Tuesday, April 20, 2010

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம் - 2

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி -1

நிஷா - பாகம் 2

அதோ, அநேகம் பாதங்கள் வழி கூடிப்போவதை நாம் பார்க்கிறோம். சப்தம் கேட்காமலிருப்பதற்காகத் தானா அந்தப் பாதங்கள் தோலால் மூடப்பட்டிருக்கின்றன? அவைகள் எங்கு நோக்கிச் செல்லுகின்றன? நாமும் தொடர்ந்து போவோம். ஒரு பக்கமாகத் திரும்பி மலைக் காட்டுக்குள் புகுந்துவிட்டன. நாம் இவ்வளவு வேகமாக நடந்தும் அந்தப் பாதங்களைத் தொடர்வது கடினமாயிருக்கிறதல்லவா? அவைகளும் நின்ற பாடாயில்லை. பனி படர்ந்த பூமி, காடடர்ந்த மலைவரிசை, அப்பால் பனிப் படலங்கள், இவ்விதமாக நாம் கடந்து இது வரை வந்திருக்கிறோம். அதோ தெரிகிறதே அந்த மனிதக் கூட்டத்திற்குப் பின், நீல நிறமான இந்த ஆகாயம் நிர்மலமாயில்லாவிட்டால் அவர்களை நாம் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே! நாமும் வெகு வேகமாக நடந்து அவர்களைச் சமீபித்து விட்டோம் . அவர்களுடைய உடம்பின் மேல் மூடப்பட்டிருக்கிறதே அந்த ரோமங்கள் அடர்ந்த தோலின் நிறத்திற்கும், இந்தப் பனி நிறத்திற்கும்
ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா? அவர்களுடைய கைகளிலிருக்கும் ஆயுதங்கள் கூட ஒரே வெண்மையாய்த்தான் தோற்றமளிக்கின்றன. வாருங்கள், கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்ப்போம்.

முன்னே வழிகூட்டிச் செல்லும் அந்தப் பெண்ணுக்கு வயது நாற்பதுக்கு மேல் ஐம்பதுக்குள்ளிருக்கும். திறந்திருக்கும் அவளுடைய புஜத்தைப் பார்த்தாலே அவள் நல்ல சரீரக்கட்டு உடையவள் என்பது தெரிகிறதல்லவா? ஆனால் இவள் கொஞ்சம் பருமன், பருவத்திலும் மூப்பு. இடது கையில் நீண்ட கூர்மையான கம்பு; வலது கையில் தோலிலே நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல்- அம்பு இவளுக்குப் பின்னே, நான்கு ஆடவர்களும், இரண்டு பெண்களும் செல்கின்றனர் ஆடவர்களில் ஒருவன் பெரியவளுக்குக் கொஞ்சம் அதிகமான வயதுடையவனாயிருக்கிறான். ஏனையோர்களுக்கு, பதினான்கிலிருந்து இருபத்தாறு வயதுவரை இருக்கும் பெரியவனுடைய முகச்சாயல், ரோமம், அங்கங்கள் எல்லாம் அந்தப் பெரியவளுடைய தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. சரீரக்கட்டிலும் அவளைப் போலவே பலவான் தான். அதே மாதிரி ஆயுதங்களே அவனுடைய கைகளிலும் இருக்கின்றன. பாக்கி மூன்று ஆடவர்களுடைய தோற்றம். புஜபலம் இவனை ஒத்திருந்தாலும், இவனைப் பார்க்கிலும் அதிக ஆயுதங்கள்தான் இவர்கள் கைகளிலுமிருக்கின்றன.

