Tuesday, June 21, 2011

நாளந்தா பல்கலைக்கழகம்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டின் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது என்று தலைவர்கள் பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். அந்தக் காலத்தில் அவர்கள் செய்திருந்த சாதனைகளே அவர்களின் கல்வித்திறனை, அறிவைப் பறைச்சாற்றுவதாக உள்ளன. ஆனால், பல வரலாற்றுக் காரணங்களால் நாம் அந்தப் பெருமையை பிற்காலத்தில் இழந்துவிட்டோம்.

தற்போது உலகின் தலைச்சிறந்த இருநூறு கல்வி நிலையங்களின் பட்டியல் எடுத்தீர்கள் என்றால் அதில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெற்றிருக்காது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. இன்று பல்கலைக்கழகம் என்று நாம் வரையறுத்துள்ள முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம், ஆசிரியர்கள், வகுப்பறை, நூலகங்கள், ஆய்வு வசதிகள், பல்வேறு கல்வித் துறைகள் ஆகியவை கொண்ட கல்வி நிலையம் முதன் முதலில் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது. ஆம், நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.


நாளந்தா பல்கலைக்கழகம் இன்றைய பிகாரின் தலைநகரமான பாட்னா நகரத்திலிருந்து 55 மைல் தொலைவில் உள்ள நாளந்தா என்னுமிடத்தில் அமைந்திருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வந்தது. புத்தர் தமது கடைசி பயணத்தின் போதும் நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையை செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர் தான். இவ்வாறு நாளந்தா மிகப் பழங்காலத்திலிருந்தே ஒரு முக்கிய கல்வி நகரமாக இருந்து வந்துள்ளது.

கி.பி.427 ஆம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர் தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிப்பவர்’ என்று பொருளாம். பதிவு செய்யப்பட்ட உலக வரலாறில் முதல் பல்கலைக்கழகமான நாளந்தா, 14 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்திருந்தது. கட்டடங்கள் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. இது அன்றைய உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுடன் கல்வியளித்த உலகின் முதல் பல்கலைக்கழகமும் நாளந்தா பல்கலைக்கழகம் தான்.


இங்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டதாக சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இங்கு உயர்கல்வி மற்றுமே வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன.

விவாதங்கள் மூலம் கல்விப் போதனை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக மகாயான கருத்துகள் முக்கியமாகப் பயிற்றுவிக்கப்பட்டன. புத்தமதத் தத்துவங்களுடன் இதர இந்திய தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக்கலை, வானியல், வரலாறு, சட்டம், மொழியியல், யோக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.



எட்டு தனித்தனி வளாகங்களில், ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இருந்தன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு படிப்பதற்கேற்ற சூழல் பாதுகாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்குள் பிரும்மாண்டமான நூலகமும் இருந்தது. ஒன்பது மாடி உயரம் கொண்ட மூன்று கட்டடங்களில் லட்சக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் புத்தமதத் தத்துவ நூல்களுடன் பிற துறைகள் பற்றிய நூல்களும் ஏராளமாக இருந்தன.

பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும் மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர். எழு நூறு ஆண்டுகால புத்த மடாலய வரலாறில் இந்த ஒழுக்கத்தை யாரும் மீறியதில்லை என்று தமது குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் மற்றொரு சீனப் பயணியான் யி ஜிங்.

முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து பேணி வந்தனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைக்கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான் சுவாங், யி ஜிங் ஆகியோர் நாளந்தாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.


தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி, பிரபமித்திரர், ஜீன மித்திரர் போன்ற புகழ்பெற்ற தத்துவஞானிகளும், மேதைகளும் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றினர். குப்தர்கள் காலத்தில் சுதந்திர சிந்தனைகளின் சங்கமமாக இருந்த பல்கலைக்கழகத்தில், பிற்காலத்தில் தத்துவ மோதல்கள் உருவாக ஆரம்பித்தன. புத்த மதத்தை எதிர்த்த பிராமணர்களின் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது. பிராமணர்களுடன் , சமணர்களும் இணைந்து புத்தத் துறவிகளை எதிர்த்தனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானிருந்து வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதி, நாளந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடி, அதை முற்றிலும் தீக்கரையாக்கினார். நூலகத்தில் இருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான புத்தமதத் துறவிகள் தலைத் துண்டிக்கப்பட்டனர், உயிரோடு கொளுத்தப்பட்டனர். நூற்றாண்டுகளாக அறிவூட்டி வந்த பல்கலைக்கழகம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது. எனினும் முற்றாக அழிந்துவிடவில்லை. பொலிவிழந்த அந்தக் கல்விக்கூடம் ஒரு சில ஆசிரியர்களுடனும் சில நூறு மாணவர்களுடன் தொடர்ந்தது.

கடைசியாக கி.பி.1400 ஆம் ஆண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவுடன் ஆதரிப்போர் யாருமின்றி பல்கலைக்கழகம் செயலிழந்தது. உலகப்புகழ் பெற்று விளங்கி வந்திருதாலும், மதிப்புமிக்க நூல்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டதால் நமக்குக் கிடைத்திருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இங்கு வந்துப் படித்த வெளிநாட்டு மாணவர்களாலும், வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது.


நாளந்தாவுக்கு முன்பே இந்தியாவில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய பல கல்விக்கூடங்கள் இருந்தன. பேரரசை உருவாக்கிய சாணக்கியர், சந்திரகுப்தர், மருத்துவ மேதை சரகர் போன்றோரை உருவாக்கிய தட்சசீலம், ஜென் புத்தமதத் தத்துவப் பிரிவை தோற்றுவித்தவரும் சீனாவில் ஷாவோலின் மடாலயத்தில் குங் ஃபூ தற்காப்புக்கலையை செழுமைப்படுத்திய அறிஞருமான போதிதருமரை (கி.பி. 520) உருவாக்கிய தமிழகத்தின் காஞ்சி போன்ற பல கல்வி மையங்கள் இருந்தன.

பல நூற்றாண்டுகளாக உலகின் தலைச்சிறந்தப் பல்கலைக்கழகங்களாக விளங்கி வரும் பொலக்மா (கி.பி.1088), பாரீஸ் பல்கலைக்கழகம் (கி.பி.1091), ஆக்ஸ்ஃபோர்ட் (கி.பி.1167) மற்றும் கேப்ரிட்ஜ் (கி.பி.1209) பல்கலைக்கழகங்கள், கெய்ரோவிலுள்ள அல்-அஸார் பல்கலைக்கழகம் (கி.பி.970) என அனைத்துமே நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு காலத்தால் பல நூற்றாண்டுகள் பிந்தியவை என்பதை கவனித்தால் நாளந்தாவின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


இதை உணர்ந்ததால் தான் இந்தியா, சீனா, ஜப்பான், ஆகிய நாடுகள் சிங்கப்பூர் நாட்டின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு உலகத்தரத்திலான பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவு செய்து ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இழந்தப் புகழை நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் பெறும் என்று நம்புவோம் !

No comments:

Post a Comment