Tuesday, April 20, 2010

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம்

இந்திய நாடு பெற்றெடுத்த மேதைகளில் ஒருவர், கடந்த நூற்றாண்டின் சிறந்த மார்க்சீய சமூக ஆய்வாளர், தத்துவ அறிஞர், பலமொழி வித்தகர் என பல சிறப்புகளைப் பெற்றவர் ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். இவர் பல அரிய நூல்களை எழுதியிருந்தாலும் அவற்றுள் அனைவராலும் மிகவும் போற்றப்படும் நூல்களுள் முதன்மையானது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலாகும்.

இந்நூலில் கற்கால நாகரிகத்தில் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் வாழந்த காலத்தில் தொடங்கி படிப்படியாக கிழக்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைந்தது, சிந்து-கங்கை சமவெளிகளில் நிலை கொண்டது... என வரலாற்று நிகழ்வுகளை சமூக, அரசியல் பின்புலங்களோடு கதை வடிவில் சுவைபட அளித்துள்ளார். இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் மூலமாக மனிதனின் சமூக, பண்பாட்டு வளர்ச்சியை எளிமையாக விளக்குகிறார்.

நூலில் முதலில் இடம்பெறும் கதையின் பெயர் ‘நிஷா’. பனியுகத்தின் முடிவில் கி.மு. 6000 வாக்கில் வேட்டையாடி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு ஆபத்துகள் இருந்தன, எப்படி தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தான், குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை மிக அழகாக நம் கண் முன் நிறுத்துகிறார் (தற்கால அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் கால அளவு துல்லியமாக பொருந்தாமல் போகலாம்) . ஆதி மனிதச் சமுதாயத்தில் பெண் தான் தலைமைப் பாத்திரம் வகித்தாள் என்று சொன்னாள் நம்மால் புரிந்துகொள்வது சற்று கடினமே. மானுடவியல் ஆய்வுகள், தொல் சமூகவியல் ஆய்வுகள் இந்தக் கூற்றை ஆதாரங்களுடனும் கோட்பாடுகள் மூலமாகவும் விளக்கினாலும் சாமானியர்கள் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

இந்தக் கடினமான செயலை தனது கதையின் மூலம் சாதித்திருக்கிறார் ராகுல்ஜி. திரு கே.என். முத்தையாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகளில் ஒன்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்பதால் வாசிப்பதற்கு சற்று கடினமாகத் தோன்றலாம். அப்படியே எவ்வித மாற்றமும் செய்யாமல் அளிக்கிறேன்.

பாகம் - 1
நிஷா

தேசம்: வால்கா நதிக்கரை பிரதேசம்

ஜாதி : ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு 6000எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை; ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு, ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை, சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை; பனிப் படலங்கள் மூடவில்லை: பெரிய காற்றோ, புயலோ கிடையாது. இந்நிலையில் உடம்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய கிரணங்கள் மனத்துக்கும் தேகத்துக்கும் எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கின்றன!

சரி, நாலா பக்கங்களிலுமுள்ள காட்சிகளைத்தான் நோக்குவோமே! மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே கற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக் கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்து நான்கு மணி நேரமாகப் பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகிவிட்டது. பனி மூடிய இந்தப் பூமி எங்கும் வியாபித்திருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அதோ இருமருங்கிலும் மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெள்ளிப் பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி. வாருங்கள்; இனி அந்த மரக்கூட்டங்களைக் கொஞ்சம் நெருங்கிப் பார்ப்போம்.

இங்கே இரண்டு விதமான விருட்சங்கள் அதிகமாயிருக்கின்றன. ஒரே வெண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள் கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து, ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசி முனை இலைகளையும் உடைய தேவதாரு விருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும், அவைகளின் மீது வெண்மையான பனிக்கட்டிகள் தொங்கிக் கொண்டிருப்பதும், கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா? தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காது கொடுத்துக் கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவுகிறது.

சரி, வாருங்கள். அதோ மலையின் மீது உயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாரு மரத்தின் மீது ஏறி நாலாபக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம். யார் கண்டார்கள்? பனிக்கட்டி, தேவதாரு விருட்சங்கள் இவைகளையல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா? அப்படி ஒன்றையும் காணோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ, புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா? ஆனால் இவைகளைப் பற்றியெல்லாம் அபிப்ராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.