பெண்கள் இருவரில் ஒருத்திக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். முன்னமே நாம் குகையில் அந்தக் கிழவியைப் பார்த்திருக்கிறோமல்லவா? நம்முடைய மனக்கண் முன்னே, அவளுடைய முகச்சாயலோடு இவர்கள் எல்லோருடைய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தவர்தான் என்று நிச்சயிக்க முடிகிறதல்லவா? ஆயுதம் ஏந்திய கைகள், வேகமான நடை, பெரியவள் முன்னே செல்ல, அவளைத் தொடர்ந்து ஏனையோர் செல்லும் முறை இவைகளைக் கவனிக்கும் நமக்கு இவர்கள் ஏதோ யுத்தத்தை நாடிப் போகிறவர்கள் மாதிரித் தெரிகிறது. நாமும் தொடர்ந்தே செல்வோம், வாருங்கள்.

தலைமை தாங்கி முன்னே போகும் பெரியவள்.(இனி அவளைத் தாய் என்றே அழைப்போம். தாய் என்பது அந்தக் காலத்தில் குடும்பத் தலைவியைக் குறிக்கும்) இப்போது பள்ளத்தாக்கில் இறங்கி இடதுபக்கம் திரும்பி நடக்கிறாள். மற்ற யாவரும் அவளைத் தொடர்கின்றனர். அவளுடைய கால்கள் மெதுவாகத் தேய்த்துத் தேய்த்துச் செல்கின்றன. தோல்களைக் கட்டியருப்பதால் காலடிச் சப்தம் கூடக் கேட்கவில்லை இப்போது. அவர்கள் தொடர்ந்திருக்கும் சிறிய மலைக் கூட்டங்களின் மீது செல்கிறார்கள். அதே மெதுவான நடை; கைகளாலும் அந்த மலைகளைத் தொட்டுத் தொட்டுக் கொண்டு நடக்கிறார்கள்.

வெகுதூரம் வளைந்தும், சுற்றியும் வந்த அவர்களுடைய பயணமும் முடிந்து விட்டதா என்ன? அவர்கள் ஏன் நிற்கிறார்கள்? குகை! இதைத் தேடியா இவர்கள் இவ்வளவு தூரம் வந்தார்கள்? இதுதான் இவர்களுடைய வசிப்பிடமா? இல்லை, இல்லை. குகையின் வாசலில் பனி படர்ந்திருக்கும் பூமியைக் குனிந்து உற்று உற்று நோக்குகிறாள் அந்தத் தாய். எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை. இப்போது அவள் மாத்திரம் குகையின் உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்து நடக்கிறாள்.

கொஞ்ச தூரம் சென்றவுடன் குகை கொஞ்சம் வளைந்து செல்கிறது; வெளிச்சமும் குறைவு; நான்கு புறத்தையும், பூமியையும் உற்றுக் கூர்ந்து கவனித்துச் செல்லும் அவளுடைய கண்களுக்கு, வெளிச்சம் குறைந்து விட்டதும் சிரமத்தைக் கொடுக்குமல்லவா? கொஞ்சம் நின்று நிதானத்துக் கண்களைச் சரிபடுத்துக் கொண்ட அவள் இப்போது மேலும் மெதுவாக, அடியெடுத்து வைத்துச் செல்கிறாள்; கொஞ்சதூரம் சென்றவுடன் அவள் என்ன கண்டாள்? மூன்று கரடிகள்-ஆண், பெண், அவற்றின் குட்டி ஆக உருப்படி மூன்றும் தலைகளைப் பூமியில் புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றன., இறந்து கிடப்பவை போன்று, ஏனெனில், உயிரோடிருக்கின்றன என்பதற்கான எந்த அடையாளத்தையும் காணோம்.

