Saturday, September 29, 2012

ஒபாமாவின் பேச்சும் இந்தியாவின் பதிலடி(?)யும்






தேர்தல் நெருங்கினாலே அரசியல்வாதிகள் அதிகம் பேசத் தொடங்கிவிடுவார்கள். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மட்டும் விதிவிலக்கா என்ன? வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜூன் 15 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “’இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் கவலையளிப்பதாக உள்ளது. சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதில் இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அங்கு தாராளமாக முதலீடு செய்யமுடியாத நிலை இருக்கிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமானால் அந்நிய முதலீடுகள் மிக அவசியம். தங்கள் பொருளாதாரத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்று இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கூறுவது அமெரிக்காவின் வேலை இல்லை. இந்தியர்கள்தான் அதுகுறித்து முடிவு செய்யவேண்டும்.  இந்தியாவில் இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய சரியான சூழல் உருவாகியுள்ளது.” என்று திருவாய் மலர்ந்தார்.

இந்தியா மீதான கரிசனத்தில்தான் ஒபாமா மேலே கூறியதைச் சொன்னார் என்று நினைத்துவிடாதீர்கள். சில்லரை வர்த்தகம், இன்ஷூரன்ஸ், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் அந்நிய முதலீட்டை முழுமையாக அனுமதிக்க வேண்டும். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் களமிறங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதைத்தான் சற்று நாசூக்காகச் சொன்னார். என்ன இருந்தாலும் அமெரிக்க அதிபர் அல்லவா? அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்நாட்டின் ராணுவ, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கட்டுப்படுத்துகின்றன என்பது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடைகள் தருவதும், பணம் வாங்கிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு ஆதரவாக லாபி செய்வதெல்லாம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு சகஜமாக நடைபெற்றுவரும் விஷயங்கள்தான். அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் தனது கட்சிக்கும், தேர்தல் செலவுக்கும் பணம் அளிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின், குறிப்பாக வால்மார்ட் நிறுவனத்தின் விருப்பத்தையே ஒபாமாவின் பேச்சு வெளிப்படுத்துகிறது.



அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து சரிவடைந்துவரும் நிலையில், உலகெங்கும் கொள்ளையடித்தப் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தகச் சந்தைகளில் ஒன்றான இந்திய சந்தையை கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே கொல்லைப்புற வழியாக பார்தி ரீடெயில் நிறுவனத்துடன் இந்தியாவில் கால்பதிக்க வால்மார்ட்டுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட மன்மோகன் சிங் அரசு, 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்க சந்தர்ப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது. ”இந்தியாவுக்குள் வால்மார்டை அனுமதிப்பதில் இன்னும் ஏன் தாமதம்?” என்பதை ஒபாமா மென்மையாக வேறுவார்த்தைகளில் செல்லமாக மன்மோகன் சிங்கைக் கடிந்துகொண்டதை கேட்டு எதிர்கட்சிகள் கண்டனம் செய்வதற்குள் முந்திகொண்டது காங்கிரஸ் அரசு. ”ஒபாமாவுக்கு அவருடைய உணர்வுகளை வெளியிட எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், கொள்கை வகுப்பது என்பது நமது உரிமை. இந்தியாவின் நேரடி அந்நிய முதலீட்டு கொள்கை முதலீட்டாளர்களுக்கு நட்புரீதியானதாகும். கொள்கையில் சில பிரச்னைகளும், கூட்டணி ஆட்சியின் சில கட்டாயங்களினால் அனுமதி வழங்குவதில் தாமதம் போன்ற இடையூறுகள் ஏற்படலாம். ஆனால், அதே நேரத்தில் நாங்கள் உறுதியான முடிவுகளை எடுத்து வருகிறோம். விரைந்து அனுமதி வழங்கவும், வர்த்தகத்தை எளிதாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவும் தங்கள் பக்கத்தில் கட்டுப்பாடுகளைக் குறைத்து தாராள உலக முதலீட்டுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்” என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா மூலம் ஒபாமாவுக்கு பதிலடி(?) கொடுத்தார் மன்மோகன்சிங். அதாவது, பொறுத்தது பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க. சீக்கிரமே சந்தையை முழுசா திறந்துவிடுகிறோம் என்பதைத்தான் பதிலடியாக அமைச்சர் அறிக்கையில் கூறினார்.



அப்படியென்ன இந்திய சில்லரை வர்த்தகத்தின் மீது இவர்களுக்கு கண்? பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள், அமெரிக்க அரசு, இந்திய அரசு என அனைவரும் ஏன் இதில் அவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? சர்வதேச வணிக, பொருளாதார ஆலோசனை நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ்-இன் மதிப்பீட்டின்படி, இந்திய சில்லரை வர்த்தகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ 28 லட்சம் கோடி. இது 2014ல் ரூ 50.4 லட்சம் கோடி அளவுக்கும் வளர்ந்துவிடுமாம். இந்திய சில்லரை வர்த்தகத்தில் முறைப்படுத்தப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட (ரிலையன்ஸ், மூர், பிக் பஜார் போன்ற) சில்லரை வர்த்தகத்தின் பங்கு தற்போதைய சந்தையில் வெறும் 5% தான். இப்போது புரிகிறதா கழுகுகள் இந்தியாவை வட்டமிடக் காரணம்?

