Saturday, September 29, 2012

கடவுள் துகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்








40 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த அடிப்படை நுண்துகளான ஹிக்ஸ் போசான் ஒருவழியாக விஞ்ஞானிகளின் சோதனைச் சாலையில் சிக்கிவிட்டது. ஹிக்ஸ் போசான் மூலத்துகளின் கண்டுபிடிப்பு கடந்த நூறாண்டுகளின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பயணத்தில் இது மிகப்பெரிய மைல் கல் என அறிவியல் உலகம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா அந்த ஹிக்ஸ் போசான் என்று கேள்வி எழுகிறதா? அதை விளக்கமாக பார்ப்பதற்கு முன்பு, போரடித்தாலும் சில அடிப்படை அறிவியல் தகவல்களை நாம் அறிந்துகொள்வது அவசியம்.


நாம் வாழும் இந்த பூமி, சூரியன், அதைச் சுற்றும் கோள்கள், நட்சத்திரங்கள் என அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஆதியாரம்பத்தில் ஒரு பெரிய வெடிப்பிலிருந்து தோன்றியதாக நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றிய அந்த பெருவெடிப்பில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றி நட்சத்திரங்களாக, கோள்களாக, விண்பொருள்களாக உருவாகியதாகவும் அது தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும் ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் அணுக்கள். உயிரினங்கள், மண், மலை, கடல், சந்திரன், சூரியன் என இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை. ஒரு கட்டடத்துக்கு செங்கற்கள் எப்படி அடிப்படைக் கட்டுமானமாக இருக்கின்றனவோ, அதுமாதிரி அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படையாக இருப்பவை அணுக்கள் தான். இந்த அணுக்களும் சில அடிப்படைத் துகள்களால் கட்டமைக்கப்பட்டவை தான். இந்த அணுக்கருத் துகள்களும் சிலவகை மூலத் துகள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மூலத்துகள்கள் தான் பொருள்களின் இருப்புக்கு அடிப்படையாக விளங்குபவை. இப்பவே கண்ணைக் கட்டுகிறதா? இன்னும் கொஞ்சம் தான், பொறுத்துக்கொள்ளுங்கள்

சத்யேந்திரநாத் போஸ்

நம்முடைய பிரபஞ்சம் எவற்றால் ஆனது, எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நியம மாதிரி (ஸ்டாண்டர் மாடல்) கோட்பாடு என்னும் இயற்பியல் கோட்பாட்டின்படி விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமக் கோட்பாட்டின்படி, அடிப்படைத் துகள்கள் ஃபெர்மியான்கள் போசான்கள் என இரண்டு வகைப்படும். (குவாண்டம் இயற்பியல் எனப்படும் நவீன இயற்பியல் துறைக்கு தனது அற்புதமான கண்டுபிடிப்பால் வலுச் சேர்த்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ்(1894-1974). அவரது நினைவாகவே அறிவியல் உலகம் இத்துகளுக்கு போசான் என பெயரிட்டு பெருமைப்படுத்தியுள்ளது). இரண்டு வகையில் சேர்த்து மொத்தம் 17 வகையான துகள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். இவற்றை அதற்கு மேல் உடைக்கவோ பகுக்கவோ முடியாது. அப்படிப்பட்ட துகள்களில் முதலாவது கண்டுபிடிக்கப்பட்டது எலக்ட்ரான் எனப்படும் எதிர்மின் துகள் (1897ல்). 2000ம் ஆண்டுக்குள் மொத்தம் 16 வகையான துகள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றின் இருப்பையும் உறுதிசெய்துவிட்டனர். இத்துகள்களில் போட்டான், குளூவான் ஆகிய துகள்களைத்தவிர மற்ற அனைத்துக்கும் நிறை (பொது வழக்கில் எடை என்று கூறலாம்) உண்டு. இந்த நிறையை அவை எப்படி பெற்றன என்பதே விஞ்ஞானிகளின் நெடுநாளைய குழப்பமாக இருந்து வந்த நிலையில் 1964ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஹிக்ஸ் இயங்கமைவு என்ற போட்பாட்டை முன்வைத்தார்.

ஹிக்ஸ்

அவரது கோட்பாட்டின்படி பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு புலம்(புரிந்துகொள்ள வசதியாக ஆற்றல் அல்லது சக்தி என்று வைத்துக்கொள்ளலாம்) வியாபித்துள்ளது. அதற்கு ஹிக்ஸ் புலம் என்றே அறிவியல் உலகம் பெயர் சூட்டிவிட்டது. ஹிக்ஸ் புலமானது ஹிக்ஸ் போசான் என்ற நிறையுள்ள துகள்களால் நிறைந்தது. அதன் வழியே பயணிக்கும் போது அடிப்படைத் துகள்களுக்கு நிறை ஏற்படுகிறது. அதாவது, ஹிக்ஸ் புலத்தில் அடிப்படைத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக அவை நிறையைப் பெறுகின்றன என்று ஹிக்ஸ் ஒழுங்கமைவு கோட்பாடு விளக்கியது. கணித வடிவில், சித்தாந்த அளவில் இந்தக் கொள்கை பொருத்தமாக இருந்தாலும் ஹிக்ஸ் போசான் துகளை யாரும் பார்க்கவில்லை. சரி ஏட்டளவில் சரியாக இருந்தால் மட்டும் போதுமா? பரிசோதனை மூலம் நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற எதையுமே அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே அத்துகளைக் கண்டறியும் முயற்சிகள் உலகம் முழுவதும் அப்போதே தொடங்கிவிட்டன.