மெதுவாக அடியெடுத்துவைத்துத் திரும்பி வரும் அவளுடைய முகத்தோற்றத்தைப் பாருங்கள்! நெஞ்சிலே பொங்கி வரும் ஆனந்தத்தை வெளியே காண்பிக்கிறதல்லவா? அதிலும் ஒருவிதப் பீதி கலந்திருக்கிறது; ஆம், தூங்கிக் கொண்டிருக்கும் அந்த துஷ்ட மிருகங்கள் விழித்துக் கொண்டால்? வரவையெதிர்பார்த்து வெளியே காத்து நின்ற இவளுடைய பரிவாரம், இவளின் முகத்தோற்றத்திலிருந்து, தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் கிட்டி விட்டதாய்த் தெரிந்து கொண்டனர். வந்த அவளும் தன்னுடைய கையை நீட்டி அதில் மூன்று விரல்களைக் காட்டினாள். இவளோடு, பெரியவன், அவனுக்கு அடுத்தவன் இருவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை எச்சரிக்கையாகத் தாங்கிக் கொண்டு தாய்க்குப் பின்னே திரும்பவும் குகைக்குள் அடி மேல் அடி வைத்து ஒருவர் பின் ஒருவராய்ச் செல்கின்றனர். கூர்மையான நீண்ட தடிகளை வலக் கரங்களில் பிடித்துக் கொண்டு, தாய் ஆண் கரடியையும் பெரியவன் பெண் கரடியையும், இளையவன் குட்டியையும் நெருங்கினர். மறு வினாடி அவர்களின் கூரிய ஆயுதங்கள் கரடிகளின் இருதயத்தில் பாய்ந்தன.

ஆனால் பாவம், அந்த மிருகங்கள் தங்கள் உடம்பைக்கூட அசைக்கவில்லை. அவைகளின் ஆறு மாதப் பனிக்கால நித்திரை கலைவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் பாக்கி இருக்கிறது! ஆயுதபாணிகளான இவர்கள் அதைக் கவனிக்க முடியுமா? முன் ஜாக்கிரதையாகத்தானே அவர்கள் காரியம் செய்ய வேண்டும். வேகமாகப் பாய்ச்சிய ஆயுதங்களை இப்படியும் அப்படியுமாக நாலைந்து தடவை அசைத்தார்கள். ஏன்? அந்தப் பிராணிகள் உயிருடன் விழித்துக் கொண்டால் ஆபத்தல்லவா? இப்போது பயம் தீர்ந்து விட்டது. அவர்கள் தங்கள் பிராணிகளின் முன்னங்கால்களையும், முகத்தையும் சேர்த்துப் பிடித்து இழுத்து வாசலுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். எல்லோருடைய முகத்தையும் பாருங்களேன். என்ன ஆனந்தம்! எவ்வளவு சந்தோஷம்! ஒரே ஆரவார சப்தம்!
தாய், தன் உடம்பில் கட்டப்பட்டிருக்கும் தோலுக்குள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தாள். அது கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும் கல். அதைக் கொண்டு பெரிய கரடியின் வயிற்றுப் பாகத்தைக் கிழிக்கிறாள். கிழிப்பதோ கரடியின் தோலை; ஆயுதமோ கல். அது எவ்வளவு கூர்மையாயிருந்தால்தான் என்ன? பழக்கமும் நல்ல பலமும் இருப்பதால் தானே முடிகிறது. வயிற்றைக் கீறிய அவள், ஈரலில் ஒரு துண்டை வெட்டித் தன் வாயில் போட்டுக் கொண்டாள்; மற்றொன்றை பதினான்கு வயதுடைய சிறிய பையனின், வாயில் வைத்தாள். மற்றவர்கள் அந்த மிருகங்களின் சமீபத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

