Saturday, September 29, 2012

கியூபா: உலக குத்துச்சண்டையின் சூப்பர் பவரானது எப்படி?




ஒரு மூன்றாம் உலக நாடு. ஒரு கோடி மக்கள் தொகையே கொண்ட ஒரு சிறிய தீவு, நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளாக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஒரு ஏழை நாடான கியூபா, உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் வல்லரசு நாடுகளையும் விஞ்சி தங்கப் பதக்கங்களை தட்டிச் செல்வது விளையாட்டு உலகின் ஆச்சரியங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதோ சிறிய பட்டியல்: 2001ல் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில், அனைத்து எடைப் பிரிவுகளிலும் மற்ற நாடுகள் வாங்கிய மொத்தத் தங்கப்பதக்கங்களைவிட கியூபா வென்ற தங்கப்பதக்கங்கள் அதிகம். 1972 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கியூபா வென்றுள்ள தங்கப்பதக்கங்கள் மட்டும் 27. அதைத் தவிர உலகமெங்கும் அவ்வப்போது நடைபெற்றுவரும் அமெச்சூர் சாம்பியன் போட்டிகள், நல்லெண்ணப் போட்டிகள் போன்றவற்றில் கியூபா வென்றுள்ள பதக்கங்கள் தனி. கியூபா ஒன்றும் பணக்கார நாடல்ல, விளையாட்டுக்கு பணத்தை வாரியிறைக்க. உலக சாம்பியன் போட்டிகளில் வெல்லும் வீரர்கள்கூட பயிற்சிக்கு சைக்கிளில் தான் செல்கிறார்கள். அவர்கள் அணியும் டிராக் சூட்டுகள்கூட பழையவை அல்லது நைந்துபோகும் நிலையில் இருப்பவையாக இருக்கலாம். அப்படி இருந்தும் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

1959ல் கியூபாவில் ஃபிடல் தலைமையிலான புரட்சி படைகள் ஆட்சியைப் பிடிக்கும் வரையில் அங்கு தொழில்முறை விளையாட்டுகள் சிறிய அளவில் நடைபெற்று வந்தாலும், குறிப்பிடத்தக்க சாதனைகள் ஏதும் கியூபா செய்திருக்கவில்லை. அப்போது கியூபாவின் விளையாட்டுத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தான் இருந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் தானே ஆதிக்கம் செலுத்த முடியும்! புரட்சிக்கு பிறகு தொழிமுறையிலான விளையாட்டுப் போட்டிகளை கியூபா 1961ல் தடை செய்தது. அவற்றில் கலந்துகொள்ள விளையாட்டு வீரர்களும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெற்று வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து விளையாட்டுப் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, குறிப்பாக கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு விளையாட்டுத் திறனை வளர்க்கும் பயிற்சி கூடங்களும், பயிற்சி முறைகளும் உருவாக்கப்பட்டு அரசின் கண்காணிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டன.



ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் போதே மாணவர்களின் விளையாட்டுத் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டியது அங்கு கட்டாயம். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர்களுக்கு எந்த விளையாட்டில் நல்ல திறமை இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விளையாட்டுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், உதாரணத்துக்கு குத்துச்சண்டை என்று வைத்துக்கொள்வோம், 12 வயது முதல் குறிப்பிட்ட விளையாட்டுக்கென்றே இருக்கும் சிறப்பு பள்ளிகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி ஆரம்பமாகிறது. அங்கு அவர்களின் திறமைகள் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அதன் பின்னர் போட்டித்திறனை அதிகரிக்கும் இளைஞர் விளையாட்டு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் தொடர்கின்றன. அங்கு நாட்டின் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் நேரடி பயிற்சிகள் அளிக்கப்படும். குத்துச்சண்டையைப் பொறுத்தவரையில், கியூபாவின் தலைமைப் பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. சிறந்த திறமைசாலிகள் கண்டறியப்பட்டு கியூபாவில் குத்துச்சண்டை பயிற்றுவிப்பதில் உயர்நிலை அகாடமியாக விளங்கும் வாஜாய் பயிற்சி நிலையத்துக்கு வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். அங்கு சர்வதேசப் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு பயிற்சியும், கடுமையான உடற்பயிற்சிகளும் அளிக்கப்படும். உலகத்தரமான குத்துச்சண்ட வீரர் அங்கே உருவாகிறார்.