சுவிஸ்-ஃபிரான்ஸ் எல்லையில் தரைக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம்

தற்சுழற்சி, மின்னூட்டம், நிறம் போன்ற பண்புகளற்ற மிக நுண்ணிய எளிமையான துகளான ஹிக்ஸ் போசானை கண்டறிவது அவ்வளவு எளிமையான காரியமாக இருக்கவில்லை. அதற்கு பெரும் உழைப்பும் அதைவிடப் பெரிய முதலீடும் தேவைப்பட்டது. அதிகச் செலவு பிடித்தக் காரணத்தால் அமெரிக்கா போன்ற நாடுகள்கூட அந்த ஆராய்சியை கைவிட்ட நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவரும் 20 நாடுகள் இணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ன் (CERN ) இதில் தீவிரமாக இறங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயர் ஆராய்ச்சி மையத்தில் உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Large Hadron Collider - LHC) அமைக்கப்பட்டது. இந்தத் துகள் முடுக்கி பூமிக்கு அடியில், பிரான்ஸ் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில் 27 கி.மீ. நீளச் சுரங்கப்பாதையில் புதைக்கப்பட்டுள்ளது. இங்கு சிலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் இரண்டு பரிசோதனைகளில் தாம் ஹிக்ஸ் போஸான் மூலத்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன‌.

துகள் முடுக்கி

இந்தத் துகள் முடுக்கியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கோடிக்கணக்கான அணுக்கருத்துகள்கள்(புரோட்டான் துகள்கள்) மோதவிடப்படுகின்றன. இந்த மோதல்களின் விளைவுகள் குறித்துகொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை ஆராயும் விஞ்ஞானிகள் அவற்றில் போசான் துகள் இருக்கின்றனவா என்று தீர்மானிப்பார்கள். உலகம் முழுவதிலும் இத்தகவல்களை ஆராயும் பணியில் சுமார் 10,000 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய ஆய்வை செர்ன் விஞ்ஞானிகள் 1.1 குவாட்ரில்லியன் முறைகள் செய்து அவற்றின் தாக்கங்களை பகுப்பாய்வு செய்தார்கள். தற்போது செர்ன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிதுள்ள முடிவுகள் ஹிக்ஸ் போசான் இருப்பை மிகத் துல்லியமாக உறுதி செய்துள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள துகளின் எடையானது கோட்பாட்டு ரீதியாக வருணிக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகளின் எடையுடன் மிக மிக நெருக்கமாக ஒத்திருக்கிறது. ஆகவே இதுதான் ஹிக்ஸ் போசானாக இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துவிட்டனர். அவர்களின் கண்டுபிடிப்பின் துல்லியம் ஐந்து சிக்மா, அதாவது 99.99998 சதவிகிதமாகும். இந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 50,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்


இந்தப் பரிசோதனை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே இந்தக் கண்டுபிடிப்பு நிகழும் என்று விஞ்ஞானிகள்ஏன் பீட்டர் ஹிக்ஸ் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு விஞ்ஞானி முன்வைக்கும் கருத்தாக்கமானது அவரது வாழ்நாளிலேயே சரி என்று ஆய்வுகளால் நிரூபிக்கப்படுவதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும். கண்களில் நீர் பணிக்க 83 வயதாகும் ஹிக்ஸ் கூறுகிறார், “என்னுடைய வாழ்நாளிலேயே என்னுடைய கண்டுபிடிப்பு மெய்ப்பிக்கப்படும் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை.”

இந்த ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கும் இல்லாமலில்லை. டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம் உள்பட இந்தியாவின் ஆய்வு நிறுவனங்களிலிருந்தும் பல விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போசான் என்ற பெயரே நமது விஞ்ஞானியின் பெயராக இருக்கையில் நமக்கும் அந்த வெற்றியில் பெரும் பங்குண்டு என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இந்த கண்டுபிடிப்பு, 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது முதல் பிரபஞ்சத்தின் இன்றைய நிலைவரை தெளிவாக அறிந்துகொள்ளும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. அறிவியல் என்றும் ஓய்வு எடுத்துக்கொள்வதில்லை. பிரபஞ்சத்தின் மர்மமங்களை கண்டறிவதற்கான பயணம் தொடர்ந்து நடைபெறும். புதிதாக கண்டறியப்பட்டுள்ள துகளின் மீது நடைபெறப்போகும் ஆய்வுகள் அதன் பண்புகளைப் பற்றி புதிய விளக்கங்கள் அளிக்கக்கூடும். பிரபஞ்சவியல் துறையில் இது ஒரு புதிய சகாப்தத்தையே தொடங்கிவைக்கக்கூடும். ஏனெனில் நாம் நாம் இப்போது ஓரளவு துல்லியத்துடன் அறிந்திருப்பது நம் கண்களுக்கு புலப்படும் பிரபஞ்சத்தின் 4 சதவிகித ஆற்றலைப் பற்றித்தான். போக வேண்டிய தூரம் மிக நீண்டது.


அதெல்லாம் சரி. கடவுள் துகளைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நிறையில்லாத எந்தப் பொருளும் இருப்பது சாத்தியமில்லை. பொருள்களுக்கு நிறை உண்டானதற்கு காரணம்ஹிக்ஸ் போசான்துகள்கள் தான். ஆகவே நாம் காணும் உலகின் இருப்புக்கே அடிப்படையா இருக்கும் இத்துகளை ஒரு விஞ்ஞானிகடவுள் துகள்என்று பெயர் சூட்ட, பின்னர் அப்பெயரே அதற்கு பட்டப்பெயராக பிரபலமாகிவிட்டது. மற்றபடி கடவுளுக்கும் இத்துகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அறிவியலில் கடவுளின்தேவைஇல்லை.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கை: களமிறங்கும் கியூரியாசிட்டி






விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது சாதனைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. செவ்வாய்க் கோளை ஆராய அமெரிக்கா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ என்ற ஆளில்லா விண்கலம் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 11.00 மணிக்கு செவ்வாயின் பரப்பில் வெற்றிகரமாகக் கால்பதித்தது.

