Wednesday, February 27, 2013

ஆசிட் அரக்கர்கள்


டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் இழைக்கப்படும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. ஒருதலை காதல், காதல் ஏற்றுக்கொள்ளப்படாதது போன்ற காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் ஊற்றப்பட்டத்தில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இச்சம்பவங்கள் நாம் நாகரிகமான உலகத்தில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் 23 வயது விநோதினி. விநோதினி சென்னையிலுள்ள ஒரு தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி விடுமுறைக்கு குடும்பத்தினரைச் சந்திக்க சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகையில், அவரது முகத்தின் மீது ஆசிட் உற்றப்பட்டது. முதலில் புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் ஆதித்யா மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகம் முழுவதும் வெந்துவிட்டதுடன் அவரது கை, கால் உள்பட உடலில் பல்வேறு பகுதிகள் ஆசிட் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. விநோதினி கண்பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டார். மூன்று மாதக் கடும் போராட்டத்துக்கு பின்னர் பிப்ரவரி 12ஆம் தேதி விநோதினி உயிரிழந்தார். விநோதினிக்கு எமனாக வந்த சுரேஷ்குமார் என்பவர் விநோதினியின் தந்தையின் நண்பர் என்று கூறப்படுகிறது. சுரேஷ்குமாரின் காதலை விநோதினி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், அவன் இக்கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறான். 

விநோதினி இறந்த சோகம் மறைவதற்குள் ஆசிட் வீச்சால் மற்றொரு இளம்பெண் மரணத்தைத் தழுவியிருக்கிறார். சென்னைக்கு அருகிலுள்ள ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் 21 வயது மகளான வித்யா தான் அந்த பரிதாபத்துக்குரிய பெண். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட வித்யா ஒரு பிரவுசிங் செண்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பிரவுசிங் செண்டருக்கு அடிக்கடி வந்துபோன 32 வயது விஜயபாஸ்கர் என்பவன் வித்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளான். தனது தாயிடம் வந்து பேசும்படி வித்யா பதில் கூறியதாகத் தெரிகிறது. இருவரின் பெற்றோரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், உடனே திருமணம் செய்துகொள்ளுமாறு விஜயபாஸ்கர் வித்யாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு வித்யா மறுத்துவிட்ட நிலையில் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் பிரவுசிங் செண்டரில் வேலை செய்துகொண்டிருந்த வித்யா மீது ஆசிட் வீசியிருக்கிறார். கைகளால் முகத்தை மறைத்துக்கொண்ட வித்யாவால் முகத்தை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. உடலெங்கும் ஆசிட் பாதிப்பால் காயம். 25 நாள்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வித்யா 23ஆம் தேதி மரணமடைந்தார். தனது உயிர் பிரியும் நிலையிலும் தனது கண்களைத் தானம் அளித்துவிட்டுத்தான் வித்யா மறைந்தார்.

இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்றாலும் அடிப்படைக் காரணமும் நோக்கமும் ஒன்றுதான். காதல் என்பது இரு உள்ளங்கள் இணைவதால் மட்டுமே சாத்தியமாகும். தான் யாரைக் காதலிக்க வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. வற்புறுத்துவதாலோ, துன்புறுத்துவதாலோ, ஒருவர் மீது காதல் வந்துவிடப் போவதில்லை. ஆனால், இத்தகைய ஆண்கள் தங்கள் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனால், அந்தப் பெண்களை வேறு யாரும் காதலித்துவிடக் கூடாது, அப்பெண்கள் வாழ்க்கை முழுவது தங்களை நிராகரித்துவிட்டதற்காக கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு வகையான பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இப்படியான குரூரமான செயலைச் செய்கின்றனர். இச்செயலால் அப்பெண்கள் எத்தகைய இன்னல்களுக்கு உள்ளாவார்கள், இக்குற்றத்தைச் செய்வதால் தாங்கள் தண்டிக்கப்படுவோம் என்பதனை அறிந்தே இத்தகைய கொடூரமான செயல்களை இவர்கள் செய்கின்றனர்.

ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசப்படுவதால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பானது, ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரத்தைவிடவும் அதிகமான பாதிப்பை அவளது வாழ்க்கையில் ஏற்படுத்தும். அவளது உருவம் சிதைக்கப்படுவதால் அவளுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படலாம், வேலை பாதிக்கப்படலாம், உடலுறுப்புகள் செயலிழக்கலாம், சில சமயம் விநோதினி, வித்யா போல அவளது உயிரே போகலாம், எல்லாவற்றுக்கும் மேலே அவள் தன்னம்பிக்கையிழந்து, வாழ்க்கையில் பிடிப்பின்றி நடைபிணமாக வாழ நேரலாம். ஆனால், இக்கொடூரத்தை நிகழ்த்தும் ஆணோ சில ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு, அது கொலைக் குற்றமாக பதிவு செய்யப்பட்டாலும்கூட, மீண்டும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக நடத்தமுடியும்.

இத்தகைய மோசமான செயலைத் தடுக்க என்னதான் செய்வது? தண்டனைக் கடுமையாக இருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். பெண்கள் மீது ஆசிட் வீசுவது கொலைக்குற்றமாக கருதப்பட வேண்டுமென்கின்றனர் சிலர். ஆசிட் வீசியவனே அப்பெண்ணின் சிகிச்சை செலவிலிருந்து மறுவாழ்வுக்குத் தேவையான செலவுகள் வரைப் பொறுப்பேற்க வேண்டுமென்கின்றனர் ஒரு தரப்பினர். சாதாரண பெட்டிக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆசிட் எளிதாகக் கிடைக்கிறது. அதனால் தான் இவர்களால் பெண்கள் மீது ஆசிட் வீச முடிகிறது. எனவே, வெடிபொருள்களுக்கு இருப்பதுபோல கட்டுப்பாடுகளும், லைசன்ஸ் முறையும் ஆசிட் மூலப்பொருள்களுக்குக் கொண்டுவந்தால் இக்குற்றச் செயலைத் தடுக்கலாம் என்கின்றனர் மற்றொரு தரப்பினர். இந்த யோசனைகளைத் தவிர வர்மா கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும், ஆசிட் வீசப்படும் குற்றச்செயல்களுக்கு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது மட்டுமல்ல. அதிகச் சட்டங்கள் குற்றங்களைக் குறைக்கும் என்பதெல்லாம் நடைமுறையில் உண்மையாக இருப்பதில்லை. புதியச் சட்டங்களுடன், ஏற்கனவே இருக்கும் சட்டங்களும் ஒழுங்கான முறையில் அமல்படுத்தப்படவேண்டும். இந்த நடைமுறைகள் விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெறவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களைப் பற்றி ஆண்கள் கொண்டுள்ள மனோபாவம் மாறவேண்டும். குற்றத்துக்கான மூலவித்து அங்குதான் உள்ளது. தங்கள் விருப்பத்தைப் பெண்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம், அவர்கள் மறுக்கும் நிலையில் கொலைவெறியாக மாறுகிறது. பெண்ணை உடலாகவும், தான் நுகர்வதற்குரிய பொருளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணின் மனம், எப்போது பெண்ணை ஒரு சக மனிதப் பிறவியாக பார்த்து, மதிக்கத் தொடங்குகிறதோ, தன்னைப் போலவே ஒரு பெண்ணுக்கும் முடிவெடுக்கும் உரிமை இருக்கிறது என்று எப்போது மதிக்கத் தொடங்குகிறதோ, அப்போதுதான் இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதுவரை விநோதினிகள், வித்யாகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே!     

No comments:

Post a Comment