Tuesday, April 20, 2010

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம் - 3

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி-1
தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி-2

நிஷா - பாகம் 3
வசந்த காலம். கடந்த ஆறு மாதங்களாக மொட்டையாய் நின்ற மரக் கிளைகளில் சிறிய இலைகள் துளிர் விடுகின்றன. பனி உருகி, பசும்புல்லால் போர்த்தியது போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பூமி. திசை முழுதும் புத்துயிரும் புதிய களையும் பெற்று விளங்கின. காற்றிலே நல்ல வாசனை எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அநேக விதப் பட்சிகள் மரக்கிளைகளில் அமர்ந்து இனிய சப்தமிடுகின்றன. எங்கும் வண்டுகளின் ரீங்காரம்; பனி உருகி வரும் நீரோட்டக் கரைகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் புழுக்களைத் தின்பதில் கவனத்தைச் செலுத்துகின்றன.

ஆணும், பெண்ணுமான ஜோடி அன்னங்கள் காதலில் திளைத்திருக்கின்றன. ஆங்காங்கு மான் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்றன. ஆடுகள், மாடுகள் முதலிய மிருகங்கள் ஒரு புறம் கவலையற்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை விழுங்குவதற்காகச் சமயத்தை எதிர்பார்த்துப் புலிகளும், ஓநாய்களும் மற்றொரு புறத்திலே பதுங்கியிருக்கின்றன.


பனிக் காலத்தில் உறைந்திருந்தது, இப்போது உருகிப் பெருக்கெடுத்தோடும் நதிகளைப் போல மனிதர்களின் பரிவாரங்களும், தங்கள் ஆயுதங்கள், குழந்தைகள், தோல் முதலிய தட்டுமுட்டுச் சாமான்கள் இவைகளைத் தூக்கிக் கொண்டும் நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டும், திறந்த வெளிகளில் வசிக்க ஆரம்பித்தனர். இவர்களுடைய நாய்கள் கடித்துக் கொண்டு வரும் ஆடு, ஓநாய் இவைகளைக் கொண்டோ அல்லது இவர்களே ஆயுதங்களின் உதவியால் பிராணிகளைக் கொன்றோ தங்கள் ஆகாரத்தைக் தேடிக் கொள்கின்றனர். நதிகளிலும் மீன்கள் ஏராளம். வால்கா நதிப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மீன் பிடிப்பதிலும் சமர்த்தர்கள்.


இப்பொழுதும் இரவில் குளிர் இருக்கிறது. ஆனால் பகல் உஷ்ணமாயிருக்கும். ஏனைய குடும்பங்களைப் போல் நிஷாவின் பரிவாரமும் வால்கா நதிப் பிரதேசத்தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக் கொண்டார்கள். நிஷாவைப் போலவே மற்ற குடும்பங்களுக்கும் தாய் தான் தலைவி; தகப்பன் அல்ல. மேலும் அங்கு யாருக்கு யார் தகப்பன் என்று கூறுவது முடியாத காரியம். நிஷாவுக்கு எட்டு பெண் மக்களும் ஆறு ஆண் மக்களும் பிறந்தனர். அவர்களில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் இப்பொழுதும் - நிஷாவின் புத்திர புத்திரிகள் என்பதற்கு, அவர்களைப் பிரசவித்த நிஷாவே சாட்சியாயிருக்கிறாள்.


ஆனால் இந்த ஏழு பேருக்கும் தகப்பன் யார் என்று சொல்வது முடியாது. ஏனெனில் நிஷாவின் தாய் - நாம் முன்னே சந்தித்த கிழவி - குடும்பத்தின் தாயாய் - தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தி வரும்பொழுது, மங்கைப் பருவமாயிருந்த நிஷாவுக்கு அவளுடைய சகோதரர்களும் புத்திரர்களும் நாயகர்களாயிருந்தனர். பல தடவை, இவளோடு சேர்ந்து ஆடியும், பாடியும் இவளுடைய காதலுக்கு உரியவர்களாவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையைத் தடுப்பதற்குச் சக்தியற்றவர்களாகி விட்டனர்.


ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நிஷாவின் குடும்பத்தில், இப்பொழுது அவளேதான் குடும்பத்தின் தாய் - தலைவியாயிருக்கிறாள். ஆனால், இந்தத் தலைமை இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். ஒன்றிரண்டு வருடங்களில் இவளுடைய பெண் மக்களில் பராக்கிரமசாலியான லேக்கா பரிவாரத்தின் தலைவியாகி விடுவாள். அப்பொழுது சகோதரிகளுக்குள் அவசியம் சண்டை உண்டாகும்.