வேற்று கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்வதில் மனிதன் வரலாற்று காலம் தொட்டே ஆர்வம் காட்டிவருகிறான். வேற்றுகிரகவாசிகள் பற்றி பலவிதக் கற்பனைகள் கொண்ட அறிவியல் புனைக்கதைகள் தொடர்ந்து படைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக இவற்றை நாம் கற்பனை என்று ஒதுக்கிவிட்டாலும், எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் அறிவியல் புறந்தள்ளிவிடுவது கிடையாது. சூரியனிலிருந்து பார்க்கும்போது பூமிக்கு அடுத்திருக்கும் கோள் செவ்வாய்தான். செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு தனிஈர்ப்பு உண்டு. சோதிடத்தில்கூட செவ்வாய்க்குத் தனி இடம் உண்டு. தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு செவ்வாயை சற்று உற்றுநோக்கும் வசதி வந்தபிறகு, விஞ்ஞானிகளின் செல்லப்பிள்ளையாகவே செவ்வாய் கிரகம் மாறிவிட்டது. செவ்வாய் கோளின் பரப்பின் சிவப்பு வண்ண பாலைவனப் பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக கறுப்பு நேர் கோடுகள் காணப்பட்டதை 19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் கண்டார்கள். அவை தண்ணீர் செல்லும் கால்வாய்கள் என்றும், நுண்ணறிவுள்ள உயிரினங்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும், விவசாயம்கூட நடைபெறுவதாகவும் சில விஞ்ஞானிகள் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்யத் தொடங்கிவிட்டனர். 


எனினும் 1960ளில் ஏற்பட்ட ராக்கெட் மற்றும் செய்ற்கைகோள் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஆளில்லா விண்கலங்களை நேரடியாக செவ்வாய்க்கே அனுப்பி ஆராயத் தொடங்கினர் விஞ்ஞானிகள். அன்றைய வழக்கப்படி இந்த ஆராய்ச்சியிலும் முதல் படி எடுத்துவைத்தது அன்றைய சோவியத் யூனியன் தான். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தொடர்ச்சியாக பல விண்கலங்களை – மாரினர் வரிசை, வைகிங் வரிசை, லேட்டஸ்டாக ஸ்பிரிட், பாத்ஃபைண்டர், ஆப்பர்சுனிட்டி போன்ற விண்கலன்களை அனுப்பி செவ்வாயை ஆராய்ந்தது. இதுவரை மேற்கோள்ளப்பட்ட முயற்சிகள் பாதியளவே வெற்றியடைந்தாலும் விஞ்ஞானிகள் தங்கள் முயற்சிகளை விட்டுவிடவில்லை. அதன் பலன்தான் தற்போது செவ்வாயில் தரையிறங்கியிருக்கும் கியூரியாசிட்டி விண்ணாய்வுக் கூடம்.



கார் போன்று தோற்றமளிக்கும் ஆறுசக்கரங்கள் கொண்ட கியூரியாசிட்டி விண்கலன் 1 டன் எடை கொண்டது. ரூ 12,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலன் எட்டு மாதங்களில் 57 கோடி கி.மீ. பயணம் செய்து செவ்வாயை அடைந்துள்ளது. 21,240 கி.மீ. வேகத்தில் பயணித்த கியூரியாசிட்டியின் வேகம் அது செவ்வாயின் ஈர்ப்புப் புலத்துக்குள் நுழைந்ததும் மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் சிறப்பு பாராசூட் விரிந்து வேகத்தை குறைக்க, அடுத்து ஸ்கை கிரேன் எனப்ப்படும் விண் ஏணி மூலமாகத் திட்டமிட்டபடி கேல் பள்ளம் (Gale carter) என்னுமிடத்தில் கியூரியாசிட்டி மெதுவாகத் தரையிறக்கப்பட்டது. விண்கலம் செவ்வாயின் தரையைத் தொடுவதற்கு முந்தைய கடைசி ஏழு நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளை பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் செவ்வாயில் விண்கலங்களை தரையிறக்கும் முந்தைய சில முயற்சிகள் கடைசி நிமிடங்களில் தோல்வியில் முடிந்திருக்கின்றன. கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தின் தரையைத் தொட்டவுடனேயே சமிக்ஞ்சைகளை அனுப்பத்தொடங்கிவிட்டது. உடனே நாசா கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டி அணைத்துத் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மொத்த அறிவியல் உலகமே இந்தச் சாதனையில் மகிழ்ந்து கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? எதிர்காலத்தில் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா என்பதைப் பற்றிய ஆய்வுகளை கியூரியாசிட்டி மேற்கொள்ளும். அதற்காக செவ்வாயின் மண், பாறைகள் போன்றவற்றைத் தோண்டி எடுத்து அவற்றில் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான வேதியல் கட்டமைப்புகள் இருக்கின்றனவா என்பதை கியூரியாசிட்டி ஆராயும். லேசர் கருவி, பாறைகளைத் துளையிடும் கருவி உள்பட 11 வகையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன. அணுசக்தியில் இயங்கும் கியூரியாசிட்டி இரண்டு ஆண்டுகள் தனது ஆராய்ச்சிகளை செவ்வாயில் மேற்கொள்ளும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடனே முதல்முறையாக வீடியோ படத்தை கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. அத்துடன் முதல்முறையாக முப்பரிமாண வண்ணப் புகைப்படத்தையும் இது அனுப்பியுள்ளது. 1969ல் நிலவில் மனிதன் காலடியெடுத்து வைத்தச் சாதனைக்கு ஈடானதாக கியூரியாசிட்டியின் பயணம் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. நிதிப்பற்றாக்குறைக் காரணமாக ஸ்பேஸ் ஷட்டில் உள்பட தனது பல விண்வெளித் திட்டங்களை நாசா நிறுத்தி வைத்துள்ள நிலையிலும் இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாயில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கியூரியாசிட்டி நிச்சயம் புதிய தகவல்களை அளிக்கும் என்று விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.   

ஒபாமாவின் பேச்சும் இந்தியாவின் பதிலடி(?)யும்






தேர்தல் நெருங்கினாலே அரசியல்வாதிகள் அதிகம் பேசத் தொடங்கிவிடுவார்கள். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மட்டும் விதிவிலக்கா என்ன? வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜூன் 15 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “’இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் கவலையளிப்பதாக உள்ளது. சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதில் இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அங்கு தாராளமாக முதலீடு செய்யமுடியாத நிலை இருக்கிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமானால் அந்நிய முதலீடுகள் மிக அவசியம். தங்கள் பொருளாதாரத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்று இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கூறுவது அமெரிக்காவின் வேலை இல்லை. இந்தியர்கள்தான் அதுகுறித்து முடிவு செய்யவேண்டும்.  இந்தியாவில் இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய சரியான சூழல் உருவாகியுள்ளது.” என்று திருவாய் மலர்ந்தார்.

