Thursday, February 14, 2013

பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தலைநகரம்




கடந்த ஒரு வார காலமாக நாட்டில் ஏதோ கலவரம் ஏற்பட்டிருப்பதைப் போன்று தோன்றுகிறது.தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் என எதைப் பார்த்தாலும் கலவரக் காட்சிகள், போலிஸ் தடியடி, கண்ணீர்புகைக்குண்டு வீச்சு, எதிர்கட்சித் தலைவர்களின் ஆவேசப் பேட்டிகள், ஆளுங்கட்சியினரின் பதிலடி அறிக்கைகள், அமைதி காக்கும்படி பிரதமரின் வேண்டுகோள், ஹசாரே-வி.கே. சிங் உண்ணாவிரதம். தலைநகரமே ஆடிப்போயிருக்கிறது. அப்படியானால் இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய பிரச்னையாகத்தான் இருக்க வேண்டும்.

அப்படி என்ன தான் நடந்துவிட்டது? எதற்காக இவ்வளவு பெரிய போராட்டங்கள்? தலைநகராம் டெல்லியில், தனது ஆண் நண்பருடன் பஸ்ஸில் பயணம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவியை பஸ்ஸில் இருந்த ஆறுபேர் கொண்ட கும்பல் வல்லுறவு கொண்டதுடன் அல்லாமல், அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி பஸ்ஸில் இருந்து தூக்கி வீசிவிட்டனர். அவரது ஆண் நண்பரும் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். குற்றுயிராக வீசப்பட்ட அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிகிறது. தலைநகரில் இரவு பத்து மணி அளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தான் மேலே கூறிய கலவரக் காட்சிகளுக்குக் காரணம்.


டெல்லி மாநகரம் இந்தியாவின் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, பாலியல் வல்லுறவுக்கும் தலைநகரமாக விளங்கிவருவது நாம் அறிந்ததே. பட்டப்பகலில், ஓட்டலில், ஓடும் வாகனத்தில் என அனைத்து வகையான வழிகளிலும் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது டெல்லியில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேசத்தின் தலைநகரம், ஒரு காஸ்மோபாலிட்டன் நகரம், மத்திய பாதுகாப்புப் படைகள், மாநில போலிஸ், இன்னும் ஏகப்பட்ட படைகளின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில்தான் டெல்லியில் அத்தனைக் கொடுமைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நகரமாக இது மாறிவருகிறது. பெண்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலை டெல்லியில் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதிலும்தான்.

தினசரி செய்தித்தாள்களில் ஏராளமான குற்ற்ச்செயல்கள் பற்றி நாம் படிக்கிறோம். பாலியல் கொடுமைகள், வல்லுறவுகள், சித்திரவதைகள் நாடெங்கும், தினம்தினம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியானால் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் அல்லவா ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லையே. எந்தக் பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்தும் அக்கறைக் காட்டாத ஊடகங்கள், இச்சம்பவம் பற்றி தீவிரமாக எழுதுவதற்கும், செய்திகள் வெளியிடுவதற்கும் என்ன காரணம்? நாட்டில் வேறு முக்கிய விஷயங்களே இல்லையா? அல்லது பிரச்னைகள் தான் இல்லையா? தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் நாட்டில், இந்தப் பெண்ணுக்காக மட்டும் நீதிக்கேட்டு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்?


மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை காணும்முன் பாலியல் வல்லுறவு நடைபெறுவதற்கான காரணங்களைச் சற்றுப் பார்க்கலாம். பெண்கள் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது நாடு, இனம், மொழி, கலாசாரம், சாதி, வர்க்க வித்தியாசம் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் உலகம் முழுவதும் நடைபெறும் கொடுமையாக உள்ளது. இதன் முதல் அடிப்படைக் காரணமே பெண் ஆணைவிட தாழ்ந்தவள், ஆணால் நுகரப்பட வேண்டியவள் என்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான். அடுத்து, பெண்ணை தனக்கு சமமான மனிதப் பிறவியாகவே ஆண்கள் நினைப்பதில்லை. வெளியில் என்னதான் சமத்துவம் பேசினாலும் ஆண்களின் மனத்தில் உட்கிடையாக இருப்பது இதுவே. பெண்ணுடல் அவளுக்குச் சொந்தமல்ல என்பதே சமுதாயத்தின் அடிமனத்தில் ஊறிப்போயுள்ள எண்ணமாக இருக்கிறது. இல்லையெனில், இன்னொரு நபரின் உடல்மீது பலாத்காரம் மேற்கொள்ளும் எண்ணமும் துணிச்சலும் ஆண்களுக்கு எப்படி வரும். 

