Saturday, July 17, 2010

உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன?




அன்பான மகளுக்கு,

உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாய். நல்லது. மகளே உனக்குள்ள சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறாய். நன்று. மனிதர் உணவு தேடுவதற்கும் பாதுகாப்பிற்குமாக எடுத்துக்கொண்ட கருவிகளையே உற்பத்திக் கருவிகள் என்போம்.

தடி, கல், கூரான கல், கவண், அம்பு, வில், செம்பு, உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகள், இரும்பால் செய்யப்பட்ட கருவிகள் என அக் கருவிகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. கருவிகள் வளர மக்கள் வாழ்க்கையும் வளர்ந்து வந்துள்ளது. சிந்தனையும் வளர்ந்து வந்துள்ளது. இதைச் சுருங்கக் கூறின் மனிதன் தேடிக் கொண்ட உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே அவனது வாழ்நிலை வளர்ச்சியாகும். அவனது வாழ்நிலையே அவனது சிந்தனையின் வளர்ச்சியையும் ஆக்குகிறது.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பற்றி இங்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். தன் தேவைக்கேற்ப உற்பத்திக் கருவிகளை ஆக்கிக் கொள்ள மனிதனால் மட்டுமே முடிந்தது. மிருகத்தால் அதைச் செய்ய முடியவில்லை. மிருகம் இயற்கையில் கிடைக்கும் பொருளை அப்படியே பயன்படுத்தும். மனிதன் அதனைத் தனது தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவான்.

இக்கருத்தையே உன் அப்பாவும் கொண்டிருக்கிறார். இவ்வாறு கருதுவது ஒரு தனிச் சித்தாந்தம் அல்லது மெய்ஞான முறையாகும். உலகத்திற்கும் உலக மக்களது வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் விளக்கம் பற்றிய துறையாகும்.

சாக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டில் பற்றி நீ படித்திருக்கலாம். பெற்றன் ரசல், சாத்ரே பற்றிப் படிக்காவிட்டாலும் மார்க்கஸ் பற்றி அறிந்திருப்பாய்தானே. மார்க்ஸ் மற்றவர்களை விட வேறுபட்டவர். அவர் உலகத்திற்கு விளக்கம் கூரியது மட்டுமல்ல அதை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பதையும் விளக்கிக் காட்டியவர். இவை பற்றி, நீ பின்னர் விரிவாகப் படித்துக் கொள்வாய்.

மேலே கூறிய சித்தாந்த முறையையே பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்று கூறுவர். அதாவது பொருளின் வளர்ச்சி அல்லது உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே மனிதச் சிந்தனையை அல்லது வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதாகும். அப்போது இதற்கு எதிரான கோட்பாடு என்னப்பா என்று கேட்கிறாயா? அதையே கூற வருகிறேன்.

மனித சிந்தனையே முந்தியது, அதன் வளர்ச்சியே உற்பத்திக் கருவிகளையும் வளரச் செய்தது. உபரி உற்பத்திக்கு வழி செய்தது. சமுதாயத்தையும் வளர்த்தது. இவ்வாறு விவாதிப்பதையே கருத்தியம் அல்லது கருத்து முதல் வாதம் என்பர். நீ உன் பள்ளியிலும் பிற விடங்களிலும் காணும் பெரும்பாலானோர் இக்கோட்பாடு கொண்டவரேயாவர்.

சரியாகக் கணக்கு செய்யாவிடின் அம்மா அல்லது உன் ஆசிரியர் ‘மூளையிலே களிமண்ணா?’ என்று சினப்பதைக் கேட்டிருப்பாய். தலையிலே மூளை என ஒரு பொருள் இருக்கிறது. களிமண் போலத் தொட்டுப் பார்க்கத் தக்க பொருள் மூளை. நீ ஏற்றுக் கொள்கிறாயா? அப்போது நீ பொருளியல்வாதி அல்லது பொருள்முதல்வாதி. கருத்தியல்வாதி அல்லது கருத்துமுதல்வாதிகள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பொருள் முதல்வாதம் கருத்துமுதல்வாதம்; இவ்விரு வகை சித்தாந்தங்களும் நீண்ட காலமாகவே நிலவிவந்தவையாகும். மத வழிபாட்டை ஆதரிப்பவர்களெல்லோரும் கருத்து முதல்வாதிகளே. மத வழிபாட்டைஎதிர்க்கும் தமிழ்நாட்டிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தவர் கூடக் கருத்து முதல்வாதிகளே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அவர்கள் கூறுவர்.

