Tuesday, November 20, 2012

இந்திய பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கறுப்புப் பணம்





2ஜி, லோக்பால், நிலக்கரி-சுரங்க ஊழல்கள், சரிந்து வரும் பொருளாதார நிலை, பள்ளிப் பாடபுத்தக கார்டூன் பிரச்னை எனத் தொடர்ச்சியாக பிரச்னைகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் அரசுக்கு இப்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு காரணம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம். நாட்டின் மையப் பிரச்னையாக இது தற்போது உருவெடுத்துள்ளது. எதிர்கட்சிகள், தன்னார்வலர்கள் ஆகியோரின் தொடர்ச்சியான போராட்டங்கள், அன்னா ஹசாரே தலைமையிலான வலுவான லோக்பால் சட்டத்துக்கான போராட்டம், கறுப்பு பணத்தை ஒழிக்க பாபா ராம்தேவ் நடத்தும் போராட்டங்கள் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவரும் கறுப்புப் பணம் மற்றும் கறுப்புப் பொருளாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணம் பற்றி வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிடச் செய்யும் அளவுக்கு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தின் அளவு பல லட்சம் கோடிகள் இருக்கும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு வெறும் ரூ 9,295 கோடி என்று பிரணப் முகர்ஜி தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியுள்ளது. உண்மையில் கறுப்பு பணம் என்பது என்ன?

கறுப்புப் பணம் என்பது என்ன? எப்படி உருவாகிறது?

கணக்கில் காட்டப்படாத, வருமான வரிச் செலுத்தாமல் ரகசியமாக பதுக்கி வைக்கப்படும் பணத்தை கறுப்புப் பணம் என்று கூறுகிறோம். சட்டவிரோதமான வழிகளில் ஈட்டப்படும் வருமானமும் கணக்கில் காட்டப்படாமல் கறுப்புப் பணமாகிறது. இந்தியாவில் பெருகியுள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஒரு இணைப் பொருளாதாரத்தை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கறுப்புப் பணத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் இருக்கும் கூட ஆபத்துக்குள்ளாகிறது. மோசடிகள், லஞ்ச-ஊழலுக்கு மட்டுமல்ல, சமூகத்தின் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்க மதிப்புகள் கெடுவதற்கும் இந்தக் கறுப்புப் பணம் காரணமாகிறது.

கறுப்புப் பணத்தின் அளவு எவ்வளவு?


இந்தியாவில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் கறுப்புப் பணத்தின் அளவைப் பற்றி பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகள் வெவ்வேறு விதமாகக் கூறுகின்றன. சர்வதேச நிதியத்தின் ஆய்வின் படி இந்தியாவில் கறுப்பு பணத்தின் அளவு அதன் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜி.என்.பி.) 50%, அதாவது பாதி அளவாகும். ஆனால், சி.பி.ஐ.யின் மதிப்பீட்டின் படி கணக்கில் காட்டப்படாத, சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட, வரி கட்டப்படாத, அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 200 பில்லியன் டாலர் இருக்குமாம். விக்கிபீடியா இணையதளத்தின் மதிப்பீடு 1.5 ட்ரில்லியன் டாலர். இந்தத் தொகையானது இந்தியாவின் அயல்நாட்டுக் கடனைவிட 13 மடங்குக்கும் அதிகமாகும். மற்றொரு வெளிநாட்டு அமைப்பின் மதிப்பீட்டின்படி வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணத்தின் அளவு ரூ 45 லட்சம் கோடி முதல் ரூ 75 லட்சம் கோடி வரை இருக்கலாமாம். தலையைச் சுற்றுகிறதா?

கறுப்புப் பணம் அதிகரிக்கக் காரணங்கள்

நேரடி வரி மிக அதிகமாக இருப்பதால், வரி கட்டாமல் தப்பிக்க பொய் கணக்குக் காட்டப்படுகிறது. இதனால் கறுப்பு பணம் உருவாகிறது. மேலும், வினியோக முறைகளைச் சரியாக சீரமைக்காமல் விலைக் கட்டுப்பாடுகளை விதிப்பது. வணிக நடைமுறைகளில் நிலவும் மிக அதிகமான கட்டுப்பாடுகள், உரிமங்கள், பெர்மிட்டுகள் நடைமுறைகள் கறுப்புப் பணம் பெருகுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. அரசாங்க ஒப்பந்தங்கள் போடப்படும்போதும், கொள்முதல் மேற்கொள்ளும் போதும் கைமாறும் கமிஷன் அல்லது லஞ்சப் பணம், ஊழல்கள் மூலம் திருடப்படும் பணம், பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் போது கைமாறும் பணம், ஹவாலா முறைகள், தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை, லஞ்ச, ஊழல் அல்லது மோசடிகள் நிறைந்த வணிக நடைமுறைகளும், கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளும் கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கின்றன.

