Tuesday, June 21, 2011

அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு

உலக வரலாறின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவர் காலத்தில் உலகிலேயே அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர். எந்தப் போரிலும் தோற்காதவர். தான் சென்றவிடங்களில் எல்லாம் கிரேக்க நாகரிகத்தை பரப்பியவர். இவ்வளவு பெருமைகளையும் தனது 33 வயதுக்குள்ளாகப் பெற்றவர். அவர் தான் மாவீரன் அலெக்சாண்டர்.

தனது தந்தை பிலிப்பின் மரணத்துக்குப்பின் கி.மு. 335-ல் இருபதாவது வயதில் மாசிடோனியாவின் மன்னரானார் அலெக்சாண்டர். அப்போதே அரசியல் மற்றும் ராணுவ நுட்பங்களை கற்றுத்தேறியிருந்தார். பிலிப் மன்னர் வலிமையான கட்டுப்பாடுமிக்க படையை ஏற்படுத்தியிருந்தார். ஏற்கனவே கிரேக்கம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருந்தது மாசிடோனிய அரசு. உலகம் முழுவதையும் வென்று தனது அதிகாரத்தை நிறுவ வேண்டும், கிரேக்க நாகரிகத்தின் பெருமையை பரப்ப வேண்டும் என்ற பேராவல் அலெசாண்டருக்கு ஏற்பட்டது.


அப்போது வல்லமை மிகுந்த பேரரசாக பாரசீகம் விளங்கியது. மத்திய தரைக்கடல் முதல் இந்தியா வரை பரவியிருந்த பாரசீக பேரரசை வென்று அதிகாரத்தை நிலைநாட்ட ஆவல்கொண்ட அலெக்சாண்டர் கி.மு.334-ல் பாரசீகத்தின் மீது படையெடுத்தார். நன்கு பயிற்சிபெற்ற, கட்டுப்பாடு மிகுந்த மாசிடோனிய படைகள் அலெக்சாண்டரின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தொடர்ந்து வெற்றியை ருசிக்க ஆரம்பித்தது. ஆசியா மைனர், சிரியா, லெபனான், பாலஸ்தீனம், எகிப்து, ஈரான் என பாரசிகத்தின் ஆளுக்கைக்கு உட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக வென்ற அலெக்சாண்டர், கி.மு.328-க்குள் பாரசீகப் பேரரசை முழுவதுமாக வென்று ஆட்சியை நிலைநாட்டினார். லட்சக்கணக்கான வீரர்கள் அடங்கிய பாரசீகப்படைகளை வெறும் 35,000 வீரர்களை கொண்டு வீழ்த்தினார்.

தொடர்ந்து கிழக்கு நோக்கிச் சென்று இந்தியாவை வெல்ல முடிவு செய்தார் அலெக்சாண்டர். அன்றைய இந்தியாவில் சிந்து நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்தவை அனைத்தும் சிற்றரசுகள். நந்தர்கள் ஆண்டுவந்த மகதம் மட்டுமே அப்போது பெரிய அரசாக இருந்தது. இந்திய அரசர்கள் தமக்குள் பகைமை கொண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர். அப்போதுதான் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான், பாக்டீரியா போன்ற அரசுகளை வென்று கி.மு.327-ல் இந்துக்குஷ் மலைத்தொடரை கடந்து இந்தியா நோக்கி அணிவகுத்தது அலெக்சாண்டரின் படை.


சிந்துவின் மேற்கு கரையிலிருந்த சிற்றரசர்களையும், தட்சசீலம் அரசையும் தனது ஆதிக்கத்துக்கு பணியுமாறு உத்தரவிட்டு அவர்களுக்கு தூதுவர்களை அனுப்பினார் அலெக்சாண்டர். தட்சசீல மன்னன் அம்பியும் சிசிகோட்டஸ் என்ற மன்னரும் அலெக்சாண்டருக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தனர். இதர சிற்றரசர்கள் அவரை எதிர்க்க தயாராயினர். முப்பதாயிரம் வீரர்கள் அடங்கிய படைகளுடன் பெஷாவரை நோக்கிச் சென்ற அலெக்சாண்டர் வழியில் அஸ்டெக்னோய், அஸ்பசியோய் போன்ற மலைவாழ் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. வீரத்துடன் போரிட்டும் அவர்கள் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்றனர். அதன் பின்னர் அசகினோய் என்ற சிற்றரசு அலெக்சாண்டரை எதிர்த்து நின்றது. கிளியோபெஸ் என்ற பெண்ணின் தலைமையில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் கடுமையாக போரிட்டனர். கடுமையான் சண்டைக்குப் பிறகே அலெக்சாண்டரால் அவர்களை வெல்ல முடிந்தது.

