத்தியது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பத்திரிகை
மற்றும் ஊடகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. ஹ்மாஸ் இயக்கத்தின் இருப்பிடங்கள்
தாக்கப்பட்டதைச் சொல்லத்தேவையில்லை. காஸா பகுதியின் மக்கள் தொகையில் ஏறத்தாழ
பாதியளவினர் சிறுவர்கள் தான். தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்கள்
தான். ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைவாலும், தொடர்ச்சியான போர்ச்சூழல் காரணமாக மனநலம்
பாதிக்கப்பட்டும் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை இது மேலும் பாதிக்கும்.
மேற்கத்திய நாடுகளின்
ஆதரவும் உலகம் தழுவிய எதிர்ப்பும்
இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் அதற்கு ஆசிகூறி
வாழ்த்தியவர் அமைதித் தூதரான அமெரிக்க அதிபர் ஒபாமாதான். ”இஸ்ரேலுக்கு தன்னை
‘தற்காத்து’ கொள்வதற்கான உரிமை உண்டு. ஆகவே பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின்
தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்று கூறினார். பிற மேற்கத்திய
நாடுகளும் பல்வேறு சுருதியில் பேசினாலும், பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றன.
முக்கிய மேற்கத்திய ஊடகங்கள் அனைத்துமே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாதிகளாகச்
சித்தரிப்பதிலும் இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்பு என்று காண்பிப்பதிலும் மும்முரமாக
ஈடுபட்டன.
ஆனால், இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எகிப்து
உடனடியாகத் தனது தூதரை திரும்ப அழைத்தது. முன்பிருந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியாக
இருந்தால் உடனே இஸ்ரேலுக்கு வால் பிடித்திருக்கும். சவுதி அரேபியா, கத்தார் போன்ற
அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு நாடுகள் அமைதி காத்தன. பொதுவாக உலகம் முழுவதும் மக்களின்
ஆதரவு பாலஸ்தீனர்களுக்கு கிடைத்தது. உலகின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், டெல்லி
உள்பட, இஸ்ரேலின் மனிதத் தன்மையற்றச் செயலைக் கண்டித்தும் போர் நிறுத்தம் கோரியும்
போராட்டங்கள் நடந்தன. எகிப்து பிரதமர் தாக்குதல் தொடங்கிய இரண்டாவது நாளே
காஸாவுக்கு சென்று பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார். முன்பு
இஸ்ரேலின் ஆதரவு நாடாக இருந்த துருக்கியும், 2010ல் துருக்கிக் கப்பல் மீது
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து எதிரி நாடாக மாறிவிட்டது, கடும் கண்டனத்தைத்
தெரிவித்தது.
இஸ்ரேலின் எதிர்கட்சிகளின் ஒன்றான இடதுசாரி ஹடாஷ் கட்சியின்
எம்.பி. டவ் கெனின் கூறியது இங்குக் குறிப்பிடத்தக்கது: தலைவர்களைப் படுகொலை
செய்வது எப்போதுமே தீர்வாகாது. ஒரு தலைவரை கொன்றால் நிச்சயம் மற்றொருவர் அந்த
இடத்துக்கு வருவார். நாம் மீண்டும் இதே துப்பாக்கியும் ரத்தமுமாக மற்றொரு சுழற்சிக்கு
வரவேண்டியதுதான்:.
இஸ்ரேலின் தாக்குதல் நோக்கமும்
பின்னணியும்
இஸ்ரேலின் இத்தாக்குதலுக்கு பின்னணியில் பல காரணங்கள்
இருப்பதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் உண்மையில் தாக்க நினைப்பது இரான் நாட்டைத் தான்.
அதற்கு முன்னோடியாகத்தான் அது இரானின் நட்பு சக்தியான ஹமாஸை சீண்டியிருக்கிறது.
இரான் மீது போர் தொடுக்கும் போது ஹமாஸ் தலையிடாமல் முன்கூட்டியே அதை அழிப்பது
திட்டமாக இருக்கலாம். அடுத்து ஜனவரியில் நடக்கப்போகும் பிரதமர் பதவிக்கான தேர்தல்.
சமூக நலப் பிரச்னைகள், பொருளாதாரப் பிரச்னைகள் என தேர்தலுக்கு முன் தான்
சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைத் திருப்ப இத்தாக்குதல்
திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எகிப்தின் புதிய அரசாங்கத்தை
மதிப்பிடுவதற்கும் இருக்கலாம். அல்லது இரானுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவும் இது
இருக்கலாம். அல்லது தான் புதிதாக உருவாக்கியிருக்கும் இரும்பு கூம்பு என்ற
ஏவுகணைத் தடுப்பு கவசத்தைச் சோதிப்பதற்காகவும் இஸ்ரேல் இச்சண்டையை
தொடங்கியிருக்கலாம்.