மெதுவான பாகங்களை வெட்டி வெட்டி அந்தத் துண்டுகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வருகிறாள். இந்த விதமாக, ஒரு பிராணியின் மெதுவான பாகம் தீர்ந்து, அடுத்த மிருகத்தின் உடலில் தன் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறாள். இந்த நேரத்தில் பதினாறு வயதுடைய இளையவள், கொஞ்சம் விலகிப் போய், சிறிது பனிதுண்டையெடுத்து வாயில் போட்டுக் கொள்கிறாள். அதே சமயம் ஆடவர்களில் பெரியவனும், அவளுக்குச் சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகித் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச் சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில், பனிக்கட்டிகளைக் கையில் ஏந்திக் கொண்டு அவர்களிருவரும் கூட்டத்துக்குத் திரும்ப வந்தனர். இருவருடைய கன்னங்களும், கண்களும் இப்போது அதிகமாகச் சிவந்திருக்கின்றன. அந்தப் பெரியவன் "அம்மா, நான் அறுக்கிறேன்; நீ ரொம்பக் களைத்துப் போய் விட்டாய்" என்றான். அவனிடம் கத்தியைக் கொடுத்த தாய் குனிந்து, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களில் இருபத்தி நான்கு வயதுடைய ஆடவனின் முகத்தில் முத்தமிட்டுவிட்டு அவனுடைய கைகளைப் பற்றினாள். உடனே இருவரும் வெளியில் சென்று விட்டார்கள்.
மூன்று பிராணிகளின் ஈரல்களையும் மெதுவான மாமிசத் துண்டங்களையும் யாவரும் தின்றுவிட்டனர். நான்கு மாதங்களாக ஒரே நித்திரையில் ஆழ்ந்திருந்த அந்த மிருகங்களனிடம் ஈரல் எங்கே இருக்கப் போகிறது? ஆனாலும் அந்தச் சிறிய குட்டிக் கரடினுடைய மாமிசம் மிருதுவாகவும் ருசியாகவும் இருந்திருக்குமல்லவா? கூடிய மட்டும் மாமிசத் துண்டுகளைத் தின்ற அவர்கள், இளைப்பாறுவதற்காக அந்த இடத்திலேயே சிறிது படுத்துப் புரண்டனர்.

இனி அவர்கள் தங்கள் வீட்டுக்கு- ஆம், குகைக்குச் செல்ல வேண்டும். பெரிய கரடிகள் ஒவ்வொன்றினுடைய நான்கு கால்களையும் தோல் கயிற்றினால் சேர்த்துக் கட்டி, அவற்றினூடே கம்புகளைக் கொடுத்து ஒவ்வொன்றுக்கும் இரண்டு பேர் வீதம் நான்கு ஆடவரும் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டார்கள் குட்டியை ஒரு பெண் தூக்கிக் கொண்டாள். தாய் தன்னுடைய ஆயுதங்களைக் கையிலேந்தியவளாய் முன்னே செல்ல, மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தனர்.

அந்த மாக்கள் (காட்டு மனிதர்கள்) அப்போது என்ன நேரம் எத்தனை மணி இருக்கும் என்பதை அறியமாட்டார்கள். ஆனால், "இன்று நல்ல நிலவாயிருக்கும்" என்பது மாத்திரம் அவர்களுக்குத் தெரியும். இப்போது சூரியனுடைய ஒளி ரொம்ப குறைந்து விட்டது. அப்பொழுதுதான் அஸ்தமித்துக் கொண்டிருந்தால், இன்னும் லேசான வெளிச்சம் இருந்தது. அவர்களும் தங்கள் பாதையில் முன்னேறிய வண்ணம் சென்றனர். கொஞ்ச நேரத்தில்ஆகாயம், பூமி எங்கும் ஒரே வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது. ஆகாயத்தில் நிலவின் ஒளி, கீழே பனிப்படலம் படிந்த பூமி.
வழிகூடிச் செல்லும் இந்தக் காட்டு மனிதர் கூட்டங்களுக்கு, அவர்களுடைய வீடு இன்னும் வெகுதூரத்தில் இருப்பது தெரியும். வேகமாக நடக்கின்றனர். ஆயுதம் ஏந்திய கையினளாய், அந்தத் தாய் தலைமை தாங்கி யாவருக்கும் முன்னே நடக்கிறாள். இரவானதால் நாலா பக்கங்களிலும் தன்னுடைய கண்களின் பார்வையை விட்டெறிந்து கூர்மையாக நோக்கிய வண்ணம் நடந்து கொண்டிருக்கிறாள். ஒர் இடத்தில் திடீரென்று நின்ற அவள், காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்; ஏனையோர் மௌனமாக நிற்கின்றனர். இந்த நேரத்தில் பதினாறு வயதுள்ள பெண் இருபத்தாறு வயதுள்ள வாலிபனிடம் "உர்,உர்,ப்ருக்" என்று சத்தமிட்டு, 'அதிகம் அதிகம் யாவரும் ஜாக்கிரதை' என்று ஜாடை காட்டி ஆவேசத்தோடு அலறினாள்.

