Wednesday, February 27, 2013

எல்லைத் தாண்டும் பாகிஸ்தான் – தீ ர்வு என்ன?


எப்போதெல்லாம் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறதோ, எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றனவோ, அப்போதெல்லாம் அந்தச் சூழ்நிலையைச் சீரழிக்க பாகிஸ்தான் ராணுவம் முயல்வது வழக்கம். இந்தமுறை அவர்கள் செய்த காரியம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கோபப்பட வைத்திருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் (எல்.ஓ.சி.) காவல் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய வீரர்களை, எல்லைத் தாண்டி வந்து கொன்ற பாகிஸ்தானிய ராணுவத்தினர், ஒருவருடைய  தலையைத் துண்டித்து எடுத்துசென்றுள்ளனர்.
சம்பவம் நடந்தது 8 ஜனவரி 2013 அதிகாலைக்கு முன்பாக. ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியான மெந்தர் செக்டார் பகுதியில் எல்லையோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை ஒட்டி இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ராஜ்புதனா ரைஃபிள்ஸ் ரெஜிமெண்டின் 13வது பட்டாலியனில் லான்ஸ் நாயக் ஆகப் பணியாற்றிய வீரர்களான ஹேம்ராஜ், சுதாகர் சிங் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட அணியினர். இரண்டிரண்டு பேர்களாகப் பிரிந்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோசமான தட்பவெப்பநிலை காரணமாக எதிரில் இருப்பவர் யாரென அடையாளம் காண முடியாத அளவுக்குப் பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம். ஹேம்ராஜும் சுதாகர் சிங்கும் அந்த இடத்திலேயே பலியானார்கள். என்ன நடக்கிறது என்று அறிய முடியாத நிலையில் சக வீரர்கள் துப்பாக்கிச் சத்தம் வந்த திசைநோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். காலையில் பனிமூட்டம் விலகும்வரையில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. அப்போது, பாகிஸ்தான் சிறப்பு அதிரடிப்படையின் கருப்பு சீருடையணிந்த நபர்களின் நடமாட்டத்தை ரோந்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பார்த்தனர்.
முற்பகல் 11.30 மணிக்கு பனியில் உறைந்துகிடந்த ஹேம்ராஜ், சுதாகர் சிங் இருவரின் உடல்களையும் கண்ட சக வீரர்கள் அதிர்ந்து போனார்கள். சுதாகர்  சிங்கின் கழுத்துப் பகுதியில் ஆழமான காயங்கள் தென்பட்டன. ஹேம்ராஜின் தலை துண்டிக்கப்பட்டு, தலையற்ற உடல் மட்டும் அங்கே கிடந்தது. தலையை அவர்கள் வெற்றிக்கோப்பையைப் போல எடுத்துச் சென்றிருந்தார்கள்.
இது தீவிரவாதிகளின் செயலல்ல!
இரண்டு வீரர்களை பலிகொண்ட தோட்டாக்கள் வந்த திசையையும், பதிலடியில் ஈடுபட்ட இந்திய படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தானியரின் சாவடி இருந்த உயரமான பகுதியையும் ஒப்புநோக்கினால் ஓர் உண்மை புரியும். பிற இந்திய வீரர்களைத் திசைத் திருப்பவும், இந்திய வீரர்களைக் கொலைசெய்ய வந்தவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும் பாகிஸ்தான் ராணுவத்தில் பலூச் ரெஜிமெண்டைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் சுட்டிருக்கின்றனர். ஆனால், தலைத் துண்டிப்புச் செயலைச் செய்தவர்கள், பாகிஸ்தானின் சிறப்பு அதிரடிச் சேவை குழு கமாண்டோக்கள் (எஸெஸ்ஜி). அவர்களின் நோக்கம் இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதும், அமைதி முயற்சிகளைத் தடுப்பதும்தான் என்பது தெளிவு.
இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாமலில்லை. ஜன 5, 6 தேதிகளில் யூரி பகுதியில் இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி வந்து தாக்கியதில் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவர் பலியானதாக ஒரு  பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் எழுப்பியது. அதற்காக ஜனவரி 7ம் தேதி ராணுவ செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எம்.ஓ.) மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தது. அழைப்பு விடுத்த அதே நாளில் இந்தியத் துணை தூதர் கோபால் பக்லேவிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தக்குற்றச்சாட்டை அப்போதே இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் மறுத்தார்
அவர்களின் குற்றச்சாட்டு உண்மையானால் அதை டி.ஜி.எம்.ஓ.  மட்டத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டிருப்பார்கள். பாகிஸ்தான் முன்வைத்த இந்தப் பொய்ப்பிரசாரத்தையும் செயல்பாட்டையும் காணும்போது 8ம் தேதி தாக்குதலைத் திட்டமிட்டுவிட்டு, அதை நியாயப்படுத்தக் காரணங்கள் தேடித்தான் இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தலையைத் துண்டிக்கும் கொடுஞ்செயல் நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு மூன்று முறை இந்தக் காட்டுமிராண்டித்தனம் நடத்தப்பட்டு 4 வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மந்தமான பதில் நடவடிக்கைகள்
சம்பவம் நடந்ததும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் வரவழைக்கப்பட்டு, அவரிடம் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு நடந்த சம்பவத்தை அடியோடு மறுத்தது. மேலும், இந்திய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி ஐ.நா.வின் ராணுவக் கண்காணிப்பு குழுவினர் மூலம் விசாரணை நடத்தலாம் என்று யோசனை கூறியது. காஷ்மிர் விஷயத்தில் சர்வதேசத் தலையீட்டை லாகவமாகப் புகுத்தப் பார்த்த பாகிஸ்தானின் யோசனையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
‘நடந்த சம்பவத்தை இந்தியா மிக வன்மையாகக் கண்டிக்கிறது… என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்யப்படும்’ என்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி. பாகிஸ்தான் தனது பங்குக்கு ஆக்கிரமிப்பு காஷ்மிருக்கு இந்திய காஷ்மிர் பகுதியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 25 லாரிகளைத் தடுத்து நிறுத்தியது. மேலும், சரக்குகளைக் கொண்டு  செல்லத் தயாராக இருந்த 65 லாரிகள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன. இரண்டு காஷ்மிர் பகுதிகளுக்கும் இடையே நடந்துவந்த பேருந்துப் போக்குவரத்தையும் பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. நிலைமையின் தீவிரம் இப்படி இருக்கையில் 10ம் தேதி மாலை அதே இடத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கியது பாகிஸ்தான். இந்திய தரப்பில் அதற்குப் பதிலடியும் தரப்பட்டது.
இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் நடக்கும் மோதல்களுக்குத் தீர்வுகாண இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையே கொடி சந்திப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. எதிர்த்தரப்பில் இருந்து சுமூகமான பதில் வரவில்லை. தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்களும் எச்சரிக்கைகளும் எழத்தொடங்கின. ‘பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்தால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ‘மாற்று வழி’களை நாடவேண்டிய நிலை ஏற்படும்’ என்று எச்சரித்தார் இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரவுன். ‘இந்திய வீரர்களின் உடல்  சிதைக்கப்பட்டு தலைத் துண்டிக்கப்பட்ட செயலானது மிகவும் துயரமானது, துரதிருஷ்டவசமானது, மனிதத்தன்மையற்றது… இந்தச் சிக்கலைத் தீர்க்க  நீங்கள் விரும்பினாலும், நடந்த உண்மையை வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர்தான் அது சாத்தியமாகும்’ என்று தனது முந்தைய நிலைப்பாட்டை  சற்று கடினமாக்கிக் கொண்டார் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான குர்ஷித்.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலும் உடல்  சிதைக்கப்பட்டதிலும் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும், அத்தகைய தாக்குதலே நடக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவந்ததாலும் இரண்டு வீரர்கள் பலியான தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமான விளக்க அறிக்கையை வெளியிட்டது. 