Tuesday, June 21, 2011

கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் !

இந்திய வரலாறில் டிசம்பர், 6 தேதியில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. 1. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது 2. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த அம்பேத்கர் இயற்கை எய்தியது. இரண்டு நிகழ்வுகளுமே நம் நாட்டுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தின. அதிலும் அம்பேத்கரின் மரணம், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீட்புப் போரில் பெரும் பேரிழப்பாகும்.

19ஆம் நூற்றாண்டு. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம். சிப்பாய் புரட்சியில் உருவான சுதந்தர தீ அந்த நூற்றாண்டின் இறுதியில் தேசமெங்கும் பரவியிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்திருந்தன. அந்த கொந்தளிப்பான காலத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ல் ராம்ஜி சக்பால் - பீமாபாய் தம்பதியினருக்கு 14வது குழந்தையாக பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்தார். ராம்ஜி சக்பால் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவரது வருமானம் போதுமானதாக இல்லையென்றாலும் தனது மகன்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்றான மகர் சாதியில் பிறந்ததால் சிறுவயது முதலே சாதி இந்துக்களின் தீண்டாமை கொடுமையை அம்பேத்கர் அனுபவிக்க நேர்ந்தது.


தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்று ஆசிரியர்களும், மேல்சாதி மாணவர்களும் அம்பேத்கரை அவமதித்தனர். பல்வேறு அவமானங்களை சந்திக்க நேர்ந்தாலும், ஊக்கத்துடன் படித்த அம்பேத்கர் 1907ஆம் ஆண்டில் மெட்ரிக் தேர்வில் வெற்றிபெற்றார். அன்றைய பம்பாய் மாகாணத்தில் மெட்ரிக் தேறிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் மாணவர் என்ற பெருமையை அம்பேத்கர் பெற்றார். அதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிருஷ்ணாஜி அர்ஜூன் கேலுஸ்கர் என்னும் ஆசிரியர் ‘புத்தரின் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். அந்தப் புத்தகம் தான் அம்பேதகரின் பிற்கால சிந்தனை புரட்சிக்கு வித்திட்டது.


1908ல் ரமாபாய் அவர்களுடன் அம்பேத்கருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. பரோடா மன்னர் சாயாஜி ராவ் அம்பேத்கரின் மேல்படிப்புக்கு உதவ ஒப்புக்கொண்டதால், பம்பாயில் உள்ள எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பின்னர் பரோடா மன்னரிடம் ஒப்புக்கொண்டபடி அவரது அரசில் பணிக்கு சேர்ந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போனாரே தவிர அவரது அறிவு தாகம் குறையவில்லை. அடுத்த ஆண்டே மீண்டும் உதவித்தொகை பெற்றுக்கொண்டு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். 1915ல் பொருளாதாரத்தை முதன்மையான பாடமாகக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார். அங்கிருந்து 1916ல் லண்டன் சென்ற அவர் சட்டப்படிப்பையும், பொருளாதாரத்தில் டாக்டர் பட்ட ஆய்வையும் தொடர்ந்தார். பரோடா மன்னரின் அழைப்பால் டாகடர் பட்ட ஆய்வை தொடரமுடியாமல் 1917ல் இந்தியா திரும்பினார்.


ஆழ்ந்த புத்தக வாசிப்பு, வெளிநாட்டு அனுபவங்கள், கல்வி ஆகியவை அவரது சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் ராணுவ செயலாளராக சிறிது காலம் பணியாற்றினார். அக்கவுண்டண்ட் மற்றும் முதலீட்டு ஆலோசகராகவும் கொஞ்ச நாள் பணியாற்றினார். 1918ல் பம்பாயில் உள்ள சைதன்ஹாம் கல்லூரியில் பொருளியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். எதையும் அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. காரணம் சாதி பாகுபாடு. உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களை விட கல்வியிலும், தகுதியிலும், அறிவிலும் பல மடங்கு உயர்ந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதை, அவமானப்படுவதை கண்டு அம்பேதகர் மனம் வருந்தினார். எனவே இந்தியாவில் உள்ள, தன்னைப் போன்ற கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதே தன் வாழ்க்கையின் லட்சியமாக உறுதியெடுத்துக் கொண்டார்.