தூக்கி வந்த சவங்கள் தோளிலிருந்து இறக்கப்பட்டன. உடனே யாவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை ஏந்தி, முதுகுக்கு முதுகு தொடும்படியாக வட்ட வடிவில் வியூகம் வகுத்து திசைகள் தோறும் நோக்கியவர்களாய் நின்றனர்; சிறுவன் வியூகத்துக்கு நடுவில் நிற்கிறான். கொஞ்ச நேரத்தில், ஏழெட்டு ஓநாய்கள், தங்களுடைய நீளமான நாக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டும், " உர் உர்" என்று கத்திக் கொண்டும், இந்த மனித மிருகக் கூட்டத்தின் வியூகத்தைச் சுற்றி வர ஆரம்பித்தன. இவர்களுடைய கைகளிலுள்ள ஆயுதங்களைப் பார்த்த அந்த ஓநாய்கள் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பன போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் வியூகத்தின் நடுவே நின்ற பதினான்கு வயதுச் சிறுவன். தன்னுடைய நீண்ட தடியோடு சேர்த்துக் கட்டியிருந்த கம்பை எடுத்து அதில் தோல் கயிற்றைக் கட்டி அதை ஒரு முறுக்கேறிய வில்லாக்கி, எங்கே தான் மறைத்து வைத்திருந்தானோ ஒரு கூர்மையான கல் அம்பு, அதையும் வில்லையும் வட்டத்தில் நிற்கும் இருபத்துநான்கு வயதுடைய ஆடவனின் கையில் கொடுத்து அவனை வியூகத்தின் நடுவே தள்ளி விட்டு, அவனுடைய ஸ்தானத்தில் தான் நின்று கொண்டான். இருபத்துநான்கு வயதுடைய ஆடவன் தன்னுடைய வில்லில் நாணேற்றி, கல் அம்பைப் பூட்டி வியூகத்தின் நடுவே நின்ற வண்ணம் குறி வைத்து ஓர் ஓநாயின் மீது ஏவினான்.

அந்நப் பாணம் அதன் ஒரு புறத்து விலாப்பக்கத்தில் பாய்ந்து விட்டது. உடனே கீழே விழுந்த அந்த ஓநாய், சமாளித்துக் கொண்டு வியூகத்தின் மீது பாய ஆரம்பித்ததோ இல்லையோ அவன் மற்றொரு பாணத்தையும் அதன் மீது ஏவி விட்டான். இந்த அம்பு சரீரத்தில் பெரிய காயத்தை மாத்திரமா உண்டு பண்ணியது? அதனுடைய உயிரையும் கொள்ளை கொண்டு விட்டது. பிணமாக விழுந்த அந்த ஓநாயின் சரீரத்திலிருந்து வழிந்தோடும் ரத்தத்தை மற்ற ஓநாய்கள் நக்கிக் கொண்டும் கடைசியில் அதைக் கிழித்துத் தின்னவும் ஆரம்பித்து விட்டன.

இந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்த மாக்கள் (மனித மிருகங்கள்) தங்களுடைய வேட்டைப் பொருளை தோள்களில் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகத் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பொழுது, தாய், இடையிடையே கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டும், காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும் யாவருக்கும் பின்னேயும், மற்றவர்கள் முன்னுமாக நடக்கின்றனர். இன்று பனியில்லாததால், நிலவில் ஒளியிலே இவர்கள் பாதை தெரிந்து வேகமாக நடக்க முடிகிறது. இவர்களுடைய குகை இன்னும் அரை மைல் தூரங்கூட இராது; இவ்வளவில் அந்தத் துஷ்ட மிருகங்கள், ஓநாய்கள் திரும்பவும் இவர்களை வளைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. இவர்களும் தங்கள் சுமையை இறக்கி வைத்து ஆயுதங்களைத் தயார் செய்து பல அம்புகளைக் குறிவைத்து ஏவினார்கள்.

