Saturday, September 29, 2012

டியோஃபிலோ ஸ்டீவன்சன்: இவரை வாங்குமளவுக்கு உலகில் பணம் இல்லை!
உலக குத்துச்சண்டை களத்தில் கியூபா நாட்டுக்குத் தனி இடம் உண்டு. இவ்விளையாட்டில் 1970களில் தொடங்கிய கியூபாவின் ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. கியூபாவின் இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தவரும், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீரராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் டியொஃபிலோ ஸ்டீவன்சன், ஜூன் 11, 2012 அன்று ஹவானா நகரில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. அமெச்சூர்(பணத்துக்காக போட்டியிடாத) குத்துச்சண்டைக் களத்தில் ஹெவிவெயிட் பிரிவில் 15 ஆண்டுகள் தன்னிகரற்றவராக கோலோச்சியவர் ஸ்டீவன்சன். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் ஸ்டீவன்சன் தான்.  பணத்துக்காக ஒரு போதும் திறமையை விற்க சம்மதிக்காதக் காரணத்தால் விளையாட்டு வீரர்களில் தனிச்சிறப்பான முன்மாதிரியாகத் திகழ்ந்த ஸ்டீவன்சன், கியூபாவின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும்கூட.


இதயத் தமனியில் ரத்தம் உறைந்ததால் கடந்த ஜனவரி மாதத்தில் 15 நாள்கள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த ஸ்டீவன்சனின் உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஸ்டீவன்சனின் உயிரைப் பறித்துவிட்டது. கியூபாவுக்கு மட்டுமல்ல, குத்துச்சண்டை விளையாட்டுக்கும் ஸ்டீவன்சனின் இழப்பு பேரிழப்புதான். நான்கு முறை திருமணமான ஸ்டீவன்சனுக்கு இரண்டு வாரிசுகள்.

கியூப மக்களால் ‘பிர்லோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் டியொஃபிலோ ஸ்டீவன்சன், மார்ச் 29, 1952ல் கியூபாவில் உள்ள பியூர்டோ பட்ரே என்னுமிடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 4 பேர். அவரது தந்தை கரீபியன் தீவுகளில் உள்ள வின்சென்ட் தீவிலிருந்து வந்து கியூபாவில் குடியேறியவர். தாயார் கியூபா நாட்டினர். ஸ்டீவன்சனின் தந்தை கப்பலில் சர்க்கரை மூட்டைகள் ஏற்றும் வேலையைச் செய்துவந்தார். பொழுதுபோக்காக உள்ளூரில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் குத்துச் சண்டைப் பயிற்சியையும் செய்துவந்தார். தந்தையைப் பார்த்து ஸ்டீவன்சனும் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 14 வயதில் முறையாகப் பயிற்சியைத் தொடங்கிய ஸ்டீவன்சன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனது முதல் சர்வதேச பட்டத்தை – மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் சாம்பியன் பட்டங்களை வென்றார்.

1968ல் ஹாஃப்-மிடில்வெயிட் பிரிவில் கியூபா தேசிய ஜூனியர் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து சில வெற்றிகளைப் பெற்றுவந்த ஸ்டீவன்சன், 1970ல் நடைபெற்ற ஒரு போட்டியில், 1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கியூபாவின் சார்பாகப் பங்கேற்ற நான்சியோ கரில்லோவை  வீழ்த்தினார். புதிய சாம்பியனின் வரவை இவ்வெற்றிப் பறைச்சாற்றியது. இந்த வெற்றியானது கியூபாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டைப் பயிற்சியாளரான அல்சிடஸ் சகர்ரா மற்றும் சோவியத் யூனியனிலிருந்து கியூப அணிக்குப் பயிற்சியளிக்க அனுப்பப்பட்ட குத்துச்சண்டை வீரர் ஆண்ட்ரி செர்வோனெங்கோ ஆகியோர் ஸ்டீவன்சனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து வரப்போகும் ஒலிம்பிக் போட்டிக்காக அவர்கள் ஸ்டீவன்சனுக்கு தீவிரப் பயிற்சியளிக்கத் தொடங்கினர்.


1972ல் மியூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஸ்டீவன்சன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏற்கனவே உலகப் புகழ் பெற்றிருந்த வீரர்களுடன் அங்கு ஸ்டீவன்சன் மோத வேண்டியிருந்தது. கால் இறுதியில் அமெரிக்க வீரர் டுவான் பாபிக் உடன் ஸ்டீவன்சன் மோதினார். அதற்கு முன்பு பான் அமெரிக்கன் போட்டியில் ஸ்டீவன்சனை ஏற்கனவே வென்றிருந்தபடியால் இந்தப் போட்டியில் ஸ்டீவன்சனை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று பாபிக் எண்ணியிருக்க, அவரை மூன்றாவது ரவுண்டிலேயே வீழ்த்தினார் ஸ்டீவன்சன். தீவிரப் பயிற்சியின் மூலமும் புதிதாகக் கற்றுக்கொண்ட நுட்பங்களாலும் ஸ்டீவன்சனின் திறன் பன்மடங்கு வளர்ந்திருந்தது.