இந்த வருஷம் பனி அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன. அளந்து பார்ப்பதற்குக் கூட நம்மிடம் சாதனம் இல்லை. ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம் இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும். இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம்; அதே மரங்களின் கூட்டம் மேடு பள்ளமான அதே மலைப் பிரதேசம்! அதோ புகை; ஆம், உண்மையிலேயே புகைதான். இந்த நிசப்தமான வனாந்தரத்தில் புகை எங்கிருந்து வந்தது. நமக்கு ஆச்சரியமாயும், ஆனால் சந்தோஷமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே! புகை கிளம்புவது உண்மைதான். ஆனால் ரொம்ப தூரம் ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும், நாம் உயரத்தில் நிற்பதாலும் சமீபமாகத் தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிச வாசனையும் தான் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்; ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்; ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்க வேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாக விட்டால் நல்லதுதான். யார் கண்டார்கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக் கொண்டால்?


இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும். சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா? ஆம், ஒரே வீட்டில் ஆறு குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை. உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே. நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்? இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம்.

ஒரு பழுத்த கிழவி, அழுக்கு படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து, அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன. ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக் கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும் கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன. புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைகுள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள். அவளுடைய உடம்பில் எந்த ஓர் ஆடையையும் காணோம். ஆபரணமில்லை. வற்றிப்போன அவளுடைய இரண்டும் கைகளும் கால்களுக்குப் பக்கத்தில் கிடக்கின்றன. குழிவிழுந்த அவளுடைய கண்களின் நீலமணிகள் பொலிவிழந்திருந்தாலும், பார்க்கும் சக்தியைப் பூரணமாக இழந்துவிடவில்லை என்பதைத் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் சப்தத்தைக் கூட அவளால் கேட்க முடிகிறது. இந்த நேரத்தில், ஒரு குழந்தை கத்துகிறது. அவளுடைய கண்கள் அந்தப் பக்கம் திரும்பின. கிட்டத்தட்ட ஒன்று ஒன்றரை வயதுள்ள இரண்டு குழந்தைகள்; ஓன்று ஆண் குழந்தை; மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும் மிருதுவுமான ரோமும் பெரிய நீலநிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான். வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.
"அகின், இங்கே வா, நான் இங்கே இருக்கிறேன்" என்று தன்னுடைய நடுங்குங் குரலில் கிழவி பையனை அழைக்கிறாள். ஆனால் அகின் எழுந்திருக்கவில்லை. இந்தச் சமயத்தில் எட்டு வயதுப் பையன் அகினை தூக்கி கிழவிக்குச் சமீபத்தில் விட்டு, "அம்மா! ரோசனா எலும்பைப் பறித்துக் கொண்டாள். அதனால் அகின் அழுகிறான்" என்றான். கிழவி தன்னுடைய வற்றிப்போன கைகளால் அகினைத் தூக்கினாள். இன்னும் அவன் அழுது கொண்டுதானிருக்கிறான். அகினுடைய கண்களிலிருந்து பொங்கி வழியும் கண்ணீர், அவனுடைய அழுக்குப் படிந்த கன்னத்திலே பெரிய ரேகைகளை உண்டாகிச் செல்லுகிறது! கிழவி அவனை முகத்தோடு அணைத்துக்கொண்டு, "அகின்! அழாதே. ரோசானாவை அடித்து விடுவோம்" என்று பனி சேர்ந்திருக்கும் பூமியைத் தன்னுடைய கையால் அறைந்தாள்.

ஆனால் அகினுடைய அழுகையோ கண்ணீரோ நின்ற பாடில்லை. தன்னுடைய கையால் அவனுடைய கண்ணீரை துடைத்தாள். அந்தச் சிறிய அழகிய வதனத்தின் கண்ணீரைத் துடைத்ததால், அவளுடைய கையில் படிந்திருந்த அழுக்கு சில கறுப்பு கோடுகளைத் தீட்டிற்றேயொழிய, பையனுடைய அழுகை நிற்கவில்லை. மாமிசப் பசையேயில்லாது, பை மாதிரி நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய ஸ்தனத்தின் நுனியை அகினுடைய வாயில் வைத்தாள். பையனும் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டான்.