ஓயாமல் மிகவும் வேகமாக வளைய வந்து கொண்டிருக்கும் ஓநாய்களில் ஒன்றைக் கூட இவர்களுடைய அம்புகள் தொடவில்லை. இரு கட்சிக்கும் பலமான போராட்டம் நடக்கிறது. ஆம்! வாழ்க்கைப் போராட்டம் அல்லவா? இந்த நேரத்தில் எப்படியோ நான்கு ஓநாய்கள் ஒரு மொத்தமாகப் பதினாறு வயதுள்ள மங்கை மீது பாய்ந்துவிட்டன. பக்கத்தில் நின்ற தாய் தன்னுடைய ஈட்டியால்-முனையுள்ள காம்பால் ஓர் ஓநாயைக் குத்தி விழுத்தாட்டினாள். ஆனால் பாக்கி மூன்றும் தாங்கள் பாய்ந்திருந்த மங்கையின் தொடையில் பெரிய காயத்தை உண்டாக்கி விட்டன. அவள் பூமியில் சாயந்ததுதான் தாமதம்; அவளுடைய வயிற்றைக் கடித்துக் குடலையும் வெளியே இழுத்துவிட்டன.

எல்லோருடைய கவனமும் இவளைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கும் போது மற்றும் மூன்று ஓநாய்கள் தருணம் பார்த்து, இருபத்துநான்கு வயதுள்ள ஆடவனின் மீதும் பாய்ந்து பூமியின் மீது சாய்ந்துவிட்ட அவனுடைய சரீரத்தில் பல காயங்களை உண்டு பண்ணிவிட்டன. அவனுடைய வயிற்றையும் கிழித்துவிட்டன. இப்போது எல்லோருடைய கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. அந்தப் பக்கமும் முன்னே கீழே தள்ளப்பட்டு குடல் சரிந்து கிடக்கும் பதினாறு வயது பெண்ணின் சரீரத்தை அந்த ஓநாய்கள் இன்னும் கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு சென்று தின்ன ஆரம்பித்துவிட்டன. இந்தச் சமயத்தில், இவர்களில் யாரோ ஓர் ஆள் பெரியவளால் குத்துப்பட்டு விழுந்து கிடக்கும் ஓநாயின் வாயில் தடியைச் செலுத்த, இன்னொருவன் அதன் முன்னங்கால்களைப் பிடித்திருக்க, மற்றவர்கள் அதன் சரீரத்திலிருந்து பெருகியோடும் ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்தனர்.


தாய் அதனுடைய தொண்டையின் நரம்பை வெட்டி இவர்களுக்கு உதவி செய்தாள். இந்தப் போராட்டமும், கொலையும், புசிப்பும் சில நிமிஷங்களில் நடந்திருக்கின்றன. ஓநாயின் ரத்தத்தைக் குடிப்பதில் முனைந்நிருக்கும் இந்த மனிதக் கூட்டத்துக்குப் பதினாறு வயது மங்கையின் சரீரத்தைப் பூராவும் தின்ற பின்னே அந்த ஓநாய்கள் தங்களைத் தாக்க ஆரம்பிக்கும் என்று தெரியுமாதலால் ஆவியை விட்டுக் கொண்டிருக்கும் ஆடவனையும் அங்கே போட்டுவிட்டு தங்களுடைய வேட்டைப் பொருளான மூன்று கரடிகள், ஓர் ஓநாய் இந்த நான்கையும் தூக்கிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக அவர்கள் தங்கள் குகைக்கு வந்து சேர்ந்தனர்.

