Tuesday, April 20, 2010

மனிதனின் ஆயுளை உயர்த்திய லூயி பாஸ்டியர்




நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் இன்றைய மனிதனால் வாழமுடியாது என்னுமளவுக்கு அறிவியல், மனிதனின் வாழ்க்கையில் கலந்துவிட்டது. மனிதனின் செயல்பாடுகளை எளிமையாக்குதல், தேவைகளை நிறைவேற்றுதல், பிரபஞ்ச உண்மைகளை கண்டறிதல் ஆகியவற்றுக்கு நவீன கண்டுபிடிப்புகள் பேருதவி புரிந்தாலும் அவை யாவற்றிலும் தலையாயது மருத்துவத் துறையில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளே. இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளர்களில் முதன்மையானவர் லூயி பாஸ்டியர் ஆவார்.

புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் 1822ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள ஜூரான் பிராந்தியத்தில் தோலே என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் லூயி பாஸ்டியர். சிறு வயதிலே அவர் ஈடுபாட்டுடன் கல்வி கற்ற போதிலும் அவரது அறிவுக்கூர்மை வெளியே தெரியவில்லை. தமது 26வது வயதில் டாக்டர் பட்டத்துக்கு டார்டாரிக் அமிலத்தின் உருப் பளிங்கு படிவம் (mirror-image isomers) பற்றிய அவரது ஆய்வு அவருக்கு பெரும்புகழைத் தேடி தந்தது.

பாஸ்டியர் 1857ல் நொதித்தல் பற்றி முக்கிய ஆராய்ச்சியை நிகழ்த்தினார். சில வகை நுண்ணுயிர்கள் காரணமாகவே நொதித்தல் நடைபெறுகிறது. பானங்களில் விரும்பத்தகாத நச்சுப்பொருள்கள் நுண்ணுயிர்களாலயே உருவாகின்றன என்று கண்டார். மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் ஏற்படுவதற்கு நோய் நுண்மங்கள் எனப்படும் கிருமிகள் தான் காரணம் என்பதை பரிசோதனைகள், செயல்விளக்கங்களுடன் துல்லியமாக நிரூபித்தார். இது நோய் நுண்மக் கோட்பாடு(germ theory) எனப்படுகிறது.

நோய்நுண்மங்கள் உடலுக்குள் செல்வதனால் தான் நோய் ஏற்படுகிறது எனில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதன் மூலம் நோயை தவிர்க்க முடியும். இந்த அடிப்படையில் தான் , அறுவை சிகிச்சையின் போது பின்பற்றப்படும் ஆண்டிசெப்டிக் வழிமுறைகளை ஜோசப் லிஸ்டர் பின்னர் கண்டுபிடித்தார்.

உணவுப் பொருள்கள் மற்றும் பால், பீர், வைன் போன்ற பானங்கள் அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்களால் கெட்டுவிடுகின்றன. இவை நோய்களையும் உண்டுபண்ணுகின்றன. பால் போன்ற பானங்களை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதிலுள்ள பெரும்பாலான கிருமிகளை அழித்து அவற்றை கெட்டுப்போகாமல் காக்கும் ஒரு துப்புறவு முறையை 1864ல் பாஸ்டியர் கண்டறிந்தார். இன்றும் பயன்படுத்தப்படும் இந்த முறை பாஸ்சுரைசேஷன்(Pasteurisation) எனப்படுகிறது.

கால்நடைகளை அதிகம் தாக்கும் கொடிய நோய் கரணை நோய் எனப்படும் ஆந்த்ராக்ஸ் ஆகும். இந்த நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை கண்டறிந்த பாஸ்டிய அவற்றில் ஆற்றல் குன்றிய வகையினத்தை உற்பத்தி செய்யும் ஒரு முறையை கண்டறிந்தார். இந்த ஆற்றல் குன்றிய நோய் கிருமிகளை ஊசி மூலம் கால்நடைகளின் உடலில் செலுத்தினால் அந்த கால்நடைகளுக்கு கடுமையற்ற நோய் உண்டாகியது. பின்னர் அந்த கால்நடையின் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்க்கு எதிர்பாற்றல் உருவாகிவிடுகிறது. இதனால் அந்த நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை 1881ல் பாஸ்டியர் திட்டவட்டமாக நிரூபித்தார். இது மருத்துவ உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இவ்வகையான தடுப்பூசிகளுக்கு வாக்ஸீன் என்று பெயரிட்டார்.

அயராது செய்த ஆராய்ச்சியின் பயனாக 1885ல் பாஸ்டியர் வெறிநாய் கடி நோய்க்கும்(Rabies) தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை புரிந்தார். இவரது கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே ஜன்னி காய்ச்சல், இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. மேலும் சிக்கன் காலரா எனப்படும் கொடிய நோய்க்கும் பாஸ்டியர் தடுப்பூசி உருவாக்கினார்.

நுண்ணுயிர்கள் தாமாகவே உருவாகின்றன என்று அவரது காலம்வரை நம்பப்பட்டு வந்தது. தமது கூரிய ஆய்வால் வெளியில் இருந்து வராமல் பொருள்களில் தாமாகவே நுண்ணுயிர்கள் உருவாவதில்லை என்று நிரூபித்தார். மேலும் ஆக்ஸிஜனில்லாமலும் சில வகை நுண்ணுயிர்கள் வாழும் என்பதையும் பரிசோதனையில் மெய்ப்பித்தார். இவற்றோடு பட்டுப் புழுக்களில் ஏற்படும் இரண்டு நோய்களை பற்றி இரண்டாண்டுகள் கடுமையான ஆய்வை மேற்கொண்டார். அந்த நோய்களுக்கு காரணமான நுண்கிருமிகளை கண்டறிந்து அவற்றிடமிருந்து பட்டுபுழுக்களை காப்பாற்றும் வழிமுறைகளையும் உருவாக்கினார்.

கடும் உழைப்பாளியாகவும் அறிவுகூர்மை மிக்கவராகவும் மட்டுமில்லாமல் பாஸ்டியர் மிகவும் துணிச்சல் காரராகவும் விளங்கினார். பல பரிசோதனைகளை தன்மீதே மேற்கொண்டார். அளப்பரிய சேவை செய்த லூயி பாஸ்டியர் 1895ல் காலமானார்.

இவர் கல்வி கற்றது வேதியியல் துறை என்றாலும் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியியல் துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் தன்னிகரற்று விளங்குகின்றன. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதனின் சராசரி ஆயுளை விட இன்றை மனிதனின் சராசரி ஆயுள் இரண்டு மடங்காகியுள்ளது. இந்தச் சாதனைக்கு காரணம் லூயி பாஸ்டியர் தான் என்றால் மிகையில்லை. பாஸ்டியரின் தொண்டுக்கு உலக மக்கள் அனைவரும் கடமைபட்டிருக்கிறோம். அவரது நினைவை போற்றும் வகையில் பல மருத்துவ, ஆராய்ச்சி நிலையங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் அமைந்திருக்கும் மத்திய தடுப்பூசி உற்பத்தி மையத்துக்கும் பாஸ்டியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது நமக்கு பெருமையளிப்பதாகும்.

1 comment:

Post a Comment