14ம் தேதி இருநாட்டு பிரிகேடியர் மட்டத்திலான கொடி சந்திப்பின் முடிவு மகிழ்ச்சிகரமாக இல்லையென்றாலும் முயற்சிகள் தொடர்ந்தன. இதற்கிடையே இந்தியா தன்னால் ‘முடிந்த’ சில ராஜதந்திர நடவடிக்கைகளை  மேற்கொண்டது. மூத்த பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியா வந்து சேர்ந்த பிறகு விசா பெறும் திட்டத்தை அரசு ஒத்தி வைத்தது. இந்திய ஹாக்கி லீகில் விளையாடவந்த பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மக்களின் கோபத்தைத் தணிக்கும் விதமாகவும், ராணுவ வீரர்களின் மனஉறுதியை வலுவாக்கும் விதமாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங் பாகிஸ்தானுக்கு ஜன. 14ம் தேதி கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்: ‘போர் நிறுத்த உடன்படிக்கை கடைபிடிக்கப்படுகிறவரை நாம் அதை உறுதியாகப் பின்பற்றுவோம். நாம் உரிய நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நமது நிலைகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூடுகளுக்குக் கொடுத்த பதிலடி அளவானது, சரியானது… பிரிகேடியர் மட்டத்திலான கொடி சந்திப்புக்குப் பிறகும்கூட அந்நாடு போர்நிறுத்த ஒப்பந்தத்தை 3 முறை மீறியிருக்கிறது… பாகிஸ்தான் ராணும் மற்றும் தீவிரவாதிகளின் எந்தச் சவாலையைம் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.’
சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்களைத் தண்டிக்காவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும். அந்தச்சம்பவத்தை அப்பட்டமாக மறுத்துக்கொண்டிருப்பதையோ, உரிய முறையில் பதில் அளிக்காமல் இருப்பதையோ இந்தியா கண்டுகொள்ளாது என்றோ, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்றோ வழக்கம் போல உறவுகள் தொடரும் என்றோ பாகிஸ்தான் கருதக்கூடாது என்று இந்தியா அதிகாரபூர்வமாக எச்சரித்தது.
இறுதியாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானை நாகரிகமான வார்த்தைகளில் எச்சரித்தார்: ‘இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் சுமூக உறவு என்பது சாத்தியமில்லை. இதற்குக் காரணமானவர்கள் நீதிக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் இதைப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.’
இந்திய பிரதமர், அரசியல் தலைவர்கள், ராணுவம் ஆகியவற்றின் கடுமையான நிலைப்பாட்டையும் எச்சரிக்கையையும் கண்ட பாகிஸ்தான் ராணுவம் இறுதியாக இறங்கிவந்தது. எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக உறுதியளித்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று தனது சிப்பாய்களுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுகோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய இந்தியாவின் அனைத்துக் கவலைகளையும் பகிர்ந்துகொள்ள, இந்திய வீரர்களின் தலைத் துண்டிப்பு தொடர்பான விசாரணை உள்பட, அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அதன் ஹைகமிஷனர் சல்மான் பஷீர் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர்களின் மட்டத்திலான பேச்சுவார்த்தைப் பாகிஸ்தான் விடுத்த அழைப்பை ‘தற்போதைக்கு அவசியமில்லை’ என்று இந்தியா மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலின் பின்னணி
பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்களுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2003ம் ஆண்டில் வாஜ்பாய் – முஷாரஃப் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு ஓரளவுக்கு மிகவும் அமைதியாகவே காணப்பட்ட இருநாட்டு உறவுகள்? 26/11 மும்பைத் தாக்குதல் மூலம் பெரும் பாதிப்புக்குள்ளானது. உள்நாட்டில் மத அடைப்படைவாதத் தீவிரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தான், இந்தியா குறித்த தனது நிலையை மெல்ல மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. வர்த்தக, கலாசார உறவுகளில் ஆர்வம் காட்டப்பட்டது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப், ‘தீவிரவாத அச்சுறுத்தலுக்கு’ எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார். பாகிஸ்தானின் ராணுவ  சித்தாந்தத்தை மறுவரையறை செய்வது குறித்துப் பேசினார்.
பாகிஸ்தானில் இருந்து சமாதானப் புறா பறக்க முயல்வதைக் கண்ட இந்திய அரசும் வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமல்லாத உறுப்பினராகப் பாகிஸ்தானைத் தேர்வுசெய்ய உதவியது; விசா நடைமுறைகளைத் தளர்த்தியது.