இதே போல் லேக்காவின் சகோதரிகளும், ஒன்று அல்லது இரண்டு பரிவாரங்களை ஸ்தாபிப்பதில் வெற்றி பெறவும் முடியும். ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தின் சில நபர்கள் துஷ்ட மிருகங்களால் தாக்கப்பட்டும், வால்காநதியின் வெள்ளத்தில் இழுக்கப்பட்டும் குறையும் போது, அந்தக் குடும்பத்தின எண்ணிக்கை குறையாமல் காக்க வேண்டியது தலைவியின் கடமை.

குடும்பத் தலைவி நிஷா, பல முறை வேட்டைகளில் தன் மகள் லேக்காவினுடைய சாதுர்யத்தையும், பலத்தையும் பார்த்திருக்கிறாள். மலைகளிள்மீது மான்களைப் போன்று அவளால் ஏற முடியும்! ஒரு சமயம் தேன் குடிக்கும் கரடிகள் கூட ஏற முடியாத அவ்வளவு உசரமான ஒரு மலை உச்சியில் ஒரு பெரிய தேனிறாட்டு (தேன் கூடு) தென்பட்டது. இதைப் பார்த்த லேக்கா மரங்களோடு மரங்களைச் சேர்த்துக் கட்டி ஓர் இரவில் அவற்றின் மீது பல்லியைப் போன்று ஊர்ந்து ஊர்ந்து உச்சியை அடைந்து, நெருப்பினால் அந்தக் தேனீக்களைத் துரத்திவிட்டுத் தேன் கூட்டில் பெரிய துவாரத்தையும் போட்டுவிட்டாள்.

கீழே சொட்டிய தேனை ஒரு தோல் பாத்திரத்தில் பிடிக்க, அது உத்தேசம் இருபது படிக்குக் குறைச்சல் இல்லை. லேக்காவினுடைய தைரியமான இச்செய்கையானது. நிஷா குடும்பம் மட்டுமல்லாமல், அடுத்த பரிவாரங்களும் அவளைப் புகழும்படிச் செய்து விட்டது. ஆனால் நிஷாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நிஷாவின் யௌவனப் புத்திரர்கள் லேக்காவினுடைய ஆணையைச் சிரமேற் கொள்ளத் துடித்துக்கொண்டு இருப்பதையும், நிஷாவின் வேண்டுகோள்களைக் கூட உதாசீனம் செய்வதையும்; நாளடைவில் நிஷா கவனித்து வந்தாள். தன்னை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத் தன் மகளுக்குத் தைரியம் ஏற்படாதிருப்பதையும் நிஷா தெரிந்திருக்கிறாள்.

தன்னுடைய வழியில் பெரிய முட்டுகட்டையாய் இருக்கும் லேக்காவை ஒழித்துவிடுவதற்கு நிஷா பல வழிகளைப் பற்றி யோசித்தாள். 'நித்திரையில் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன?' என்று கூட அவளுக்கு ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், தன்னைப் பார்க்கிலும் லேக்கா பலசாலியென்பதும் நிஷாவுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு வேறொருவருடைய உதவியைப் பெறுவதென்றாலோ யாரும் இவளுக்குச் சகாயம் செய்ய மாட்டார்கள் என்பதும் நிஷாவுக்குத் தெரியும். நிஷாவினுடைய புத்திரர் யாவரும் லேக்காவினுடைய காதலுக்கும் தயவுக்கும் காத்திருப்பவர்கள்; பெண் மக்களோ லேக்காவுக்குப் பயப்படுகிறவர்கள். இதில் வெற்றி பெறாவிட்டால் தன்னுடைய பிராணனை லேக்கா வதைத்து விடுவாள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஒரு சமயம் நிஷா தனிமையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. லேக்காவை ஒழித்துவிடுவதற்கு அவள் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.

சூரியன் உதயமாகிக் கொஞ்ச நேரமேயானாலும், வெயில் அதனுடைய சக்தியைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுடைய தோல் குடிசைக்குப் பின்னே நிஷாவின் குடும்பத்தாரில் சிலர் நிர்வாணமாகப் படுத்திருக்கின்றனர். சிலர் வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நிஷா மாத்திரம் தனியாகக் குடிசைக்கு முன்னே உட்கார்ந்திருந்தாள். அவளுக்குச் சமீபம் லேக்காவினுடைய மூன்று வயதுப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். நிஷாவினுடைய இரண்டு கைகளிலும் சிவந்த பழங்கள் நிறைய இருந்தன.