இதுவரை தான் வென்ற பகுதிகளை சத்ரப்புகளாக பிரித்து அவற்றின் நிர்வாகத்துக்கு ஏற்பாடு செய்த பின்னர் சிந்து நதியை கடந்து தட்சசீலத்தை அடைந்தார். ஏற்கனவே மன்னர் அம்பி பணிந்துவிட்டதால், அவரின் எதிரி மன்னரான போரஸின் மீது அலெக்சாண்டரின் கவனம் குவிந்தது. பணிந்து போகுமாறு போரஸுக்கு தூது அனுப்பினார் அலெக்சாண்டர். அஞ்சா நெஞ்சம் கொண்ட அரசரான போரஸ், எல்லையில் ஆயுதங்களுடன் சந்திக்கலாம் என்று பதிலனுப்பினார்.


கி.மு.326ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜீலம் நதிக்கரையில் ஹைடாஸ்பஸ் என்னுமிடத்தில் நதியின் மேற்கு கரையோரமாக முகாமிட்டது அலெசாண்டரின் படை. எதிர்கரையில் அலெக்சாண்டரின் படைகளை எதிர்கொள்ள போரஸ் தலைமையில் பெரும்படை காத்துக்கொண்டிருந்தது. நதியில் வெள்ளப்பெருக்கு இருந்ததால், சரியாகும்வரை காத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அலெக்சாண்டர் ஏற்படுத்தினார். பின்புறத்தில் வேவு பணிகளை முடுக்கிவிட்ட அலெக்சாண்டர், நதியை கடக்க ஆழம்குறைந்த பகுதி எங்கு உள்ளது என்பதை ஆராய்ந்தார். தான் முகாமிட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 17 மைல் தொலைவில் நதிக்கு நடுவில் தீவுடன் கூடிய ஆழம் குறைந்த பகுதியை அலெசாண்டரின் ஒற்றர்கள் கண்டுபிடித்தனர். நதியை கடக்க முயற்சிப்பதும், முடியாமல் பின்வாங்குவதுமான பொய்யான தோற்றத்தை ஐந்து வாரகாலமாக அலெக்சாண்டரின் படைகள் ஏற்படுத்தின. இந்திய படைகளுக்கு சலிப்பு ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.


ஒரு நாள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. தனது படையில் நான்கில் ஒரு பங்கை மட்டும் முகாமில் விட்டுவிட்டு மற்ற படைகளுடன் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த ஆழம் குறைந்த பகுதியில் இரவோடு இரவாக நதியைக் கடந்தது அலெக்சாண்டரின் படை. போரஸின் படைகள் மீது திடீர் தாக்குதல் தொடுப்பது அலெக்சாண்டரின் திட்டம். எனினும் போரஸுக்கு அலெக்சாண்டரின் படைநடமாட்டத்தின் மீது சந்தேகம் வந்துவிட்டது. எனவே தனது மகன் தலைமையில் 2000 குதிரை வீரர்கள், 120 தேர்படையினர் ஆகியோருடன் அலெக்சாண்டரின் படைகளை கண்காணிக்க அனுப்பினார். இந்த சிறிய படையை எதிர்கொண்ட அலெக்சாண்டரின் படைகள் அவர்களை முற்றிலும் தாக்கி அழித்தனர். இதில் போரஸின் மகன் வீர மரணமடைந்தார். தப்பியோடிய வீரர்கள் மூலம் நிலைமையை அறிந்த போரஸ் அலெசாண்டரை எதிர்கொள்ள தயாரானார்.