இந்திய அரசியலமைப்பை ஆய்வு செய்வதற்கு 1919 செளத்பரோ கமிட்டியை ஆங்கில அரசு நியமித்தது. அதில் கருத்து சொல்ல அம்பேத்கரும் அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி முறை தேவை என்று அப்போதே குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ‘மூக் நாயக்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பாதியில் விட்டிருந்த பொருளாதார ஆய்வை முடித்து 1922ல் டாக்டர் பட்டம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவு போராட்டம், பொது குளத்தில் நீர் எடுத்தல் போன்ற போராட்டங்களை தலைமைத் தாங்கி நடத்தினார். உட்சாதிகளாக பிளவுபட்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.


1930-31ல் லண்டனில் நடந்த இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் கல்ந்துகொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேலும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார். அங்கு அம்பேதகர் முன்வைத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமைக்கு ஈடாக காந்திஜியுடன் செய்துகொண்ட பூனா ஒப்பந்தப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதிகளைப் பெற்றுத் தந்தார். 1935ல் தன்னைத் தேடி வந்த பம்பாய் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். தொடர்ந்து சுதந்திர தொழிலாளர் கட்சி, அனைத்திந்திய கூட்டமைப்பு என அரசியல் அமைப்புகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்துப் போராட்டங்களைத் தொடர்ந்தார்.

இந்திய சமூகத்தையும் வரலாற்றையும் ஆழ்ந்து ஆய்வு செய்த அம்பேதகர், தனிச் சிறப்புமிக்க நூல்களை எழுதினார். இந்திய சிந்தனை மரபுகள், மேற்கத்திய சிந்தனை என அனைத்தையும் ஆராய்ச்சி செய்தார். முதிர்ந்த சிந்தனையில் உதித்த அவரது எழுத்துகள் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் தோற்றுவித்தது.


இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர், நம் நாட்டை வழிநடத்த புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி உலகின் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளித்தார். அச்சட்டம் நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடி இனத்தினர் ஆகியோருக்கு அரசு வேலையிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு பெற வழி செய்தார். இந்தப் பொறுப்போடு சுதந்தர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் அம்பேதகர் நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டார். 1951ல் அந்தப் பதவியிலிருந்து விலகினாலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அம்பேத்கர், சாதி ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் இந்து மதத்தில் இருக்கும் வரை அதிலுள்ள தம் மக்களுக்கு கெளரவமான, சம உரிமை கொண்ட வாழ்வு சாத்தியமில்லை என்று கண்டறிந்தார். எனவே தீவிர சிந்தனை, பரிசீலனைக்குப் பின்னர் 1956ல் மனிதத்தை போற்றும் நல்வழியாம் புத்த மதத்துக்கு மதம் மாறினார். அவருடன் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.


சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உடல்நலம், ஓய்வற்ற உழைப்பு, கசப்பான அரசியல் அனுபவங்கள் காரணமாக சீர்கெட்டது. நோய்வாய்பட்டிருந்த அம்பேத்கர் டிசம்பர் 6, 1956ல் இயற்கை எய்தினார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னா 1990ல் அம்பேத்கருக்கு அவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது. அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கே அளப்பறிய பங்காற்றி இருக்கிறது. அவரது காலத்தில் இருந்ததைவிட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அம்பேத்கரின் சிந்தனை இப்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது..


சட்ட மேதை, அரசியல் தலைவர், தத்துவாசிரியர், சிந்தனையாளர், மானுடவியலார், வரலாற்றாசிரியர், பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், பொருளியல் நிபுணர், பத்திரிகையாசிரியர், புரட்சியாளர், அரசியல்வாதி, புத்தர் சிந்தனைகளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என பல பரிமாணங்களுடன் இந்தியாவின் தன்னிகரற்ற மனிதராக வாழ்ந்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள், உரிமைகளைப் பெற காட்டியுள்ள வழி : கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் !

No comments:

Post a Comment