மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ள
புத்தாண்டின் முதல் பண்டிகையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது.
நாடுகள்தோறும், உலகம் முழுவதும் எண்ணற்றப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஆனால், பொங்கல் விழா எல்லாவற்றிலும் தனிச் சிறப்பு பெற்றது. சாதி, மதச் சார்பற்ற
தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடக்கூடிய ஒரு பெருநாள் பொங்கல். திருநாள்,
பெருநாள், நன்னாள், பண்டிகை, நோன்பு, புதுநாள் என இவ்வளவு சிறப்புகள் பெற்ற
தமிழர்களின் ஒரே திருநாள் பொங்கல் தான்.
உழவுத் தொழிலையும், உழவர்களையும், உழைப்பாளர்களையும்,
உழவுக்கும் உழைப்புக்கு உறுதுணையாக இருந்த ஞாயிறு, மழை, மாடுகள் ஆகியவற்றைப்
போற்றிக் கொண்டாடும் நாளான பொங்கல் தமிழர்களின் அறுவடைத் திருநாளும் ஆகும்.
உழவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இதுவாகும். ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக தமிழர்கள் தொடர்ந்து கொண்டாடிவரும் திருநாள் பொங்கல்.
மதச்சார்பின்மைக்கும், இயற்கையை போற்றுதலுக்கும் சான்றாக இருப்பது தை முதல் நாளான
இந்தப் பொங்கல் திருநாள்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்
நம்பிக்கை. ஒவ்வொரு பொங்கலும் அந்த நம்பிக்கையைத் தரத்தான் செய்கிறது. ஆனால், இந்த
ஆண்டு தமிழர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாகவே தொடங்கியிருக்கிறது. உலகுக்கு
சோறிடும் உழவர்கள் வாழ வழியின்றி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம்
தமிழகத்தில் நிலவுகிறது. விதைத்துவிட்டு நீருக்காக காத்திருந்து,
நம்பிக்கையற்றுப்போன காவிரி டெல்டா விவசாயிகளின் தற்கொலைகள் மனித குலத்தின்
மாபெரும் அவமானமாகும்.
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும்
உழவே தலை’ என்று உலகமனைத்துமே ஏர் தொழிலின் பின்னேதான் என்று உழவைப் போற்றிய
தமிழகத்தில் தான் இந்நிலை. பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சேர்த்து உழவர்களே
தாங்க வேண்டியிருப்பதால் ‘உழுவார் உலகத்தைத் தாங்கும் அச்சாணி’ என்றார் வள்ளுவர்.
அந்த அச்சாணிகளே முறிந்துவிட்டால் நம் சமூகம் எப்படி வாழும்? உலகுக்கு உணவிடும்
உழவர்களின் வாழ்க்கை ஆண்டுக்காண்டு இந்த அவலநிலைக்கு உள்ளாவதை என்றுதான் நம்
ஆட்சியாளர்கள் தடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. அரசுகளும், கட்சிகளும்
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியல் பிரச்னையாகக் கருதாமல், அதை மக்களின்
வாழ்வாதார பிரச்னையாக கருதி, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தீர்க்க முயலவேண்டும்.
‘உழவர்களுக்கு உழவுத் தொழிலைச் செய்ய முடியாத நிலை எக்காரணங்களாவது
ஏற்படுமேயானால், விரும்பப்படுகிற எல்லாப் பற்றுகளையும் துறந்துவிட்டோம் என்று
கூறிக்கொள்ளும் துறவிகளுக்கும்கூட, நிலைத்த வாழ்வு இல்லாமற்போய்விடும்’ என்று
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் கூறியது நம் தலைவர்களுக்கு எப்போது
புரியும் என்று தெரியவில்லை. காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 14 லட்சம் ஏக்கரில்
வெறும் 25% பயிர்களை மட்டுமே காப்பாற்ற முடியுமாம். இப்படிப்பட்ட நிலையில் கடவுள்
எனும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளியான விவசாயி பண்டிகையை எப்படி கொண்டாட
முடியும்?
நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையும் மக்களுக்கு
நம்பிக்கைத் தருவதாக இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமல்ல பிச்சைக்காரர்களுக்கும்
பாதுகாப்பற்றதாக நிலைமை மாறிவிட்டது. தொடரும் கொலைகள், கொள்ளைகள், முறைகேடுகள்,
பெருகிவரும் ரவுடி ராஜ்ஜியங்கள், தினசரி நிகழ்வாகிவிட்ட பாலியல் வன்கொடுமைகள் என
பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலையை தைத்திருநாள் மாற்றுமா என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கும், சமூக நீதிக்கும்
நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகத்தில் சாதியத்தீயை மீண்டும் பற்றவைக்க
சிலர் முயல்கிறார்கள். அத்தகைய சமூக விரோதச் சக்திகளை மக்கள் எப்போதும் போல வென்று
காட்டுவர் என்று நம்புவோம். அத்தகைய தீயச் சக்திகளுக்கு துணை போகமாட்டோம் என்று
இந்த நன்னாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.
’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பது
நமது பண்பாடு. இன்று உழவுமில்லை, தொழிலுமில்லை என்றாகிவிட்டது. காவிரி நீரின்றி
தமிழக விவசாயி தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க, ஆண்டு முழுவதும் தொடரும்
மின்வெட்டால் தமிழகத்தின் தொழில்துறையே நசிந்துவிடும் நிலை உண்டாகியிருக்கிறது.
பின்னலாடை உற்பத்தியில் உலகின் மையமாகத் திகழ்ந்த திருப்பூர் இன்று
மின்வெட்டு காரணமாக செயலற்ற நிலைமைக்கு வந்துவிட்டது. வேலையில்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள சிறு, குறு தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் இவற்றின் வருமானமும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதுடன், இத்தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டின் பாதிப்புக்கு பெருநிறுவனங்களும் தப்பவில்லை. தமிழகத்தைத் தேடிவரக்கூடிய முதலீடுகள்கூட மின்பற்றாக்குறையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடும்நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையை மாற்ற தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் நிலைமை அப்படியேதான் தொடருகிறது.
மின்வெட்டு காரணமாக செயலற்ற நிலைமைக்கு வந்துவிட்டது. வேலையில்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள சிறு, குறு தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் இவற்றின் வருமானமும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதுடன், இத்தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டின் பாதிப்புக்கு பெருநிறுவனங்களும் தப்பவில்லை. தமிழகத்தைத் தேடிவரக்கூடிய முதலீடுகள்கூட மின்பற்றாக்குறையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடும்நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையை மாற்ற தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் நிலைமை அப்படியேதான் தொடருகிறது.
மூச்சு முட்டும் அளவுக்கு பிரச்னைகள் நமக்கு முன்பாகக் குவிந்து கிடந்தாலும், நம்பிக்கை ஒளி தென்படத்தான் செய்கிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவன், வாழ்க்கையில் உச்சத்தை அடைவது நிச்சயம் என்பர் பெரியோர்கள். இன்றும் நாம் நம்பிக்கையை இழக்கவில்லை. காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையுடன் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். புத்தாண்டு புது நன்மைகளை கொண்டுவரும். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். பொங்குக பொங்கல்!
No comments:
Post a Comment