காஷ்மிர் மாநிலத்திலும் முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. ஊடுருவல்களும் 45% அளவுக்குக் குறைந்திருந்தன. மாநிலத்தின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. இயல்பு வாழ்க்கையும் ஓரளவுக்கு அமைதியாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது.
இத்தகைய நட்புறவான அமைதி நிலை ஏற்படுவதை போர்க்கொள்கையை நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்நாட்டு ராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கும் மத அடிப்படைவாத எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தியாவை நட்பு நாடாக ஏற்றுக்கொள்வது உவப்பானதாக இல்லை. இந்தியாவை இஸ்லாமியர்களுக்கு எதிரான சக்தியாகக் காட்டுவதும், காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைகளை அதிகரிப்பதும் இவர்களுடைய கொள்கைகள்.
பாகிஸ்தான் ராணுவத்தின் மற்றொரு பிரிவினரின் கவலை வேறுவிதமானது. தாலிபன் மற்றும் பிற மத அடிப்படைவாதத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் பாகிஸ்தானை ஏறக்குறைய செயலிழக்கச் செய்துவருகின்றன. இந்திய எல்லையில் பதற்றம் குறைந்திருக்கிறது. இந்த இரு சூழ்நிலைகளும் பாகிஸ்தானின் ஆயுதத் தேவையை மாற்றியமைத்திருக்கின்றன. பெரிய ஆயுதங்களுக்கான தேவை குறைந்து தீவிரவாதிகளுடன் சண்டையிடத் தேவையான சிறு ஆயுதக் கொள்முதல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்தப்பிரிவினரின் கமிஷனைப் பாதிக்கும் என்பதால் அவர்களும் இந்தியாவுடனான நட்புறவை எதிர்க்கின்றனர்.
இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. ஆஃப்கானிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கப்படைகள் வெளியேறவுள்ளனர். அதன்பிறகு தாலிபன்களின் கொட்டம் அதிகரித்துவிடும். பாகிஸ்தானிலும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை மேலும் விரிவுப்படுத்துவார்கள். இதுவரை அவர்களை அமெரிக்கப்படை கவனித்துக்கொண்டது. அவர்கள் சென்ற பின்னர் ஏற்கெனவே உள்ள உள்நாட்டு அச்சுறுத்தல்களுடன் இதுவும் சேர்ந்துகொள்ளும். ஆகவே பயங்கரவாதச் சக்திகள் அனைத்தையும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, காஷ்மிர் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நோக்கித் திருப்பிவிட்டுவிட்டால் தங்கள் தலைவலி குறையும் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை திட்டமிடுகிறது. இதன்மூலம் தங்களுக்கே ஆபத்தாக மாறிவிட்ட, தங்களால் அடக்கமுடியாத பயங்கரவாதிகளை இந்தியாவை நோக்கித் திருப்பி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க  பாகிஸ்தான் ராணுவம் முயல்கிறது.
பதிலுக்குப் பதில் தீர்வாகுமா?

யுத்த தர்மத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ்த்தரமான செய்கை மக்களை உணர்ச்சி வசப்படச் செய்துள்ளது. விளையாட்டிலேயே அந்நாட்டை எதிரியாகப் பார்க்கும் நம் மக்கள் உணர்ச்சி வசப்படுவதில் வியப்பில்லை. ஆனால், மக்களுக்கு உண்மையையும், நடைமுறைகளையும் எடுத்துச்சொல்ல கடமைப்பட்ட ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிகளை மேலும் தூண்டுவதிலேயே ஈடுபட்டுள்ளன. நமது வீரர்களின் மன உறுதி குலைந்துவிடாமல் இருப்பதற்காகப் பழிக்குப் பழிப் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பலர் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுடச்சுடத் தகவல்கள் அளிக்க வேண்டுமென்ற வேகத்தில் தலைத்துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பெயரையும் மாற்றியெழுதிய இந்தியாவின் முன்னணி இதழ்கூட போருக்கு அழைப்புவிடத் தவறவில்லை.