அது என்ன சப்தம்? ரொம்ப சமீபத்தில் கேட்கிறதே! மனிதக் குரல். ஆம், இனிமையான இளம் குரல் யாரையோ அழைப்பது போல் கேட்கிறதல்லவா? "அகின்!அகின்!" சப்தத்தைக் கேட்ட அகின், அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டே அழ ஆரம்பித்துவிட்டான்.
தலையில் விறகுச் சுமையுடன் வேகமாக வந்த இரண்டு பெண்கள் தங்களுடைய சுமையைக் குகைக்குப் பக்கமாகப் போட்டுவிட்டு ஒருத்தி ரோசானாவையும், ஒருத்தி அகினையும் தூக்கி அணைத்துக் கொண்டார்கள். இரு பெண்களும், அந்த இரண்டு குழந்தைகளின் தாய்கள் மாத்திரமல்ல; இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதையும் அவர்களுடைய முகச்சாயல் நமக்குத் தெரிவிக்கிறதல்லவா? நீல நிற விழிகளுங்கூட ஒரே மாதிரிதான்; ஒன்று ஒன்றரை வயது வித்தியாசந்தானிருக்கும். இது நமக்குப் பெரிய மாறுதலாகத் தென்படவில்லை. அவர்களுடைய வதனங்களின் முழு அழகும் வெளிக்குத் தெரியக் கூடாதென்பதற்காகவே நீண்ட சுருள் சுருளான மிருதுவான தலை ரோமங்கள் அந்த வதனங்களை மூடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. இப்பொழுது அவர்களுடைய அழகிய கைகளால் அந்த ரோமக் கற்றைகளை விலக்கியபின் பாருங்கள். கிரகணம் நீங்கிய பின் பொலிவோடு விளங்கும் பூரணச்சந்திரன் மாதிரி இருக்கின்றன அவர்களுடைய முகங்கள்.

அகினுடைய தாய், நெஞ்சில் வலது ஸ்தனத்தைச் சேர்த்துக் கட்டியிருக்கும் ரோமங்கள் அடர்ந்த தோலைக் கழற்றிக் கீழே போட்டு, அதன் மீது உட்கார்ந்து கொண்டு மடியில் வைத்து அணைத்துக் கொள்கிறாள் தன் மகனை. அகினுக்குப் பரம சந்தோஷம். அந்தச் சிறிய வாயின் வெளியே தோன்றும் முத்துப் போன்ற பற்களைப் பாருங்கள். அவனுடைய உச்சி மீதும், கன்னங்களிலும் அவன் தாய் கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்துக்கும் அவன் சிரிப்பதைப் பாருங்களேன்! சில மாதங்களாக விடாது தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்ததால், ஆகாரத்துக்குத் தட்டு ஏற்பட்டதில் அவளுடைய சரீரம் மெலிந்திருந்தாலும் அழகையிழந்து விடவில்லை.

முகத்திலும் அதே பொலிவுதான். அவள் தன்னுடைய மிருதுவான கரிய நுனியுள்ள ஸ்தனத்தை அகினுடைய வாயில் வைத்தாள். இப்பொழுது அந்தச் சின்னக் குழந்தையின் கண்கள் பாதி மூடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். அந்தச் சின்னஞ்சிறு கால்கள், மெதுவாக,ஆனால் எவ்வளவு ஒய்யாரமாக ஆடுகின்றன. தாயினுடைய மடியிலே, அந்தக் குழந்தை அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பாருங்கள். அவனுடைய வலது கையின் சின்னஞ்சிறு விரல்கள் அவளுடைய இடது ஸ்தனத்தின் கரிய நுனியை வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா? இந்த ஏகாந்தமான குகையிலே இவர்களை, அவர்களுடைய அலுவல்களைக் கவனிக்க விட்டுவிட்டு, நாம் அடுத்த காட்சியைப் பார்ப்போமா?

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? -பகுதி 2
தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? -பகுதி 3

No comments:

Post a Comment