Saturday, September 29, 2012

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கை: களமிறங்கும் கியூரியாசிட்டி


விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது சாதனைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. செவ்வாய்க் கோளை ஆராய அமெரிக்கா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ என்ற ஆளில்லா விண்கலம் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 11.00 மணிக்கு செவ்வாயின் பரப்பில் வெற்றிகரமாகக் கால்பதித்தது.

வேற்று கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்வதில் மனிதன் வரலாற்று காலம் தொட்டே ஆர்வம் காட்டிவருகிறான். வேற்றுகிரகவாசிகள் பற்றி பலவிதக் கற்பனைகள் கொண்ட அறிவியல் புனைக்கதைகள் தொடர்ந்து படைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக இவற்றை நாம் கற்பனை என்று ஒதுக்கிவிட்டாலும், எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் அறிவியல் புறந்தள்ளிவிடுவது கிடையாது. சூரியனிலிருந்து பார்க்கும்போது பூமிக்கு அடுத்திருக்கும் கோள் செவ்வாய்தான். செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு தனிஈர்ப்பு உண்டு. சோதிடத்தில்கூட செவ்வாய்க்குத் தனி இடம் உண்டு. தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு செவ்வாயை சற்று உற்றுநோக்கும் வசதி வந்தபிறகு, விஞ்ஞானிகளின் செல்லப்பிள்ளையாகவே செவ்வாய் கிரகம் மாறிவிட்டது. செவ்வாய் கோளின் பரப்பின் சிவப்பு வண்ண பாலைவனப் பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக கறுப்பு நேர் கோடுகள் காணப்பட்டதை 19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் கண்டார்கள். அவை தண்ணீர் செல்லும் கால்வாய்கள் என்றும், நுண்ணறிவுள்ள உயிரினங்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும், விவசாயம்கூட நடைபெறுவதாகவும் சில விஞ்ஞானிகள் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்யத் தொடங்கிவிட்டனர். 


எனினும் 1960ளில் ஏற்பட்ட ராக்கெட் மற்றும் செய்ற்கைகோள் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஆளில்லா விண்கலங்களை நேரடியாக செவ்வாய்க்கே அனுப்பி ஆராயத் தொடங்கினர் விஞ்ஞானிகள். அன்றைய வழக்கப்படி இந்த ஆராய்ச்சியிலும் முதல் படி எடுத்துவைத்தது அன்றைய சோவியத் யூனியன் தான். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தொடர்ச்சியாக பல விண்கலங்களை – மாரினர் வரிசை, வைகிங் வரிசை, லேட்டஸ்டாக ஸ்பிரிட், பாத்ஃபைண்டர், ஆப்பர்சுனிட்டி போன்ற விண்கலன்களை அனுப்பி செவ்வாயை ஆராய்ந்தது. இதுவரை மேற்கோள்ளப்பட்ட முயற்சிகள் பாதியளவே வெற்றியடைந்தாலும் விஞ்ஞானிகள் தங்கள் முயற்சிகளை விட்டுவிடவில்லை. அதன் பலன்தான் தற்போது செவ்வாயில் தரையிறங்கியிருக்கும் கியூரியாசிட்டி விண்ணாய்வுக் கூடம்.கார் போன்று தோற்றமளிக்கும் ஆறுசக்கரங்கள் கொண்ட கியூரியாசிட்டி விண்கலன் 1 டன் எடை கொண்டது. ரூ 12,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலன் எட்டு மாதங்களில் 57 கோடி கி.மீ. பயணம் செய்து செவ்வாயை அடைந்துள்ளது. 21,240 கி.மீ. வேகத்தில் பயணித்த கியூரியாசிட்டியின் வேகம் அது செவ்வாயின் ஈர்ப்புப் புலத்துக்குள் நுழைந்ததும் மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் சிறப்பு பாராசூட் விரிந்து வேகத்தை குறைக்க, அடுத்து ஸ்கை கிரேன் எனப்ப்படும் விண் ஏணி மூலமாகத் திட்டமிட்டபடி கேல் பள்ளம் (Gale carter) என்னுமிடத்தில் கியூரியாசிட்டி மெதுவாகத் தரையிறக்கப்பட்டது. விண்கலம் செவ்வாயின் தரையைத் தொடுவதற்கு முந்தைய கடைசி ஏழு நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளை பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் செவ்வாயில் விண்கலங்களை தரையிறக்கும் முந்தைய சில முயற்சிகள் கடைசி நிமிடங்களில் தோல்வியில் முடிந்திருக்கின்றன. கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தின் தரையைத் தொட்டவுடனேயே சமிக்ஞ்சைகளை அனுப்பத்தொடங்கிவிட்டது. உடனே நாசா கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டி அணைத்துத் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மொத்த அறிவியல் உலகமே இந்தச் சாதனையில் மகிழ்ந்து கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? எதிர்காலத்தில் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா என்பதைப் பற்றிய ஆய்வுகளை கியூரியாசிட்டி மேற்கொள்ளும். அதற்காக செவ்வாயின் மண், பாறைகள் போன்றவற்றைத் தோண்டி எடுத்து அவற்றில் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான வேதியல் கட்டமைப்புகள் இருக்கின்றனவா என்பதை கியூரியாசிட்டி ஆராயும். லேசர் கருவி, பாறைகளைத் துளையிடும் கருவி உள்பட 11 வகையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன. அணுசக்தியில் இயங்கும் கியூரியாசிட்டி இரண்டு ஆண்டுகள் தனது ஆராய்ச்சிகளை செவ்வாயில் மேற்கொள்ளும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடனே முதல்முறையாக வீடியோ படத்தை கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. அத்துடன் முதல்முறையாக முப்பரிமாண வண்ணப் புகைப்படத்தையும் இது அனுப்பியுள்ளது. 1969ல் நிலவில் மனிதன் காலடியெடுத்து வைத்தச் சாதனைக்கு ஈடானதாக கியூரியாசிட்டியின் பயணம் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. நிதிப்பற்றாக்குறைக் காரணமாக ஸ்பேஸ் ஷட்டில் உள்பட தனது பல விண்வெளித் திட்டங்களை நாசா நிறுத்தி வைத்துள்ள நிலையிலும் இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாயில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கியூரியாசிட்டி நிச்சயம் புதிய தகவல்களை அளிக்கும் என்று விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.   

No comments:

Post a Comment