இந்தியா மீதான கரிசனத்தில்தான் ஒபாமா மேலே கூறியதைச் சொன்னார் என்று நினைத்துவிடாதீர்கள். சில்லரை வர்த்தகம், இன்ஷூரன்ஸ், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் அந்நிய முதலீட்டை முழுமையாக அனுமதிக்க வேண்டும். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் களமிறங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதைத்தான் சற்று நாசூக்காகச் சொன்னார். என்ன இருந்தாலும் அமெரிக்க அதிபர் அல்லவா? அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்நாட்டின் ராணுவ, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கட்டுப்படுத்துகின்றன என்பது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடைகள் தருவதும், பணம் வாங்கிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு ஆதரவாக லாபி செய்வதெல்லாம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு சகஜமாக நடைபெற்றுவரும் விஷயங்கள்தான். அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் தனது கட்சிக்கும், தேர்தல் செலவுக்கும் பணம் அளிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின், குறிப்பாக வால்மார்ட் நிறுவனத்தின் விருப்பத்தையே ஒபாமாவின் பேச்சு வெளிப்படுத்துகிறது.



அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து சரிவடைந்துவரும் நிலையில், உலகெங்கும் கொள்ளையடித்தப் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தகச் சந்தைகளில் ஒன்றான இந்திய சந்தையை கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே கொல்லைப்புற வழியாக பார்தி ரீடெயில் நிறுவனத்துடன் இந்தியாவில் கால்பதிக்க வால்மார்ட்டுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட மன்மோகன் சிங் அரசு, 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்க சந்தர்ப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது. ”இந்தியாவுக்குள் வால்மார்டை அனுமதிப்பதில் இன்னும் ஏன் தாமதம்?” என்பதை ஒபாமா மென்மையாக வேறுவார்த்தைகளில் செல்லமாக மன்மோகன் சிங்கைக் கடிந்துகொண்டதை கேட்டு எதிர்கட்சிகள் கண்டனம் செய்வதற்குள் முந்திகொண்டது காங்கிரஸ் அரசு. ”ஒபாமாவுக்கு அவருடைய உணர்வுகளை வெளியிட எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், கொள்கை வகுப்பது என்பது நமது உரிமை. இந்தியாவின் நேரடி அந்நிய முதலீட்டு கொள்கை முதலீட்டாளர்களுக்கு நட்புரீதியானதாகும். கொள்கையில் சில பிரச்னைகளும், கூட்டணி ஆட்சியின் சில கட்டாயங்களினால் அனுமதி வழங்குவதில் தாமதம் போன்ற இடையூறுகள் ஏற்படலாம். ஆனால், அதே நேரத்தில் நாங்கள் உறுதியான முடிவுகளை எடுத்து வருகிறோம். விரைந்து அனுமதி வழங்கவும், வர்த்தகத்தை எளிதாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவும் தங்கள் பக்கத்தில் கட்டுப்பாடுகளைக் குறைத்து தாராள உலக முதலீட்டுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்” என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா மூலம் ஒபாமாவுக்கு பதிலடி(?) கொடுத்தார் மன்மோகன்சிங். அதாவது, பொறுத்தது பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க. சீக்கிரமே சந்தையை முழுசா திறந்துவிடுகிறோம் என்பதைத்தான் பதிலடியாக அமைச்சர் அறிக்கையில் கூறினார்.



அப்படியென்ன இந்திய சில்லரை வர்த்தகத்தின் மீது இவர்களுக்கு கண்? பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள், அமெரிக்க அரசு, இந்திய அரசு என அனைவரும் ஏன் இதில் அவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? சர்வதேச வணிக, பொருளாதார ஆலோசனை நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ்-இன் மதிப்பீட்டின்படி, இந்திய சில்லரை வர்த்தகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ 28 லட்சம் கோடி. இது 2014ல் ரூ 50.4 லட்சம் கோடி அளவுக்கும் வளர்ந்துவிடுமாம். இந்திய சில்லரை வர்த்தகத்தில் முறைப்படுத்தப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட (ரிலையன்ஸ், மூர், பிக் பஜார் போன்ற) சில்லரை வர்த்தகத்தின் பங்கு தற்போதைய சந்தையில் வெறும் 5% தான். இப்போது புரிகிறதா கழுகுகள் இந்தியாவை வட்டமிடக் காரணம்?

நரசிம்மராவ் காலத்தில் புதிய தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்களைகள் அமல்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது முதலே சில்லரை வர்த்தகத்தில் முழுமையாக அந்நிய முதலீடுகளை அனுமதிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இடதுசாரிகளில் தொடர்ந்த எதிர்ப்பாலும், அவ்வப்போது அடக்கி வாசித்தாலும் எதிர்ப்பு காட்டி வருகின்ற பிற கட்சிகளின் நிர்ப்பந்தங்களின் காரணத்தாலும் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலைதான் இன்றுவரை இருக்கிறது. இருந்த போதிலும், பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது நமக்குத்தான் நல்லது. அதனால் இந்திய விவசாயிகள் பயனடைவர், விலைவாசி குறையும், உலகத்தரமான பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், வரிவருவாய் அதிகரிக்கும், சரக்குப் போக்குவரத்து மேம்படும், போட்டி அதிகரிப்பதால் தரமான பொருள்கள் கிடைக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏராளமான சாதகங்கள் இருப்பதாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும் அரசும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் உண்மையா? அந்நிய முதலீடுகளை அனுமதித்த பிற நாடுகளின் நிலைமை என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது எவ்வளவு கேடானது என்பது நமக்கு புரியும்.

