இயற்கையின் அற்புதங்களில் தலைச்சிறந்ததாக விளங்குவது மனித இனம். உலகில் கோடிக்கணக்கான வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவையனைத்தும் இயற்கையின் போக்கில், இயற்கைச் சூழலை அனுசரித்து, அதற்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் சிந்திக்கும் மனிதன் அல்லவா? மனிதன், தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் தேவைக்கேற்ப இயற்கையின் ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.
தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் ரகசியங்களை, அதன் விதிகளை அறிந்துகொள்ள மனிதனுக்கு உதவுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் இயற்கையின் செயல்பாட்டைத் தனக்கு நன்மையளிக்கும் விதமாக மனிதன் மாற்றிக்கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறான். அத்தகைய முயற்சியின் விளைவாக மனிதன் கண்டறிந்த அற்புதமான ஆற்றல் மூலம் தான் “அணு ஆற்றல்’.
அணு ஆற்றலை அழிக்கும் கருவியான அணு குண்டைத் தயாரிக்க மட்டுமல்ல, அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிந்ததும், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்ய பல நாடுகளில் அணு உலைகள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்டச் சூழ்நிலையில் அணு ஆற்றல் உற்பத்திச் செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிலும் தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா போன்ற இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.
இப்படிப்பட்ட அணு உலைகள் ஆக்க வேலைக்கு பயன்பட்டாலும், இவை எப்போதும் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. இயற்கைப் பேரிடர் நிகழ்வோ, அல்லது மனிதனின் சிறு தவறும் கூட பெரும் ஆபத்தை உருவாக்கிடக்கூடும். இதற்கு உதாரணமாகத் திகழ்வது தான் “செர்னோபில் அணு விபத்து’.
முன்னால் சோவியத் யூனியனின் ஓர் அங்கமான உக்ரைன் நாட்டில், இன்றைய ரஷிய, பெலாரஸ் நாடுகளின் எல்லையோரத்தில் செர்னோபில் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அணு ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு 1970களில் இருந்தே செயல்பட்டு வந்தன. அணு உலைகளுக்கு மிகுந்த கண்காணிப்பும், பராமரிப்பும் தேவை. அதற்காக அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
ஏப்ரல் 25, 1986 அன்று அத்தகைய சோதனை ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். முக்கிய மின் உற்பத்தி நின்றுவிட்டப் பின்னர் அணு உலை வேலை செய்வதை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு, எவ்வளவு நேரம் டர்பைன் சுழன்று மின்னுற்பத்திச் செய்யும் என்பதைச் சோதிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக அணு உலையின் செயல்பாடு திடீரென அதிகரித்தது. நீராவிக் குழாய்களில் மிகு அழுத்தம் ஏற்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. இது நடந்தது மறுநாளான ஏப்ரல் 26 ஆம் நாள் அதிகாலையில். விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சற்றும் பலனளிக்கவில்லை. விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம் என்றும், அணு உலையின் வடிவமைப்புக் கோளாறு தான் காரணம் என்றும் விஞ்ஞானிகளிடையே மாறுபட்டக் கருத்துகள் இன்றுவரைத் தொடர்கின்றன.
அணு உலை வெடித்ததால் சிதறிய கதிரியக்கப் பொருள்கள் சுற்றுப்புறமெங்கும் பரவின. காற்று வீசும் திசையில் கதர்வீச்சு வேகமாகப் பரவியது. நீர் நிலைகள் பாதிப்புக்குள்ளாயின. மண்ணிலும் கதிர்வீச்சு ஊடுருவியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் அளவானது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணு குண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது. பூமியின் வடகோளத்தின் கோடியில் உள்ள நாடுகளில் கூட கதிர்வீச்சு உணரப்பட்டது.
விபத்து நடந்தவுடன் ஏற்பட்ட உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.
கதிர்வீச்சுக் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்புத் தொடரும் என்கிறார்கள். இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.
வெடித்தப் பின்னர் அணு உலையின் கதிர்வீச்சு வெளியாகாமல் தடுக்க அதைச் சுற்றிலும் ஒரு கான்க்ரீட் கூடு கட்டப்பட்டது. தற்போது அதுவும் வலுவிழந்துவிட்டதால் இன்னும் வலுவான கூடு கட்டப்படவுள்ளது. எனினும் விபத்து நிகழ்ந்த அணு உலையின் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த மற்ற மூன்று அணு உலைகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டு 2000 வது ஆண்டில் செர்னோபில் அணு உலைக்கூடம் மூடப்பட்டது.
இந்த விபத்து உலக மக்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. எவ்வளவு தான் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், இயற்கையின் சமநிலையைக் குலைக்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே மக்களுக்கு உண்மையான பயனையும், பாதுகாப்பையும் அளித்து நீடித்த வளர்ச்சியை அளிக்கும்.
இயற்கை ஆற்றல்களான காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றைப் திறமையாகப் பயன்படுத்தி நமது எரிபொருள், மின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதே நாம் வாழும் உலகைக் காப்பதற்கு வழி. அதை மனிதன் மறக்கத் தொடங்கினால், மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டச் சுனாமியால் வெடித்து சிதறிய ஃபுகுயோமா அணு உலை விபத்துகள் போன்றவை நிகழ்வதைத் தவிர்க்க வழியில்லை. முன்னேறிய நாடான ஜப்பானுக்கே இந்த கதி நேர்ந்துள்ளதென்றால், கடலோரமாக அணு உலைகளை தொடர்ந்து உருவாக்கி வரும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த வளரும் நாடுகளின் கதி என்னாகும்? நாம் சிந்திப்பதற்கான அனுபவத்தை செர்னோபில் விபத்து அளித்துள்ளது !
Tuesday, June 21, 2011
செர்னோபில் அணு உலை விபத்து
Labels:
அணு ஆற்றல்,
அணு உலை விபத்து,
அறிவியல்,
கதிர்வீட்டு,
செர்னோபில்
Tuesday, September 21, 2010
இனவெறியை வென்ற நட்பு
![]() |
| லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் |
20ஆம் நூற்றண்டில் உலக நாடுகளுக்கெல்லாம் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் யாரென கேட்டால், ஹிட்லர் என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். ஹிட்லரின் நாடு பிடிக்கும் கொள்கைமுதல் யூதர்கள் படுகொலைவரை அனைத்துக்கும் அடிப்படியானது ஹிட்லர் உயர்த்திப்பிடித்த இனவெறிக் கொள்கையான ‘ஆரிய மேன்மை’ கொள்கையே. மனித இனத்தில் ஆரிய இனம் தான் உயர்ந்தது, அந்த ஆரிய இனத்திலேயே தூய்மையானவர்கள் ஜெர்மானியர்கள்தான். ஆகவே, அவர்களே இந்த உலகை ஆளத்தகுந்தவர்கள் என்பது ஹிட்லரின் இனவாதக் கொள்கையாகும்.