கறுப்புப் பணத்தால் நாட்டுக்கு ஏற்படும் இழப்புகள்

திட்டமிடுதல், பணக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றால் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடிவதில்லை. மக்கள் நலத் திட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய முடிவதில்லை. செயற்கையாகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உற்பத்தியைப் பெருக்காத, பொருளாதாரத்தில் நேரடியாக வளர்ச்சியை ஏற்படுத்தாத தங்கம், நிலம் ஆகியவற்றில் பெருமளவில் முதலீடுகள் போய்ச் சேர்கின்றன. அந்நிய நாட்டில் செய்யப்படும் முதலீடால் இந்தியாவில் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் குறைகின்றது. நம்முடைய பணத்தை வெளிநாடுகளில் விட்டுவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடுச் செய்யுமாறு அவர்களைக் கூவிக் கூவி அழைக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு சலுகைகளையும் அளித்துவிட்டு, சர்வதேச நிதியங்கள் அரசின் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் வழி ஏற்படுகிறது. இக்காரணங்களால் பொருளாதார வளர்ச்சியைக் குறைவதுடன் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கின்றன.

சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் பல மடங்கு உயர்வதற்கும் பின்னணியாக இருப்பது கறுப்புப் பணம் தான். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்குச் சந்தையை முடமாக்கவும் இந்தக் கறுப்புப்பணம் பயன்படுகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்படுவதும் கறுப்புப் பணம் தான். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கி, கட்சிகளை எம்.எல்.ஏ.களையும் எம்.பி.களையும் விலைக்கு வாங்குவதற்கும், கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவுக்கு பெரிய கட்சிகள் அளிக்கும் பெருந்தொகையும் கறுப்புப் பணம் தான்.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யார்?

வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமான பணக்காரர்கள் கறுப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர். கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மற்றும் இடைத்தரகர்களும் இதில் அடங்குவர். அதுமட்டுமல்லாமல் பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது.

கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக சுவிட்சர்லாந்து நாடு இருப்பதன் காரணம் என்ன?

சுவிட்சர் லாந்தில் நானூறுக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்தியா உள்பட உலகம் முழுவதும் இவ்வங்கிகளுக்குக் கிளைகள் உள்ளன. அந்நாட்டின் வங்கிச் சட்டத்தின்படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட அவரைப் பற்றிய விவரங்களைத் தருவதில்லை. சுவிஸ் வங்கிகளில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு எண் அடிப்படையில் கணக்கு வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க அவ்வங்கியின் உயர் அதிகாரிகளால் மட்டும்தான் முடியும். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர் வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருகிறார்களாம். ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்றால், அங்கு பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்கள் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார்கள் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்

இதே போன்ற வசதிகள் ஜெர்மனியில் சில வங்கிகளிலும், மொரிஷியஸ், கேமன் தீவுகள் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. அந்த இடங்களிலும் அதிக அளவில் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


கறுப்புப் பணத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டுமானால் வரிவிகிதங்களை முதலில் குறைக்க வேண்டும். பாடுப்பட்டுச் சேர்த்தப் பணத்தில் பெருந்தொகையை வரியாகவே கட்ட வேண்டியதாக இருப்பதால் தான் நிறைய பேர் பொய் கணக்கு காட்டுகிறார்கள். கட்டுப்பாடுகள், உரிமங்கள், பெர்மிட்டுகள் நடைமுறை குறைந்தபட்ச அளவுக்கு குறைக்கப்பட வேண்டும். லஞ்ச, ஊழலைத் தடுக்க அவை எளிதாக்கப்பட வேண்டும். அரசின் செயல்பாடுகளிலும் அதிக வெளிப்படைத்தன்மை தேவை.

தலைவர்கள் மற்றும் முக்கிய பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துகள், வருமானங்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை ஆராயச் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். பிற வருமானங்களைப் போலவே விவசாய வருமானத்துக்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும். தேர்தலில் கணக்கில்வராத கறுப்புப் பணம் செலவிடப்படுவதைத் தடுக்க, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவுகளுக்கு அரசே மானியம் அளிக்கலாம். முதலீட்டு வருமானத்துக்கு விதிக்கப்படும் கடுமையான வரி குறைக்கப்பட வேண்டும். சொத்து மற்றும் பிற ரியல் எஸ்டேட் இனங்கள் மீது விதிக்கப்படும் பதிவுக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். வரி ஏய்ப்புக்கும், மோசடிகளுக்கும் வாய்ப்பளிக்கும் அனைத்து வரிச் சட்டங்களும் திருத்தப்பட வேண்டும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கறுப்பு மார்க்கெட் மற்றும் கடத்தல் ஆசாமிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் பற்றிய விவரத்தைப் பெற இந்திய அரசால் ஏன் முடியவில்லை?

சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்டங்கள் கறுப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் பதுக்குபவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. சுவிஸ் நாடு மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தத்தில் வங்கி டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாது. அந்நாட்டு வங்கிகளில் போடப்படும் பணம், சொந்த நாட்டில் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றியதாக இருந்தாலும், சட்டவிரோதமான தொழிலில் சம்பாதித்ததாக இருந்தாலும் கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய விவரங்களை வங்கிகள் ரகசியமாகவே வைத்திருக்கும். இந்திய அரசு தனக்குத் தேவையான விவரங்களைப் பெற விரும்பினால், அதற்காக அந்த நாட்டுடன் தனியாக ஒப்பந்தம் போடவேண்டும்.

.அதுமட்டுமல்லாமல் ஊழல் மூலமாகத்தான் பணம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூப்பித்தால் மட்டுமே வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அளிக்க முடியும் என்று சுவிஸ் அரசாங்கம் கூறுகிறது. அப்படிப்பட்ட ஆதாரங்கள் எதையும் மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை.


அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

2010ல் இந்திய அரசு சுவிஸ் நாட்டுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டி.டி...,) போட்டுள்ளது. சுவிட்சர்லாந்து பார்லிமென்டிலும், கடந்தாண்டு இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தப்படி, இரு நாடுகளும், தங்களுக்கு இடையே, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும். பல நாடுகளுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தில், வங்கி துறை சம்பந்தபட்ட பிரிவு சேர்க்கப்படவில்லை. அதனால், கறுப்பு பணம் பதுக்கப்படும் வங்கிகள் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகள் பகிர்ந்து கொள்வதில்லை. இப்போது அதில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம், எந்தெந்த வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கப்படுகிறது என்ற தகவல் அரசுக்கு எளிதாக கிடைக்கும். 40 நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், கறுப்பு பண பதுக்கல் தடுக்கப்படும்.

சுவிஸ் நாட்டுக்கு அடுத்தபடியாக மொரிஷியஸ் நாட்டில் தான் கறுப்புப் பணம் அதிகமாகப் பதுக்கப்பட்டு, வெளிநாட்டு முதலீடு என்ற உருவத்தில் வெள்ளையாக மாறி இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கறுப்புப் பணம் பதுக்கியவர்களை கண்டுபிடிக்கும் இந்தியாவின் முயற்சியில் மொரிஷியஸ் அரசு உதவி வருகிறது. இந்தியா கேட்கும் விவரங்களுக்கு சர்வதேச விதிமுறைகளின்படி உடனுக்குடன் தகவல் அளிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்வதற்காக 37 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 

நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கைக் கூறுவது என்ன?

நிதியமைச்சர் அளித்துள்ள 97 பக்க வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பொருளாதாரம் அல்லது இணை பொருளாதாரத்தின் அளவு பற்றி விளக்கப்பட்டுள்ளது: போலி கணக்குகள், நில மோசடிகள் போன்ற வழிகள் மூலமாக நிறுவனங்களாலும் தனிநபர்களாலும் கறுப்புப் பணம் எப்படி உருவாக்கப்படுகிறது, ஃபைனான்ஷியல் டெரிவேட்டிவ்கள் எப்படி தவறாகப் பயன்படுத்தப்[படுகின்றன அல்லது ஹவாலா முறை மூலமாக கறுப்புப் பணம் எப்படி சுற்றுக்கு விடப்படுகிறது என்பதையயெல்லாம் அந்த அறிக்கை விளக்குகிறது.

கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ள நாடுகளில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. அதன் மதிப்பு சுமார் 104 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பதுடன், வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரணப் கூறுகிறார். சுவிஸ் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் அளவு தற்போது ரூ 9,295 கோடியாகக் குறைந்திருக்கிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.


வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் எல்லாமே கறுப்பு பணம் அல்ல. தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் தங்கள் பணத்தை அங்கு முதலீடு செய்திருக்கலாம் என்று பிரணப் திருவாய் மலர்ந்திருக்கிறார். தங்க நகைகள் விற்பனைச் செய்வதற்கான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படும் போது கறுப்புப் பணம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும். அதே நேரத்தில் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று பிரணப் கூறுகிறார்.

எல்லாம் சரிதான். ஆனால், பல லட்சம் கோடி மதிப்புக்கு வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று வெறும் ரூ 9,295 கோடி தான் இருக்கிறது என்று கூறும் நிதியமைச்சர், மீதிப் பணம் மாயமாக மறைந்தது எப்படி என்று கூறினால் நன்றாக இருக்கும். 



 - இக்கட்டுரை சிட்டி நாரதர் ரிப்போர் இதழில் ஜூன் மாதத்தில் வெளியானது.