அரையிறுதியில் மோதியது ஜெர்மனியின் பீட்டர் ஹஸ்ஸிங் உடன். இரண்டாவது சுற்றிலேயே ஸ்டீவன்சனின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்த ஹஸ்ஸிங், அதற்கு முன் அந்த அளவுக்கு கடினமாக குத்து வாங்கியதில்லை என்று பின்னர் கூறினார். இறுதிப் போட்டியில் ஸ்டீவன்சனுடன் மோத இருந்த ருமேனியாவின் இயான் அலெக்ஸ்க்கு கை உடையவே அவர் போட்டியில் இருந்து விலகினார். குத்துச்சண்டையில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை ஸ்டீவன்சன் வென்றார். அன்று தொடங்கிய அவரது வெற்றிப் பயணம் அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

1976ல் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே ஸ்டீவன்சனின் புகழ் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஸ்டீவன்சனின் தாக்குதலுக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாததால், இந்த முறையும் ஒலிம்பிக் பதக்கம் ஸ்டீவன்சன் வசமானது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்ததை எதிர்த்து 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் புறக்கணித்தன. ஸ்டீவன்சனுக்கு கடுமையான போட்டியளிக்கக்கூடிய அமெரிக்க வீரர்கள் இல்லாத நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்டீவன்சன், சோவியத் யூனியனின் இஸ்ட்வான் லெவாயை வென்று மூன்றாவது முறையாகத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
ஒலிம்பிக் போட்டி வெற்றிகள் ஒருபுறமிருக்க, உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தையும் ஸ்டீவன்சன் விட்டு வைக்கவில்லை. 1974, 1978 மற்றும் 1986 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். 1970 முதல் 11 ஆண்டுகள் தோல்வியே கண்டறியாத ஸ்டீவன்சன் 1982 ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டப் போட்டியில் இத்தாலியின் ஃபிரான்செஸ்கோ தாமியானியிடம் தோல்வியடைந்தார். தாமியானி பின்னர் தொழில்முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கலந்து கொண்ட உலக சாம்பியன் பட்ட போட்டிகளில் ஸ்டீவன்சன் சந்தித்த முதல் மற்றும் ஒரே தோல்வி இதுதான்.

1984ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அரசியல் காரணங்களுக்காக சோவியத் யூனியனும் கியூபாவும் புறக்கணித்தன. எனவே, அந்தப் போட்டியில் ஸ்டீவன்சனால் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. அவர் அப்போதிருந்த ஃபார்முக்கு, அந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார் என்று விளையாட்டு நோக்கர்கள் கருதுகிறார்கள். அதைத் தொடர்ந்து 1988ல் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற போட்டியையும் கியூபா புறக்கணித்தது. அப்போதும் ஸ்டீவன்சனால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. 1986ல் அமெரிக்காவின் நெவாடாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியை ஸ்டீவன்சன் அபாரமாக வென்றதைக் காணும் போது, நிச்சயம் அவர் லாஸ் ஏஞ்செலஸிலும் சியோலிலும் தங்கம் வென்றிருப்பார் என்பதை அறியலாம். 1988க்கு பின்னர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற ஸ்டீவன்சன் முடிவெடுத்தார். அவர் தனது குத்துச்சண்டைப் பயணத்தில் கலந்துகொண்ட 321 போட்டிகளில் 301 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். வால் பார்கர் கோப்பை(1972) மற்றும் சோவியத் யூனியனின் மெரிடட் மாஸ்டர் ஆஃப் ஸ்போர்ட் (1972) விருதையும் பெற்றார். சமீப காலமாக கியூப குத்துச் சண்டை அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.6 அடி 3 அங்குல உயரம் 214 பவுண்டு எடை, வலிமையான தோள்கள், அகன்ற மார்பு, நீண்ட முறுக்கேறிய கைகள் என பார்ப்பவர் எவரையும் பீதியடையச் செய்யும் உருவமாக அவர் குத்துச்சண்டை வளையத்தில் நிற்பார். அவரைப் பார்க்கும் போதே எதிரி கலக்கமடைவது நிச்சயம். ஸ்டீவன்சனின் பெரிய பலம் அபார வலிமைக் கொண்ட அவரது வலது கை. இடது கை மெளனமாக எதிரியைத் திசைத் திருப்புகையில், வலது கை செயல்படும் வேகம் எதிராளியை எளிதில் வீழ்த்திவிடும். சண்டையிடும்போது அவரது கால்களின் அசைவுகள் மிகவும் நுணுக்கமாக இருக்கும். குத்து சண்டை வளையத்தை சண்டையில் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவர் உதாரணமாக இருந்தார்.

பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாக, போட்டியாளர்களுக்கு பீதி அளிப்பவராக இருந்தாலும், அவர் மிகவும் மென்மையான குணம் படைத்தவர். குத்துச்சண்டை களத்திலும் சரி, வெளியிலும் சரி, எப்போதும் அமைதியாகக் காணப்படுவார். வீரர்களுடன் நட்புடன் பழகுபவர். தன் வாழ்நாளின் இறுதிவரை தன் நாட்டுக்கும் அதிபருக்கும் உண்மையானவராகவே நடந்துகொண்டார்.


இவ்வளவு திறமையான ஒருவரைக் கண்ட பின்னர் விளையாட்டுச் சூதாடிகள் சும்மா இருப்பார்களா? 1972ல் ஒலிம்பிக்கில் தங்கமும், 1974ல் உலக சாம்பியன் பட்டமும் வென்றவுடன் தொழில்முறை குத்துச்சண்டை போட்டி நடத்துபவர்களின் கழுகுப் பார்வை ஸ்டீவன்சன் மீது திரும்பியது. அவரை எப்படியாவது முகமது அலியுடன் மோத விடவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். ’20ஆம் நூற்றாண்டின் இணையற்றப் போட்டி’ ஆக அது இருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அவருக்கு வந்த பல ஆஃபர்களில் முக்கியமானது பிரபல குத்துச்சண்டை அமைப்பாளரான டான் கிங்கிடம் இருந்த வந்த அழைப்பு தான். முகமது அலியுடன் மோதுவதற்கு அன்றே 5 மில்லியன் டாலர் தருவதாகக் கூறினார். அப்போது புகழின் உச்சியில் இருந்தாலும் பணத்துக்காக போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் ஸ்டீவன்சன் பிடிவாதமாக இருந்தார். யாராலும் அவரை சாய்க்க முடியவில்லை. அப்போது மட்டும் அவர் பணத்துக்காக போட்டியிட்டிருந்தால் அவருடைய புகழ் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்போது கூறிய வார்த்தைகள் தான் வரலாற்றில் அவரது பெயரை நிலைக்கச் செய்துவிட்டது: “தொழில்முறை குத்துச்சண்டையில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது நம்பிக்கை முழுவதும் புரட்சியின் மீதுதான். பணத்துக்காக என் நாட்டின் அமைதியை, கொள்கையை விலைபேச மாட்டேன். எட்டு மில்லியன் கியூபர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்புக்கு முன் நீங்கள் கொடுக்கும் மில்லியன் டாலர்கள் ஒன்றுமேயில்லை” என்றார். கியூப மக்கள் அவரை வாரி அணைத்துக்கொண்டனர். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்  பத்திரிகை இப்படி எழுதியது: “He’d Rather Be Red Than Rich.

2003ல் அளித்த ஒரு பத்திரிகை பேட்டியில், “எனக்கு பணம் தேவைப்படவில்லை. நான் பணத்தை நாடியிருந்தால், நிச்சயம் என் வாழ்க்கை குழப்பமாகியிருக்கும். தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களுக்கு பணம் என்பது அவர்களே சென்று மாட்டிக்கொள்ளும் பொறி. முதலில் நீங்கள் ஏராளமாகப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வீர்கள். ஆனால், எத்தனை குத்துச்சண்டை வீரர்கள் சாகும்போதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்? பணம் எப்போதும் மற்றவர்களின் கைகளுக்குத்தான் செல்கிறது.”

ஸ்டீவன்சனுக்கு உலக மக்கள் அளித்த ஆதரவானது அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவரைக் காண்கின்றனர். அதனால்தான் பி.பி.சி. கூட,”கியூபாவின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரரான இவர், ஒரு காலத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த உலகப் பிரபலமாகத் திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியது.

இறுதியாக ஸ்டீவன்சனைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரான ஃபிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளைக் குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும்: ஸ்டீவன்சன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். விளையாட்டு உலகில் எந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீரரும் இவரைப்போல் ஜொலித்ததில்லை. புரட்சியின் மீது சர்வதேசிய கோட்பாடுகள் விதித்த சில கடமைகள் மட்டும் குறுக்கிடாதிருந்தால், நிச்சயமாக மேலும் இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை அவர் வென்றிருப்பார். ஸ்டீவன்சனை விலைக்கு வாங்குமளவுக்கு பணம் இந்த உலகில் இருந்திருக்காது.”

ஆம், ஸ்டீவன்சனை வாங்குமளவுக்கு இந்த உலகில் போதுமான டாலர்கள் இல்லை!

No comments:

Post a Comment