இந்தியாவில் சில்லரை வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி பேர் என்று கூறப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் தோறும் மூலைக்கு மூலை சில்லரை கடைகள் இருகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுயதொழிலாக இதைச் செய்பவர்கள்தான். அரசின் ஆதரவு திட்டங்களோ, வங்கிக் கடன்களோ, அரசு வேலைவாய்ப்புகளோ எதையும் பெறாமல் தமது உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டிருப்பவர்கள்தான் நம் நாட்டின் சில்லரை வணிகர்கள். நமது சில்லரை வணிகத்தின் பெரும்பங்கு உணவுப்பொருள் சார்ந்த மளிகைக் கடைகளைச் சார்ந்தது. இந்த உழைப்பாளிகள் பிறருக்கும் வேலை அளிக்கிறார்கள்.



தமது சொந்த உழைப்பினால் இவர்கள் ஈட்டும் வருமானம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது. இவர்களால் தான் உள்நாட்டுச் சேமிப்பும் உயர்கிறது. இவர்களின் கணக்கு வழக்கு எதையும் அரசாங்கம் பார்ப்பதில்லை. அதனால் இவர்களை வருமான வரி வரம்புக்கு கொண்டு வருவதும் இயலாது. அதுவே பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் வரி வருவாய் விண்ணைத் தொட்டுவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். எப்படி வரி ஏய்ப்பது என்று வணிக நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன?   
அடுத்து இவர்கள் கூறும் விவசாய வளர்ச்சி. சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதித்த நாடுகளில் எல்லாம் பாரம்பரிய விவசாயத்தையும், விவசாயப் பொருளாதாரத்தையும் இவை அழித்துவருவதையே நாம் பார்க்கிறோம். மக்களின் தேவைக்காகப் பயிரிடப்படுவது போய், பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப நம் விவசாயம் மாற்றப்பட்டு நம் நிலவளமும் விவசாயப் பொருளாதாரமும் அழிக்கப்படுவதுதான் மிஞ்சும். 


இடைத்தரகர்களை ஒழித்து விவசாயிகளைக் காப்பதாக இவர்கள் விடும் புருடாவும் இப்படித்தான். முதலில் போட்டியாளர்களை ஒழிக்க அதிக விலைகள் கொடுத்துப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் இவர்கள் விரைவிலேயே போட்டியாளர்களை ஒழித்து ஏகபோகத்தை நிலைநாட்டியவுடன், இவர்கள் வைத்ததுதான் விலை என்றாகிவிடும். அதற்கான மிகப்பெரும் மூலதனம் அவர்களிடம் இருப்பதுடன், மாபெரும் உலகளாவிய சப்ளை வலைப்பின்னலையும் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. இதனால், இவர்களுக்குத் தேவையானப் பொருள் உலகில் எந்த மூலையில் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்குதான் இவர்கள் கொள்முதல் செய்வார்களே தவிர, உள்நாட்டில் அல்ல. அதுமட்டுமல்ல, உலகின் உற்பத்தி இயக்கத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், தாம் சொல்லும்விலையில்தான் உற்பத்தியாளர்கள் தரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதால் மட்டுமே எண்ணற்ற நிறுவனங்கள், அமெரிக்க-ஐரோப்பிய நிறுவனங்கள் உள்பட, தொழிலில் இருந்து விலக நேருவது தொடர்கிறது. இதன் காரணமாக வேலையிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. பெரு நிறுவனங்களுக்கே இந்த கதி என்றால் சிறு தொழில்கள் பற்றிக் கூறத்தேவையில்லை. இந்நிலைதான் நமக்கும் வேண்டும் என்கிறதா இந்திய அரசு?




பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களை வரவேற்பவர்கள் கூறும் மற்றொரு வாதம் இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பது. பாரம்பரிய இந்திய சில்லரை வர்த்தகத்தின் வலைப்பின்னல் மிகவும் விரிவானது நுட்பமானது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட பல கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தொழில் பன்னாட்டு நிறுவனங்களிடம் சிக்கினால் எதோ சில ஆயிரம்பேர், ஏன் சில லட்சம் பேர் என்றுகூட வைத்துக்கொள்ளலாம், வேலைவாய்ப்பு பெறலாம். முழுவதும் கணினிமயப்படுத்தப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட அவற்றில் நம்மவர்களுக்கு கிடைக்கப்போவது கூலி வேலைகள் போன்றவையும், அக்கூலிகளை பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக மேய்க்கும் மேஸ்திரி வேலைகளும் தான். சரி அவர்களுக்காவது அதிக வருவாய் கிடைக்குமா என்றால் அதுவும் கிடையாது. எட்டு மணிநேர உழைப்பெல்லாம் வால்மார்டில் செல்லுபடியாகாது. எவ்வித தொழிலாளர் நலத் திட்டங்களையும் அவை செயல்படுத்துவதில்லை. அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் அவற்றின் பலத்தின் முன்னால் தொழிலாளர், வணிகச் சட்டங்களால் என்ன செய்ய முடியும். நெறி தவறிய வணிக நடைமுறைகல், தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், ஏமாற்றுதல் என ஏராளமான குற்றச்சாட்டுகளுக்காக அதிக எண்ணிக்கையிலான வழ்க்கை அமெரிக்க நீதிமன்றங்களில் சந்திப்பது வால்மார்ட் நிறுவனம்தாம். அதைக் கொண்டுவரத்தான் ஒபாமாவும் மன்மோகனும் படாதபாடு படுகிறார்கள்.   


அதிகப் பணிநேரம், குறைந்த ஊதியம், ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் போன்றவையெல்லாம் கேள்விகேட்பாரின்றி நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக பாரம்பரிய சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் வாழ்வையிழக்கப்போகும் கோடிக்கணக்கானவர்களின் நிலை என்ன? அவர்களுக்கும் ஏதாவது நூறுநாள் வேலைத்திட்டத்தை அரசு வைத்திருக்குமோ?

