Wednesday, January 6, 2010

அறுவடைத் திருவிழாக்கள்
மனிதர்கள் தங்களது தனித்துவமிக்க சமூக, வரலாற்று, கலாசார, வாழ்வியல் அடையாளங்களைப் பெரிதும் பேண உதவுபவை பண்டிகைகளே ஆகும். மக்கள் தம் முன்னோரின் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பண்டுதொட்டுக் கொண்டாடி வருதலால் இவை பண்டிகை என அழைக்கப்படலாயிற்று. அவ்விதமே ‘விழா'வும் சிறப்பு என பொருள்கொண்டதேயாகும். உலகமெங்கும் பல்வேறு பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் உலக மக்கள் அனைவராலும் வரலாறு தொடக்கம் முதல் இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் விழா ‘அறுவடைத் திருநாள்' அல்லது ‘அறுவடை விழா’ மட்டுமே.

மனிதன் உணவைப் பயிரிட்டு விளைவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே ‘அறுவடைத் திருநாள்' கொண்டாட ஆரம்பித்துவிட்டான். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தலையாயது உணவே. மண்ணைப் பண்படுத்தி, விதைத்து, நீரூற்றி, பாதுகாத்து, முற்றியபின், தன் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் மக்கள், அதற்கு காரணமான இயற்கைக்கும், அவர்கள் நம்பும் கடவுளருக்கும், பயன்பட்ட கருவிகள், விலங்குகள் ஆகியோருக்கும் முதல் விளைபயனை காணிக்கையாக்கி இந்நாளில் நன்றி சொல்கின்றனர். தம் மகிழ்ச்சியை குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நாட்டு மக்கள் அனைவரோடும் பகிர்ந்துகொண்டு குதுகலத்தோடு கொண்டாடுகின்றனர். விளைவிக்கும் பயிரில் வேறுபாடு இருந்தாலும் அந்தந்த நாட்டின் பருவநிலைக்கேற்ப கொண்டாடும் நாள் வேறுபட்டாலும் உலகமெங்கும் அறுவடைத் திருநாளின் நோக்கம் ஒன்றுதான்.

உலகின் தொல்குடியாம் தமிழ்குடியின் அறுவடைத் திருநாள் ‘பொங்கல் திருநாள்' ஆகும். சங்ககாலம் தொட்டே இத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுறவம்(தை) முதல் நாளில் பொங்கலிட்டு மகிழும் இந்தப் பெருநாளே தமிழரின் புத்தாண்டின் தொடக்கமும் ஆகும். பயிர் தொழிலில் துணைபுரிந்த கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல் நாள் புத்தரிசியும் கரும்பு வெல்லமும் கொண்டு பொங்கலிட்டு வணங்குகின்றனர். உழவு வேலைகள் மீண்டும் தொடங்கப்படுகிறது. உழவுக்கு உறுதுணையாக இருந்த காளைகளுக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டாம் நாள் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் ‘கன்னிப் பொங்கல்' என்று கொண்டாடப்படுகிறது. கைவண்ணம் கொஞ்சும் வண்ணக் கோலங்கள், இசை முழக்கங்கள், ஆடல் பாடல்கள் ஆகியவற்றோடு மஞ்சுவிரட்டு போன்ற வீரவிளையாட்டுகளோடு தமிழர் வாழும் நிலமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது ‘பொங்கல் விழா' தமிழர்தம் விழுமிய பண்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் எடுத்துகாட்டாக விளங்குகிறது.

கண்கவர் மலர் அலங்காரங்கள், பழங்கள், படகுபோட்டிகள், நடனங்கள் என் வண்ணமயமாகக் கொண்டாடப்படும் ‘ஓணம்' பண்டிகையே மலையாள மக்களின் அறுவடை பண்டிகையாகும். இவ்விழா ஆகஸ்டு-செப்டம்பர் மாதத்தில் பத்து நாள்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. நாம் பொங்கல் கொண்டாடும் அதே நாளில் கருநாடகத்திலும் ஆந்திரத்திலும் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதே போல அஸ்ஸாமில் ‘போகாலி பிஹு' என்றும் வங்காளத்தில் 'நபன்னா' என்றும், வட இந்திய மாநிலங்களில் ‘ஹோலி' ‘லோரி' ஆகிய பெயர்களிலும், பஞ்சாபில் ‘பைசாகி' என்றும் பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் அறுவடை பண்டிகையின் போது ஆடல் பாடல்கள் களைக்கட்டும். பல்வேறு கதைகளை சொல்லும் விதவிதமான நடனங்கள் அப்போது இடம்பெறும். பயிர்களை நல்ல ஆவிகள் காப்பதாகவும் கெட்ட ஆவிகள் அழிப்பதாகவும் நம்பும் இவர்கள் பயிர்களை காத்து விளைச்சளைக் கொடுத்த ஆவிகளுக்கு நன்றி சொல்லி தமது முதல் விளைச்சளை முன்னோர்களுக்கும் கடவுளுக்கும் படைக்கின்றனர். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும் இது ‘ஹாம்(வள்ளி கிழங்கு) திருவிழா' என்றும் 'ஹோமாவோ திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

