சர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.
காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.
அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.
ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.
பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.
மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.
தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.
1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர்
தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.
தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.
அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.
உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர். மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.
பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.
பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.
சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.
“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார்
1 comment:
நல்ல பதிவு.
//ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும்.//
ஆம் உண்மை.
எந்த சமுதாயம் பெண்மையைப் போற்றியும் அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்தும் வாழ்கிற்தோ அந்த சமுதாயம் அறிவிலும், ஆற்றலிலும் சிறப்புற்று விளங்கும்.
Post a Comment