விளையாட்டுகளுக்கு அரசு மிகுந்த ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்பதால் தான் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கியூபாவின் கம்யூனிச ஆட்சியின் வெற்றியைப் பறைச்சாற்றும் விதமாகவும் குத்துச்சண்டை விளையாட்டுப் பார்க்கப்படுகிறது. ஆனால், கியூபாவின் வெற்றி குத்துச்சண்டையுடன் முடிந்துவிடவில்லை. பெண்கள் கைப்பந்து விளையாட்டில் உலகின் தலைசிறந்த அணியாகத் திகழும் கியூப அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. அந்நாட்டின் பேஸ்பால் அணியோ உலக சாம்பியன் போட்டிகளில் வெல்ல முடியாத அணியாக விளங்கிவருகிறது. ஸ்கேட்டிங், தடகளம், பெண்கள் கைப்பந்து, மல்யுத்தம், ஜூடோ, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, பேஸ்பால், கூடைப்பந்து என பல விளையாட்டுகளிலும் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்கும் கியூபா ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ள மொத்த பதக்கங்கள் 194 (67 தங்கம், 64 வெள்ளி, 63 வெண்கலம்). 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வென்றுள்ள ஒலிம்பிக் பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை 20 (இதில் ஹாக்கியில் வென்ற பதக்கங்கள் 11). கியூபாவின் மக்கள் தொகையில் 25% மேற்பட்டோர் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.


இவ்வளவு பதக்கங்களையும் சாம்பியன் பட்டங்களையும் வென்று நாட்டுக்கு பெருமைச் சேர்க்கும் கியூப வீரர்கள் பெறும் பரிசு என்ன தெரியுமா? நாட்டுக்கு பெருமை சேர்த்ததற்கான கெளரவம் தான் அவர்கள் பெரும் பெரிய விருது. அரசிடமிருந்து அவர்கள் பெரும் கூடுதல் சலுகை என்பது வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புகள், ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்கும் பழைய கார் ஒன்றும் தான். ஆம், தங்களுடைய குத்துச்சண்டை திறமைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்கும், வேறு எதற்காகவும் அல்ல, பெரும்பாலான வீரர்கள், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், வி்ளையாட்டுத்துறை நிர்வாகிகளாகவோ அல்லது பயிற்சியாளர்களாகவோ தங்கள் அறிவையும் அனுபவத்தையும் அடுத்தத் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக அளிக்கிறார்கள். தொடரும் கியூபாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே இவர்கள் தான்.


உலகத்தைப் பொருத்தவரையில் குத்துச்சண்டை என்பது குத்துச்சண்டை வளையத்தில் இரண்டு தனி நபர்களுக்கு இடையே நடைபெறும் போட்டி. ஆனால், கியூபாவிலோ அது ஒரு அணி விளையாட்டு. அங்கு குத்துச்சண்டை வீரர்கள் ஒன்றாகவே வளர்கிறார்கள், ஒன்றாகவே பயிற்சி பெறுகிறார்கள், ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகிறார்கள். கியூப வீரர்களைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கியூபாவின் தேசிய, பிராந்திய சாம்பியன் பட்டங்களை வெல்வது தான் கடினமாம். ஏனெனில் போட்டி அவ்வளவு கடினமாக இருக்கிறது.

குத்துச்சண்டையில் கியூபாவின் வெற்றிக்கு உதாரணமாக இருவரைக் கூறலாம். முதலாமவர் டியொஃபிலோ ஸ்டீவன்சன். ஹெவிவெயிட் பிரிவில் மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம், மூன்று உலக சாம்பியன் பட்டங்கள் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக குத்துச்சண்டை களத்தை அதிர வைத்தவர் இவர். அடுத்தவர், குருவை மிஞ்சிய ஃபெலிக்ஸ் செவோன். மூன்று ஒலிம்பிக் தங்கத்துடன் உலக சாம்பியன் பட்டத்தை ஆறு முறை வென்று சாதனைப் படைத்திருப்பவர். 1986ல் ஜூனியர் உலக சாம்பியன் பட்டத்தை வென்று ஆரம்பித்த செவோனின் வெற்றி 2000ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது வரையில் தொடர்ந்தது. இவர்களைத் தவிர ஏஞ்செல் ஹெராரா, ஹெக்டார் வினெண்ட், சமீபத்தில் ஏரியல் ஹெர்னாண்டஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்றவர்களாவர்.