உலகம் முழுவதையும் விழுங்கி ஏப்பமிட மேற்கத்திய பொருளாதாரங்கள் சேர்ந்து உருவாக்கிய உலகமயமாக்கம் இன்று அவர்களையே திருப்பியடித்துக் கொண்டிருக்கிற்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவில் இருக்கின்றன. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதலீட்டுக்கு அதிக லாபம் பெறவும் வளரும் நாடுகளின் சந்தைகளை முழுமையாகத் திறந்துவிடும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். வளரும் நாடுகளில் தங்களுக்கேற்ற ஆட்சியாளர்களைத் அதிகாரத்தில் தொடர அனுமதிக்கிறார்கள். ஒபாமாவின் பேச்சும், ஆனந்த் சர்மாவின் பதிலும் உணர்த்துவது இதைத்தான்.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. சில்லரை முதலீட்டில் அந்நிய மூலதனத்தை, அதாவது பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது எப்போதோ தொடங்கிவிட்டது. தனி பிராண்ட் வகைகளில் முழுமையாகவும், பிற சில்லரை வர்த்தகத்தில் 51% அளவும் எப்போதோ அனுமதிக்கப்பட்டுவிட்டன. இப்போது அவர்கள் கேட்பது முழுமையான ஆதிக்கம். ஒபாமாவின் பேச்சு அமெரிக்க நலன்களைத் தான் பிரதிபலிக்கிறதே தவிர இந்தியாவின் மீதான் அக்கறையால் அல்ல. அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் திருடிக்கொள்கிறார்கள், இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் வேலைகள் கொடுக்கக்கூடாது என்று இந்தியாவுக்குத் தடைபோடும் ஒபாமா, இந்தியாவின் சந்தைகளை அகலத் திறந்துவிட வேண்டும் என்று கூறுவது அமெரிக்காவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. அதைப் புரிந்தாலும், புரியாததுபோல மன்மோகன் சிங்கும் எப்போதும்போல் மவுன சிங்காக இருப்பார். பிரச்னை தீர்ந்துவிட்டதல்லவா!




ரூபாயின் சரிவும் பெட்ரோல் விலையேற்றமும்




பெட்ரோல் விலைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் , ஐ.பி.பி.
ஆகிய பொதுத்துறை எண்ணை விற்பனை நிறுவனங்களுக்கு இணைந்த அமைப்புக்கு (ஓ.எம்.சி.) 2010ல் அளிக்கப்பட்டதிலிருந்து அடிக்கடி பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது ஒரே நாளில் பெட்ரோல் விலையை ரூ 7.50 உயர்த்தப்பட்டதன் மூலம் சாதாரண மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது மத்திய அரசு. டீசல், எல்.பி.ஜி. விலைகளும் விரைவில் உயரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் சம்பந்தம் இல்லையென்று பொதுத்துறை நிறுவனங்களைக் காரணம் காட்டுகிறது அரசு. பெட்ரோலிய பொருள்களுக்கு விலைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அரசுக்கும் விலை உயர்வுக்கும் தொடர்பு இல்லையென்று கூறும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா, உயர்த்தப்பட்ட விலைகளை மாற்றியமைக்கும் அல்லது குறைக்கும் சூழ்நிலை இல்லை என்று அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்ற அவர், சந்தையில் கச்சா என்ணையின் விலை குறையும் போது, அதன் பலன் உடனடியாக நுகர்வோருக்கு அளிக்கப்படும் என்கிறார்.

இந்த விலை உயர்வை அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்க்கின்றன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கூட்டணி கட்சிகளும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மே 31 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. விலை உயர்வை எதிர்க்கின்றன. உண்மையில் இந்த விலை உயர்வின் பின்னணி என்ன?

கடந்த 4-5 மதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மே மூன்றாவது வாரத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ 56.38 என்ற அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு மதிப்பிழந்தது. மார்ச் 1 முதல் 13% சரிவடைந்த ரூபாயின் மதிப்பு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 11% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் தம் முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது தான் என்று கூறுகிறார்கள்.


அமெரிக்க டாலரின் அடிப்படையில் ரூபாய் மதிப்பு கணக்கிடப்படுவதற்கு காரணம் பெரும்பாலான சர்வதேச வர்த்தகமும் இறக்குமதியும் அமெரிக்க டாலர் மூலமாக நடப்பதுதான். வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய அல்லது வாங்க வேண்டுமென்றால் ரூபாயை டாலராக மாற்ற வேண்டும். உங்களிடம் போதிய அளவுக்கு டாலர் இல்லையெனில் இறக்குமதி செய்வது குறைவதுடன் டாலரின் தேவைப்பாடு காரணமாக ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடையும். அதிக விலைக் கொடுத்து டாலரை வாங்க வேண்டியிருப்பதுதான் காரணம். ஏற்றுமதி மூலமாகவும், அந்நிய முதலீடுகள் மூலமாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் மூலமாகவும் தான் நாம் டாலரை பெறுகிறோம். ஏற்றுமதி சரிவடையும் போதும் டாலரின் கையிருப்பு குறையும். இதுதான் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணம் அந்நிய முதலீடுகள் குறைந்ததுதான் என்கிறார்கள். அந்நிய முதலீடு குறைய என்ன காரணம் என்றால் ஐரோப்பிய நாடுகள் சந்தித்துவரும் பொருளாதார வீழ்ச்சி, குறிப்பாக திவாலாகும் நிலையிலுள்ள கிரீஸ் நாடு தான் காரணம் என்கிறார் மத்திய நிதியமைச்சர் பிரணப் முகர்ஜி. கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பின் எதிரொலி தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்கிறார். இதற்கு தீர்வு தான் என்ன? சிக்கன நடவடிக்கைகளும் மானிய குறைப்பும் தான் என்று கூறுகிறார் நமது நிதியமைச்சர். பெட்ரோல் விலையேற்றமும் ரூபாயின் வீழ்ச்சியும் சந்திக்கும் புள்ளி இதுதான். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைத்தால் இறக்குமதிக்குச் செலவிடும் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி. பெட்ரோல் விலையேற்றத்தால் உள்நாட்டில் விலைவாசி உயருமே, என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு நமது நிதியமைச்சர் பதிலளிக்க மாட்டார்.

