Thursday, February 14, 2013

காதலர் தினச் சிந்தனைகள்




பிப்ரவரி வந்துவிட்டாலே இளசுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆகஸ்டு 15 என்பது எந்த நாள் என்று தெரிகிறதோ இல்லையோ பிப்ரவரி 14 என்பது ‘காதலர் தினம்’ என்பதை பொதுஜனம் நன்றாகவே அறிந்துள்ளது. காதலை ஆதரிப்பவர்களால் மட்டுமல்ல, காதலர் தினத்தை எதிர்ப்பவர்களாலும் காதலர் தினம் பிரபலமடைந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், காதலர்களுக்கு சற்று வித்தியாசமான ஆண்டாக இது இருக்கக்கூடும். காதலர் தினத்துக்கு இதுவரை இருந்துவந்த எதிர்ப்பு அது மேற்கத்திய காலாச்சாரக் கூறு என்பதுதான். மேற்கத்திய கலாசார வழக்கங்களை பின்பற்றுவது இந்திய கலாசாரத்தை அழித்துவிடும் அல்லது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இந்த எதிர்ப்பு இருந்தது. ஆனால், காதல்-கலப்புத் திருமணங்களை எதிர்த்து பிரசாரங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்ள சில சக்திகள் முயற்சிக்கத் தொடங்கியிருப்பது காதலர்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

காதல்-கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் சாதி மீறி காதலித்து திருமணம் செய்துகொள்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான். ஆனால் அவர்கள் இதை வெளிப்படையாகக் கூறுவது இல்லை. மாறாக, காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தோல்வியடைகின்றனர் என்றும், பெரும்பாலான காதல் திருமணங்கள் விரைவிலேயே முறிந்துவிடுவதாகவும், ‘அவசரப்பட்டு’ காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் விரைவில் கைவிடப்படுவதாகவும் காரணங்களை அடுக்குகின்றனர். திருமண உறவுகள் வெற்றி பெறுவதற்கோ, முறிந்துவிடுவதற்கோ பல காரணங்கள் இருக்கலாம். ஒரு திருமணத்தின் வெற்றி, தோல்வியை அது காதல் திருமணமா இல்லையா என்ற அம்சம் மட்டுமே தீர்மானிக்கும் என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம்.


காதல் ஏன் எதிர்க்கப்படுகிறது? இதற்கு ஒற்றை வரியில் பதில்சொல்வதானால், “காதல் புரட்சிகரமானது”. அதனால் எதிர்க்கப்படுகிறது. புரட்சிகரமான எதுவும் பிற்போக்குவாதிகளால் எதிர்க்கப்படுவது வழக்கம் தானே. காதல் மதத்தை மறக்கிறது; காதல் வர்க்கத்தைத் தொலைக்கிறது; காதல் சாதியை ஒழிக்கப் பார்க்கிறது. ஆகவே காதல் புரட்சிகரமானது. மத நல்லிணக்கம் குறித்து செய்யப்படும் ஆயிரமாயிரம் பிராசாரங்களைவிட, வர்க்கத்தை ஒழிக்கத் தூண்டும் புரட்சிகர முழக்கங்களைவிட, சாதியை ஒழிக்க வழிசொல்லும் பகுத்தறிவு வாதங்களைவிட வலிமையானது காதல். சமூக ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் அருமருந்தாக இருப்பது சாதி, மதம், நிறம், இனம் பார்க்காத காதல்தான். சாதி, மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சினை, ஆடம்பரச் செலவுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அனைத்தையும் நிராகரிக்கிறது காதல். காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுவதற்கான அடிப்படை இதில்தான் இருக்கிறது.

மேற்கண்ட காரணங்களால் காதலை நிராகரிக்கும் சமூகம், காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் படும் கஷ்டங்களையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும், காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் பிணக்குகளையும் காதலின் தோல்வியாக பட்டியலிடுகிறது. பொதுவாக சாதி. மதம் ஆகியவற்றை மீறிக் காதலித்து திருமணம் செய்துகொள்பவர்களை, அவர்கள் சார்ந்துள்ள சமூகம் முதலில் ஒதுக்கிவைக்கப் பார்க்கிறது. தாம் விரும்பி காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் பெற்றோர் முதல் உறவினர்கள், அக்கப்பக்கத்தினர் வரை அவர்களிடம் பேச மறுக்கிறார்கள், சமூக ஒதுக்கம் செய்கிறார்கள். உறவுகளின் ஆதரவோ, பொருளாதார பலமோ இல்லாத நிலையில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் காதலர்கள் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்திப்பது இயல்புதானே. உற்றார் உறவினர் ஆதரவற்ற நிலையில் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்கும் போது காதலர்கள் பிரச்னைகளைச் சந்திக்க நேர்வதும், எந்த ஒரு குடும்பத்திலும் இருப்பதைப் போல இவர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் தோன்றுவதும் இயல்புதானே.