இங்கு குகையில் நெருப்பு ஜோதி மயமாக எரிந்து கொண்டிருக்கிறது. அக்கினியின் வெளிச்சத்திலேயே இரண்டு பெண்களும் எல்லாக் குழந்தைகளும் நித்திரை செய்கிறார்கள், காலடிச் சப்தம் கேட்ட கிழவி, "நிஷா....! வந்து விட்டீர்களா?" என்று கேட்டாள். "ஆமா" என்று சொல்லிக் கொண்டே தாய் தன்னுடைய ஆயுதங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மார்பைச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் தோலையும் கழற்றினாள். மற்றவர்களும், தூக்கி வந்த உடல்களைக் கீழே கிடத்தி விட்டுத் தங்கள் தங்கள் ஆயுதங்களையும் கட்டியிருந்த தோல்களையும் ஒருபக்கத்தில் வைத்து, யாவரும் இப்போது நெருப்பின் உஷ்ணத்தில் தங்களது உடலைச் சூடேற்ற முனைந்தனர்.

நித்திரையில் ஆழ்ந்திருந்த குழந்தைகளும் பெண்களும் விழித்து விட்டனர். எவ்வளவு அயர்ந்த தூக்கத்திலிருந்தாலும் சிறு சப்தத்தையும் கூடக் கேட்டு எழுந்துவிடுவது இவர்களின் இளமையிலிருந்து வரும் பழக்கம். வெகு கவனத்தோடும் பிரயாசையோடும், தாய் இது வரை குடும்ப பாரத்தை ஏற்று நடத்தி வந்தாள். மான், முயல், மாடு, ஓநாய், ஆடு, குதிரை முதலிய மிருகங்கள் இங்கு பனி ஆரம்பமாவதற்கு முன்பே, தெற்கே உஷ்ணப்பிரதேசத்தை நாடிச் சென்று விடுவது வழக்கம். இவர்களும், அதே போல் போயிருக்க வேண்டியவர்கள் தான்; ஆனால் அந்தச் சமயத்தில் பதினாறு வயதுள்ள மங்கை நோய்வாய்ப் பட்டு இருந்தாள்.

அந்தக் காலத்து மனித தர்மப்படி, 'ஒருவருக்காக மற்றவர்களையும் ஆபத்துக்கு உட்படுத்தக் கூடாது' என்பதுவே குடும்பத்தை நடத்தும் பெரியவளின்-தாயின் கடமையாயிருந்து. ஆனால் அன்று அவளுடைய இதய பலவீனம், இன்று ஒன்றுக்கு இரண்டு மனித உருவங்களைப் பறி கொடுக்கும்படி செய்துவிட்டது. இந்த ஆரண்யத்தை நோக்கித் திரும்பவும் மிருகங்கள் வந்து சேர்வதற்கு இன்னும் எத்தனை ஜீவன்களை இழக்க வேண்டியிருக்குமோ, யார் கண்டார்கள்? மூன்று கரடி, ஓர் ஓநாய் இந்த நான்குமா இந்தப் பரிவாரம் பூராவும் இரண்டு மாதங்களுக்குக் காணும்?


குழந்தைகளுக்குப் பரம சந்தோஷம். ஏனென்றால் அவர்களுடைய வயிறு முதுகெலும்போடு ஒட்டிக் கிடந்தது. தாய் முதலில் ஓநாயினுடைய ஈரலை வெட்டி வெட்டிக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள். அவைகள் அவசர அவசரமாக அவற்றை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு தோலுக்குச் சேதமில்லாமல் அதை உரித்தாள். ஏனெனில், தோல் அவர்களுக்கு ரொம்ப உபயோகமுள்ள வஸ்து. மாமிசத்தை அறுத்து அறுத்து நெருப்பில் வாட்டினாள். பசியோடு காத்திருந்த கூட்டம் சுட்டும் சுடாமலும் எடுத்துக் கவ்வுகின்றன. சிலர் கழுத்துப் பாகத்தின் மெல்லிய மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும்படி தாயைக் கெஞ்சிக் கேட்கின்றனர். அப்பொழுது, தாய் 'இன்று வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; நாளையிலிருந்து இவ்வளவு கிடையாது' என்று சொல்லும்போது எவ்வளவு பொறுப்புடன் சொல்லுகிறாள்.