பாலியல் வல்லுறவு கொள்ள முற்படும் உந்துதலுக்கான மூலம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. அடுத்து, கூட்டமாகச் சேர்ந்து எதைச் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம். குற்றம் இழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களைத் தப்பிக்க வைக்க சட்டத்தில் இருக்கும் வழிமுறைகள், மெதுவான நீதி வழங்கும் முறை, கடுமையற்றத் தண்டனை, சிபாரிசு அல்லது பணத்துக்காக குற்றவாளிகளைத் தப்பவிடும் அதிகாரவர்க்கம் ஆகியவை இத்தகைய குற்றங்களைச் செய்யும் துணிச்சலை குற்றவாளிகளுக்குத் தருகிறது. நமது கலாசாரம், சமூக பிரக்ஞை, இலக்கியம், சினிமா என அனைத்தும் பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே சித்திரித்து வருகின்றன. இத்தகைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும். ஒழுக்க மதிப்பீடுகள் நாளுக்கு நாள் குறைந்துவருவதும், நுகர்வு கலாசாரம் அதிகரித்துவருவதும் பெண்களை இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்கு இட்டுச்செல்கிறது. ஆகவே இத்தகைய குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அதற்கான காரணங்களை களைவதே முதன்மையானதாகும். அதுவே அதற்கான தீர்வாக அமையமுடியும். அதை விடுத்து தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், கொலை செய்யவேண்டும் என்று கூக்குரலிடுவதெல்லாம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோஷமாகத் தான் இருக்குமே ஒழிய அது நிச்சயம் தீர்வாகாது. கடும் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் நம் நாட்டில், கடுமையான் குற்றங்கள் நடைபெறுவதில்லையா?


இந்தியாவில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படாத இடமோ, நாளோ கிடையாது. சாதிப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் ஆதிக்கச் சாதிகளின் முதல் இலக்காவது பெண்களின் உடல் தான். எத்தனையோ பெண்கள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டு வீதியிலும், வயலிலும் வீசப்படுவதை தினசரி செய்தியாகப் பார்க்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் போராடாத அரசியல் கட்சிகள், இதையெல்லாம் தலைப்புச் செய்தியாக்காத ஊடகங்கள், இதற்கெல்லாம் வீதியில் இறங்காத மிடில்கிளாஸ் கனவான்கள், பெண்கள் அமைப்புகள் டெல்லியில் நடந்த சம்பவத்துக்காக நாட்டையே உலுக்கியெடுக்க என்ன காரணம்? மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லாத நாட்டில், மக்கள் நலம் பற்றிச் சிந்திக்காத எதிர்கட்சிகளுக்கு அரசை குறைகூறவும், இதைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டிக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு. பத்திரிகைகளுக்கும் மற்றவர்களுக்கும் தலைநகரிலேயே இத்தகைய சம்பவம் நடந்தால் நம் நாட்டைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை. மொத்தத்தில் இச்சம்பவத்தில் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல தீனியாக அமைந்துவிட்டனர்.

அப்படியானால், இது பெரிய கொடுமையில்லையா? நிச்சயம் இது கண்டிக்கவேண்டிய, கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டிய குற்றம் தான். மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்தான். ஆனால், இதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில் எந்தப் பயனுமில்லை. இது ஒரு சமூக, உளவியல் சார்ந்த பிரச்னை, ஆண்களின் மனக்கோளாறு. இதற்கான காரணங்களைச் சரியாக ஆராய்ந்து, அதைக் களைய முயற்சிப்பதே இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும். கடுமையான சட்டங்களால் மட்டுமே குற்றங்களைத் தடுக்கமுடியும் என்பது வீண் கற்பனை. ஒரு ஆண், ஒரு பெண்ணை, அவளது விருப்பத்துக்கு மாறாக பலாத்காரமாக வல்லுறவுக்கு உட்படுத்தும் நிகழ்வை ‘கற்பழிப்பு’ என்றுதானே சொல்கிறோம். அக்குற்றத்தைச் செய்தவன் கற்பிழக்க மாட்டான். பாதிக்கப்பட்டவள்தான் ‘கற்பு’ இழக்கிறாள். பாதிக்கப்பட்டதுடன் ’கற்பழிக்கப்பட்ட’ அவமானத்தையும் அவள் சுமக்கவேண்டும். ஆகவே, மாற்றம் தொடங்கப்படவேண்டியது சமூகத்திலிருந்துதான், குற்றவாளிகளிடமிருந்து அல்ல.
  

No comments:

Post a Comment