அலெக்சாண்டரின் படையில் 10,000 காலாட்படையினர், 5,000 குதிரைப்படையினர், விற்படையினர், எறி எந்திரப்படையினர் இருந்தனர். ஆனால் போரஸ் மன்னரின் படையில் 30,000 காலாட்படையினர், 3,600 குதிரைப்படையினர், 200 யானைப் படையினர், 180 தேர்ப்படையினர் இருந்தனர். இந்திய படைகள் தற்காப்பு போருக்கு தயாராக இருப்பதை உணர்ந்த அலெக்சாண்டர் திட்டமிட்ட அதிரடி தாக்குதல் உத்தியில் இறங்கினார்.

ஆரம்பத்தில் போரஸின் யானைப்படைகளை கண்டு பீதியடைந்த அலெசாண்டரின் காலாட்படையினர் பின்னர் சமாளித்துக்கொண்டு யானைப் பாகன்களை தாக்கிக் கொன்றனர். இதனால் மிரண்டு போன யானைகள் சொந்த படையினரையே மிதித்து துவம்சம் செய்தன. மிகச் சிறிய இடத்தில் அவ்வளவு பெரிய படைகளைக் கொண்டு போரிடுவது கடினமாக இருந்தது. மேலும் இரவு பெய்திருந்த மழையால் போர்க்களமும் சகதியாக மாறியிருந்தது. இதனால் தேர்ப்படைகள் முற்றிலும் செயலிழந்தன. இதையெல்லாம் முன்பே ஊகித்திருந்த அலெக்சாண்டரின் படைகள் போரஸின் படைகளை நிலைகுலையச் செய்தன. அலெக்சாண்டர் எதிர்கரையில் விட்டுவிட்டு வந்திருந்த கிரேட்டஸ் தலைமையிலான படைகள் பின்புறமாக வந்து தாக்கின. முடிவில் தோல்வியுற்ற போரஸ் மன்னர் கைது செய்யப்பட்டார்.


இந்தப் போரில் போரஸின் காலாட்படையினர் 20,000 பேரும், குதிரைப்படையினர் 3000 பேரும் மடிந்தனர். தேர், யானைப் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. எனினும் போரஸின் தளராத உறுதியையும் வீரத்தையும் மெச்சிய அலெக்சாண்டர் போரஸை மீண்டும் மன்னராக்கியதுடன் தான் வென்ற சில பகுதிகளை ஆளும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்தார்.

தொடர்ந்து கிழக்கு நோக்கிச் சென்று இந்தியா முழுவதையும் வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினாலும் அவரது படையினர் ஒத்துழைக்கவில்லை. நீண்ட பயணத்தாலும், தொடர்ச்சியான போர்களாலும் ஏற்கனவே களைப்படைந்திருந்த அவர்கள் கிழக்கில் நந்தர்கள் ஆட்சி செய்துவந்த மகதப் பேரரசின் படைவலிமையைக் கேள்வியுற்று மேலும் கலக்கமடைந்தனர். எனவே வேறு வழியின்றி அலெக்சாண்டர் நாடு திரும்ப முடிவு செய்தார். நாடு திரும்பும் வழியில் கி.மு.323-ல் பாரசீகத்தில் காலமானார்.

அலெக்சாண்டரின் படையெடுப்பு குறுகிய காலத்தில் முடிந்துவிட்டாலும், இந்திய வரலாற்றில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல சிற்றரசுகளை வென்று ஒன்றாக இணைத்ததால் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. பிற்காலத்தில் சந்திரகுபத மெளரியர் ஒரு பேரரசை நிறுவ இது தூண்டுகோலாக இருந்தது. மேற்கு நாடுகளுடனான வாணிபம் செழிப்புற்றது. இந்திய கலையுடன் இணைந்த கிரேக்கக்கலை காந்தாரக்கலையை உருவாக்கியது. சீரற்று இருந்த இந்திய நாணயங்கள் சீர்படுத்தப்பட்டன. தேர்ப்படை வழக்கொழிந்து குதிரைப்படையும் யானைப்படையும் ராணுவத்தில் முக்கியத்துவம் பெற்றன. கிரேக்கத்தின் அறிவியலும் இந்தியாவின் தத்துவஞானமும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொன்மையான இரு நாகரிகங்களும் சந்திக்கும் வாய்ப்பு இந்தப் படையெடுப்பால் ஏற்பட்டது.

No comments:

Post a Comment