இஸ்ரேல் மீது நம்பிக்கையற்ற பாலஸ்தீன ஆணையம் ஐ.நா.வில்
பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதாக இருந்தது. பாலஸ்தீனத்தின் சுதந்தர
நாட்டுக் கோரிக்கையை அங்கீகரிப்பதில் இது ஒரு முன்னேற்றமாக இருக்கலாம். அதைத்
தடுப்பதற்காக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம். சமீப காலமாக ஒபாமாவின் அரசு
மத்திய கிழக்கு அரசியலில் இஸ்ரேலுக்கு அப்பாற்பட்டு சுதந்தரமான கொள்கையை
வகுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே, அமெரிக்காவின் மத்திய கிழக்கு அரசியலில்
தாங்கள் வகித்துவந்த முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இத்தாக்குதல்
நடந்திருக்கலாம். மேலும், இரான் விவகாரத்தி,ல் ராணுவத் தலையீட்டைவிட ராஜதந்திர
ரீதியில், சில சலுகைகள் காட்டி இரானை பணியவைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக இஸ்ரேல்
நம்புகிறது. அதைத் தடுக்கவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கலாம். மொத்தத்தில்
காஸாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது தான் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் 75,000 வீரர்களையும், விமானப்படை மற்றும் கப்பல் படை அனைத்தையும்
தயார்நிலையில் இருக்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
போர் நிறுத்தம் : புதிய எகிப்து அரசின்
முதல் வெற்றி
போரை நிறுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே முயன்று அதைச்
சாதித்துக் காட்டியது எகிப்தின் புதிய அரசு. ஆரம்பத்தில் மொராக்கோ அரசு
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தது. அதை அமெரிக்கா
தடுத்துவிட்டது. முதலில் எகிப்தும் கத்தார் நாடும் இணைந்து சமாதான முயற்சியில்
ஈடுபட்டன. பிறகு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் எகிப்துக்கு நேரடியாக
வந்துவிட்டார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் வந்து
சேர்ந்துகொள்ள எகிப்து அதிபர் முகமது மோர்சியின் சமாதான முயற்சிக்கு பலன் கிடைத்தது.
போரை நிறுத்திக்கொள்ள ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்புக்கொண்ட
நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தாக்குதலை நிறுத்திக்கொள்ள
சம்மதித்தர். உலக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், மனித உரிமை
ஆர்வலர்களின் முயற்சிகளும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு
வகித்தன.
யாருக்கு வெற்றி
இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு தருப்புகளுமே தாங்கள் வெற்றியடைந்துவிட்டதாகக்
கூறிக்கொள்கின்றன. தங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஒருவேளை
அப்பாவி பாலஸ்தீனியர்களைக் கொன்றது, இரும்பு கூம்பு ஏவுகணைக் கவசத்தைச் சோதித்தது,
கனரக ஆயுதங்களைச் சோதித்துப் பார்த்தது போன்றவை இஸ்ரேலின் நோக்கங்களாக இருந்தால்
அவர்கள் கூறுவது சரிதான். மேலும் போர்நிறுத்தத்தின் மூலம், தாங்கள் ஏற்படுத்திய
சேதத்துக்கு எவ்வித இழப்பீடும், தண்டனையும் இல்லாமல் இஸ்ரேல் தப்பித்துக்கொண்டது.
சர்வதேச அரங்கைப் பொறுத்தவரையில் இஸ்ரேலுக்கு ஆதரவு
குறைந்துகொண்டுதான் வருகிறது. அமெரிக்காவின் வீட்டொ அதிகாரம் தான் ஐ.நா.