குகைக்கு உள்ளே சென்ற தாய் ஒரு தோல் பாத்திரத்தைக் கொண்டு வந்து பரிவாரத்தின் முன்னே வைத்து " இதில் மது இருக்கிறது; யாவரும் குடியுங்கள்; ஆடுங்கள்; பாடுங்கள்; சந்தோஷம் கொண்டாடுங்கள்" என்று உத்தரவிட்டாள். சிறிய குழந்தைகளுக்கு உறிஞ்சிக் குடிக்கத் தான் கிடைத்தது. பெரியவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் கிடைத்தது. சொல்லவா வேண்டும்? கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய கண்கள் சிவப்பேறி விட்டன. போதை தலைக்கேறி விட்டது. ஆனந்தத்தின் உச்சியில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்; பாடினர் சிலர்; ஆடினர் சிலர்; இந்த இரவு அவர்களுக்குச் சந்தோஷமாயிருப்பதில் அதிசயமில்லை.
இங்கு நடைபெறுவது 'தாயின் ராஜ்யம்.' ஆனால் அநியாயமோ உயர்வு தாழ்வோ இல்லாத ராஜ்யம். கிழவியையும் ஆடவர்களில் பெரியவனையும் தவிர்த்து, மற்ற எல்லோரும் அந்தத் தாயின் குழந்தைகள். தாயும் அந்தப் பெரியவனும், கிழவியின் மகனும், மகளும். ஆகையால் அங்கே 'என்னுடையது' என்ற பேதமே கிடையாது. ஏனெனில் அந்தப் பேதம்-உன்னுடையது, என்னுடையது என்ற பிறப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்; இங்கே-இந்த ராஜ்யத்தில், எல்லா ஆடவர் மீதும் தாய்க்குத்தான் முதாலாவது அதிகாரம். அதுவும் ஒரே மாதிரியான-சமமான அதிகாரம்; வித்தியாசம் கிடையாது.

மகனும், புருஷனுமாயிருந்த இருபத்துநான்கு வயதுடைய ஆடவன் இறந்துவிட்டதால், அவளுக்கு, தாய்க்குத் துக்கம் இல்லாமல் இல்லை. இருந்தாலும், அந்தக் காலத்து மனித வாழ்க்கை முக்கியமாக நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்துவதாய் இருந்தது. தாய்க்கு இரண்டு நாயகர்கள் இருந்தனர். மூன்றாவது புருஷன்-பதினான்கு வயதுப் பையன் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் அவளுடைய ராஜ்யத்தில் எத்தனை குழந்தைகள் அவளுடைய கணவன் ஸ்தானத்திற்கு வருவார்களோ யார் கண்டார்கள்? இருபத்து ஆறு வயதுடைய ஆடவனைத் தாய் நேசித்தாள். ஆகையால் பாக்கி மூன்று பெண்களின் கணவன் ஸதானத்துக்கு, ஐம்பது வயதுக் கிழவன்தான் மிஞ்சியிருக்கிறான்.
பனிக்காலம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில், கிழவியின் உடலை விட்டு அவள் ஆவியும் விடை பெற்றுக் கொண்டது. குழந்தைகளில் மூவரை ஓநாய் விழுங்கி விட்டது. ஆடவர்களில் பெரியவன் பனி உருகி நதியில் போய்விட்டான். இந்த விதமாக தாயின் பரிவாரம் பதினான்கிலிருந்து ஒன்பதுக்குச் சுருங்கி விட்டது.


தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி - 3

No comments:

Post a Comment