உலகில் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இன்னும் பிற பொதுவுடமை சிந்தனையாளர்களின் தத்துவங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டது. உலக மக்களின் துயரங்களுக்கு ஒரே மாமருந்து முதலாளித்துவம் தான். பொதுவுடமை கொள்கையை கடைபிடிக்கும் நாடுகளில் பொதுவுடமை வலுவிழந்து வருகிறது. ஆகவே கம்யூனிச தத்துவம் அழிந்துவிட்டது. இப்படியாக ’அறிவு ஜீவிகள்’ என்றும் ‘மெத்தப் படித்தவர்கள்’ என்றும் காட்டிக்கொள்ளும் பலரும் ‘பிரசாரத்தில்’ ஈடுபட்டு வருவதைப் பார்க்கிறோம்.
பொதுவுடமைத் தத்துவத்தை ஆதரிப்பவர்களோ, ”உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவும் காலம்வரையில் பொதுவுடமை தத்துவத்தின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அது மனிதனின் வாழ்நிலையோடு, சமூக இயக்கத்தோடு இணைந்தது, அறிவியல் பூர்வமானது. பொதுவுடமையை பின்பற்றும் நாடுகளின் பின்னடைவுக்கு பல அக, புறச் சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. வரலாற்றுப் போக்கில் இவை இயல்பானதே. ‘சோவியத்’ மாதிரி குலைந்துவிட்டதால் பொதுவுடமை தத்துவம் அழிந்துவிடாது. தனது தவறுகளை, குறைகளை ஆய்ந்து புதிய ஆற்றலுடன் மீண்டும் மக்களை வழிநடத்தும். உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள், கொந்தளிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவை இதைத்தான் உணர்த்துகின்றன” என்று மார்க்சிய அழிவின்மை தத்துவத்தைக் கூறுகின்றனர்.
இந்த இரண்டு பிரிவுகளைச் சேராத மக்களுக்கோ இது ஒரு ‘தேவையில்லாத’ பேச்சு. ’நாம் பேசி என்ன ஆகப் போகுது?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு காரணம் சாதாரண மக்களிடம் பொதுவுடமை தத்துவம் பற்றிய அறிவு அல்லது தகவல் போதுமான அளவுக்குப் போய்ச் சேராததே ஆகும். ‘விஞ்ஞான சோஷலிசம்’ ‘வர்க்கப் போராட்டம்’ ‘அந்நியமாதல்’ ‘பூர்ஷ்வா கலாசாரம்’ ‘அகவய யதார்த்தம்- புறவய உண்மைகள்’ ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்’ போன்ற வார்த்தைகள் அறிவுஜீவிகளுக்கானது, நமக்கெல்லாம் புரியாது என்று மக்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.
மார்க்சிய-பொதுவுடமை தத்துவங்கள், அரசியல், அறிவியல், இலக்கியம் என பல துறைகளிலும் உள்ள சிந்தனைகள் சாதாரண மக்களை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் ’சோவியத் யூனியன்’ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆர்வமுள்ளவர்களின் தேவையை இந்த நூல்கள் பூர்த்தி செய்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவற்றைப் படிப்பதற்கே கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. தமிழும் கடினமாக இருந்தது. மேலும், ஓரளவு அடிப்படை விஷயங்களை தெரிந்தவர்களுக்கே இந்தத் தத்துவங்கள் புரியும்படி இருந்தன.
பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு புரியும்படி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. தமிழில் வெளியான அடிப்படை நூல்களில் பெருமளவு மொழிபெயர்ப்பே. அவற்றில் இருந்த மொழியியல் சிக்கல்களும் அந்நியத்தன்மையும் எளிமைக்குத் தடையாகவே இருக்கின்றன. எளிய மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படைகள் மிக மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு எழுதும் கடிதங்களில் ‘உயிரினத்தின் தோற்றம்’ ‘சமுதாயத்தின் தோற்றம்’ வர்க்கம் என்றால் என்ன?’ ‘பணம் எப்படி வந்தது’ ‘அடிமைகளின் தோற்றம்’ ‘இயந்திர உற்பத்தியின் வளர்ச்சி’ ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ ‘கம்யூனிச சமுதாயம் என்றால் என்ன?’ என மொத்தம் இருபத்தி ஐந்து தலைப்புகளைப் பற்றி அழகு தமிழில் எழுதியுள்ளார். பொதுவுடமை தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் ஆரம்ப நூலாக இதைப் படிக்கலாம்.
பாரம்பரியமான கம்யூனிச கொள்கையின் அடிப்படையிலேயே இந்நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறிவரும் உலக அரசியல், பொருளியல், சமூகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ’பாட்டாளிகள்’ ‘உற்பத்தி உறவுகள்’ போன்ற பல அம்சங்கள் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கின்றன என்றாலும் ஆரம்ப நூலாக இதை பயிலலாம். மக்களுக்கான தத்துவம் என்றால் அது மக்களை கவர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். நாங்கள் மட்டுமே உண்மையான் கம்யூனிஸ்டுகள் என்று தமக்குத்தாமே ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துக் கொள்ளும் பொதுவுடமைவாதிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவார்களேயானால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களை இங்கு காணலாம். (நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை & திரு செ. கணேசலிங்கன்)
No comments:
Post a Comment