ஆரிய மேன்மை தாங்கிய ஜெர்மானியர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அது 1936ஆம் ஆண்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டிகளை தனது கொள்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஹிட்லர் முடிவு செய்தார். ஹிட்லரின் கண்காணிப்பில் ஜெர்மானிய வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். முக்கிய வீரர்கள் போட்டி நடைபெறும் நாள் வரை அவர்களது திறமையை யாரும் காணாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டனர்.
ஜெஸ்ஸி ஓவன்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின தடகள வீரரான இவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக பெர்லினுக்கு வந்திருந்தார். தான் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இனவெறி மிக்க ஹிட்லரின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று தீர்மானத்தோடு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார்.
அன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனைப் படைத்திருந்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ். எனவே தகுதிச் சுற்றை கடந்து எளிதாக இறுதிச் சுற்றை அடைந்துவிடலாம் என்று நினைத்து களமிறங்கினார் ஓவன்ஸ். போட்டிகள் ஆரம்பமாயின.
அப்போது ஓவன்ஸை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் அந்த உயரமான ஜெர்மானிய இளைஞர். அவர் பெயர் லஸ் லாங். தனது முதல் முயற்சியிலேயே 7.90 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் லஸ் லாங். அவரை ஹிட்லர் தன் கண்கானிப்பிலேயே ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை ஓவன்ஸ் அப்போதுதான் கேள்வியுற்றார்.
இப்போது ஓவன்ஸின் முறை வந்தது. ’லஸ் லாங் மட்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டால், ஹிட்லரின் நம்பிக்கை உண்மையாகிவிடுமே. என்னைப் போன்ற நீக்ரோவால் வெற்றிபெற முடியாது என்ற ஹிட்லரின் ‘ஆரிய மேன்மை’ நம்பிக்கைக்கு வலுச் சேர்ந்துவிடுமே’ என்ற எண்ணம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓவன்ஸின் முதல் முயற்சி, அவர் ஃபவுல் செய்ததால் வீணானது. தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் எல்லைக்கோட்டைத் தாண்டி கால் வைத்ததால், அதுவும் வீணானது. வெறுப்படைந்த ஓவன்ஸ் கோபத்துடன் தரையை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ‘இதற்காகவா அமெரிக்காவிலிருந்து கடல்கடந்து வந்தேன்?’ என்று மனதுக்குள் குமுறினார்.
அப்போது தனது தோளின் மீது ஒரு கை ஆறுதலாக தொடுவதை ஓவன்ஸ் உணர்ந்தார். அது வேறு யாருமல்ல. யாரிடம் தோற்றுவிடக்கூடாது என்று ஓவன்ஸ் நினைத்தாரோ அதே லஸ் லாங் தான்.
‘என்னுடைய பெயர் லஸ் லாங்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லஸ் லாங், ‘ஏதோ ஒரு விஷயம் உங்களுடைய மன அமைதியை கெடுக்கிறது. உங்களுடைய திறமைக்கு கண்ணை மூடிக்கொண்டு தாண்டியிருந்தாலே தகுதி பெற்றிருப்பீர்கள்’ என்று ஓவன்ஸுக்கு தன்னம்பிக்கையூட்டினான். நாஜி இளைஞர் பாசறையில் பயிற்சி பெற்றிருந்தும் ‘ஆரிய இன மேன்மை’ பாராட்டாத லஸ் லாங்கைப் பார்த்து ஓவன்ஸ் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிய பின்னர் ஒவன்ஸிடம், ‘இது ஒன்றும் இறுதி போட்டியில்லையே. தேவையான தூரத்துக்கு தாண்டி தகுதி பெற்றாலே போதுமே. இறுதிப் போட்டியில் உங்களுடைய முழுத்திறமையை காட்டலாம். அதனால் எல்லைக்கோட்டுக்கு அரை அடி முன்பே நீங்கள் ஒரு கோடு கிழித்துக்கொண்டு அங்கிருந்து தாண்டுங்கள். கண்டிப்பாக தகுதிப் பெறுவீர்கள்’ என்று ஓவன்ஸை தட்டிக்கொடுத்தார் லஸ் லாங்.
மனம் தெளிவடைந்த ஓவன்ஸ் லஸ் லாங் சொன்னபடியே செய்தார். தேவைப்பட்டதைவிட ஓர் அடி அதிகமாகவே தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஓவன்ஸ்.
மனம் நெகிழ்ந்த ஓவன்ஸ் லஸ் லாங்குக்கு நன்றி சொல்வதற்காக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். லஸ் லாங்கின் ஆறுதல் மட்டும் இல்லையென்றால் மறுநாள் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் தங்களது இன வேறுபாடுகளை மறந்து மனம் விட்டுப் பேசினர். தங்களைப் பற்றி, விளையாட்டைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றி என பல விஷயங்களைப் பேசினர். முடிவில், அந்த அறையை விட்டு வெளியேறும் போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தார்கள்.
இறுதிப் போட்டி தொடங்கியது. லஸ் லாங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது ஜெஸ்ஸி ஓவன்ஸை மேலும் சாதிக்கத் தூண்டியது. லஸ் லாங் அளித்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ஜெஸ்ஸி ஓவன்ஸ் 8.06 மீட்டர் நீளம் தாண்டி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை முதலில் பாராட்டியது லஸ் லாங் தான். அதுவும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஹிட்லர் பார்த்துக்கொண்டிருக்க முழு மனத்துடன் ஓவன்ஸின் கைகளைப் பற்றி குலுக்கினார். அவர்கள் இருவரின் நட்பானது சர்வாதிகாரியின் இனவெறியை வென்றது.
![]() |
| தங்கப்பதக்கத்துடன் ஓவன்ஸ். அருகில் வெள்ளி வென்ற லஸ் லாங் |
அந்த வெற்றியோடு ஓட்டப் பந்தையங்களில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஓவன்ஸ். நீளம் தாண்டுதலில் ஓவன்ஸ் அன்று படைத்த ஒலிம்பிக் சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது.
’நான் வென்றுள்ள அத்தனை பதக்கங்களையும் கோப்பைகளையும் ஒன்று சேர்த்து உருக்கினாலும், அவை லஸ் லாங்கின் 24 காரட் தூய்மையான நட்புக்கு ஈடாகாது’ என்று லஸ் லாங்கின் நட்பு பற்றிக் கூறினார் ஓவன்ஸ். அன்று லஸ் லாங்கின் நட்பை உணர்ந்த போது, நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்த பியரி டி கூபெர்டின் அவர்களின் வார்த்தைகள் தான் தனது நினைவுக்கு வந்ததாக ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு கூர்கிறார். அது இதுதான்:
‘ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நோக்கம் வெற்றிபெறுவதல்ல, பங்கு பெறுவதுதான். வாழ்க்கையின் அடிப்படையான அம்சம் வெற்றிகொள்வதல்ல, நன்றாகப் போராடுவதே’
Labels:
நட்பு,
லஸ் லாங்,
விளையாட்டு,
ஜெஸ்ஸி ஓவன்ஸ்
’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்
![]() |
| ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் |
அறிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.
இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.
மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.
பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
![]() |
| மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் |
அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.
மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
![]() |
| வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம் |
ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.
வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:
மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.
உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.
இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.
உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.
நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.
கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.
பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.
மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.
மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.
இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.
வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
Labels:
அறிஞர்கள்,
அறிவியல்,
ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்,
மருத்துவம்,
விஞ்ஞானிகள்
நவீன ஜப்பானை உருவாக்கிய மெய்ஜி புரட்சி
ஜப்பான், உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு. ‘மேட் இன் ஜப்பான்’ என்பதே தரமான பொருளுக்கான சான்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலனிய ஆட்சியாலும் வறுமையாலும் சீர்கெட்டு பின்தங்கியிருந்தபோது, நூறு வருடங்களுக்கு முன்பே ஜப்பான் மட்டும் பொருளாதார வலிமைமிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த, முன்னேற்றமடைந்த நாடாக மாறியது எப்போதும் வியப்புக்குரிய விஷயமாகவே பேசப்படுகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே இந்த சாதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது. அந்த மாற்றத்துக்கு வரலாறு இட்டப் பெயர் ‘மெய்ஜி புரட்சி’ அல்லது ‘மெய்ஜி மீட்சி’ என்பதாகும். இந்த மெய்ஜி மீட்சி ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, உலக நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளிலும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.
நான்கு பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளையும் கொண்ட ஜப்பான் நாடு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பண்டை காலம் முதலலே ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் ’டொகுகவா ஷோகன்கள்’ ஜப்பானில் செல்வாக்கு பெற்று அந்நாட்டின் பெரும்பகுதியை ஆளத்தொடங்கினர். (’ஷோகன்’ என்றால் படைத்தலைவர் என்று பொருள்.). 1860களில் யோஷின்பு என்ற ஷோகன் ஜப்பானை ஆண்டுக் கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சியோ நவீனமயமோ இல்லாத அன்றைய ஜப்பான் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு இருந்தது. பெரும்பாலான நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. ’சமுராய்’ என்றழைக்கப்பட்ட வகுப்பினர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறப்பு சலுகைகளோடு வாழ்ந்தனர். சாதாரண மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.
1850களில் வியாபாரம் செய்வதற்காக ஜப்பானில் நுழைந்தனர் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும். இந்தியாவைப்போல ஜப்பானை தங்களது காலனி நாடாக மாற்ற அவர்களால் முடியாவிட்டாலும் அநீதியான வியாபார ஒப்பந்தங்களால் ஜப்பானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஷோகன் எதிர்த்தாலும் மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன ஆயுதங்களும் தொழில்நுட்பமும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. தம்து படைகளை பலப்படுத்த ஷோகனும் மற்ற பிரபுக்களும் நவீன ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். எனினும் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதில் ஷோகனின் இயலாமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது.
’வளமான நாடு, வலிமையான ராணுவம்’ என்னும் கோஷத்துடம் இளம் சமுராய்கள் தலைமையில் ஷோகன் எதிர்ப்பாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு போராடினர். முடிவில், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த ஷோகன் யோஷின்பு ஜனவரி 3, 1868ல் ஆட்சியை மெய்ஜி மன்னர் ’மட்சுஹிடோ’விடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கியது தான் மெய்ஜி மீட்சி எனப்படும் சீர்த்திருத்த காலம். நன்கு கற்றறிந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற குழுவினரின் ஆலோசனைப்படி ’இடோ’வை (இன்றைய டோக்கியோ) தலைநகராகக் கொண்டு மெய்ஜி மன்னர் ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பல நூறு பகுதிகளாக நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், பல ஒன்று சேர்க்கப்பட்டு 75 பகுதிகளாக குறைக்கப்பட்டன். ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. சமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஷோகனின் படைகள் கலைக்கப்பட்டது. தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டு மேற்கத்திய பாணியில் நவீனப்படுத்தப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆறுவருட பள்ளிக்கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரிவிதிப்பு முறைகள், சட்ட-நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறை மேற்கத்திய முறையில் மாற்றப்பட்டன.
புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்ட்டு ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோ’ மதம் அரசினால் முன்னிலைப்படுத்தப்பட்டது. மதம், ஆட்சி இரண்டுக்கும் மன்னரே தலைவராக இருந்தார். அவ்வப்போது தலைத்தூக்கிய ஷோகன் ஆதரவாளர்கள் முழுமையாக அடக்கப்பட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தனியாருடன் இணைந்து அரசு தொழிதுறையை வளர்க்க பெரும் முயற்சியில் இறங்கியது. நவீன மேற்கத்திய தொழிநுட்பம் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமெண்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.
அரசியல் சட்டப்படி 1889ஆம் ஆண்டில் ’டயட்’ எனப்படும் பாரளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதர ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறியது ஜப்பான். பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்தது ஜப்பான். அதன் ராணுவ வலிமையும் பலமடங்கு பெருகியது. தந்து பக்கத்து நாடான கொரியாவின் மீது உரிமை கொண்டாடுவதில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் 1894 போர் வெடித்தது. ஜப்பான் போரில் வென்று மேற்கத்திய நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் பிறகு ரஷியாவுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1905ல் நடைபெற்ற போரிலும் ரஷியாவை வென்று தான் ஒரு வல்லரசாக உருவாகி வருவதை உலகுக்கு காட்டியது. இந்த வெற்றிகள் ஜப்பானிய மக்களிடையே தேசிய உணர்வை அதிகரித்தன. பெருமிதம் கொள்ள வைத்தன.
1912ல் மெய்ஜி மன்னர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. மேற்கத்திய கல்விமுறையும், தொழிநுட்பமும் மக்களின் சிந்தனை போக்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. இதனால் மக்கள் அதிகப்ப்டையான அரசியல் சுதந்திரத்தை கோரினர். அரசியல் கட்சிகள் உருவாகி வலுப்பெற்றன. பழமையான கருத்துகள் மதிப்பிழந்தன. அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என கோரப்பட்டது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912-1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக இருந்தது ஜப்பானியரின் வாழ்க்கை.
1930களில் ஜப்பானில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாக பாதித்தது. அதனால் மூலப்பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையை நிறைவுசெய்ய மேற்கத்திய நாடுகளைப் போலவே காலணிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஜப்பான் இறங்கியது. இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவம் ஜப்பானிய ஆட்சியின் தலைமையை கைப்பற்றிக்கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஜப்பானின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளிலேயே ஜப்பான் உலகின் முன்னேற்றமடைந்த நாடாக மீண்டு உருப்பெற்றது. இந்த அதிசயத்துக்கு காரணம் மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிருவாகம் மற்றும் கல்வி சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும் தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
.
