Thursday, February 14, 2013

எப்படியும் விளையாடலாம், எப்படியும் சம்பாதிக்கலாம்அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தைய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், தான் ஊக்க மருந்து பயன்படுத்தி வந்துள்ளதை சமீபத்தில் ஒப்புக்கொண்டார். டூர் டி ஃபிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் 7 முறை சாம்பியனான லான் ஆர்ம்ஸ்ட்ராங் வென்ற அனைத்துப் பட்டங்களும் பறிக்கப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகளில் இனி கலந்துகொள்ளவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் தனது அளப்பறிய தன்னம்பிக்கை மூலம் நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தவறை பகிரங்கமாக அவர் ஒப்புக்கொண்டாலும் இதுவரை அவர் பெற்றிருந்த புகழை ஒரே நாளில் களங்கப்படுத்திவிட்டது அவரது செயல். இவரை ரோல் மாடலாக நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், இளைஞர்கள் மற்றும் பிற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இவரது செயல் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் என்பது நமக்கு புதிதல்ல. சூதாட்டத்தை நடத்துபவர்கள் தங்களின் தேவைக்கேற்ப போட்டி முடிவுகளைப் பெற கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு முடிவுகளை மாற்றுவார்கள். ஒரே நாளில் பல்லாயிரங்கோடி பணம் புழங்கும் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ பற்றியெல்லாம் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். பணம் அதிகம் புழங்கும், கோடிக்கணக்கான பார்வையாளர்கள் கொண்ட விளையாட்டு போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவது பற்றி அடிக்கடி கூறப்ப்படுவதுண்டு. தற்போது இந்தப் பட்டியலில் கால்பந்து விளையாட்டும் சேர்ந்துள்ளது. இந்தத் தகவல் உண்மை என்று நிரூபிக்கப்படும் நிலையில் உலக விளையாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய சூதாட்ட முறைகேடாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், சாம்பியன் லீக்ஸ் ஆட்டங்கள் உள்பட கிட்டத்தட்ட 680 கால்பந்து போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ நடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் உள்பட 425 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு போட்டிக்கு ரூ 72 லட்சம் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றிய தீவிர விசாரணை முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஒரு நாளில் நடைபெறும் சூதாட்டத்தின் சராசரி மதிப்பு மட்டும் ரூ 15,900 கோடியாம். மலைப்பாக இருக்கிறதா?

வங்கிகள், நிதிநிறுவனங்கள் முறைகேடுகளில் இறங்குவதும் காலங்காலமாக நடப்பதுதான் என்றாலும் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் ஒன்று உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பன்னாட்டு வங்கியான ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து (ஆர்.பி.எஸ்.), தனது வணிகத்தைப் பெருக்குவதற்காக வரி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வங்கியின் முறைகேடான நடவடிக்கைக்காக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை மட்டுமே சுமார் ரூ 3240 கோடி என்றால் முறைகேட்டின் அளவை ஊகித்துக்கொள்ளுங்கள். ஜே.பி.மார்கன், டாயிட்ஸ் வங்கி, சிட்டி குரூப் போன்ற வங்கிகள், நிதிநிறுவனங்களும் இம்மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவை பற்றி விசாரணை நடந்துவருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு எச்.எஸ்.பி.சி. வங்கியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இங்குக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் ஆர்.பி.எஸ். வங்கி, பொருளாதார சரிவின் காரணமாக திவால் நிலையில் இருந்தபோது பிரிட்டன் அரசு அதில் 81% முதலீடு செய்து வங்கியை காப்பாற்றியது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே பொதுவான ஒரு அம்சம் இருக்கிறது: எந்த வழியிலாவது பணத்தையும் புகழையும் சம்பாதிக்க வேண்டும். புகழும், அதன்வழி கிடைக்கும் பணமும் தான் லான் ஆம்ஸ்ட்ராங்கை ஊக்க மருந்தை நாடச் செய்தது. இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் வாழவேண்டும் என்பதெல்லாம் கேலிக்குரிய பேச்சாகிவிட்டது. போகும் வழி முக்கியமல்ல, எப்படியாகிலும் அது குறுக்கு வழியாக இருந்தாலும், அதன் மூலம் விரைவில் பணம், புகழ் இரண்டையும் சம்பாதித்துவிட வேண்டும் என்பதே ஆம்ஸ்ட்ராங்கின் செயலுக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் வணிகமாகிவிட்ட நிலையில், அவற்றின் அங்கமான வீர்ர்களும் நடுவர்களும் அந்த வலையில் வீழாமல் தப்புவது மிகவும் கடினம். வணிக நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். அதற்காக எதையும் செய்ய அவை தயங்குவதில்லை. சமூகப் பொறுப்பு, நேர்மை, நாணயம், தார்மீகப் பொறுப்பு, நிலையான கொள்கை என எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. சட்டத்தை வளைப்பது, விதிகளை மீறுவது, தவறான தகவல்களை அளிப்பது, போலி உறுதிமொழிகள் என எந்த வழியிலாவது பணத்தை ஈட்டவேண்டும் என்பதுதான் நவீன காலத்து வணிக நெறிமுறையாக மாறிவிட்டது போலும். தற்போது உலகில் நிலவும் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது இத்தகைய தார்மிக, ஒழுக்க நெறிமுறையற்ற வணிகமும், பேராசைக் குணமும் தான். நமக்குத் தொடர்பில்லாத விஷயங்களாக இவைத் தெரிந்தாலும், உண்மையில் இவை நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. நுகர்வு கலாசாரத்தின் மீதான பற்று, ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளைவிட்டு விலகிய வாழ்க்கை முறை, சக மனிதர்கள், உறவுகளைவிட பணமே பிரதானம் என்று கருதும் வாழ்க்கை முறை போன்றவை நம்மை இந்த நிலைக்கு இட்டுச்செல்கின்றன. வருங்காலச் சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை அளிக்க விரும்பினால், மாற்றத்தை இப்போதே தொடங்குவோம், அதையும் நம்மிடமிருந்தே தொடங்குவோம்!

No comments:

Post a Comment