பாகிஸ்தான் அடிக்கடி செய்வதைப் போல கமாண்டோ வகைத் தாக்குதல்கள் நடத்திவிட்டு நாம் செய்யவே இல்லை என்று மறுத்துப் பேசலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர்களோ போர்ப் பிரகடனமே செய்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஹேம்ராஜ் தலையை பாகிஸ்தான் திருப்பி அனுப்பாவிட்டால்,அதற்குப் பதிலாக பத்து பாகிஸ்தானிய தலைகளைக் கொண்டுவர வேண்டுமென்றார். உணர்ச்சிகரமான முடிவுகள் எத்தகைய அழிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பற்றி இவர்கள் சற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள், ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுத்துவந்தது போர்நிறுத்த உடன்படிக்கை தான் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க யாரும் விரும்பவில்லை. அதற்காக பாகிஸ்தானியர்களின் இந்தக்கொடுஞ்செயலை மன்னித்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டாக வேண்டும். இருதரப்பு உறவைக் கெடுக்க முயலும் எந்தச் சூழலையும் அனுமதிக்கக் கூடாது.
சுமூகமான அயலுறவும்,  நம்பிக்கைத்தரக்கூடிய செயல்பாடுகளும்தான் நமது இப்போதைய தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படாமல் முடக்கும் வல்லமை பெற்ற ராணுவம், பாகிஸ்தானின் சாபக்கேடு. எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆதாயம் தேட பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் முயலுகையில், பாகிஸ்தானின் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டியதுதான் நமது கடமை, நமது தேவையும்கூட.
கட்டுப்பாட்டுக்கோடு :
சில தகவல்கள்
1947ல் காஷ்மிர் தொடர்பாக நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. அப்போது, இருதரப்பு படைகள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையைத் தொடர்வதென முடிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஜம்மு காஷ்மிர் மாநிலமாகவும், பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் இருந்த பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு பகுதிகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதி, கட்டுப் பாட்டுக்கோடு (எல்ஓசி) என்று அழைக்கப் படுகிறது. 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்ட போது இக்கட்டுப்பாட்டுக்கோடு சில மாற்றங்களுடன் இறுதி யாக வரையறுக்கப்பட்டது. அந்நிலையே இன்றுவரை தொடர்கிறது. எல்ஓசி என்பது சர்வதேச எல்லை அல்ல.
எல்ஓசியின் நீளம் ஏறத்தாழ 778 கி.மீ. இந்திய ராணுவத்தின் 6 டிவிஷன்களைச் சேர்ந்த 72,000 வீரர்கள் அந்த எல்லைக் கோட்டை காவல் செய்கின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் முள்வேலி அமைக்கப் பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு எது என்று துல்லியமாக யாராலும் கூற முடியாது. கட்டுப்பாட்டுக் கோட்டின் மீது வேலி அமைப்பதற்கு பாகிஸ்தாஸ் ஆட்சேபம் தெரிவித்ததால், இந்திய பகுதிக்குள்ளேயே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மோசமான நில அமைப்பு காரணமாக சில இடங்களில் இந்திய பகுதிக்குள் எல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில்கூட வேலி அமைக்கப்பட்டுள்ளது.  12 அடி உயரம், 4 அல்லது 9 அடி அகலம்  அளவுக்கு வேலி உள்ளது. வேலிக்கு அப்பால் இருதரப்புப் பகுதிகளிலும் ஆங்காங்கே கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டுக்கோட்டில் வேலி அமைக்கப்படுவதற்கு முன்பு, எல்லைத்தாண்டிய தீவிரவாத ஊடுருவல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 ஆக இருந்தது. தற்போது அது ஆண்டுக்கு 150 ஆகக் குறைந்துவிட்டது. எல்லைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு கி.மீ இடைவெளிக்கும் 4 முதல் 7 காவல் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 5 முதல் 8 வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இரவு நேர ரோந்துப் பணியின்போது பேசக்கூடாது, டார்ச்லைட், செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது, இருமல் தவிர்க்கப்பட வேண்டும். சிறு சலசலப்புச் சத்தம்கூட துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாகிவிடும் என்பதால் இப்படிப் பல கட்டுப்பாடுகள்.

No comments:

Post a Comment