வால்கா நதிபிரவாகமாக அவளுக்குச் சமீபத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நிஷாவினுடைய குடிசை வரை பூராவும் வால்கா நதியின் மணல் பிரதேசம். விளையாடிக் கொண்டிருக்கும் பையனுக்கு முன்னே, நிஷா தன்னுடைய கைகளிலிருக்கும் பழங்களில் ஒன்றை எறிந்தாள். பையன் அதை ஓடி எடுத்துத் தின்றான். அடுத்து மற்றொன்றைக் கொஞ்சம் எட்டி எறிந்தாள். அதையும் தின்றான். அடுத்து வேக வேகமாய்ப் பழங்களைப் போடத் தொடங்கினாள். பையனும் ஓடி ஓடி வேகமாக எடுப்பதும் புசிப்பதுமாயிருந்தவன், ஒரு சமயம் ஓடிய வேகத்தில் கால் தவறி வால்கா நதி வெள்ளத்தில் விழுந்து விட்டான். அந்தத் திசையை நோக்கிய வண்ணம் நிஷா சப்தமிட்டாள்.

கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த லேக்கா, தன்னுடைய குழந்தையைக் காணாததால் வேகமாக ஓடி வந்தாள்; பையன் தண்ணீருக்குள் முழுகுவதும் மேல் வருவதுமாய் வெள்ளத்தில் போய்க் கொண்டிருக்கிறான். உடனே லேக்கா, நதியில் குதித்து வேகமாக நீந்திப் போய்த் தன் மகனை எடுத்தாள். தண்ணீரை நிறையக் குடித்து விட்டதால் குழந்தை அசைவற்றிருந்தது. லேக்கா குழந்தையுடன் திரும்ப நீந்திக் கரையேற வேண்டும். பெருகி வரும் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரையேறுவது கஷ்டம் தான். மற்றும் ஒரு கையிலே குழந்தை!

ஒரு கையாலும் கால்களாலும் அவள் நீந்திக் கொண்டிருக்கிறாள். பனியுறைந்த அந்தத் தண்ணீர் வேறு, அவளுடைய சரீரத்தில் முள் மாதிரிக் குத்துகிறது. இந்தச் சமயத்தில் பலமான கைகள் தன்னுடைய கழுத்தைப் பிடித்து நெருக்குவது தெரிந்து இது யார் என்பதை லேக்கா உடனே தெரிந்து கொண்டாள். ஏனென்றால் சில நாட்களாக நிஷாவினுடைய மாறி வரும் மனோநிலையை லேக்கா அறிந்தே இருந்தாள். தன் வழியில் உள்ள இந்த முள்ளை - லேக்காவை ஒழிப்பதற்கு நிஷா தீர்மானித்து விட்டாள்.

இப்பொழுதுங்கூட லேக்கா தன் பராக்கிரமத்தை நிஷாவிடம் காட்ட முடியும். ஆனால் ஒரு கையில் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் கழுத்துப் பிடிப்பையும் பொருட் படுத்தாமல் நீந்துவதில் வேகத்தைச் செலுத்தும் லேக்காவினுடைய துணிவையும் தைரியத்தையும் நோக்கிய நிஷா தன்னுடைய மார்பகத்தை அவளுடைய சிரசின் மீது வைத்து அழுத்த ஆரம்பித்தாள். இதனால் ஒரு முறை லேக்கா தண்ணீருக்குள்ளும் அமிழ்ந்து விட்டாள். இப்படியும் அப்படியுமாக லேக்கா அடித்துக் கொண்டதால் குழந்தை அவளுடைய கையிலிருந்து நழுவி விட்டது. திரும்பவும் குழந்தையைப் பற்றுவதற்கு அவளால் இயலவில்லை. எப்படியோ அவளுடைய கைகள். நிஷாவினுடைய கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. லேக்கா இப்போது மூர்ச்சையாகி விட்டாள். அந்தச் சரீரம் நிஷாவுக்கு ஒரு சுமையாகி விட்டது. இந்தச் சுமையோடு நீந்திக் கரையேறுவது நிஷாவினால் முடியாத காரியம். முயற்சித்தாள், இருந்தும் பயனென்ன? முயற்சி வெற்றி பெறவில்லை, இருவரும் தங்களைக் கூட்டாக வால்கா நதிக்குச் சமர்ப்பித்துக் கொண்டார்கள்.
பரிவாரத்தின் அடுத்த வீரப்பெண் ரோசனா, நிஷா குடும்பத்தின் தலைவியாகி விட்டாள்.

1 comment:

Anonymous said...

நன்றி, பிற பகுதிகளையும் இது போல இட முடியுமா?

Post a Comment