Labels:
அரசியல் சிந்தனையாளர்கள்,
புரட்சிகள்,
மெய்ஜி,
வரலாறு,
ஜப்பான்
Saturday, July 17, 2010
எளிய தமிழில் பொதுவுடமை தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள்
உலகில் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இன்னும் பிற பொதுவுடமை சிந்தனையாளர்களின் தத்துவங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டது. உலக மக்களின் துயரங்களுக்கு ஒரே மாமருந்து முதலாளித்துவம் தான். பொதுவுடமை கொள்கையை கடைபிடிக்கும் நாடுகளில் பொதுவுடமை வலுவிழந்து வருகிறது. ஆகவே கம்யூனிச தத்துவம் அழிந்துவிட்டது. இப்படியாக ’அறிவு ஜீவிகள்’ என்றும் ‘மெத்தப் படித்தவர்கள்’ என்றும் காட்டிக்கொள்ளும் பலரும் ‘பிரசாரத்தில்’ ஈடுபட்டு வருவதைப் பார்க்கிறோம்.
பொதுவுடமைத் தத்துவத்தை ஆதரிப்பவர்களோ, ”உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவும் காலம்வரையில் பொதுவுடமை தத்துவத்தின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அது மனிதனின் வாழ்நிலையோடு, சமூக இயக்கத்தோடு இணைந்தது, அறிவியல் பூர்வமானது. பொதுவுடமையை பின்பற்றும் நாடுகளின் பின்னடைவுக்கு பல அக, புறச் சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. வரலாற்றுப் போக்கில் இவை இயல்பானதே. ‘சோவியத்’ மாதிரி குலைந்துவிட்டதால் பொதுவுடமை தத்துவம் அழிந்துவிடாது. தனது தவறுகளை, குறைகளை ஆய்ந்து புதிய ஆற்றலுடன் மீண்டும் மக்களை வழிநடத்தும். உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள், கொந்தளிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவை இதைத்தான் உணர்த்துகின்றன” என்று மார்க்சிய அழிவின்மை தத்துவத்தைக் கூறுகின்றனர்.
இந்த இரண்டு பிரிவுகளைச் சேராத மக்களுக்கோ இது ஒரு ‘தேவையில்லாத’ பேச்சு. ’நாம் பேசி என்ன ஆகப் போகுது?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு காரணம் சாதாரண மக்களிடம் பொதுவுடமை தத்துவம் பற்றிய அறிவு அல்லது தகவல் போதுமான அளவுக்குப் போய்ச் சேராததே ஆகும். ‘விஞ்ஞான சோஷலிசம்’ ‘வர்க்கப் போராட்டம்’ ‘அந்நியமாதல்’ ‘பூர்ஷ்வா கலாசாரம்’ ‘அகவய யதார்த்தம்- புறவய உண்மைகள்’ ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்’ போன்ற வார்த்தைகள் அறிவுஜீவிகளுக்கானது, நமக்கெல்லாம் புரியாது என்று மக்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.
மார்க்சிய-பொதுவுடமை தத்துவங்கள், அரசியல், அறிவியல், இலக்கியம் என பல துறைகளிலும் உள்ள சிந்தனைகள் சாதாரண மக்களை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் ’சோவியத் யூனியன்’ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆர்வமுள்ளவர்களின் தேவையை இந்த நூல்கள் பூர்த்தி செய்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவற்றைப் படிப்பதற்கே கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. தமிழும் கடினமாக இருந்தது. மேலும், ஓரளவு அடிப்படை விஷயங்களை தெரிந்தவர்களுக்கே இந்தத் தத்துவங்கள் புரியும்படி இருந்தன.
பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு புரியும்படி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. தமிழில் வெளியான அடிப்படை நூல்களில் பெருமளவு மொழிபெயர்ப்பே. அவற்றில் இருந்த மொழியியல் சிக்கல்களும் அந்நியத்தன்மையும் எளிமைக்குத் தடையாகவே இருக்கின்றன. எளிய மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படைகள் மிக மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு எழுதும் கடிதங்களில் ‘உயிரினத்தின் தோற்றம்’ ‘சமுதாயத்தின் தோற்றம்’ வர்க்கம் என்றால் என்ன?’ ‘பணம் எப்படி வந்தது’ ‘அடிமைகளின் தோற்றம்’ ‘இயந்திர உற்பத்தியின் வளர்ச்சி’ ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ ‘கம்யூனிச சமுதாயம் என்றால் என்ன?’ என மொத்தம் இருபத்தி ஐந்து தலைப்புகளைப் பற்றி அழகு தமிழில் எழுதியுள்ளார். பொதுவுடமை தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் ஆரம்ப நூலாக இதைப் படிக்கலாம்.
பாரம்பரியமான கம்யூனிச கொள்கையின் அடிப்படையிலேயே இந்நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறிவரும் உலக அரசியல், பொருளியல், சமூகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ’பாட்டாளிகள்’ ‘உற்பத்தி உறவுகள்’ போன்ற பல அம்சங்கள் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கின்றன என்றாலும் ஆரம்ப நூலாக இதை பயிலலாம். மக்களுக்கான தத்துவம் என்றால் அது மக்களை கவர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். நாங்கள் மட்டுமே உண்மையான் கம்யூனிஸ்டுகள் என்று தமக்குத்தாமே ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துக் கொள்ளும் பொதுவுடமைவாதிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவார்களேயானால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களை இங்கு காணலாம். (நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை & திரு செ. கணேசலிங்கன்)
பொதுவுடமைத் தத்துவத்தை ஆதரிப்பவர்களோ, ”உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவும் காலம்வரையில் பொதுவுடமை தத்துவத்தின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அது மனிதனின் வாழ்நிலையோடு, சமூக இயக்கத்தோடு இணைந்தது, அறிவியல் பூர்வமானது. பொதுவுடமையை பின்பற்றும் நாடுகளின் பின்னடைவுக்கு பல அக, புறச் சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. வரலாற்றுப் போக்கில் இவை இயல்பானதே. ‘சோவியத்’ மாதிரி குலைந்துவிட்டதால் பொதுவுடமை தத்துவம் அழிந்துவிடாது. தனது தவறுகளை, குறைகளை ஆய்ந்து புதிய ஆற்றலுடன் மீண்டும் மக்களை வழிநடத்தும். உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள், கொந்தளிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவை இதைத்தான் உணர்த்துகின்றன” என்று மார்க்சிய அழிவின்மை தத்துவத்தைக் கூறுகின்றனர்.
இந்த இரண்டு பிரிவுகளைச் சேராத மக்களுக்கோ இது ஒரு ‘தேவையில்லாத’ பேச்சு. ’நாம் பேசி என்ன ஆகப் போகுது?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு காரணம் சாதாரண மக்களிடம் பொதுவுடமை தத்துவம் பற்றிய அறிவு அல்லது தகவல் போதுமான அளவுக்குப் போய்ச் சேராததே ஆகும். ‘விஞ்ஞான சோஷலிசம்’ ‘வர்க்கப் போராட்டம்’ ‘அந்நியமாதல்’ ‘பூர்ஷ்வா கலாசாரம்’ ‘அகவய யதார்த்தம்- புறவய உண்மைகள்’ ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்’ போன்ற வார்த்தைகள் அறிவுஜீவிகளுக்கானது, நமக்கெல்லாம் புரியாது என்று மக்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.