பிரிட்டனில் அறுவடை விழா கோதுமை அறுவடை செய்யப்பட்ட பின்பும் ஆப்பிள்கள் கொய்யப்பட்ட பின்பும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பூக்கள், செடிகொடிகளால் அழகாக அலங்கரிக்கப்படும். கடைசியாக விளைந்த கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டியுடன் பழங்கள் பூக்கள் ஆகியவை இறைவனுக்கு நன்றி செலுத்துவிதமாகப் படைக்கப்படுகின்றன.

சீனர்களின் காலண்டர்படி ஆண்டின் எட்டாவது மாதத்தின் 15வது நாள் அறுவடை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அரிசி, கோதுமை ஆகியவற்றின் அறுவடைக்குப்பின் கொண்டாடப்படும் இவ்விழாவின் போது ‘மூன் கேக்' என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுகிறார்கள். குடும்பத்தோடு 'நிலவைப் பார்த்தல்' சடங்கும் இரவில் நடைபெறும்.

ஃபிரான்ஸ் நாட்டின் முக்கிய விளைபொருளாக இருப்பது ஒயின்(மது) தயாரிப்பின் மூலப்பொருளான திராட்சையே. அதனால் ஆண்டுதோரும் ஜனவரி 22ல் 'ஒயின் தயாரிப்பாளர்கள் நாள்' தான் அறுவடை விழாவாக கொண்டாடப்படும். ஜெர்மனியில், மலைகளில் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடு,மாடு மேய்ப்பவர்கள் வீடு திரும்பும் நாள், திராட்சை விளைச்சலை கொண்டாடும் ‘அக்டோபர் திருவிழா' என் இரண்டுவிதமான அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அரிசி அறுவடையின் அடிப்படையிலேயே ஜப்பானில் அறுவடைநாள் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. விசேஷ நிகழ்ச்சி நடைபெறும்வரை புதிதாக விளைந்த அரிசியை யாரும் உண்ணக்கூடாது. நடனத்தோடு அமர்க்களமாக நடைபெறும் பெரியவிழாவான இது உழைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் கொண்டாடப்படும் அறுவடை விழாவுக்கு ‘சுக்கோத்' என்று பெயர். யூதர்கள, தாம் பழங்காலத்தில் செய்த திராட்சை அறுவடையை நினைவுகூரும் வகையில் ஏழு நாள்கள் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

எட்டாவது சந்திர மாதத்தின் 15வது நாளில் (செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில்) கொரியர்களாள் கொண்டாடப்படும் அறுவடை விழாவுக்கு 'சூ சாக்' அல்லது ‘அறுவடை நிலவுத் திருநாள்' என்று பெயர். புதிதாக விளைந்த உணவு பொருள்கள் முன்னோருக்கு படைக்கப்படுகின்றன. ‘சாங்பியான்' எனப்படும் பிறை வடிவ அரிசிப் பலகாரம் இந்த பண்டிகையின் போது உண்ணப்படுகிறது.

‘கிரீன் கார்ன் ஃபெஸ்டிவல்' என்று பூர்வகுடி அமெரிக்க மக்களால் கொண்டாடப்படும் அறுவடை விழா பல நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அறுவடைக்குத் தயாராக முதல் சோளம் தயாரானவுடனே வரும் பெளர்ணமியன்று இந்த விழா நடக்கும். இந்த விழா காலம் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் மன்னிக்கும் நாளாகவும் இம்மக்களால் கொண்டாடப்படுகிறது. தலையில் இறகுகள் மணிகள் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான உடைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக அறுவடையை கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் மக்கள் தமது உழைப்பின் பலனை மகிழ்ச்சியோடு கொண்டாடவும், அம்மகிழ்ச்சியை உறவினர் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும், தமக்கு உதவி செய்த இயற்கைக்கும் நம்பும் கடவுளருக்கும் நன்றி தெரிவிக்கவும் புதிய விளைச்சலை நம்பிக்கையுடன் தொடங்கவும் பேருதவி புரிகின்றன. மேலும் ஒவ்வொரு சமூகமும் தமது கலாசார, சமூக அடையாளங்களை பேணவும் இயற்கையோடு தமக்கிருக்கும் பிணைப்பை உறுதிபடுத்திக் கொள்ளவும் இந்த விழாக்கள் பயன்படுகின்றன.

No comments:

Post a Comment