Thursday, February 25, 2010

’நாடாளுமன்ற நாயகன்’ ஆலிவர் கிராம்வெல்’நாடாளுமன்ற நாயகன்’ ஆலிவர் கிராம்வெல்

இன்றைய உலகில் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறை நடைபெறுவதைப் பார்க்கிறோம். முடியரசு அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நாடுகளில் மக்கள், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்காக போராடி வருவதையும் அறிகிறோம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த நிலையே வேறு. அரசரின் ஆணையே சட்டமாக மதிக்கப்பட்டது. உலகெங்கும் வரம்பற்ற முடியாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டம் முழுவதும் அரசுரிமைக்கான போட்டிகளும் சமயப் பூசல்களும் நிறைந்திருந்தன. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அப்போது நாடாளுமன்றம் இருந்தது. ஆம்! இங்கிலாந்தில் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் இருந்தது. அதில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர்.

புது வரிகளை மக்கள் மீது சுமத்துவதாக இருந்தாலும், புதிய சட்டங்களை போடுவதாக இருந்தாலும், அல்லது வேறு நாட்டோடு போரில் ஈடுபடுவதாக இருந்தாலும் இங்கிலாந்தின் அரசர் நாடாளுமன்றத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டியிருந்தது. இதை ஏற்றுக்கொள்ளாமல் தமது மேலாதிக்கத்தை நிறுவ பல அரசர்களும் அவ்வப்போது முயற்சித்து வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றமே உயர்ந்தது; அரசர் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்தான் என்பதை ஆணித்தரமாக நிறுவி வரலாற்றில் நீங்காப் புகழைப் பெற்றவர்தான் ஆலிவர் கிராம்வெல்(1599 - 1658).

ஆலிவர் கிராம்வெல், ஹண்டிங்டன் என்னும் ஊரில் கிராமப்புற குடியானவக் குடும்பத்தில் பிறந்தார். தமது கடும் உழைப்பால் உயர்ந்த கிராம்வெல் 1628ல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே மன்னர் முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். 12 ஆண்டுகள் மன்றம் கூட்டப்படவேயில்லை. ஸ்காட்லாந்தின் மீது படையெடுக்க எண்ணம் கொண்ட அரசர் போருக்குத் தேவைப்பட்ட பணத்தையும் படையையும் திரட்ட 1640ல் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டினார். அரசரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டுமானால் பல்வேறு வாக்குறுதிகளையும் உரிமைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பதிலுக்கு கோரியது நாடாளுமன்றம். மன்னர் மறுத்துவிட்டார். அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏற்பட்ட மோதல் 1642ல் உள்நாட்டுப் போராக வெடித்தது. ஊருக்கு திரும்பிய கிராம்வெல் ஒரு வலிமையான குதிரைப் படையை உருவாக்கினார். நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கி போரிட்டார். நான்கு ஆண்டுகள் நடைபெற்ற போர் 1646ல் முடிவுக்கு வந்தது. கிராம்வெல்லின் படையிடம் மன்னரின் படை தோற்றோடியது. மன்னர் சிறை பிடிக்கப்பட்டார்.

சீக்கிரத்திலேயே மன்னர் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டார். கிராம்வெல்லை ஆட்சி மன்றத் தலைவராகக் கொண்டு மக்கள் பொதுவுரிமை அரசு (காமன் வெல்த்) அமைக்கப்பட்டது. மீண்டும் 1649ல் படையெடுத்து வந்த மன்னர் தோற்கடிக்கப்பட்டார், மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. அரசருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தி வந்த மிதவாதிகள் அனைவரும் ஒழிக்கப்பட்டனர்.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சார்லஸின் மகனான இரண்டாம் சார்லஸ் 1652ல் நடைபெற்ற போரில் முற்றிலும் தோற்கடிக்கபட்டார். அரசருக்கு ஆதரவானவர்கள் மற்றும் சமயவாதிகளின் சூழ்ச்சிகளால், கிராம்வெல் கொண்டுவந்த அரசமைப்பு சீர்த்திருத்தங்களை நடைமுறைப் படுத்தத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. 1650-1658 காலகட்டத்தில் மூன்று நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டன. எவ்வித அரசமைப்பும் வெற்றிகரமாக செயல்பட முடியாமல் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி கிராம்வெல் இராணுவ சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

‘ஆட்சிக் காவலர் பெருமகனார்'(லார்ட் ப்ரொடெக்டர்) என்ற பெயருடன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளை 1653 முதல் 1658 ஆண்டு வரை நல்லாட்சி புரிந்தார் கிராம்வெல். கடுமையான சட்டங்களை நிறைவேற்றினார். சீரான முறையில் நிர்வாகத்தை நடத்தினார். மக்கள் கல்வி கற்பதை ஆதரித்தார். மன்னரால் விரட்டப்பட்ட யூதர்களை திரும்ப அனுமதித்தார். சமயப் பொறையுடன் நடந்து கொண்டார். சமய சார்பற்றக் கொள்கை அரசின் கொள்கையானது. மிகச் சிறந்த முறையில் அயல் நாட்டுக் கொள்கையை கையாண்டார். ஆட்சிக்காலம் முழுவதும் சிறந்த நாடாளுமன்றத்தை உருவாக்க முயற்சித்தார். அமைதியை நிலைநாட்டிய கிராம்வெல் 1658ல் மலேரியா காய்ச்சலால் இறந்தார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் ரிச்சர்டு கிராம்வெல் பதவியேற்றார். ஆனால் விரைவிலேயே, 1660ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாம் சார்லஸ் மன்னர், பழிவாங்கும் விதமாக ஆலிவர் கிராம்வெல்லின் சடலத்தை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து தூக்கிலிட்டு தலையைத் துண்டித்தார்.

ஆனாலும் மக்களாட்சிக்கு கிராம்வெல் போட்டிருந்த அடித்தளத்தை மன்னரால் அசைக்கக்கூட முடியவில்லை. நாடாளுமன்றத்தின் மேலான்மை உரிமையை அரசர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் 1688ஆம் ஆண்டு மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை நிலைநாட்ட முயன்ற இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் இரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு 'வரம்புடை முடியரசு', அதாவது நாடாளுமன்றத்துக்கு கீழ்பட்டவர் அரசர் என்பது நிலைநாட்டப்பட்டது.

பிற்காலத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்தரப் போர், பிரெஞ்சு புரட்சி போன்ற இதர புரட்சிகளுக்கெல்லாம் தத்துவ அரசியல் அடித்தளம் அமைத்து தந்தது ஆலிவர் கிராம்வெல் தலைமையில் நடைபெற்ற அரசியல் போராட்டமே. முடியாட்சியை மண்டியிடச்செய்து மக்களாட்சிக்கு வித்திட்டவர் என்ற முறையில் ஆலிவர் கிராம்வெல் வரலாறில் நிலைத்தப் புகழுடன் விளங்குகிறார்.

No comments:

Post a Comment