மார்க்சிய-பொதுவுடமை தத்துவங்கள், அரசியல், அறிவியல், இலக்கியம் என பல துறைகளிலும் உள்ள சிந்தனைகள் சாதாரண மக்களை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் ’சோவியத் யூனியன்’ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆர்வமுள்ளவர்களின் தேவையை இந்த நூல்கள் பூர்த்தி செய்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவற்றைப் படிப்பதற்கே கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. தமிழும் கடினமாக இருந்தது. மேலும், ஓரளவு அடிப்படை விஷயங்களை தெரிந்தவர்களுக்கே இந்தத் தத்துவங்கள் புரியும்படி இருந்தன.
பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு புரியும்படி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. தமிழில் வெளியான அடிப்படை நூல்களில் பெருமளவு மொழிபெயர்ப்பே. அவற்றில் இருந்த மொழியியல் சிக்கல்களும் அந்நியத்தன்மையும் எளிமைக்குத் தடையாகவே இருக்கின்றன. எளிய மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படைகள் மிக மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு எழுதும் கடிதங்களில் ‘உயிரினத்தின் தோற்றம்’ ‘சமுதாயத்தின் தோற்றம்’ வர்க்கம் என்றால் என்ன?’ ‘பணம் எப்படி வந்தது’ ‘அடிமைகளின் தோற்றம்’ ‘இயந்திர உற்பத்தியின் வளர்ச்சி’ ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ ‘கம்யூனிச சமுதாயம் என்றால் என்ன?’ என மொத்தம் இருபத்தி ஐந்து தலைப்புகளைப் பற்றி அழகு தமிழில் எழுதியுள்ளார். பொதுவுடமை தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் ஆரம்ப நூலாக இதைப் படிக்கலாம்.
பாரம்பரியமான கம்யூனிச கொள்கையின் அடிப்படையிலேயே இந்நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறிவரும் உலக அரசியல், பொருளியல், சமூகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ’பாட்டாளிகள்’ ‘உற்பத்தி உறவுகள்’ போன்ற பல அம்சங்கள் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கின்றன என்றாலும் ஆரம்ப நூலாக இதை பயிலலாம். மக்களுக்கான தத்துவம் என்றால் அது மக்களை கவர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். நாங்கள் மட்டுமே உண்மையான் கம்யூனிஸ்டுகள் என்று தமக்குத்தாமே ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துக் கொள்ளும் பொதுவுடமைவாதிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவார்களேயானால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களை இங்கு காணலாம். (நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை & திரு செ. கணேசலிங்கன்)
உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன?
அன்பான மகளுக்கு,
உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாய். நல்லது. மகளே உனக்குள்ள சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறாய். நன்று. மனிதர் உணவு தேடுவதற்கும் பாதுகாப்பிற்குமாக எடுத்துக்கொண்ட கருவிகளையே உற்பத்திக் கருவிகள் என்போம்.
தடி, கல், கூரான கல், கவண், அம்பு, வில், செம்பு, உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகள், இரும்பால் செய்யப்பட்ட கருவிகள் என அக் கருவிகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. கருவிகள் வளர மக்கள் வாழ்க்கையும் வளர்ந்து வந்துள்ளது. சிந்தனையும் வளர்ந்து வந்துள்ளது. இதைச் சுருங்கக் கூறின் மனிதன் தேடிக் கொண்ட உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே அவனது வாழ்நிலை வளர்ச்சியாகும். அவனது வாழ்நிலையே அவனது சிந்தனையின் வளர்ச்சியையும் ஆக்குகிறது.
மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பற்றி இங்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். தன் தேவைக்கேற்ப உற்பத்திக் கருவிகளை ஆக்கிக் கொள்ள மனிதனால் மட்டுமே முடிந்தது. மிருகத்தால் அதைச் செய்ய முடியவில்லை. மிருகம் இயற்கையில் கிடைக்கும் பொருளை அப்படியே பயன்படுத்தும். மனிதன் அதனைத் தனது தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவான்.
இக்கருத்தையே உன் அப்பாவும் கொண்டிருக்கிறார். இவ்வாறு கருதுவது ஒரு தனிச் சித்தாந்தம் அல்லது மெய்ஞான முறையாகும். உலகத்திற்கும் உலக மக்களது வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் விளக்கம் பற்றிய துறையாகும்.
சாக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டில் பற்றி நீ படித்திருக்கலாம். பெற்றன் ரசல், சாத்ரே பற்றிப் படிக்காவிட்டாலும் மார்க்கஸ் பற்றி அறிந்திருப்பாய்தானே. மார்க்ஸ் மற்றவர்களை விட வேறுபட்டவர். அவர் உலகத்திற்கு விளக்கம் கூரியது மட்டுமல்ல அதை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பதையும் விளக்கிக் காட்டியவர். இவை பற்றி, நீ பின்னர் விரிவாகப் படித்துக் கொள்வாய்.
மேலே கூறிய சித்தாந்த முறையையே பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்று கூறுவர். அதாவது பொருளின் வளர்ச்சி அல்லது உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே மனிதச் சிந்தனையை அல்லது வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதாகும். அப்போது இதற்கு எதிரான கோட்பாடு என்னப்பா என்று கேட்கிறாயா? அதையே கூற வருகிறேன்.
மனித சிந்தனையே முந்தியது, அதன் வளர்ச்சியே உற்பத்திக் கருவிகளையும் வளரச் செய்தது. உபரி உற்பத்திக்கு வழி செய்தது. சமுதாயத்தையும் வளர்த்தது. இவ்வாறு விவாதிப்பதையே கருத்தியம் அல்லது கருத்து முதல் வாதம் என்பர். நீ உன் பள்ளியிலும் பிற விடங்களிலும் காணும் பெரும்பாலானோர் இக்கோட்பாடு கொண்டவரேயாவர்.
சரியாகக் கணக்கு செய்யாவிடின் அம்மா அல்லது உன் ஆசிரியர் ‘மூளையிலே களிமண்ணா?’ என்று சினப்பதைக் கேட்டிருப்பாய். தலையிலே மூளை என ஒரு பொருள் இருக்கிறது. களிமண் போலத் தொட்டுப் பார்க்கத் தக்க பொருள் மூளை. நீ ஏற்றுக் கொள்கிறாயா? அப்போது நீ பொருளியல்வாதி அல்லது பொருள்முதல்வாதி. கருத்தியல்வாதி அல்லது கருத்துமுதல்வாதிகள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பொருள் முதல்வாதம் கருத்துமுதல்வாதம்; இவ்விரு வகை சித்தாந்தங்களும் நீண்ட காலமாகவே நிலவிவந்தவையாகும். மத வழிபாட்டை ஆதரிப்பவர்களெல்லோரும் கருத்து முதல்வாதிகளே. மத வழிபாட்டைஎதிர்க்கும் தமிழ்நாட்டிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தவர் கூடக் கருத்து முதல்வாதிகளே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அவர்கள் கூறுவர்.