நரசிம்மராவ் காலத்தில் புதிய தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்களைகள் அமல்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது முதலே சில்லரை வர்த்தகத்தில் முழுமையாக அந்நிய முதலீடுகளை அனுமதிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இடதுசாரிகளில் தொடர்ந்த எதிர்ப்பாலும், அவ்வப்போது அடக்கி வாசித்தாலும் எதிர்ப்பு காட்டி வருகின்ற பிற கட்சிகளின் நிர்ப்பந்தங்களின் காரணத்தாலும் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலைதான் இன்றுவரை இருக்கிறது. இருந்த போதிலும், பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது நமக்குத்தான் நல்லது. அதனால் இந்திய விவசாயிகள் பயனடைவர், விலைவாசி குறையும், உலகத்தரமான பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், வரிவருவாய் அதிகரிக்கும், சரக்குப் போக்குவரத்து மேம்படும், போட்டி அதிகரிப்பதால் தரமான பொருள்கள் கிடைக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏராளமான சாதகங்கள் இருப்பதாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும் அரசும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் உண்மையா? அந்நிய முதலீடுகளை அனுமதித்த பிற நாடுகளின் நிலைமை என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது எவ்வளவு கேடானது என்பது நமக்கு புரியும்.

இந்தியாவில் சில்லரை வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி பேர் என்று கூறப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் தோறும் மூலைக்கு மூலை சில்லரை கடைகள் இருகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுயதொழிலாக இதைச் செய்பவர்கள்தான். அரசின் ஆதரவு திட்டங்களோ, வங்கிக் கடன்களோ, அரசு வேலைவாய்ப்புகளோ எதையும் பெறாமல் தமது உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டிருப்பவர்கள்தான் நம் நாட்டின் சில்லரை வணிகர்கள். நமது சில்லரை வணிகத்தின் பெரும்பங்கு உணவுப்பொருள் சார்ந்த மளிகைக் கடைகளைச் சார்ந்தது. இந்த உழைப்பாளிகள் பிறருக்கும் வேலை அளிக்கிறார்கள்.



தமது சொந்த உழைப்பினால் இவர்கள் ஈட்டும் வருமானம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது. இவர்களால் தான் உள்நாட்டுச் சேமிப்பும் உயர்கிறது. இவர்களின் கணக்கு வழக்கு எதையும் அரசாங்கம் பார்ப்பதில்லை. அதனால் இவர்களை வருமான வரி வரம்புக்கு கொண்டு வருவதும் இயலாது. அதுவே பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் வரி வருவாய் விண்ணைத் தொட்டுவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். எப்படி வரி ஏய்ப்பது என்று வணிக நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன?   
அடுத்து இவர்கள் கூறும் விவசாய வளர்ச்சி. சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதித்த நாடுகளில் எல்லாம் பாரம்பரிய விவசாயத்தையும், விவசாயப் பொருளாதாரத்தையும் இவை அழித்துவருவதையே நாம் பார்க்கிறோம். மக்களின் தேவைக்காகப் பயிரிடப்படுவது போய், பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப நம் விவசாயம் மாற்றப்பட்டு நம் நிலவளமும் விவசாயப் பொருளாதாரமும் அழிக்கப்படுவதுதான் மிஞ்சும். 


இடைத்தரகர்களை ஒழித்து விவசாயிகளைக் காப்பதாக இவர்கள் விடும் புருடாவும் இப்படித்தான். முதலில் போட்டியாளர்களை ஒழிக்க அதிக விலைகள் கொடுத்துப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் இவர்கள் விரைவிலேயே போட்டியாளர்களை ஒழித்து ஏகபோகத்தை நிலைநாட்டியவுடன், இவர்கள் வைத்ததுதான் விலை என்றாகிவிடும். அதற்கான மிகப்பெரும் மூலதனம் அவர்களிடம் இருப்பதுடன், மாபெரும் உலகளாவிய சப்ளை வலைப்பின்னலையும் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. இதனால், இவர்களுக்குத் தேவையானப் பொருள் உலகில் எந்த மூலையில் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்குதான் இவர்கள் கொள்முதல் செய்வார்களே தவிர, உள்நாட்டில் அல்ல. அதுமட்டுமல்ல, உலகின் உற்பத்தி இயக்கத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், தாம் சொல்லும்விலையில்தான் உற்பத்தியாளர்கள் தரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதால் மட்டுமே எண்ணற்ற நிறுவனங்கள், அமெரிக்க-ஐரோப்பிய நிறுவனங்கள் உள்பட, தொழிலில் இருந்து விலக நேருவது தொடர்கிறது. இதன் காரணமாக வேலையிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. பெரு நிறுவனங்களுக்கே இந்த கதி என்றால் சிறு தொழில்கள் பற்றிக் கூறத்தேவையில்லை. இந்நிலைதான் நமக்கும் வேண்டும் என்கிறதா இந்திய அரசு?




பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களை வரவேற்பவர்கள் கூறும் மற்றொரு வாதம் இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பது. பாரம்பரிய இந்திய சில்லரை வர்த்தகத்தின் வலைப்பின்னல் மிகவும் விரிவானது நுட்பமானது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட பல கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தொழில் பன்னாட்டு நிறுவனங்களிடம் சிக்கினால் எதோ சில ஆயிரம்பேர், ஏன் சில லட்சம் பேர் என்றுகூட வைத்துக்கொள்ளலாம், வேலைவாய்ப்பு பெறலாம். முழுவதும் கணினிமயப்படுத்தப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட அவற்றில் நம்மவர்களுக்கு கிடைக்கப்போவது கூலி வேலைகள் போன்றவையும், அக்கூலிகளை பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக மேய்க்கும் மேஸ்திரி வேலைகளும் தான். சரி அவர்களுக்காவது அதிக வருவாய் கிடைக்குமா என்றால் அதுவும் கிடையாது. எட்டு மணிநேர உழைப்பெல்லாம் வால்மார்டில் செல்லுபடியாகாது. எவ்வித தொழிலாளர் நலத் திட்டங்களையும் அவை செயல்படுத்துவதில்லை. அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் அவற்றின் பலத்தின் முன்னால் தொழிலாளர், வணிகச் சட்டங்களால் என்ன செய்ய முடியும். நெறி தவறிய வணிக நடைமுறைகல், தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், ஏமாற்றுதல் என ஏராளமான குற்றச்சாட்டுகளுக்காக அதிக எண்ணிக்கையிலான வழ்க்கை அமெரிக்க நீதிமன்றங்களில் சந்திப்பது வால்மார்ட் நிறுவனம்தாம். அதைக் கொண்டுவரத்தான் ஒபாமாவும் மன்மோகனும் படாதபாடு படுகிறார்கள்.   


அதிகப் பணிநேரம், குறைந்த ஊதியம், ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் போன்றவையெல்லாம் கேள்விகேட்பாரின்றி நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக பாரம்பரிய சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் வாழ்வையிழக்கப்போகும் கோடிக்கணக்கானவர்களின் நிலை என்ன? அவர்களுக்கும் ஏதாவது நூறுநாள் வேலைத்திட்டத்தை அரசு வைத்திருக்குமோ?

உலகம் முழுவதையும் விழுங்கி ஏப்பமிட மேற்கத்திய பொருளாதாரங்கள் சேர்ந்து உருவாக்கிய உலகமயமாக்கம் இன்று அவர்களையே திருப்பியடித்துக் கொண்டிருக்கிற்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவில் இருக்கின்றன. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதலீட்டுக்கு அதிக லாபம் பெறவும் வளரும் நாடுகளின் சந்தைகளை முழுமையாகத் திறந்துவிடும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். வளரும் நாடுகளில் தங்களுக்கேற்ற ஆட்சியாளர்களைத் அதிகாரத்தில் தொடர அனுமதிக்கிறார்கள். ஒபாமாவின் பேச்சும், ஆனந்த் சர்மாவின் பதிலும் உணர்த்துவது இதைத்தான்.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. சில்லரை முதலீட்டில் அந்நிய மூலதனத்தை, அதாவது பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது எப்போதோ தொடங்கிவிட்டது. தனி பிராண்ட் வகைகளில் முழுமையாகவும், பிற சில்லரை வர்த்தகத்தில் 51% அளவும் எப்போதோ அனுமதிக்கப்பட்டுவிட்டன. இப்போது அவர்கள் கேட்பது முழுமையான ஆதிக்கம். ஒபாமாவின் பேச்சு அமெரிக்க நலன்களைத் தான் பிரதிபலிக்கிறதே தவிர இந்தியாவின் மீதான் அக்கறையால் அல்ல. அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் திருடிக்கொள்கிறார்கள், இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் வேலைகள் கொடுக்கக்கூடாது என்று இந்தியாவுக்குத் தடைபோடும் ஒபாமா, இந்தியாவின் சந்தைகளை அகலத் திறந்துவிட வேண்டும் என்று கூறுவது அமெரிக்காவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. அதைப் புரிந்தாலும், புரியாததுபோல மன்மோகன் சிங்கும் எப்போதும்போல் மவுன சிங்காக இருப்பார். பிரச்னை தீர்ந்துவிட்டதல்லவா!




No comments:

Post a Comment