நடவடிக்கையிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்றி வருகிறது. “மக்களின் விருப்பம்
ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டம் தான் என்ற பாடத்தை தற்போது நடந்துள்ள சம்பவம்
அளித்துள்ளது” என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மிஷால். எகிப்தில் ஆட்சி
மாற்றம் நடந்து இன்னும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்தாலும்,
பாலஸ்தீனத்துக்கான தங்கள் ஏகோபித்த ஆதரவை எகிப்தியர்கள் வீதிகளில் இறங்கித்
தெரிவித்தனர். சில காலமாக மத்திய கிழக்கு அரசியலில் முக்கியத்துவத்தை இழந்திருந்த
எகிப்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதன் மூலம் பிராந்தியத்தின் முக்கிய
சக்தியாகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
என்று முடியும் இத்துயரம்
அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதாலும், தங்கள் தலைவர் ஒருவர்
கொல்லப்பட்டதன் காரணமாகவும்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
நடத்தினர். இதைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேலின்
மூர்க்கத்தனமான தாக்குதலை மட்டும் தற்காப்பு என்று நியாயப்படுத்துவதுடன் நம்மை
நம்பவும் சொல்கின்றன. பாலஸ்தீனத்தில் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய
அமைப்புதான் ஹமாஸ். அதை அங்கீகரிக்க மறுக்கிறது இஸ்ரேல். ஆழமாக ஆராய்ந்து
பார்த்தோமானால், இஸ்ரேலின் பாதுகாப்பு உண்மையில் இஸ்ரேலின் கைகளில் தான்
இருக்கிறது. பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதை நிறுத்தாதவரையில் இஸ்ரேலில் யாரும்
நிம்மதியாகத் தூங்க முடியாது. இது இஸ்ரேலே ஏற்படுத்திக்கொண்ட நிலைமை. நாகரிகமும்
பழமையான கலாசாரமும் கொண்ட மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை
அறுபதாண்டுகளுக்கும் மேலாக இரண்டாம் தர மனிதர்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனர்களை சுதந்தரமாக வாழவிடாத வரையில் தனது எதிர்காலத் தலைமுறையினருக்கு
அமைதியான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை இஸ்ரேல் நிச்சயம் வழங்க முடியாது. புராணக்
கதைகளின் பெயராலும், வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியாலும் பாலஸ்தீனர்கள்
அனுபவித்துவரும் துயரங்களுக்கு முடிவுதான் எப்போது?
----------------------------------------------------------------------------------------
பாலஸ்தீனம் மீதான முந்தைய தாக்குதல் (2008-09)
2008 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று மிகபெரிய அளவில்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்பாவி பொதுமக்களின் மீது தடை
செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்பட, அனைத்து வகையான நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்
நடத்தப்பட்டது. காசாவில் 1400 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் 80 சதவிதமானவர்கள்
அப்பாவி பொதுமக்கள். அவர்களில் 300 பேர் குழந்தைகள். 5000க்கு மேற்பட்டவர்கள்
காயமடைந்தனர். அவர்களின் 1600க்கு மேற்பட்டவர்கள் பச்சிளம் குழந்தைகள் மற்றும்
சிறுவர்கள். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள்,
தொழிற்சாலைகள், பொருளாதார மையங்கள், ஐ.நா. அலுவலகம், அரசு அலுவலகங்கள் என எதையும்
அவர்கள் விட்டுவைக்க வில்லை. விளை நிலங்கள் நாசப்படுத்தப்பட்டதுடன், நீர்பாசன
அமைப்புகள், மின்சாரம் தயாரிக்குமிடங்கள், அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. ஐ.நா.வும்
சரி, உலக நாடுகளும் சரி இஸ்ரேல் நடத்திய நாச வேலைகளை கைக்கட்டி
வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தன. இத்தாக்குதல் 22 நாள்கள் தொடர்ந்தது. இத்தனை
போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட பின்னரும்கூட இதற்காக எந்த இஸ்ரேலிய அதிகாரியோ
அல்லது அரசியல் தலைவரோ விசாரிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.
--------------------------------------------------------------------
ஆப்பரேஷன் “மேகத்தூண்”
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தின்மீது தற்போது நடத்தியிருக்கும்
தாக்குதலுக்கு வைத்திருக்கும் பெயர் தான் ”மேகத்தூண்” யூதர்களின் வேதத்தில்
எகிப்தியர்களை எதிர்த்துப் போரிடப்போகும் யூதர்களுக்கு அவர்களின் கடவுள் துணையாக
வருவதாக ஒரு நிகழ்வு கூறப்படுகிறது:
“அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு,
கர்த்தர் பகலிலே அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு
வெளிச்சங்காட்ட நெருப்புத்தூணிலும் அவர்களுக்கு முன் சென்றார்” - யாத்திராகமம் 13:21
தாங்கள் நடத்தப்போகும்
பச்சைப் படுகொலைகளையும், அநியாய ஆக்கிரமிப்புகளையும் கேள்வி கேட்காமல் இஸ்ரேலியர்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய இந்த ஆக்கிரமிப்புக்கு கடவுள் துணைக்கு வருகிறார் என்ற அர்த்தத்தில் இவ்வாறு பெயரிட்டுள்ளனர். இஸ்ரேலியர்களிடம் தான் இந்தப் பெயர். பைபிள் கதையை அறியாத பிற சமூக மக்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதால் சர்வதேச ஊடகங்களுக்கு ‘தற்காப்புத் தூண்” என்ற பெயரை இஸ்ரேல் சிபாரிசு செய்கிறது.
No comments:
Post a Comment