உலகம் முதலில் உயிரற்ற பொருட்களையே கொண்டிருந்தது. அவற்றின் வளர்ச்சியிலேயே உயிரினங்களும் மனிதனும் தோன்றின. மனிதன் தன் மூளையின் பிரதிபலிப்பின் மூலமே பிற பொருட்களைக் காண்கிறான். திட, திரவ, வாயு போன்ற பிற புறபொருட்களைக் ஐம்புலன்களினால், சிந்தனையால் உணர்கிறான். அதே போல தன் உழைப்பு, சமூக உறவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர முடிகிறது. இவையும் பொருள் சார்ந்தவையே. இத்தகைய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்களே பொருள்முதல்வாதிகள்.
முன்னர் நான் எழுதிய முறையிலே கார்ல் மார்க்ஸ் என்பவர் மனித சமுதாய வளர்ச்சியைக் கண்டார். அவர் இவ்வளர்ச்சிப் போக்கிற்குப் புதிதோர் பெயரிட்டார். அதுவே இயக்கவியல் பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்பதாகும். மேற்கூறியவற்றின் தொகுப்பே அது. மூன்று அம்சங்களை இச் சித்தாந்தம் கூறுகிறது. (1) உற்பத்திக் கருவிகளை வளர்ப்பதன் மூலம் மனிதன் இயற்கையை வெல்கிறான். (2) அதனால் சமுதாயம் வளர்ச்சி அடைகிறது. (3) மனிதனுது சிந்தனை வளர்ச்சியடைகிறது.
அன்புள்ள,
அப்பா.
வர்க்கச் சமுதாயம் என்றால் என்ன?
அன்புமகளே,
மனிதனுடைய தனிச் சிறப்புகள் பற்றிப் பின்னரும் எழுதினேன். உற்பத்திக் கருவிகளை அவன் மேலும் மேலும் சிறப்பாக்குகிறான்; கூர்மை அடையச் செய்கிறான். அதோடு அவனது சிந்தனையும் வளர்ச்சி அடைகிறது. இயற்கையை நுணுகி ஆராய்கிறான். பலவற்றைக் கற்றுக் கொள்கிறான். இயற்கையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு ஏற்படுகிறது.
இவை ஒரு நீண்ட கால வளர்ச்சியின் தொடராகும். மிருகங்கள் இயற்கையோடு ஒட்டியே வாழ்ந்தன; இயற்கையில் கிடைப்பவற்றையே உண்டு வாழ்ந்து வந்தன். மனிதன் இதற்கு விலக்காகிறான். எப்படித் தெரியுமா? அவன் உற்பத்திக் கருவிகளை இயற்கை மீது செலுத்துகிறான். கற்கோடாரியால் மரத்தை வெட்டுகிறான். செம்பு உலோகத்தால் செய்த வாளால் இறைச்சியை வெட்டுகிறான். கற்களை உராய்த்துத் தீ மூட்டுகிறான்; இரும்புக் கலப்பையால் நிலத்தைக் கீறி உழுகிறான். தானியத்தை விதைக்கிறான்.
மனிதன், உற்பத்திக் கருவிகள், இயற்கை; இம்மூன்றையும் தனித்தனியே கவனிக்க. இன்று நாம் காணும் வளர்ச்சி அனைத்துமே மனிதன் உற்பத்திக் கருவிகளை வளர்த்து இயற்கை மீது செலுத்தியதால் ஏற்பட்ட வளர்ச்சி என்பதை மறந்துவிடாதே. எப்பொருளும் வானத்திலிருந்து வந்துவிடவில்லை. கட்டிடங்கள், கார்கள், விமானம், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், உடை, உணவு, யந்திரங்கள்.... எல்லாமே மனிதர் உழைப்புக் கருவிகளை இயக்கித் தம் உழைப்புச் சக்திகளைச் செலுத்தப் பிறந்தவைகள் தான்.
மனிதனிடம் உள்ளது மகத்தான உழைப்புச் சக்தியாகும். நிலம், நீர், மூலப்பொருட்களை உற்பத்திச் சாதனங்கள் அல்லது இலக்குப் பொருட்கள் என்பர். உழைப்புக் கருவிகள் என்பன பற்றி மேலே சொல்லி உள்ளேனே. ஆகவே மேலே கூறியதை இன்னும் சிறப்பாகப் பின்வருமாறு கூறலாம்; மனிதர் இயற்கையின் மீது தம் உழைப்புச் சக்தியைச் செலுத்தியே தமக்குத் தேவைப்பட்ட உற்பத்திக் கருவிகளையும் ஆக்கிக் கொள்கிறார்கள். பின்னர் தம் தேவைக்கு ஏற்ப அக்கருவிகளை மென்மேலும் மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.
உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்தன; பழங்குடியினர் நிலை பெறத் தொடங்கினர். தம் தேவைக்கு மேலாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இதையே உபரி உற்பத்தி என முன்னரும் எழுதினேன். அப்போதுதான் மனிதனுடைய வேகமான வளர்ச்சி ஆரம்பமாகத் தொடங்கியது, அதே வேளையில் மனித சமுதாய உறவுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்ற பழங்குடியினரைக் கொன்று ஒழிப்பதை நிறுத்தினர். அவர்களைத் தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனர். தாம் செய்த வேலைகளை அவர்களைக் கொண்டு செய்வித்தனர். மேலும் சிறப்பாகச் சொல்லின், தாம் உழைக்காது தம்மிடமுள்ள உற்பத்திக் கருவிகளை அடிமைகளிடம் கொடுத்து உழைக்கச் செய்தனர்.
அவ்வடிமைகளுக்கு உணவு, உறைவிடம் மட்டும் அளித்தனர். ஏன் தெரியுமா? அடிமைகள் தாம் இழ்ந்த உழைப்புச் சக்தியை மீண்டும் பெற்றுப் புதிய தெம்போடு ஆண்டைகளுக்கு நாளைக்கும் உழைக்க வேண்டும் என்பதற்காகத் தான். அடிமைகள் தாம் உண்ட உணவிற்கும் மேலாக உபரியாக – உற்பத்தி செய்தார்கள். அவர்கள் உழைப்பால் கிடைத்த மேலதிக உற்பத்தியை, - உபரி உழைப்பை – உற்பத்திக் கருவிகளை வைத்திருந்த ஆண்டைகள் அபகரித்தனர். அடிமைகளும் நிலபுலங்கள் போல ஆண்டைகளின் உடைமைப் பொருளாயினர்; ஆடுமாடுகளைப் போல விற்பனைப் பண்டமாயினர்.
இங்குச் சுதந்திரமாக வாழ்ந்து வந்த மனிதர்களிடையே நிலவும் உறவுகளைப் பார்த்தாயா? ஒரு பிரிவினர் – ஆண்டைகள் – உற்பத்திக் கருவிகளையும், உற்பத்திச் சாதனங்களையும் கொண்டிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் அடிமைகள்.