வெகு சில குடும்பங்களில் தங்கள் பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசத்தால் சாதி, மதம் மீறிய திருமணங்களை விரைவிலேயே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். சில குடும்பங்கள் சில காலத்துக்கு பிறகு காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்கின்றன. பெரும்பாலான குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏற்றுக்கொள்கின்றனர். தங்கள் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பைவிட சாதியாபிமானமும் மதாபிமானமும் அதிகம் கொண்டவர்கள் சிலர் மட்டுமே காதல் திருமணம் செய்தவர்களைக் கடைசிவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர்.

தமது குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட பெற்றோர் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கூட, அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் அவர்களின் சமூகம் அதற்கு ஒப்புதல் அளிக்காது என்பதும், அதனால் தங்கள் கெளரவத்துக்கு பங்கம் நேரும் என்று கருதுவதும்தான். குடும்பத்தினரின் புறக்கணிப்பு, சமூகத்தின் எதிர்ப்பு அல்லது ஒத்துழைப்பின்மை, பொருளாதார உதவியின்மை, சாதி, மத கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிருக்கும் உடமைக்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என அனைத்தையும் மீறி காதலர்கள் தம் சொந்தக் காலில் நிற்க வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் சமூகத்தில் கெளரவமாகவும் வசதியாகவும் வாழ்வதில் இருக்கிறது என்பதால், அதற்காக அவர்கள் படும் பாட்டைக் காணும் காதல் எதிர்ப்பு மனம், காதல் திருமணம் செய்துகொண்டதால் அவர்கள் கஷ்டப்படுவதாக விமர்சனம் செய்கிறது.

காதலர்களும் மனிதர்கள் தானே. ஆண்-பெண் இருவருமே படித்தவர்களாக இருக்கும் இக்காலத்தில், தமது உரிமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்த அவர்களுக்கு சொந்த விருப்பு வெறுப்புகளும், தனிப்பட்ட அபிப்பிராயங்களும், விருப்பு வெறுப்புகளும் இருக்கத்தானே செய்யும். மற்றவர்களிடையே தோன்றுவது போல காதலர்களுக்கிடையிலும் பிணக்குகளும், மனஸ்தாபங்களும் ஏற்படுவது இயல்பு தானே. தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், அபிப்பிராயங்கள் ஆகியவற்றிலிருந்து, அவற்றைக் கடந்து அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, இணக்கமாக வாழ்கின்றனர் என்பதில் தான் காதலின் வெற்றி ஒளிந்திருக்கிறது.

 ”நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்.” என்று வசனம் பேசிக்கொண்டிருப்பது திருமணத்துக்கு முன்பு சுகமாக இருக்கலாம். ”காதல் என்பது கற்பனை. திருமணம் என்பது நிஜம். கற்பனைக்கும் நிஜத்திற்குமான முரண்பாடு, தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.” என்பார் கோயத். காதலிக்கும் போது பரவச உணர்வை மட்டும் அனுபவிப்பவர்கள், திருமணம் செய்துகொண்டு எதார்த்த வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போதுதான் வாழ்க்கையின் முரண்பாடு, கற்பனைக்கும் உண்மையான வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாட்டை காதலர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நாள் வரை காதலர்கள் அத்தடைகளை வெற்றிகரமாக கடந்துவந்திருக்கிறார்கள். இனிமேலும் வெற்றி பெறுவார்கள். கலீல் ஜிப்ரான் கூறியதைப் போல, ”காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது.” ஆகவே ஒரு திருமண உறவின் நீடித்த வெற்றி என்பது அத்திருமணம் காதல்-கலப்புத் திருமணமா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா என்பதில் இல்லை, அது கணவன் – மனைவி இருவர் கொண்டுள்ள காதல், நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையில்தான் அடங்கியிருக்கிறது என்பது தெளிவு. 

காதலின் உண்மை நிலை இப்படியிருக்க, மக்களை எப்போதும் சுரண்டிக் கொழுக்கும் நுகர்வு பொருளாதாரம், தனது வியாபாரத்துக்காக காதலர் தினத்தை அதிக விளம்பரம் செய்து இளைஞர்களின் பாக்கெட்டுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறது. கண்கவரும் வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள், தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள், காதலர் தினத்தைக் கொண்டாட இணையத்தளத்தில் விசேஷ ஏற்பாடுகள், ஓட்டல்கள், உணவகங்கள், மால்கள் என எங்கும் காதலர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் பல வழிகள் இருக்கின்றன. பல்லாயிரங்கோடி புரளும் இந்த காதலர் தின வணிக வலைக்குள் விழுந்துவிடாமல், ஆண்டு முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும். அதற்கு ஆடம்பர விருந்துகளும், விலையுயர்ந்த பரிசு பொருள்களும் தேவையில்லை, காதலொன்றே போதும். காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது என்கிறது ஒரு கிரேக்க பழமொழி. ஆகவே, முதுமைவரை இளமையாக இருக்க காதலிப்போம்!

No comments:

Post a Comment