தற்போது கியூபா முழுவதும் 494 முதல்தர பயிற்சியாளர்களும், 185 பயிற்சி நிலையங்களும் இருக்கின்றன. கியூபாவின் 99,000 விளையாட்டு வீரர்களில் 19,000 பேர் குத்துச்சண்டை வீரர்கள். அவர்களில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றவர்கள் 81 பேர். ஆனாலும் கியூப குத்துச்சண்டை அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் 12 பேர் மட்டுமே. இதுவரை ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் 27 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் வென்றுள்ள கியூபாவின் சாதனை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக 2008ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கியூப வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை தற்காலிகமாக இழந்தனர். நான்கு பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும் நால்வரும் வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. கியூபாவின் ஆதிக்கம் தகர்ந்துவிட்டது, பிற நாடுகள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சகர்களின் வார்த்தைகள் கியூப வீரர்களின் காதுகளில் விழவில்லை. ஏனெனில், பெய்ஜிங்கில் இழந்த பெருமையை லண்டனில் மீட்டெடுக்க அவர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்கத்துக்காக குத்துவிட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கியூபா விளையாட்டில் சிறந்து விளங்கக் காரணம் என்ன என்று கியூபாவுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய எஸ்.எல்.பிரைஸ் கூறுகிறார், “விளையாட்டின் மீதுள்ள காதலால் தவிர, வேறு எதற்காகவும் விளையாடாத வீரர்கள் இருக்கும் கடைசி இடம் கியூபா தான். பொதிந்துள்ள திறமைகளை அர்ப்பணிப்புடன் கண்டறிந்து, வளர்த்து, சிறந்த திறமைசாலிகளைக் கொண்டாடும் இடம் உலகில் வேறு எங்கும் இல்லை. நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, கியூபாவின் ஆழ்கடலில் மறைந்திருக்கும் பத்து வயது சிறுவனாக இருந்தாலும் சரி, உங்கள் திறமை கண்டுபிடிக்கப்படும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், விரைவிலேயே தேசிய நாயகனாக மக்களால் கொண்டாடப்படுவீர்கள்.” இதுதான் கியூபாவின் யதார்த்தம்.


பழைய ஹவானா நகரில் உள்ள ரஃபேல் ட்ரெஜோ திடலில் போட்டியிட வந்த ருலன் கார்போனெல் என்ற 13 வயது சிறுவன் கூறுகிறான், “ஃபெலிக்ஸ் செவோன் போல ஆவதே எனது கனவு”. அவனுடைய பயிற்சியாளர் யார் தெரியுமா? இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற வெல்டர்வெயிட் சாம்பியன் ஹெக்டார் வினெண்ட். கியூபாவில் விளையாட்டு வீரர்கள் ‘பெரிய நட்சத்திரங்களாக’ மதிக்கப்படுகிறார்கள். மக்கள் அவர்களை அவ்வளவு நேசிக்கிறார்கள், ஏன் வழிபடுகிறார்கள். ரெஸ்டாரண்டுகள், தியேட்டர்களில் அவர்களுக்கு சிறந்த இருக்கைகளை மக்கள் அளிக்கிறார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் ஆட்டோகிராஃப் வாங்க மக்கள் மொய்க்கிறார்கள். அரசு மிக மிகக் குறைவான சலுகைகளையே அளித்தாலும், மக்களின் அங்கீகாரமே பெரிது என வீரர்கள் கருதுகிறார்கள்.
தேசிய பெருமிதமும், சொந்த லட்சியமும் இணைந்தே கியூபாவின் வெற்றி சாத்தியமாகிறது என்றால் புரிந்துகொள்ள சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், கியூபாவில் அதுதான் யதார்த்தம். மனிதர்களின் புனிதமான விழுமியங்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டவை. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று இருக்கும் உலகில் வாழும் உங்களால் இதைப் புரிந்துகொள்ள இயலாது என்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ. விருதுகள், பதவிகள், கோடிகள், வீட்டுமனைகள் என செல்வத்தில் புரளும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு ஃபிடல் சொல்லும் வாழ்க்கை புரியாமல் போவதில் ஆச்சரியமில்லை.

No comments:

Post a Comment