ஒரு உடைமையுமின்றி ஆண்டைகளுக்குத் தமது உழைப்புச் சக்தியை மட்டும் நாள் தோறும் செலவு செய்து வாழ்ந்து வருகின்றனர். உற்பத்தி சாதனங்களை வைத்திருந்த இந்த ஆண்டைகள் உடமையாளர்களாக இருக்கவும் உற்பத்திச் சக்தியை வைத்திருந்த அடிமைகள் உரிமையும் உடைமையும் அற்றவர்களாயிருந்ததையும் பார்க்கிறாயல்லவா? இவ்விரு தரப்பட்டவர்களிடம் நிலவும் உறவு போன்றவற்றைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம்.
மனித வரலாற்றில் இங்கு தான் வர்க்கச் சமுதாயம் தோன்றிவிட்டதாக மார்க்ஸ் கூறினார். ஒரு பகுதியினர் பறித்தெடுக்கும் அநாகரிக முறை; இது நீதியாக்கப் பட்டது. உலகின் பல பகுதிகளில் சென்ற 4000 ஆண்டுகளாக இத்தகைய முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. காலப் போக்கில் உற்பத்தி உறவுகளிடை பண்ணை அடிமை, கூலி அடிமை எனச் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வளவேதான். இத்தகைய அமைப்பை அழிப்பது அப்பாவின் கோட்பாடாகும். இது தவறான கொள்கையா? அதையே சோசலிசம் என்று கூறுவோம். இது மனித சமுதாய வளர்ச்சிக்காகச் செய்யும் பெரிய சேவையாக உனக்குத் தோன்றவில்லையா?
அன்புள்ள,
அப்பா.
‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்கள்.
நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ்,சென்னை
Labels:
உற்பத்திக்கருவி,
கம்யூனிசம்,
நூல் அறிமுகம்,
வர்க்கம்
Wednesday, May 5, 2010
கடவுள் உண்டா? இல்லையா? - புத்தரின் பதில்

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் விவாதம் இது. இந்திய தத்துவ விசாரணையின் முக்கிய கருப்பொருளாகவும் இது ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. மேற்கத்திய நாத்திக மரபைக் காட்டிலும் இந்திய நாத்திக, கடவுள் மறுப்பு மரபு பழமையானது, ஆழமானது. பிற்காலத்தில் ஏற்பட்ட பார்ப்பனிய எழுச்சி, கடவுள் மறுப்பு வாதங்களையும் தத்துவ விசாரணைகளையும் பெருமளவு அழித்தும் மறைத்தும் அல்லது மாற்றியும் விட்டது.
பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுளே. படைத்ததோடு அவற்றின் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருப்பவர் அவரே.....என்றெல்லாம் கடவுளைப் பற்றிய வரையறைகளை அவரவர் விருப்பத்துக்கு அள்ளித் தெளித்தனர். இன்றுவரை இந்த நிலை தொடரத்தான் செய்கிறது. 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய சமுதாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய செல்வாக்கை பார்ப்பனீயம் பெற்றிருந்தாலும் அதன் தத்துவத்தையும் செல்வாக்கையும் எதிர்க்கக்கூடிய தத்துவங்களும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அந்த வகையில் வேத மரபை, பார்ப்பனீயத்தை எதிர்த்த தத்துவத்தில் முதன்மையாக இடம்பெறத் தக்கது புத்தரின் பகுத்தறிவு கொள்கைகள்.
’கடவுளைப் பற்றிய கேள்விக்கு புத்தர் பதில் சொல்லவில்லை. ஆன்மா இல்லை என்றும் தெளிவாகச் சொல்லவில்லை’. எனவே புத்தர் கடவுளை எதிர்க்கவில்லை என்று அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று புத்தர் சொல்லியிருந்தால், புத்த மதத்தை சேர்ந்தவர்களே அவரை ஏன் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் கேட்கிறார்கள். அப்படியானால் புத்தர் கடவுளை மறுக்கவில்லையா?
விடை தெரிந்துகொள்ள தத்துவ நூல்களை புரட்டியதில் முதலில் கண்ணில் பட்டது அருணன் அவர்கள் எழுதி ’வசந்தம் வெளியீட்டகம்’ வெளியிட்டுள்ள ’தமிழரின் தத்துவ மரபு’ என்னும் நூல். இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த நூலில் ஆதி தத்துவ மரபில் தொடங்கி, வேத மரபு, வேதமறுப்பு மரபு, சாங்கியம், ஆசீவகம், சமணம், பவுத்தம், சைவ சித்தாந்தம், நாட்டார் மரபு.............தற்கால ’நவீன குருமார்கள்’ வரை அனைத்துத் தத்துவங்களும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஏராளமான இலக்கிய மேற்கோள்கள், விவாதங்கள், அலசல்களுடன் தமிழர் தத்துவத்தை அறிந்துகொள்ள சிறந்த அறிமுக நூலாக அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தரின் வாதத்தை இனி பார்க்கலாம்.
பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். கடவுளைப் பற்றி புத்தர் பேசியிருக்கிறார். ராதாகிருஷ்ணன் புத்தர் கூறியதாக உள்ள அந்தப் பகுதியைத் தனது நூலில் (”இந்தியத் தத்துவம்” ) அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். அது -
”அனாதபிந்திகாவுடனான உரையாடலில் புத்தர் இவ்வாறு இது பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது – உலகமானது ஈஸ்வரனால் படைக்கப்பட்டது என்றால் அங்கே மாற்றமோ அல்லது அழிவோ இருக்கக்கூடாது. அங்கே துன்பம் அல்லது பேரழிவு போன்ற விஷயங்களே நடக்கக் கூடாது. காரணம், நல்லது அல்லது கெட்டது மற்றும் சுத்தமானது அல்லது அசுத்தமானது எனச் சகலமும் அவனிடமிருந்தே வந்திருக்கவேண்டும். உணர்வுள்ள உயிர்களிடம் உள்ள துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பு என்பதெல்லாம் ஈஸ்வரனின் வேலை என்றால் அவனே அந்தத் துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பிற்கு ஆட்படுபவனாக இருக்க வேண்டும். அவனுக்கும் இதுவெல்லாம் உண்டு என்றால் அவன் எப்படி முழு நிறைப் பரம்பொருளாக இருக்க முடியும்?
ஈஸ்வரனே படைத்தவன் என்றால், அனைத்து உயிர்களும் மௌனமாக படைத்தவனின் சக்திக்கு அடங்கிப் போக வேண்டும் என்றால் அறங்களைப் பின்பற்றுவதால் என்ன பயன் விளைய முடியும்? நல்லது அல்லது கெட்டதைச் செய்வதும் இப்படியே ஆகும். காரணம், அனைத்துச் செயல்களும் அவனுடையவையே. இவை அனைத்தும் அவற்றை உண்டாக்கியவனிடமும் இருக்கும். கவலைக்கும் துன்பத்திற்கும் வேறு ஒன்றே காரணம் என்றால், ஈஸ்வரனால் படைக்கப்படாத ஒன்று இருந்ததாக ஆகிவிடும். அப்படியென்றால், இருக்கிற அனைத்திற்குமே அவன் காரணம் அல்லவென்று ஏன் கூறக்கூடாது?
மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் அவன் ஏதோ நோக்கத்தோடோ அல்லது நோக்கமில்லாமலோ படைத்திருக்க வேண்டும். நோக்கத்தோடு படைத்தான் என்றால் அவன் முழுநிறைப் பரம்பொருளாக இருக்க முடியாது. காரணம், நோக்கம் என்றாலே விருப்பத்தை முடித்த திருப்தி என்பது உள்ளுறையாக அமைந்து விடுகிறது. எந்த நோக்கமுமின்றி படைத்தான் என்றால் அவன் பைத்தியக்காரனைப் போல அல்லது பால் குடிக்கும் பாலகனைப் போல இருக்க வேண்டும்.
மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் மக்கள் ஏன் அவனுக்கு பயந்து பணிய வேண்டும்? தங்களின் தேவையைக் கருதி ஏன் அவனுக்கு காணிக்கை செலுத்தவேண்டும்? ஏன் மக்கள் பல கடவுள்களை வணங்க வேண்டும்? ஆக, பகுத்தறிவின் படி பார்த்தால் ஈஸ்வரன் என்கிற கருது கோள் பொய்யானது என்று நிரூபணமாகிறது. (ஈஸ்வரன் பற்றிக் கூறப்படுகிற) ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.” (”அஷ்வகோஷாவின் புத்த சரிதா”)
புத்தர் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கிறார். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார் -
”மனிதனால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடவுள் பெரியவர் என்று ஆத்திகவாதிகள் சொல்வார்களேயானால், அவரின் குணங்களும் நம்மால் அறிய முடியாதவை என்று ஆகும். அப்படியென்றால் அவரே படைத்தவர் என்பதை நம்மால் அறியவும் முடியாது, அவருக்கு அந்த குணத்தை நம்மால் கொடுக்கவும் முடியாது.” (போதி கார்யாவதாரா”)
இன்றளவுக்கும் முன்வைக்கப்படுகிற வாதம் இது. தர்க்கவியலுக்குள் கடவுளின் இருப்பு சிக்கித்தவிக்கும் போது அதை மீட்டுக் கொள்ள மனிதனை அறியாதவன் என்று மனிதனே கூறிவிடுவான். அப்படியே வைத்துக் கொண்டாலும் அறிய முடியாத கடவுளை, படைத்தவன் என்று அறிவது மட்டும் எப்படி என்று மடக்குகிறார் புத்தர்.
”அறியப்பட்ட அனைத்தோடும் தொடர்பின்றி தனித்திருப்பவர் அந்த முழு நிறைப் பரம் பொருள் என்றால், அவனது இருப்பை பகுத்தறிவால் நிலை நிறுத்த முடியாது. இதர பொருட்களுக்குத் தொடர்பில்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்? நாம் அறிந்த வரை முழுப் பிரபஞ்சமும் தொடர்புகளின் முறைமைதான்: எந்த ஒன்றோடும் தொடர்பில்லாத அல்லது தொடர்புபடுத்த முடியாத ஒன்றே இல்லை. எதையும் ஆதாரமாகக் கொள்ளாத ஒன்று, எதோடும் தொடர்பில்லாத ஒன்று எப்படி ஒன்றோடு ஒன்றாய் தொடர்புடையவற்றை, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாய் இருக்கக் கூடியவற்றை படைத்திருக்க முடியும்?
மேலும் முழு நிறைப் பரம்பொருளானது ஒன்றா அல்லது பலவா? அது ஒன்றே என்றால் நமக்குத் தெரிந்து பலவகைக் காரணங்களிலிருந்து பிறக்கிற பலவகையானவற்றிற்கு எப்படி காரணமாக இருக்க முடியும்? எத்தனை வகைப் பொருட்கள் உண்டோ அத்தனை வகை முழு முதற் பரம் பொருள் உண்டு என்றால், ஒன்றுக்கு ஒன்று எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பரம்பொருள் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறது, அனைத்து வெளியிலும் நிறைந்திருக்கிறது என்றால் அது எதையும் படைத்திருக்க முடியாது. காரணம், படைக்க ஏதும் இருக்காது.
பரம்பொருள் நிர்குணவாதி என்றால் அவனிலிருந்து வந்த அனைத்திற்கும் குணங்கள் இருக்காது. ஆனால், உண்மையில் உலகில் உள்ள அனைத்தும் குணங்களால் நிரம்பியுள்ளன. எனவே, அந்தப் பரம் பொருள் அவற்றிற்கு காரணகர்த்தாவாக இருக்க முடியாது. குணங்களிலிருந்து தனித்து நிற்பவன் பரம் பொருள் என்றால் குணங்கள் உள்ள இத்தனைப் பொருட்களை எப்படி அவற்றில் தன்னை வெளிப்படுத்தி வருகிறான்?
பரம் பொருள் மாறாதது என்றால், அனைத்து பொருள்களும் கூட மாறாததாக இருக்க வேண்டும். காரணத்திலிருந்து பிறந்த காரியம் அதன் குணத்தில் மாறுபட முடியாது. ஆனால், உலகில் அனைத்துப் பொருள்களும் மாறுதலுக்கும் அழிவுக்கும் உட்படுகின்றன. அப்படியெனில் பரம் பொருள் மட்டும் எப்படி மாறாததாக இருக்க முடியும்? மேலும், அனைத்திற்குள்ளும் பரவி நிற்கிற பரம் பொருளே அனைத்திற்கும் காரணம் என்றால் முக்தியை நாம் ஏன் நாட வேண்டும்? நாம் தான் அந்தப் பரம் பொருளை நம்மிலேயே கொண்டுள்ளோமே! அந்தப் பரம் பொருள் உருவக்கியதே என்று ஒவ்வொரு துயரத்தையும் கவலையையும் பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான்! (”அஸ்வகோஷாவின் புத்த சரிதா”)
கடவுள் என்கிற கருதுகோளை எந்த வகையிலும் மெய் என்று நிருபிக்க முடியாது. நிரூபிக்க முயன்றால் அது சுயமுரணுக்குள் போயே முடியும். காரணம், அந்தக் கருதுகோள் முற்றிலும் கற்பிதமானது என்பதால் பகுத்தறிவுக்கு அடங்காது. பகுத்தறிவுக்கு அடங்காத ஒன்றை இருப்பதாக அந்தப் பகுத்தறிவைக் கொண்டே நிரூபிக்க முயலும் சகல முயற்சிகளும் தோற்றுப் போகும் என்பதை அற்புதமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் புத்தர். இதன் மூலம் தன்னையொரு மகத்தான பகுத்தறிவாளராக வெளிப்படுத்தியுள்ளார்.
Labels:
கடவுள் உண்டா?,
தத்துவம்,
பகுத்தறிவு,
புத்தர்
Subscribe to:
Posts (Atom)


