நாட்டின் பணவீக்க விகிதம் மிக அபாயகரமான நிலையில் உள்ளது. மொத்த விலைக் குறியீடு அளவில் பணவீக்கம் 7.23%, ஆகவும், சில்லறை விலைக் குறியீடு அளவில் 10.36% என்ற இரட்டை இலக்க அளவிலும் உள்ளது. மக்கள் அதிகம் நுகரும் பொருள்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் விழிப்பிதுங்கியுள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் முதுகில் ஏற்றியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டால் எப்படிப்பட்ட பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்?

பெட்ரோல் விலை உயர்வு பொருள்களின் விலையில் ஓரளவுதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டால், அது நுகர்பொருள்கள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஏனெனில் சரக்கு எடுத்துச்செல்லும் வாகனங்கள் டீசலைத்தான் பயன்படுத்துகின்றன. விவசாயிகளும் டீசலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சமையல் எரிவாயு மற்றும் மண்ணென்ணை விலையும் உயர்த்தப்பட்டால், வறுமையில் உழலும் கீழ்த்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும்.

அதுமட்டுமல்லாமல், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். போக்குவரத்து, வாகன உற்பத்தி, எஃப்.எம்.சி.ஜி., ஜவுளி ஆகிய துறைகளைக் கடுமையாகப் பாதிக்கும். மக்களின் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும். ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கும் தனியாருக்கும் கடன்கள் கிடைப்பது கடினமாகிறது.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு என்பது அவற்றின் விலைகள் உயர்வதுடன் நிற்பதில்லை. எரிபொருளை ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சமாவது பயன்படுத்தும் பொருள்களின் விலைகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏற்கனவே உள்ள பணவீக்கமானது அனைத்துப் பொருள்களின் விலை உயர்வால் மேலும் அதிகரிக்கவே செய்யும். சர்வதேசச் சந்தையில் கச்சா என்ணை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் என்பது பொதுவாக பொருளாதார, உற்பத்திக் காரணங்களால் ஏற்படுவதில்லை. ஊக நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை ஏற்ற இறக்கம் நிகழ்கிறது. இந்த ஊக ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் உள்நாட்டில் செய்யப்படும் பெட்ரோல் விலையில் மாற்றமானது, மக்களின் நுகர்வு பொருள்களின் விலையிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கொண்டு வருகிறது. இது சரிதானா?

இந்த விலை உயர்வால் யாருக்கு லாபம்?

இந்த விலை உயர்வு பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் இழப்பைக் கணிசமாகக் குறைக்கும். அவற்றின் பங்கு விலைகள் உயரும். விலைக்கட்டுப்பாடு இருந்த காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல் வெளியேறிய தனியார் எண்ணைக் கம்பெனிகள் மீண்டும் களத்தில் இறங்க வாய்ப்பை உருவாக்கும். அரசு விரும்புவது இதைத்தான் என்று தெரிகிறது.


எண்ணை நிறுவனங்களின் நஷ்டம் உண்மைதானா? அதைத் தவிர்க்கவே முடியாததா?

கச்சா எண்ணை இறக்குமதி செய்வதால் எண்ணை நிறுவனங்களுக்கு அதிகச் செலவாகிறது. அரசு ஒதுக்கீடு செய்யும் மானியம் போதவில்லை. ஓ.எம்.சி. ஏற்கனவே 30,000 கோடி நஷ்டம் ரூபாய் (எண்ணை மானியத்தில் 40,000 2/3 பங்கு) இழப்பைச் சந்தித்துள்ளது. இது அவர்களின் வருமானத்தில் அதிக இழப்பை உண்டாக்குவதால் தான் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் என்று அரசும் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. இவர்கள் கூறும் நஷ்டம் என்பது உண்மையில் ’வருமானத்தில் இழப்பு’ தானே தவிர (அண்டர் ரெக்கவரிஸ்), உற்பத்தி மதிப்பில் உண்டாகும் நஷ்டம் அல்ல. எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயும் மட்டுமல்லாமல், வேறு பலவிதமான பெட்ரோலிய பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. அவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தங்கள் இஷ்டம் போலவே அவற்றுக்கு விலைகளை இந்நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த வழியில் வரும் லாபம் எந்தக் கணக்கில் வருகிறது? வரிக்குப் பிந்தைய லாபம் பெரும்பாலான எண்ணை நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளாக அதிகரித்துகொண்டு தான் வருகின்றன. அதனால் இவர்கள் கூறும் லாஜிக் உண்மையல்ல.

சர்வதேசச் சந்தை நிலவரங்களால் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றே வைத்துக்கொண்டாலும், அந்த விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசு சிந்திக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவை, பயன்பாட்டின் அடிப்படையில் மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கு அளிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் வரிகள் காரணமாகவே பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக இருக்கிறது. அவற்றைக் குறைக்கலாம் அல்லது எண்ணை நிறுவனங்களுக்கு கலால் மற்றும் சுங்க வரிகளில் சலுகைகள் அளித்து உற்பத்திச் செலவைக் குறைக்கலாம். எண்ணைக் கம்பெனிகள் தம் வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேறு வகையான வழிகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெட்ரோல் விலை உயர்வால், அதை அதிகம் பயன்படுத்தாத மிக ஏழை மக்களே அதிகம் பாதிப்புள்ளாகப் போகிறார்கள்.

ரூபாயின் வீழ்ச்சியாகட்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாகட்டும், அரசு சொல்லப்போகும் தீர்வு மானியக் குறைப்பும் அந்நிய முதலீடு அதிகரிப்பு, தனியாருக்குச் சாதகமான தீவிர பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் போன்ற வழிகளைத் தான். வெகு சீக்கிரத்திலேயே மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகம், காப்பீடு துறை ஆகியவற்றில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறக்குமதி அதிகரிப்பால் தான் இந்த நெருக்கடி என்றால், அதை சரிசெய்ய வேண்டிய வேலையை விட்டுவிட்டு மக்களின் மீது சுமையை ஏற்றுவது எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்று தெரியவில்லை.

பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணை நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மக்களின் உணர்வுக்கு மாறாக அரசு செயல்பட முடியாது. சர்வதேச நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு விரும்பத்தக்கதோ, மகழ்ச்சியளிக்கும் முடிவோ அல்ல. எனவே, தற்போது உயர்த்தப்[பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறுவது பற்றி மத்திய அரசு முடிவெடுப்பதற்கு முன்பாக, சில நாள்கள் பொறுமையுடன் நிலைமையை உன்னிப்பாகப் கவனிக்க வேண்டியுள்ளதுஎன்று அறிக்கை விட்டுள்ளார் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. மக்கள் மீது அரசு எவ்வளவு அக்கறை(?)யுடன் உள்ளது என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்

Wednesday, August 22, 2012

குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்?




உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் உயிரினம் எது என்று கேட்டால், குழந்தைகள் என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் குழந்தைகள் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் தினசரி கேள்விப்படும் செய்திகள் அதைத்தான் உறுதிபடுத்துகின்றன. டி.வி. பார்த்துக்கொண்டிருக்கையில் அழுது ‘தொந்தரவு’ கொடுத்த குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக்கொன்ற தாயைப் பற்றிய செய்திகளை ஒரு காலத்தில் வெளிநாட்டு விநோதங்களாக நாம் பத்திரிகைகளில் படித்திருப்போம். அத்தகைய நிகழ்வுகள் இன்று நம் நாட்டிலும் சகஜமாக நடக்கத் தொடங்கிவிட்டது.

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்பவர்களின் செய்திகளைப் பாருங்கள். ஒன்றுமறியா பிஞ்சுகளை சாகடித்துவிட்டே தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத் தகராறில் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். உறவினர்களைப் பழிவாங்க குழந்தைகளைக் கடத்திக் கொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையா, அவர்களைப் பழிவாங்க முதல் இலக்கு அவர்களின் குழந்தைகள்தான். கணவன்/மனைவிக்கு இடையே மோதலா, கோபத்தைத் தீர்த்துக்கொள்ள தாக்கப்படுவது குழந்தைகள் தான். கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் குழந்தைகள் கொல்லப்படுவது நாம் தினசரி படிக்கும் செய்திகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மனைவியின் நடைத்தை மீது கணவர்களுக்கு சந்தேகம் வந்தாலும் முதலில் இலக்காவது குழந்தைகள் தான். இனக்கலவரமோ, மதக்கலவரமோ பெண்களுக்கு அடுத்த இலக்கு குழந்தைகள் தான்.

குறுக்கு வழியில் விரைவாக பணம் சேர்க்க ஆசைப்படுபவர்கள் கையாளும் எளிய வழி வசதியான வீட்டுக் குழந்தைகளைக் கடத்துவது. 18 வயது வாலிபனாக இருந்தாலும் சரி, 80 வயது வயோதிகனாக இருந்தாலும் சரி, காமவெறி தலைக்கேறிவிட்டால் அவர்களின் முதல் இலக்கு ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகள் தான். இப்படியாக தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, வேண்டாதவர்களைப் பழிவாங்க, மிரட்டி பணம் பறிக்க, காம வெறியைத் தீர்த்துக்கொள்ள என்று பல வழிகளில் குழந்தைகள் சந்தித்துவரும் அச்சுறுத்தல்களில் தற்போது புதிதாக இணைந்திருப்பவை லாபவெறியில் குழந்தைகளின் உயிரைப் பற்றிக் கவலைப்படாத தனியார் பள்ளிகள்.

தங்கள் பள்ளிக் குழந்தைகள் கட்டாயம் தங்கள் பள்ளிப் பேருந்துகளில் தான் வரவேண்டும் என்று கல்விக் கட்டணத்துடன் சேர்த்து தொடக்கத்திலேயே பேருந்து கட்டணத்தை வசூலித்து  விடுகின்றன. பணத்தை மிச்சப்படுத்த பராமரிப்பற்ற அல்லது பழைய பாதுகாப்பற்ற வாகனங்களில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பள்ளிச் சிறுமி ஸ்ருதியின் மரணம்தான் இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. கடந்தவாரம் நீச்சல் குளத்தில் இறந்த 7 வயது மாணவன் ரஞ்சனின் மரணம் தனியார் பள்ளிகளின் லாப வெறிக்கு மேலும் ஒரு உதாரணம். விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ள வேண்டிய கலை, விளையாட்டுகளை, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடிஸ் என்ற பெயரில் கட்டாயமாக்கி, அதற்காக முதலிலேயே பெற்றோரிடம் பணத்தைப் பிடுங்கிவிடும் தனியார் பள்ளிகள், அந்தப் பயிற்சிகளுக்கு தரமான ஆசிரியர்களையோ அல்லது பயிற்சியாளர்களையோ நியமிப்பதில்லை. அப்பயிற்சிகளுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. விளைவு இதுபோன்ற மரணங்கள். பணம் வசூலிக்கும்போது மட்டும் தங்கள் பள்ளிகள்தான் இத்தகைய பயிற்சிகள் அளிப்பதாக பெருமையடித்துக்கொள்ளும் பள்ளிகள், பிரச்னை என்று வரும்பொழுது ஒப்பந்தக்க்காரர்களையோ அல்லது பெற்றோர்களின் அலட்சியத்தையோ காரணமாக்கிவிட்டு தங்கள் பண பலத்தின் மூலம் எளிதில் தப்பி விடுகின்றனர். ஊடகங்களில் செய்திகள் பெரியதாக அடுபடும்பொழுது பெயருக்கு சில நடவடிக்கைகள் எடுக்கும் அரசாங்கம், தொலைநோக்குடன் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. வீடு, பள்ளி, சமூகம் என எங்கும் பாதுகாப்பற்ற குழந்தைகளை அழிந்துவரும் உயிரினங்கள் (endangered species) பட்டியலில் சேர்த்து விட்டாலாவது அரசாங்கம் பாதுகாப்பு அளிக்குமா?