உலகம் முதலில் உயிரற்ற பொருட்களையே கொண்டிருந்தது. அவற்றின் வளர்ச்சியிலேயே உயிரினங்களும் மனிதனும் தோன்றின. மனிதன் தன் மூளையின் பிரதிபலிப்பின் மூலமே பிற பொருட்களைக் காண்கிறான். திட, திரவ, வாயு போன்ற பிற புறபொருட்களைக் ஐம்புலன்களினால், சிந்தனையால் உணர்கிறான். அதே போல தன் உழைப்பு, சமூக உறவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர முடிகிறது. இவையும் பொருள் சார்ந்தவையே. இத்தகைய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்களே பொருள்முதல்வாதிகள்.

முன்னர் நான் எழுதிய முறையிலே கார்ல் மார்க்ஸ் என்பவர் மனித சமுதாய வளர்ச்சியைக் கண்டார். அவர் இவ்வளர்ச்சிப் போக்கிற்குப் புதிதோர் பெயரிட்டார். அதுவே இயக்கவியல் பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்பதாகும். மேற்கூறியவற்றின் தொகுப்பே அது. மூன்று அம்சங்களை இச் சித்தாந்தம் கூறுகிறது. (1) உற்பத்திக் கருவிகளை வளர்ப்பதன் மூலம் மனிதன் இயற்கையை வெல்கிறான். (2) அதனால் சமுதாயம் வளர்ச்சி அடைகிறது. (3) மனிதனுது சிந்தனை வளர்ச்சியடைகிறது.

அன்புள்ள,

அப்பா.




வர்க்கச் சமுதாயம் என்றால் என்ன?

அன்புமகளே,

மனிதனுடைய தனிச் சிறப்புகள் பற்றிப் பின்னரும் எழுதினேன். உற்பத்திக் கருவிகளை அவன் மேலும் மேலும் சிறப்பாக்குகிறான்; கூர்மை அடையச் செய்கிறான். அதோடு அவனது சிந்தனையும் வளர்ச்சி அடைகிறது. இயற்கையை நுணுகி ஆராய்கிறான். பலவற்றைக் கற்றுக் கொள்கிறான். இயற்கையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு ஏற்படுகிறது.

இவை ஒரு நீண்ட கால வளர்ச்சியின் தொடராகும். மிருகங்கள் இயற்கையோடு ஒட்டியே வாழ்ந்தன; இயற்கையில் கிடைப்பவற்றையே உண்டு வாழ்ந்து வந்தன். மனிதன் இதற்கு விலக்காகிறான். எப்படித் தெரியுமா? அவன் உற்பத்திக் கருவிகளை இயற்கை மீது செலுத்துகிறான். கற்கோடாரியால் மரத்தை வெட்டுகிறான். செம்பு உலோகத்தால் செய்த வாளால் இறைச்சியை வெட்டுகிறான். கற்களை உராய்த்துத் தீ மூட்டுகிறான்; இரும்புக் கலப்பையால் நிலத்தைக் கீறி உழுகிறான். தானியத்தை விதைக்கிறான்.


மனிதன், உற்பத்திக் கருவிகள், இயற்கை; இம்மூன்றையும் தனித்தனியே கவனிக்க. இன்று நாம் காணும் வளர்ச்சி அனைத்துமே மனிதன் உற்பத்திக் கருவிகளை வளர்த்து இயற்கை மீது செலுத்தியதால் ஏற்பட்ட வளர்ச்சி என்பதை மறந்துவிடாதே. எப்பொருளும் வானத்திலிருந்து வந்துவிடவில்லை. கட்டிடங்கள், கார்கள், விமானம், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், உடை, உணவு, யந்திரங்கள்.... எல்லாமே மனிதர் உழைப்புக் கருவிகளை இயக்கித் தம் உழைப்புச் சக்திகளைச் செலுத்தப் பிறந்தவைகள் தான்.


மனிதனிடம் உள்ளது மகத்தான உழைப்புச் சக்தியாகும். நிலம், நீர், மூலப்பொருட்களை உற்பத்திச் சாதனங்கள் அல்லது இலக்குப் பொருட்கள் என்பர். உழைப்புக் கருவிகள் என்பன பற்றி மேலே சொல்லி உள்ளேனே. ஆகவே மேலே கூறியதை இன்னும் சிறப்பாகப் பின்வருமாறு கூறலாம்; மனிதர் இயற்கையின் மீது தம் உழைப்புச் சக்தியைச் செலுத்தியே தமக்குத் தேவைப்பட்ட உற்பத்திக் கருவிகளையும் ஆக்கிக் கொள்கிறார்கள். பின்னர் தம் தேவைக்கு ஏற்ப அக்கருவிகளை மென்மேலும் மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.


உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்தன; பழங்குடியினர் நிலை பெறத் தொடங்கினர். தம் தேவைக்கு மேலாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இதையே உபரி உற்பத்தி என முன்னரும் எழுதினேன். அப்போதுதான் மனிதனுடைய வேகமான வளர்ச்சி ஆரம்பமாகத் தொடங்கியது, அதே வேளையில் மனித சமுதாய உறவுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.


போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்ற பழங்குடியினரைக் கொன்று ஒழிப்பதை நிறுத்தினர். அவர்களைத் தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனர். தாம் செய்த வேலைகளை அவர்களைக் கொண்டு செய்வித்தனர். மேலும் சிறப்பாகச் சொல்லின், தாம் உழைக்காது தம்மிடமுள்ள உற்பத்திக் கருவிகளை அடிமைகளிடம் கொடுத்து உழைக்கச் செய்தனர்.


அவ்வடிமைகளுக்கு உணவு, உறைவிடம் மட்டும் அளித்தனர். ஏன் தெரியுமா? அடிமைகள் தாம் இழ்ந்த உழைப்புச் சக்தியை மீண்டும் பெற்றுப் புதிய தெம்போடு ஆண்டைகளுக்கு நாளைக்கும் உழைக்க வேண்டும் என்பதற்காகத் தான். அடிமைகள் தாம் உண்ட உணவிற்கும் மேலாக உபரியாக – உற்பத்தி செய்தார்கள். அவர்கள் உழைப்பால் கிடைத்த மேலதிக உற்பத்தியை, - உபரி உழைப்பை – உற்பத்திக் கருவிகளை வைத்திருந்த ஆண்டைகள் அபகரித்தனர். அடிமைகளும் நிலபுலங்கள் போல ஆண்டைகளின் உடைமைப் பொருளாயினர்; ஆடுமாடுகளைப் போல விற்பனைப் பண்டமாயினர்.

இங்குச் சுதந்திரமாக வாழ்ந்து வந்த மனிதர்களிடையே நிலவும் உறவுகளைப் பார்த்தாயா? ஒரு பிரிவினர் – ஆண்டைகள் – உற்பத்திக் கருவிகளையும், உற்பத்திச் சாதனங்களையும் கொண்டிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் அடிமைகள்.

ஒரு உடைமையுமின்றி ஆண்டைகளுக்குத் தமது உழைப்புச் சக்தியை மட்டும் நாள் தோறும் செலவு செய்து வாழ்ந்து வருகின்றனர். உற்பத்தி சாதனங்களை வைத்திருந்த இந்த ஆண்டைகள் உடமையாளர்களாக இருக்கவும் உற்பத்திச் சக்தியை வைத்திருந்த அடிமைகள் உரிமையும் உடைமையும் அற்றவர்களாயிருந்ததையும் பார்க்கிறாயல்லவா? இவ்விரு தரப்பட்டவர்களிடம் நிலவும் உறவு போன்றவற்றைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம்.

மனித வரலாற்றில் இங்கு தான் வர்க்கச் சமுதாயம் தோன்றிவிட்டதாக மார்க்ஸ் கூறினார். ஒரு பகுதியினர் பறித்தெடுக்கும் அநாகரிக முறை; இது நீதியாக்கப் பட்டது. உலகின் பல பகுதிகளில் சென்ற 4000 ஆண்டுகளாக இத்தகைய முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. காலப் போக்கில் உற்பத்தி உறவுகளிடை பண்ணை அடிமை, கூலி அடிமை எனச் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வளவேதான். இத்தகைய அமைப்பை அழிப்பது அப்பாவின் கோட்பாடாகும். இது தவறான கொள்கையா? அதையே சோசலிசம் என்று கூறுவோம். இது மனித சமுதாய வளர்ச்சிக்காகச் செய்யும் பெரிய சேவையாக உனக்குத் தோன்றவில்லையா?

அன்புள்ள,
அப்பா.


‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்கள். 

நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ்,சென்னை

No comments:

Post a Comment